அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, March 14, 2011

8 கடாஃபியின் அக்கிரமமும் தினமணியின் நயவஞ்சகமும்


லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.
லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.
உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின.
1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.
மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.
கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.
லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?
நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத்தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?
அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே! 

---------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்தமிழர்களுக்காக இந்தியா ஏன் கவலைப்படவில்லை - முன்பு அதே 'தினமணி'யின் சாடல்:-
'எங்கோ வியன்னாவில் தேரா சச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன் தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?'
=====> (இது பஞ்சாப் கலவரம் பற்றிய தினமணி தலையங்கம்)

தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என்று தினமணி நாளேட்டில், 'நமக்கெதற்குச்சுமை, நாம் ஏன் உதவ வேண்டும் என்ற எண்ணம் பாகிஸ்தானைப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கிய போது இருக்கவில்லை. அப்போது இருந்த அதே கடமை உணர்வு இப்போதும் வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

'ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை, மனமும் இல்லை.'
=====> (இது தனி ஈழம் பற்றிய தினமணி தலையங்கம்)

-----------------------------------------------------------------------------------------------------------------

ஒரே மாதிரியான பிரச்சினையில், தினமணிக்கு எதற்கு இப்படி வெவ்வேறான கண்ணோட்டம்..? லிபியா பற்றி எழுதியதெல்லாம் சரிதான்..! அதில்...///அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?//// என்று எழுதியவுடன், "இதைத்தானே நாமும் செய்கிறோம்" என்று  தினமணிக்கு எங்கோ உறுத்தி இருக்கிறது..! உடனே, அது என்ன எழுதுகிறது என்றால்...///நமது காஷ்மீரிலும்(!?!)தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?///---என்று காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியென எழுதி, அந்த மக்களை தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்திவிட்டு, அதை இந்திய உள்நாட்டுப்பிரச்சினை என்றும் மக்களுக்கு அறிவிக்கிறது. என்ன ஒரு கயமைத்தனம்..?

ஆனால், மிக தெளிவாக பாகிஸ்தான் வேறு நாடு என்று அறிந்திருந்தும், அதில் கிழக்கு பாகிஸ்தான் என்பது அதன் உள்நாட்டுப்பிரச்சினை என்று அறிந்திருந்தும், இந்தியா அதில் தலையிட்டு பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷ் என்ற தனிநாடு அமைத்ததை ஆதரிக்கிறது. 

அதேபோல, இலங்கை வேறுநாடு என்று அறிந்தும், அங்கே ஈழத்தமிழர்களின் படுகொலை அதன் உள்நாட்டுப்பிரச்சினை என்று அறிந்தும், அதேபோன்ற ராணுவ நடவடிக்கை எடுத்து அதன்மூலம் இந்தியா தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறது.


"தனக்கென எதனை விரும்புகின்றானோ அதனைத் தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் உண்மையில் நம்பிக்கையாளர் இல்லை" [புஹாரி, முஸ்லிம், இப்னு மாஜா] என்பது நபி மொழியாக இருக்க, ஆனால், லிபியாவில் 41 வருஷங்கலாய்  ஜனநாயகத்தின்(?!?) மூலம் அதிபராக இருக்கும் ஒரு நபர், தனக்கு எதிரான இனக்குழு என்பதால் அதனைச்சார்ந்த மக்களை ஆயிரக்கணக்கில் அதிபர் மும்மார் கடாஃபி என்ற கொலைகாரன் கொன்று குவித்து வருவதை ஒரு வரியில் கூட கண்டிக்க மணம் இல்லையா தினமணிக்கு..? இதுதானே ராஜபக்சே என்ற கொடிய கொலைகாரன் செய்தது..? 

ஈழ மக்கள் உயிரை உணர முடிந்த தினமணிக்கு லிபிய மக்கள் உயிர் எல்லாம் உயிர் இல்லையா? ஈழ விவகாரத்தில் மனித உரிமை அத்துமீறல், அப்பாவிமக்கள் படுகொலை இதிலெல்லாம் 'அது உள்நாட்டு விவகாரம் அல்ல' என்று மிகவும் சரியான நிலைப்பாட்டை எடுக்கத்தெரிந்த தினமணிக்கு, காஷ்மீரிலும் லிபியாவிலும் மட்டும் ஏன் தெரியவில்லை..? ஏனிந்த இரட்டை நாக்கு..? ஏனிந்த இரட்டை மனநிலை..?


"தனக்கு எதிராக லிபியாவில் கடைசி மனிதன் உயிரோடு இருக்கும் வரை போரிடுவேன்" என்று தொலைக்காட்சியில் இந்த சைக்கோவின் பேட்டியை கண்டதும், மொத்த அரபு நாடுகளும் லிபிய அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்ததே..! அரபு லீகிலிருந்து லிபியாவை நீக்கியதே..! அதையெல்லாம் தினமணி குறிப்பிட தவிர்த்துவிட்டது. காரணம், கடாஃபியை ஏனோ வில்லனாக கூற தினமணிக்கு மனம் வரவில்லை. இந்த அக்கிரமக்காரனுக்கு ஏன் இந்த வக்காலத்து..? ஏன் எனில்..., "அமெரிக்கா ஆக்கிரமித்துவிடும் என்பதால் அது லிபியாவுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம், சரி, அப்போ, இந்திய ராணுவம் ஏன் லிபியா செல்லக்கூடாது" என்று வேறு கேட்டு எழுதும் நிலை வந்து விடக்கூடும் என்பதால் தினமணி கடாஃபியை திட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

இதற்குப்பெயர்தான் 'தனக்கொரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி' எனும், நயவஞ்சகம். நரித்தனம். பாரபட்சம். இதையேதானே தினமணி சாடி இருக்கும் அமெரிக்காவும் மற்றவர்கள் விஷயத்தில் எடுக்கிறது..? நாம் பிறரை குறை சொல்லும் முன், நம் தவறு நம் அறிவுக்கு நன்கு புலப்பட்டும் அதை ஊத்தி மூடி பூசி மெழுகி மறைப்பது தவறல்லவா..? அதைத்தான் தினமணி இத்தலையங்கத்தில் சம்பந்தமே இலலாமல் காஷ்மீர் விவகாரத்தை இங்கிழுத்து அதில் இதை செய்திருக்கிறது.
 
முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)
 
நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (ஆதாரம்:அபுதாவூத்)

சமீபகாலமாய், கெட்ட ஆட்சியாளர்களை மக்கள் பதவிகளை விட்டு இறக்கி விரட்டுகிறார்கள் அல்லவா...? அவர்கள் எங்கே செல்கிறார்கள்..? (எனக்கு மெயிலில் ஒரு நண்பர் அனுப்பியது... கற்பனை புகைப்படம்..!)
 

8 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...