முன்கதை சுருக்கம் :
இந்த உலகில் எண்ணெய் வள நாடுகளின் எண்ணெய் வளத்தை, தக்க கூலியை பெற்றுக்கொண்டு தன் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து, அவர்களை சிறு பணக்காரர்களாக்கி, பின்னர் தன் பலமிக்க ஆயுத அடக்குமுறை மற்றும் பரந்த பொருளாதார நிர்பந்தம் மூலம், மேலும் மேலும் எண்ணெயை உறிஞ்சி, இதன் மூலம் இந்நாடுகளை விட மிக அதிக பயன் அடைந்து பெரும்பணக்காரனாகி தன் வயிற்றை கழுவும்'தொழில்நுட்ப வல்லரசு நாட்டாமை' நாடுகள் இவ்வுலகில் சில உண்டு. 'இந்த அநியாயத்தை தட்டிக்கேட்பதால் தமக்கு பாதகத்தை தவிர வேறு எந்த ஒரு சாதகமும் இல்லை' என்பதை நன்கு உணர்ந்து, தன்னிடம் மனிதாபிமானம் என்ற ஒன்றையே கொன்று புதைத்துவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும் சுயநல நாடுகள் பல உள்ளன இவ்வுலகில்.
அல்ஜீரியா, நைஜீரியா போன்ற ஆஃப்ரிக்க நாடுகள், லிபியாவைவிட அதிக அளவுக்கு பூமியிலிருந்து எண்ணெய் உறிஞ்சினாலும், ஆஃப்ரிக்காவின் எண்ணெய் வள இருப்பு நாடுகளில் லிபியாவிற்குத்தான் முதலிடம். மேலும் இதன் கச்சா எண்ணெயில் Sulphur எனும் impurity மிகவும் குறைவு என்பதால், அதிக தரமானது. சந்தையில் இதன் விலை அதிகம்.
லிபியாவிற்கு கச்சா எண்ணெய் எடுப்பதில் உலகில் 17-வது இடம். நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுத்தாலும், அதில் 85% அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு ரிஃபைனரிகளுக்குத்தான் ஏற்றுமதி செய்கிறது. வெனிசூலா, சீனா, ரஷ்யா போன்ற சோஷலிச கம்யுனிஸ நாடுகள் கூட ஓட்டுக்காக சும்மா ஒப்புக்கு போலியாகத்தான் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை காட்டினாலும், இந்நாடுகள் தங்கள் கச்சா எண்ணெயில் ஒரு பெரும் பகுதியை மறக்காமல் 'எண்ணெய் மோகம் கெட்டு அலையும்' அமெரிக்க ரிஃபைனரிகளுக்கு ஏற்றுமதி செய்ய தவறுவதேயில்லை. பின்னே...? நாட்டாமைகளின் எண்ணற்ற கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் ரிஃபைனரிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டாமா...?
இவ்வுலகில், அமெரிக்காவிற்கு ஒரு சொட்டு கச்சா எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்யாத ஒரே நாடு ஈரான் மட்டுமே..! இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது..! எனில், இவ்வுலகில் அமெரிக்காவின் உண்மையான ஒரே எதிரி நாடு ஈரான்தானா..?
இவ்வளவு எண்ணெய் வளமிருந்தும் லிபியாவில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகளாக உள்ளனர். இந்நிலையில்தான், ஜனநாயகம் என்ற போர்வைக்குள் தம்மை அதிபராக பிரகடனப்படுத்திக்கொண்டு கடந்த 41 ஆண்டுகளாக மேற்கத்திய வல்லரசுகளின் ஆதரவுடன் லிபியாவை தனது குடும்ப சொத்தைப்போல் ஆண்டு அனுபவித்து வந்த சர்வாதிகாரி முஅம்மர் கட்டாஃபியை அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை அந்நாட்டில் நிலை நாட்டுவதற்கான மக்கள் போராட்டம் சென்ற மாதங்களில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.
தம்மை எதிர்ப்போரை, அவர்கள் தம் சொந்த நாட்டுமக்களே ஆயினும், "அவர்களில் கடைசியாக ஒருவர் மிஞ்சும் வரையிலும் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்தே தீருவேன்" என்று டிவியில் சூளுரைத்த கொலைகார கட்டாஃபியின் எல்லாவித கொடூரமான நடவடிக்கைகளையும், அவரின் மிகச்சிறுபான்மை ஆதரவு இனக்குழுவினரின் அடாவடி தாக்குதல்களையும் ஒரேநேரத்தில் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வந்தனர் அந்நாட்டு பெரும்பாண்மை போராட்ட புரட்சியாளர்களான பொதுமக்கள்.
சிறிது சிறிதாக எண்ணெய் வளமிக்க பகுதிகள் உள்பட லிபியாவின் முக்கிய பிரதேசங்களை எல்லாம் கைப்பற்றிய போராளிகள் தலைநகருக்கு மிக அருகே வரை முன்னேறி தங்களது கட்டுப்பாட்டிற்குள் அவற்றை கொண்டு வந்து விட்டனர். தனக்கு ஆதரவான ராணுவத்தின் தோல்வியினால் கொதிப்படைந்த கட்டாஃபி சுற்றுவட்டார ஆப்ரிக்க அயல் நாடுகளிலுருந்து கூலிப் படைகளை இறக்குமதி செய்து, அவர்கள் கையில் ராணுவ ஆயுதங்களை கொடுத்து, புரட்சியாளர்களை கொன்று குவிப்பத்தின் மூலம் தன் 'ஆட்சி'யையும் லிபியா என்ற தன் சொத்தையும் காப்பாற்றுவதற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த சூழலில், நாட்டின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள 'லிபிய தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக்குழு' (Libyan National Transitional Council) என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, கட்டாஃபியின் (முன்னாள்) சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீலின் தலைமையில் தற்காலிக அரசு நிறுவப்பட்டு உள்ளதாக புரட்சியாளர்கள் அறிவித்தனர். 'ஒருவேளை புரட்சியின் போது கட்டாஃபி பதவி விலகவோ அல்லது நாட்டை விட்டு ஓடவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளவோ அல்லது கொல்லப்படவோ செய்தால் கூட லிபியா தலைமை இல்லாமல் திண்டாடும் சூழலுக்கு தள்ளப்படாது' என்பதைத்தான் இச்சம்பவங்கள் உலகத்திற்கு உணர்த்தின.
அதேநேரம், கட்டாஃபியின் வீழ்ச்சியும், மக்கள் எழுச்சியும் நிதர்சனமாகலாம் என்பதை தெள்ளத்தெளிவாக அறிந்துக்கொண்ட அமெரிக்கா, புரட்சியை முறியடிக்கவும், அதன் வெற்றியை தானே தட்டிச்செல்லவும் முயல்கிறது. முதலில் பொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டு, கட்டாஃபி வீழும் நிலை வந்ததும், 'லிபியா மக்களை காப்போம், கடாஃபியை அகற்றுவோம்' என்ற அமெரிக்காவின் உத்வேகம் இதனை நிரூபிக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை, இந்த கட்டாஃபி இல்லையேல் இவரை விட 'சிறந்த' (சொன்ன சொல்லுக்கு மறு பேச்சு பேசாத) வேறு ஒரு முட்டா(ள்)ஃபி...!
ஆனால், அமெரிக்காவின் சதிவலையை உடனே அடையாளங்கண்டு கொண்டு விட்ட 'லிபியாவின் தேசிய தற்காலிக ஆட்சிமாற்றக் குழு', அமெரிக்கா உட்பட எல்லாவிதமான வெளிநாட்டு தலையீட்டையும், ராணுவ தலையீட்டையும் தாங்கள் எதிர்ப்பதாக உறுதியாக தெரிவித்தது. லிபிய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இல்லாமலேயே லிபியாவின் எதிர்கட்சியினருக்கு அவர்கள் பொறுப்பேற்ற வேலையை பூரணப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கை இருப்பதை, 'தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடிக்கப்படும் ஆப்பு' என்பதை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் விழித்துக்கொண்டன.
இதுபோன்ற அடிபொடிகளின் ஆட்சி அகற்றப்படும் போது, இஸ்ரேலுக்கு சலுகை விலையில் பல்லாண்டுகளாய் இருபத்து நான்கு மணிநேரமும் ஹோஸ்னி முபாரக்கால் தரப்பட்டு வந்த எரிவாயுவை இறுக்கி மூடச்சொல்லி எகிப்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது போன்ற விபரீதங்கள் நிகழ்வது வேறு மேற்குலகத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
லிபிய புரட்சியாளர்களின் தீரமிக்க விவேகமான நேர்மையான நிலைப்பாடு இது, என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. தினமும் ஏறத்தாழ 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெக்கும் மேலே தினமும் ஏற்றுமதி செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு நாட்டமெல்லாம். அதையே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வருகின்றன. அதற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுதான் அவர்களின் லட்சியம். மாறாக, லிபிய உள்நாட்டு ஜனநாயகமோ, மக்களுக்கு சுதந்திரமோ நோக்கமே அல்ல. இதைவிட கொடூரமாக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேயை ஏன் கண்டுகொள்ளவில்லை? அங்கே எண்ணெய் இல்லை. இதனை உணர்ந்த அரபு எண்ணெய் நாடுகளின் கூட்டமைப்பான OIC-யும் லிபியாவில் வெளிநாட்டு தலையீட்டை கண்டித்துள்ளது.
ஆக, தங்களின் லிபியாவிலிருந்தான இந்த எண்ணெய் இறக்குமதிக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் ஈராக், ஆப்கானிஸ்தான் என இன்னும் பல நாடுகளில் நிறுவியது போல லிபியாவிலும் ஒரு பொம்மை அரசை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் லட்சியம். அந்நாடுகளிலெல்லாம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பின்னரும் உள்நாட்டு அமைதியோ, ஜனநாயகமோ தழைத்தோங்கவில்லை என்பதும் பயங்கரவாதம் தலையெடுத்ததும்தான் இதுவரை நிரூபணமாகியுள்ளது.
பொதுவாக, தம்மை ஆதரிக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்கள், அவர்கள் எவ்வளவு கொடூரங்களை புரிந்த பிறகும் இறுதிவரை ஆதரிப்பதும், கடைசியில் அவர்கள் மக்கள் எழுச்சியினால் பதவி விலக நேரும் வேளையில், மக்களிடமிருந்து ஆட்சியை தந்திரமாக தட்டிப்பறிப்பதும்தான் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இதுநாள் வரை கடைப்பிடித்துவரும் கொள்கையாகும். விதிவிலக்காக... அன்று ஈரான், இன்று எகிப்து போன்ற சில நாடுகளில், மொத்த நாட்டு மக்களின் புத்திசாலித்தனமான தனித்துவ ஒற்றுமையால், வல்லரசுகளின் எண்ணம் நிறைவேறாமலோ அல்லது சூழ்ச்சிகள் பலிக்காமலோ இருந்த்திருக்கலாம். (டுனிசியாவை மறந்து விடுங்கள்... அது எண்ணெய் அல்லது எரிவாயு இல்லாத வல்லரசுகளுக்கு உபயோகமற்ற நாடு).
சென்றவாரம், வான் தாக்குதல் மூலமாகவும் தன் மக்களையே கொல்லும் கொடூர கொலைகார ராட்சஸனாக மாறியுள்ள கட்டாஃபிக்கு எதிராக, உள்நாட்டு கலவரத்தின் மூலம் இரத்தக்களரியாகும் லிபியாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு தடைவிதிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்தது. இவ்விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமெனவும் அதேவேளையில் வெளிநாட்டு தலையீடு கூடாது எனவும் மீண்டும் O.I.C கேட்டுக்கொண்டது.
ஆனால், ஐ.நா, அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் முதலில் லிபியாவின் வானில் தம்மை தவிர(?) வேறு எந்த விமானமும் பறக்க கூடாது என்று முன்னெச்செரிக்கையாக தடை விதித்துக்கொண்டன. இதே நேரம், கட்டாஃபி மக்கள் மீதான தன் வான் மற்றும் தரைவழி தாக்குதலை நிறுத்திக்கொண்டு சமரச பேச்சுவார்த்தைக்கு அறிவித்த பின்னும், அதை பொருட்படுத்தாது, அமெரிக்க-ஐரோப்பிய நேச படையினர் லிபியாவின் கடற்பகுதிக்கு போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி, தங்களின் வான் தாக்குதல் போரை லிபியாவின் மீது பிடிவாதமாக கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
"லிபிய மக்களை கட்டாஃபியிடம் இருந்து காக்க" என்று புறப்படுவோர்கள், 'இத்தாக்குதலில் லிபிய மக்களும் இறக்கலாம் (!?!?!?)' என்றும் சொல்லியுள்ளார்கள்...! சொன்னது போலவே நேற்று முன்தினம் லிபிய மருத்துவமனையையும் கல்விக் கூடத்தையும் கூட தாக்கி 50 அப்பாவி லிபிய மக்கள் மரணம்..! இதுவரை உள்நாட்டு சர்வாதிகாரி கட்டாஃபியின் பயங்கரவாதம் ஆயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி முடிந்து, இப்போது அயல்நாட்டு சர்வாதிகாரி அமெரிக்கா தலைமையில் பன்னாட்டு கூட்டுப்படைகளின் பயங்கரவாதம் லிபியாவில் ஆரம்பமாகிவிட்டது.
இவ்விவகாரத்தில் லிபிய மக்களுக்கு உதவுவதுதான் ஜனநாயக நாடுகள் மற்றும் அமைப்புகளின் கடமையாகும். தாக்கி அழிப்பது அல்ல. கட்டாஃபியின் ஆட்சிக் கவிழ்ந்து புதிய பொம்மை அரசை அமெரிக்கா உருவாக்கும் பொழுது பயங்கரவாதம் நாட்டியமாடும் இன்னொரு இராக்காகவும், லிபியா மாறலாம்.
மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மூலம் ஜனநாயகம் மலர்ந்தால், அதற்கு அமெரிக்க ஐரோப்பிய தடைகள் இருந்தாலும், லிபியாவிற்கு அதன் இறையாண்மையையும், சுய நிர்ணய உரிமையையும் பாதுகாக்க உதவி செய்வதுதான் சர்வதேச சமூகத்தின் கடமையாகும். எந்த நாட்டிக்கு இதற்கான தகுதியும் பொதுநல எண்ணமும் உள்ளது..? சிந்தியுங்கள்.
எண்ணெய் தராத தன் எதிரி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வளர்த்த கடா (சதாம் ஹுசேன்), பேராசையால் தன்னுடைய இன்னொரு எண்ணெய் அடிமையான குவைத்தை கைப்பற்றி அதன்மூலம் தன் மாரில் பாய்ந்த போது அவரை அழித்து இராக்கிய எண்ணெய் வளத்தை கைப்பற்றியது.
அளவிட முடியாத அளவு இயற்கை எரிவாயுவும் மொத்தமாக தன் எதிரி ரஷ்யாவிற்கு செல்லக்கூடாது என்பதற்காக, ஆப்கன் அதிபர் நஜிபுல்லாவிற்கு எதிராக அமெரிக்கா வளர்த்த கடா (ஒசாமா பின் லேடன் & தலிபான்), பிற்காலத்தில் அவர்களின் ஆட்சியின் போது, தன் மாரில் பாய்ந்த போது அவர்களை அழித்து எரிவாயுக்காக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது.
இப்போது, லிபியாவில் தான் வளர்த்த கடா, "அல் கைதா பயங்கரவாதிகள் உன் நாட்டில் கலகம்செய்தால் நீ என்ன செய்வாயோ அதேயேதானே நான் லிபியாவில் செய்கிறேன்" ---என்று தன்னைப்போலவே பயங்கரவாதியாக உதார் விடுவதை பார்த்து பொறுக்காமல், கட்டாஃபியை அழிக்க முன்வந்திருக்கிறது.
''எண்ணெய் வளம் இல்லாத நாட்டில் பிறந்தது வரமா அல்லது எண்ணெய் வளம் உள்ள நாட்டில் பிறப்பது சாபமா என்று புரியவில்லை...'' என்று என்னுடன் பணிபுரியும் ஒரு வட இந்திய சகோ ஒருவர் அடிக்கடி சொல்வார்...!
இராக், ஆஃப்கானிஸ்தான் அடுத்து லிபியா என இன்றைய தேதியில் மொழி, சாதி, மத, இன, கொள்கை வெறிகளை விட மிக அதிக பயங்கரங்களை உண்டாக்கும் என்று தணியும் அமெரிக்காவின் இந்த 'எண்ணெய் வெறி'..?
16 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஆஷிக்!
//தினமும் ஏறத்தாழ 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெக்கும் மேலே தினமும் ஏற்றுமதி செய்யும் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு நாட்டமெல்லாம். அதையே வாலை ஆட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வருகின்றன. அதற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுதான் அவர்களின் லட்சியம். மாறாக, லிபிய உள்நாட்டு ஜனநாயகமோ, மக்களுக்கு சுதந்திரமோ நோக்கமே அல்ல. இதைவிட கொடூரமாக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேயை ஏன் கண்டுகொள்ளவில்லை?//
சரியாக சொன்னீர்கள். இவர்களின் நோக்கமெல்லாம் எந்த வகையிலாவது பணம் பண்ண வேண்டும். ஆனால் எவ்வளவு பணம் வந்தாலும் இன்னும் அமெரிக்காவில் வறுமை ஒழிந்த பாடில்லை. பல மக்களின் குறுதியிலே வந்த பணமல்லவா?
மேலும் அமெரிக்காவின் அருகில் இருக்கும் வெனிசூலாவிலும் எண்ணெய் வளம் இருக்கிறது. அதன் அதிபரும் அமெரிக்க எதிர்ப்பாளர். அங்கு தனது குள்ளநரித் தனத்தை அமெரிக்கா ஏன் காட்டுவதில்லை? ஏனெனில் அது ஒரு இஸ்லாமிய நாடு அல்ல.
சிறந்த பதிவை தந்திருக்கிறீர்கள்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
டுநிசியாவிலும், எகிப்திலும் புரட்சி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், அந்நாட்டு ராணுவங்கள் லிபியாவில் நடந்தது போல தன் நாட்டு மக்களான போராட்டக்காரர்கள் மீது படுகொலையில் ஈடுபடவில்லை. அதனால், "அப்பாவி மக்களை காப்பாற்றுகிறேன் பேர்வழி" என்று எந்த வெளிநாட்டு சக்திகளும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால், லிபியாவில் தன் தலையில் 'அமெரிக்க ஊடுருவல்' எனும் நெருப்பை அள்ளி போட்டுக்கொண்டது மட்டுமில்லாது அனைத்து லிபிய மக்கள் தலையிலும் நெருப்பை அள்ளி போட்டுவிட்டார் கட்டாஃபி...! கொடூர முட்டாள்..!
இதேபோன்று... ஜனநாயகத்துக்கு எதிரான மேலும் சில முட்டாள்கள் -ஃபித்னா ஃபஸாத்கள்- இப்போது முளைத்து இருக்கிறார்கள்.
சகோ.சுவனப்பிரியன், வேறென்ன சொல்ல... கியாமத் நாள் நெருங்கிவிட்டது...!
நடுநிலையான அதே சமயம் அறிவான பொறுப்பான பதிவு , இவ்வளவு எண்ணெய் வளம் இருந்தும் இவ்வளவு ஏழைகள் ஏன் ? ஒரு நாட்டின் சிறந்த வளம் எண்ணையோ எரிவாயுவோ அல்லது உலோகமோ அல்ல சிறந்த மனித வளமே வளம் உதாரணம் ஜப்பான், அஷிகிற்கு ஒரு கேள்வி , அனைவரும் அறிந்த ஒன்று வேறு எந்த மதத்தை காட்டிலும் தன்னுடைய வேதத்தை நன்கு அறிந்தவர் இஸ்லாமியர்கள் , குரானில் அனைத்து தீர்வுகளும் உள்ளன என்கிற பொழுது அதனை கற்றுஅறிந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் வல்லவர்கள் ஆகஇருக்க வேண்டும் , வியாபாரத்தில் சமுகத்தில் அரசியலில் குடும்ப உறவுகளில் சிறந்தவர்கள் ஆக இருக்க வேண்டும் , ஆனால் இவ்வளவு வளம் இருந்தும் பெரும்பான்மையான மத்திய கிழக்கு நாடுகள் சர்வதிகார அல்லது மன்னராட்சி நாடுகளாக இருக்கின்றன , இந்தியா போன்ற நாடுகளிலும் மற்ற மதத்தினரை விட கல்வியில் பின்தங்கியே உள்ளனர், அதனாலேயே வேலை வாய்ப்புகளிலும் பின் தங்கி இருக்கின்றனர் , கல்வியை குரான் வலியுறுத்தி இருந்தால் நீங்கள் அதனை பின்பற்றி இருந்தால் இந்த நிலைமை இருக்காது , குரான் வலியுறுத்தியும் நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் சிறந்த முஸ்லிம் ஆக முடியாது ( நான் உங்களை சொல்லவில்லை நீங்கள் நன்கு படித்தவர் பண்பாளர் , அதனாலேயே உங்களுடன் இவ்வளவு துணிவாக பேச முடிகின்றது )
@vijay_dl
//ஒரு நாட்டின் சிறந்த வளம் .... சிறந்த மனித வளமே வளம்//--சரியான கருத்து...இதைத்தான்...மக்கள்தொகையா? மனிதவளமா? என்று முன்பு விபரமாய் பதிவிட்டேன்.
ஆள்பவர்களால் அரசியலில் இஸ்லாம் கடைப்பிடிக்கப்படும் போது முஸ்லிம்கள் சமூகத்தில், குடும்பத்தில், கல்வி, வியாபாரம், கலை, அறிவியல், மருத்துவம், கணிதம், வானசாஸ்திரம் என அனைத்திலும் சிகரத்தை தொட்டனர்.
'சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு' என்று நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் மக்களுக்கு சொல்லித்தந்தார்கள்...
அன்று ஆயிரம் வருடங்கள் ஐரோப்பா இருண்ட காலத்தில் இருந்தபோது, உலகுக்கு ஒளியாக இருந்தவர்கள் சீனர்களும் அரேபியர்களும்தான்.
உலக மக்களின் பிரம்மாண்ட நவீன கல்விக்கு உரியதாய் பாக்தாத் பல்கலைக்கழகம் இருந்தது. பின்னாளில் ஐரோப்பியர்களால் அது கொள்ளையிடப்பட்டு முற்றிலும் அழிக்கப்படும்வரை...!
அதன் பின்னர் உலக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கினர்...
ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப்பின்னர், தொன்மையான அலிகார், உஸ்மானியா பல்கலைக்கழங்கள் மூலம்... பண்டைய இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் கல்வியில் முன்னிலை வகித்தது முஸ்லிம்கள்தான். ஆங்கிலேயர்களை நாட்டிலிருந்து விரட்ட "அவர்களின் கல்வி" என்று அதை தம்மிலிருந்து விரட்டிவிட்டார்கள். அதனால், மேலும் பிந்தங்கினார்கள்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் இத்தியாகத்திற்கு அரசு சரியாக கைம்மாறு அளிக்க வில்லை. விளைவு... சச்சார், மிஸ்ரா கமிஷன் எல்லாம் பரிந்துரைக்க வேண்டிய கட்டாயம்.
தற்போது உலக அளவில் முஸ்லிம்களிடம் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு முட்டுக்கட்டை... முஸ்லிம்கள் வாழும் நாட்டில் உள்ள அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடும் 'பொம்மை ஆட்சியாளர்கள்' மற்றும் அமெரிக்காவின் எண்ணெய்வெறி மற்றும் கட்டற்ற ஆயுத விற்பனை. இதன் விளைவு இவ்வுலகில் பயங்கரவாதம் முன்னிலை.
எண்ணெய் இல்லாததால்தான் நம் நாட்டில் சாதி/மத/மொழிக்கலவரங்கள் இன்னும் வீச்சரிவாளால் மட்டும் நடக்கின்றன. இருந்தும் 2010-ல் உலகின் நம்பர் ஒன் ஆயுத ஏற்றுமதியாளர்..? வேறு யார்... அமெரிக்காதான்..! நம்பர் ஒன் இறக்குமதியாளர்...? நாம்தான்...!
காரணம், மற்ற நாடுகளின் எண்ணெய்க்கு தரும் அதே முக்கியத்துவத்தை அமெரிக்கா காஷ்மீருக்கு தருவதால்..!
மேற்கத்திய நாடுகள் திருந்த மாட்டார்கள், நல்ல பகிர்வு சகோ.
@இளம் தூயவன்
//மேற்கத்திய நாடுகள் திருந்த மாட்டார்கள்// ---த்.தி.ர்.ர்.ர்.ருத்.த்.த்.த்தியாக வேண்டுமே சகோ.... எதிர்கால உலக நன்மைக்காக..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
படங்கள் பொருத்தமாக இருந்தது
சரியான சவுக்கடி பதிவு
என்று தணியும் அமெரிக்காவின் இந்த 'எண்ணெய் வெறி'..?
அநியாயக்காரர்களுக்கு தண்டனை வெகுதொலைவில் இல்லை.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
படங்கள், காப்பிரைட் இல்லாத சில அரபி செய்தி தளங்களிலிருந்து பதிவுக்கு பொருத்தமாக எடுக்கப்பட்டவை, சகோ.ஹைதர் அலி.
ஆங்கிலத்தளங்களிலிருந்த கார்ட்டூன்கள், பதிவுக்கு ஏற்றவாறு என்னால் மாற்றி வரையப்பட்டவை & எழுதப்பட்டவை...
ஆதலால் வரைந்தவர் பெயரும் இல்லை... மாற்றிய என் பெயரையும் போட்டுக்கொள்ள மனம் வரவில்லை.
@Issadeen Rilwan - Changes Do Club//அநியாயக்காரர்களுக்கு தண்டனை வெகுதொலைவில் இல்லை.//---இன்ஷாஅல்லாஹ்...
அவர்கள் மனம் மாறி தவறை உணர்ந்து திருந்தி... நல்லவர்களாகி...
"உலக மக்கள் அனைவரும் தன் சகோதரர்களே... தனக்கு எது நன்மையோ அதையே உலக மக்கள் அனைவருக்கும் நாடுவேன்"---என்று முடிவு செய்யட்டும்.
அதன் பின்னர், உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றமும், அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும்... சகோ.இஸ்ஸாதீன் ரிள்த்வான்.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஆஷிக்!
மிகவும் அருமையான முறையில் தொகுத்து வழங்கி உள்ள பதிவு. பலரின் அமைதியும் மகிழ்ச்சியும் சிலரின் சுயநலத்தால் எப்படி சிதைக்கபடுகிறது என்பதை திறம்பட எடுத்து காட்டியிருக்குறீர்கள் சகோதரரே, வாழ்த்துக்கள்!
@அகல்யன் வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மாதுல்லாஹி வ பரக்காதுஹ்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அகல்யன்...
மாஷா அல்லாஹ் சிந்திக்க தூண்டும் சிறப்பான பதிவு
//எந்த மதத்தை காட்டிலும் தன்னுடைய வேதத்தை நன்கு அறிந்தவர் இஸ்லாமியர்கள் , குரானில் அனைத்து தீர்வுகளும் உள்ளன என்கிற பொழுது அதனை கற்றுஅறிந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் வல்லவர்கள் ஆகஇருக்க வேண்டும்//அன்பு சகோதரர் விஜய், தங்களின் ஆதாங்கமான கேள்விக்கு நன்றி. ஆனால் உண்மையயை சொல்ல வேண்டும் என்றால் முஸ்லிம் பெயர்களில் சாத்தான்கள் அவ்வளவே. ஆனால் இஸ்லாத்தினை வாழ்வியல் நெறியாக பேணிய எண்ணற்றவர்களை நீங்கள் வரலாற்றில் தேடலாம். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த உமர் பின் கத்தாப் அவர்கள் வழமையாக செல்லும் இரவு நேர சோதனையில் ஒரு வீட்டில் இரு பெண்கள் (தாய் மற்றும் மகள்) பேசுகிறார்கள். நமக்கு வருமாணம் குறைவாக இருப்பதால் பாலில் தண்ணீர் கலந்து வை என்கிறார் தாய். அதற்கு மகள் கலப்படம் செய்யக் கூடாது என்று ஜனாதிபதி கட்டளை இட்டிருக்கிறார் என்கிறார் மகள். அவர் என்ன பாhக்கவா போகிறார் என்கிறார் தாய். அவர் பார்க்கவிலலை என்றாலும் இறைவன் பார்க்கிறான் என்கிறார் மகள். இதைக் வெளியில் இருந்து கேட்ட உமர்(ரலி)அவர்கள் மறுநாள் அரசு கருவூலத்தில் இருந்து அவர்களுக்கு பொருளுதவி செய்கிறார்கள். மற்றொரு சம்பவம். வரலாற்றில் 2வது உமர் என்றழைக்கப்பட்ட உமல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களை பாhக்க இராக்கில் இருந்து அவர் நண்பர் வருகிறார். இரவில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது உமர் அவர்கள் விளக்கை அனைத்து விடுகிறார்கள். ஏன் என்று நண்பர் கேட்க இது அரசாங்க கருவூலத்திற்கு சொந்தமானது நாமோ சொந்த விசயங்கள் பேசுகிறோம் என்று அரசாங்க அமானிதம் பேனுகிறார்கள். ஆனால் இந்த மாதிரி மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் நகைச்சுவை நடிகர்; செய்வதாக வரும். ஆனால் முன் சொன்ன சம்பவம் வரலாறு. இந்த உமர் பின் அப்துல் அஜீஸ் தான் முன் சொன்ன பெண்ணின் வழி தோன்றல். அந்த அளவுக்கு இஸ்லாம் மனதோடு பின்னி பினைந்திருந்தது. மனதை விட்டு இஸ்லாத்தையும் இஸ்லாத்தை விட்டு மனதையும் பிரிக்க முடியாமல் இருந்தது. நன்றி சகோ ஆஷிக் இந்த பெரிய பின்னூட்டத்தை அனுமதியளித்ததற்கு.
@முஸ்லிம்நன்றி...சகோ.முஹம்மது ஹசன்
@Ferozஅந்த பால் விற்கும் சாதாரண குடும்பத்து பெண்ணின் இறையச்சம் கொண்ட மகள் தான் கலீஃபா உமர் பின் கத்தாப் அவர்களின் மருமகள் ஆனார்..!
அன்று இறையச்சம்தான் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சொத்தாகவும் தகுதியாகவும் கணக்கெடுக்கப்பட்டது என்பது நமக்கு சிறந்த படிப்பினை.
நபி(ஸல்) அவர்களால், சுவனம் குறித்து நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபிகளில் இருந்து வந்த அந்த நான்கு கலிஃபாக்கள் தவிர, பின்னாளில் மிக சிறப்பாக இறையச்சத்துடன் ஆட்சி புரிந்தவர்களில் முக்கியமானவர் நீங்கள் சொன்ன 'இரண்டாம் உமர்' எனும் உமர் பின் அப்துல் அஸீஸ் ஆவார்.
அதன் பின்னர் சுல்தான் சலாஹுத்தீன் அவர்களை சொல்லலாம்..! சிலுவைப்போரில் தோற்றவர்களை ஜெருசலத்திலிருந்து வெளியேற்றும்போது காட்டிய அவரின் கண்ணியம், போரின் சமயம் தன்னை கொல்ல வந்த எதிரி அரசர் நோய்வாய்ப்பட்டபோது... போரை உடனே தற்காலிகமாக நிறுத்திவிட்டு, எதிரி அரசரை நோயிலிருந்து குணப்படுத்தியமை, போன்ற பல விஷயங்கள் இன்றும் ஐரோப்பா முழுக்க சிலாகிக்கப்படும் பிரபலமான வரலாறுகள்.
ஆட்சியாளர்கள் யார்...?
நம்மிலிருந்து வரக்கூடியவர்களே..!
நாம் நல்லோராக இருந்தால்... நம்மிலிருந்து வரும் ஆட்சியாளர்களும் அப்படியேத்தான் அமைவார்கள்... அல்லவா..?
ஆட்சியாளர் சிறந்தோராய் இருந்தால் மக்களும் சிறந்தோராகிவிடுவது எளிது.
//மனதை விட்டு இஸ்லாத்தையும் இஸ்லாத்தை விட்டு மனதையும் பிரிக்க முடியாமல் இருந்தது.//--முத்தான வரிகள் சகோ.ஃபெரோஸ்...
இதுபோன்ற ஆட்சியாளர்களைத்தான் இன்றைய முஸ்லிம்கள் சல்லடை போட்டு தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஃபெரோஸ்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!