ஹலோ..! ஒரு நிமிஷம் இருங்க..! ஓடிறாதீங்க..! நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே...! ப்ளீஸ்...! (இதத்தாங்க சொல்ல வந்தேன்)
என் சிறு வயதில் நான் எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்று இருந்த என் சுற்றுப்புறம், என் ஊர், என் மாவட்டம், என் மாநிலம் இப்போது அப்படி இருக்கவில்லை.
படித்திருப்பீர்களே... "நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி குலவும் தஞ்சை தரணி" என்றும் "தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம்" என்றும் "சோழநாடு சோறுடைத்து" என்றும் சிறுவயதில். இப்போது அப்படி அல்ல.
நீங்கள் கேட்கலாம்;
''பருவ மழை பொய்க்கிறது, நிலத்தடி நீர் வற்றிவிட்டது, ஆற்றில் தண்ணீர் இல்லை--காரணம் கர்நாடகா-- அவனிடம் போய் காவிரியில் தண்ணீர் விட சொல்லு, சொல்ல வந்துட்டார் மரம் நடச்சொல்லி, நட்டால் மட்டும் போதுமாய்யா? தண்ணீர் ஊத்த வேணாம்? அவனவன் குளிக்கவே தண்ணீர் இல்லாம இருக்கான், இதுல மரத்துக்குவேற தனியா தண்ணி ஊத்தனுமாம்'' என்று.
உங்கள் வாதம் சரியானதுதான். நான் கர்நாடகாவை தண்ணீர் விடச்சொல்லும் அதிகாரம் பெற்றிருக்க வில்லைதான். அதேநேரம் உங்களிடம் எனது கேள்வி என்னவெனில், நாம் தண்ணீர் குடிக்காமலா வாழ்கிறோம்? தண்ணீரில் குளிக்காமலா வாழ்கிறோம்? துணி, பாத்திரங்களை தண்ணீரில் கழுவாமலா இருக்கின்றோம்?
ஆக, இப்படி குளித்த, துவைத்த, பாத்திரங்கள் கழுவிய தண்ணீர் எதற்கு செப்டிக் டேங்குக்கும், பாதாள சாக்கடைக்கும் சென்று 'கூவம்' போன்ற கழிவுநீர்கால்வாயில் கலந்து வீணாக கடைசியில் கடலுக்கு செல்ல வேண்டும்? அதை நம் மரம் நட்ட தோட்டத்துக்கு பாய விட்டால் என்ன? இப்படி செய்யாமல், இதற்கு கர்நாடகா மேல் பழி போட்டுவிட்டு நாம் மரம் வளர்க்காமல் சும்மா இருந்து விட்டால் அதன் பின்விளைவை அனுபவிக்கப்போவது நாமா/நமது சந்ததினரா அல்லது அவர்களா? நாம் தானே? நம் சந்ததிதானே? எனில், அந்த பின்விளைவிளிருந்து நம்மை-நம் சந்ததியை காத்துக்கொள்ள என்ன நடவடிக்கைகளை நாம் இதுவரை மேற்கொண்டுள்ளோம்? இது தஞ்சை மாவட்ட மக்களுக்கெனில், மற்ற குறிப்பாக ஆற்றுப்பாசனம் குறைந்த தென் மாவட்ட மக்கள் என்ன செய்யப்போகிறோம்? தயவு செய்து சிந்தியுங்கள்.
காடுகளின் அழிவுதானே மழை குறைய காரணம்? மழை குறைவுதானே கர்நாடக அணையில் நீர்வரத்து குறைவுக்கு காரணம். அந்த நீர்வரத்து குறைவுதானே அவர்கள் காவிரியில் தண்ணீர் தராமைக்கு காரணம். இதையே காடு வளர்ப்புக்கு எதிராய் காரணம் கூறினால், இப்போதிருப்பதைவிட மேலும் மேலும் துயர நிலைக்குத்தானே நாம் தள்ளப்படுவோம்? எனில், இதனை உடன் மாற்றினால் அப்படியே ரிவர்ஸில் போய் எல்லாமே சரியாகிவிடுமே? தயவு செய்து சிந்தியுங்கள்.
முன்பு பசுமைக்காடுகள் நிறைந்த இடங்கள் இப்போது கான்கிரீட் வீடுகள் நிறைந்து காட்சி அளிக்கின்றன. சரி, பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப வீடுகள் பெருக வேண்டியது அவசியம்தான். ஆனால், நாம் சுவாசிக்க ஆக்சிஜன் தேவை அல்லவா? அவற்றை உற்பத்தி செய்யும் ஜீவன்கள் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா? அதற்கு என்ன முயற்சி மேற்கொள்றோம் நாம்?
சில வருடங்களுக்கு முன்னால், கட்டப்பட்ட வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் மூன்றில் இரு பகுதியை வீடாக கட்டிவிட்டு மூன்றாவது பகுதியை மரங்கள். செடிகள், கொடிகள் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றி தோட்டமாக பராமரித்து வந்தார்கள். ஆனால், இப்போது கட்டப்படும் வீடுளோ அவ்வாறு எந்த ஒரு நிலத்தையும் 'வீணாக்குவதில்லை'(?). அவற்றை கட்டுபவர்கள், நான்கு சதுர அடியாயினும் அதை எப்படி தனக்கு இலாபம் கொழிக்கும் வகையில் பயன் படுத்தலாம் என்றே சிந்திக்கிறார்கள். அதில் ஒரு சிறிய 'எஸ்.டி.டி பூத்' வைத்து வாடகைக்கு விட்டு சம்பாரிப்பதை பார்க்கிறோம்.
நீங்கள் இப்படி கேட்பீர்கள்:
'அந்த நான்குசதுர அடியில் மரம் நட்டால் அது குடும்பத்துக்கு சோறு போடுமா?' என்று. நமது இலக்கு தினம் மூன்று வேலை வயிற்றுப்பசிக்கு தீர்வு தேடிக்கொண்டிருப்பவர்களை நோக்கி அல்ல. தன் அத்தியாவசியத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆனபின்னும், அதிக சொகுசாக வாழவேண்டி 'இன்னும் இன்னும் அதிக வருவாயை எவ்வாறெல்லாம் ஈட்டலாம்' என்று சிந்தித்துக்கொண்டு இருப்பவர்களை பார்த்துத்தான் கெஞ்சுகிறேன்.
அதிக பொருளீட்டல் உங்கள் உரிமை என்றாலும், மரம் நட்டு அதன்மூலம், நம் வருங்கால பூமியை... நாம் எவ்வாறு பெற்றோமோ அதைவிட சிறப்பாக இல்லை எனினும் அது போலவேவாவது நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்சென்றால் என்ன என்பதை தயவு செய்து சிந்திக்கும்படி தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். மேலும், அது வருங்காலத்தவர் உரிமை அல்லவா? அதை சிதைப்பது நமக்கு எப்படி உரிமையாகும்?
நாங்கள் சிந்தித்ததின் விளைவு எங்கள் வீட்டின் நிலத்தில் பாதியில் வீட்டை கட்டிவிட்டு சரிபாதி இடத்தை தோட்டமாக வைத்திருக்கிறோம். அந்த சிறிய இடத்திலேயே முடிந்த வரை பதினாறு மரங்களையும், பல்வேறு செடிகளையும், சில கொடிகளையும் நட்டு அதற்கு உயிர்நீராக... என் வீட்டினர் புழங்கும் அனைத்து தண்ணீரும், மொட்டை மாடியில் & கூரையில் பொழியும் மழையையும் சேமித்து, அவை... அனைத்து தாவரங்களுக்கும் செல்லும் வகையில் தகுந்த ஏற்ற இறக்கங்களுடனும் வளைவு சுளிவுகளுடனும் தாவரங்கள் வரை... குழாய்கள் மற்றும் பாத்திகள் கட்டி வைத்து தினமும் அவற்றை கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்த்து வருகிறோம்... நம் மற்றும் வருங்கால நம் சந்ததியின் நலன் கருதி.
ஆகவே, ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் நான்கு மரங்களாவது நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படி வளர்க்கப்படும் அல்லது அதுவாகவே வளரும்--எந்த வெறுப்புமின்றி நிழல் மற்றும் ஆக்சிஜன் தந்துதவிக்கொண்டிருக்கும்--மரங்களை, 'எப்படி வெட்டலாம்', 'எவ்வளவு கிடைக்கும்' என்று வெட்டுகிறவர்களைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். எந்தவித நியாயமான காரணமுமின்றி மரம் வெட்டுபவர்களை முச்சந்தியில் 'கரண்டுகம்பத்தில்' கட்டி வைத்து சவுக்கால் அடித்தால் என்ன?
எந்த மரத்தை வெட்டினாலும், வெட்டுபவருக்கு உரிய தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். பத்துமரங்கள் நட்டவரே ஒரு மரத்தை வெட்டுவதற்கு உரிமம் பெறல் வேண்டும். நிறைய மரங்கள் நட்டு வளர்த்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, இலவச பஸ்/ரயில் பாஸ், ரேஷன் கார்டில் கூடுதல் அளவைகள் மற்றும் அரசியல் போன்றவற்றில் முன்னுரிமை தரப்படல் வேண்டும்.
காடுகள் அழிவினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும் இவ்வளவு கற்று அறிவை பெற்ற பின்னும்... இன்னும் ஏனிந்த அவலநிலை?
ரியோடி ஜெனிரோ மாநாடு, கியோட்டா ஒப்பந்தம் ஆகியனவெல்லாம் எந்த பலனும் அளிக்காத நிலையில், மார்ச்-22 ' உலக நீர்வள நாள்' என்றும் , ஏபரல்-22 'உலக பூமி நாள்' என்றும் கொண்டாடுவதால் என்ன பலன்? 'கட்டாய மரம் வளர்ப்பை' இன்னும் இவ்வுலகில் எந்த ஒரு அரசும் தம் குடிமக்களுக்கு சட்டமாக்காத அவல நிலையை எண்ணி எனக்கு கோபம் கோபமாய் வருகிறது.
உலக வெப்பமயமாதலுக்கு தெளிவான தீர்வான 'மரம் வளர்ப்பு'க்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டப்பட்டதால் அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் மட்டுமல்லாது பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை டன் கணக்கில் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடுவார்களாம் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத்தலைவர்கள்...!
என்ன சகோதரர்களே..! நான்கு இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு மரமாவது வளர்க்க முடிவு எடுத்து விடீர்களா?
'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'---முஹம்மத் நபி (ஸல்...) அவர்கள் -அறிவிப்பவர்:நபித்தோழர் அனஸ்(ரலி...)அவர்கள்.
ஆதாரம்:சுனன் திர்மதி 1398
"எவர் ஒருவர் மரம் ஒன்றை நட்டு, அம்மரத்தில் இருந்து எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ, அவைகளின் அளவுக்கு இறைவன் மரத்தை நட்டவருக்கு நன்மை எழுதுவான்."---முஹம்மத் நபி (ஸல்...) அவர்கள் ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்-415.
"எவர் ஒருவர் மரம் ஒன்றை நட்டு, அம்மரத்தில் இருந்து எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ, அவைகளின் அளவுக்கு இறைவன் மரத்தை நட்டவருக்கு நன்மை எழுதுவான்."---முஹம்மத் நபி (ஸல்...) அவர்கள் ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்-415.
19 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக் ,
சமூக அக்கறையுடன் அதே சமயம் நம்மால் செய்ய முடிந்த விசயங்களை செய்யத் தூண்டும் ஒரு பதிவு. மரங்களை வளர்ப்பதிலும் அதை கண்ணும் கருத்துமாக தண்ணீர் ஊற்றி வளர்ப்பதிலும் நம்முடைய ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் உங்கள் பதிவின் மூலம் ஏற்படுகிறது. எங்கள் கிராமத்தில் எங்களுடைய நண்பர்கள் பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பதை ஒரு ஹாபியாகவும் அதே சமயம் சமூகப்பணியாகவும் செய்கின்றனர். நட்ட மரத்திற்கு இரும்புக் கூண்டு போட்டு அதை கால்நடைகளிடமிருந்து பாதுகாத்தும் வருகின்றனர்.
அதே போன்று மழை நீர் சேமிப்பு திட்டமும் மிகவும் பயனுள்ளதாக இருந்கிகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருந்தது. இந்த திட்டத்தை இன்னும் வீரியமாக அரசு செயல்படுத்துமேயானால் நம்முடைய நீர் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். முஸ்லிம்களுக்கு சமூக அக்கறையில்லை என்று வினவு போன்ற அடிமுட்டாள் இணையதளங்கள் சொன்னாலும் மழை நீர் சேமிப்பு திட்டத்தை மிக வீரியமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது முஸ்லிம் அமைப்புகள் தான் என்பதை அவர்களுக்கு யாராவது தெரியப்படுத்தினால் பரவாயில்லை. தெரிந்தாலும் அவர்களை பொறுத்த வரை செவிடன் காதில் ஓதிய சங்கு என்பது போல தான் இருக்கும்.
வ அலைக்கும் ஸலாம்,
அன்புச்சகோதரர் ஷேக் தாவூத்,
வருகைக்கு நன்றி.
தங்களின் கருத்துக்கள் சரியானவை.
பொய்யான- எக்காலத்திலும் நடைமுறைப்படுத்த இயலாத- நம்மால் செய்ய முடியாதவற்றை- கனவுபோல எழுதிக்கொண்டும்- கருத்துத்திணிப்பிற்காக எழுதியவரே பல பெயர்களில் வந்து அதைப்பற்றி விவாதித்துக்கொண்டும்- மற்றவர்களின் வளர்ச்சியால் வயிறெறிந்து அவர்களின் மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டு இருப்பதைவிட... (சுருக்கமாக வினவு போல அல்லாமல்)... நம்மால் செய்ய முடிந்ததைப்பற்றி மட்டும் ஆக்கபூர்வமாக எழுதலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ கட்டுரை.
தங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரரே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
வலையுலகில் கால்பதித்து இருக்கும் சகோ ஆஷிக் அவர்களை,சகோதரனாக,சகபதிவராக,வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தங்களின் எழுத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்கள் மென்மேலும் சூப்பரா எழுத என்னோட வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
ஒரு வழியா வந்துட்டீங்க...மிக்க சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ். நான் பதியுலகிற்கு வர ஒரு வகையில் காரணமாய் இருந்த நீங்கள் வலைப்பூ துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது.
மரம் தானே...நாலு என்ன நாற்பதே நட முயற்சிக்கின்றேன் இன்ஷா அல்லாஹ்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
வ அலைக்கும் ஸலாம்,
அன்புச்சகோதரர்கள்
RAZIN ABDUL RAHMAN,
fa &
Aashiq Ahamed
தங்கள் அனைவர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே,
மரம் வளர்க்க தூண்டும் நல்ல பதிவு,
அன்புச்சகோதரர்கள்
ரஹீம் கஸாலி & கார்பன் கூட்டாளி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
இப்பதான் புரிது.வினவை குணிய வைத்து குமுறியது இந்த ஆஷிக்கள் தானா. ஒரே காமெடி சகோதரர் ஆஷிக் அஹமது ஒரு கருத்தை எழுத அதை முகம்மது ஆஷிக் எழுதினார் என்று வினவு குரூப் பொங்கி எழ, அந்த கருத்துரைகள் முழுவதிலுமே முஸ்லீம்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே எழுதப்பட்டதாக இருந்தது. ஒர் கட்டத்தில் படிக்கவே அலுத்து போய்விட்டது எனலாம்.
இப்போது பதிவை பற்றி:
//உறைபனி அளவுக்கு குளிரூட்டப்பட்டதால் அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் மட்டுமல்லாது பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை டன் கணக்கில் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடுவார்களாம் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத்தலைவர்கள்...! //
நச் கருத்துக்கள் - உலகத் தலைங்களுக்கு யாருச்சும் சொல்லி புரியவைங்கப்பா?
முச்சந்தி, கரண்டு கம்பம் - இனி நம்ம ஊருக்காருலே, நம்ம சாதிலே, அதான் நம்ம ஸ்லாங்க் முச்சந்தின்னு பேசுற. keep it up, congrats for a good post
//வினவை குணிய வைத்து குமுறியது இந்த ஆஷிக்கள் தானா//--ஓ..புரிஞ்சிடிச்சா..!
//இனி நம்ம ஊருக்காருலே//--அட..!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... ஹாஜா பாய்.
அஸ்ஸலாமு அலைக்கும்.சிறந்த கருத்துகள்.பாராட்டுக்கள்;இன்னும் நிறைய எழுதுங்கள்.வரவேற்கிறோம்.
வ அலைக்கும் ஸலாம்...
சகோதரர்...shameem அவர்களே...
பாராட்டுக்கும், எழுதினால் வரவேற்பதற்கு தயாராய் இருப்பதற்கும்... நன்றி.
தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...
//வாழ்த்துக்கள்... //---ரொம்ப நன்றி... சகோதரர் யோவ்...!
இந்த பதிவு மட்டுமல்ல, இதனுடன்... மேலும் எனது இரண்டு பதிவுகளும் ("ஒட்டகம்-ஓர் ஒப்பற்ற அதிசயம்" & "மக்கள்தொகையா? மனிதவளமா? " ) தமிழ்மணம் விருது முதல் சுற்றில்தேர்வாகி இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
ம்ம்ம்ம்... இன்ஷால்லாஹ் இறுதிச்சுற்றில் பார்ப்போம். வென்றால் மகிழ்ச்சிதான்....
இருதிச்சுற்றிலும் வெற்றி பெற பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்துகள்! நல்ல சிந்தனை,
"சில வருடங்களுக்கு முன்னால், கட்டப்பட்ட வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் மூன்றில் இரு பகுதியை வீடாக கட்டிவிட்டு மூன்றாவது பகுதியை மரங்கள். செடிகள், கொடிகள் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றி தோட்டமாக பராமரித்து வந்தார்கள்."
நான் உங்களுடைய கருத்தை என் வீட்டில் நடைமுறை படுத்தி உள்ளேன்.
இன்னும் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் கூறியது போல் பொதுநல அமைப்புகள் எல்லா கிராமங்களிலும் செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோதரர் ஃபாரூக்.
உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. இறைநாடினால் அதற்கான நன்மையை பெறுவீர்கள்.(எனது மூன்று பதிவுகளும் இரண்டாவது சுற்றில் வெளியேறிவிட்டன).
///நான் உங்களுடைய கருத்தை என் வீட்டில் நடைமுறை படுத்தி உள்ளேன்.///---அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ், உங்களுக்கு மென்மேலும் அருள்புரியவும், நீங்கள் நட்ட தாவரங்களும் செழிப்பாக தழைத்து வளர்ந்து உங்களுக்கு கியாம நாள் வரை நன்மை சேர்க்கட்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.
மரங்கள் இல்லையென்றால் தண்ணீர் கிடைக்காது மரம் வளர்ப்போம்! இயற்கை காப்போம்! நல்ல பதிவு.... நன்றிகள் நண்பர் முகமதுஆஷிக் அவர்களுக்கு!
மிக அருமை
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!