அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, March 26, 2012

26 புதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..!

தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுக்க முடியாது. மட்டுமின்றி, விட்டுக்கொடுக்கவே இயலாத விஷயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன்மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனி சேர்ந்து வாழவே இயலாது போனால்... பிரிவதை தவிர வேறு வழி இல்லை..! 


இந்நிலையில் மனம் ஒத்துப்போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரபூர்வமாக பிரிதலே விவாகரத்து..! ஏனெனில், பிரிந்தவர்கள் தம் மனம் ஒத்த வேறொவருடன் மறுமணம் புரிய வேண்டுமானால்... இப்படி பிரிந்த  தம்பதியர் அரசிடமிருந்து அதிகாரபூர்வ அங்கீகாரமான விவாகரத்து பெற்றாக வேண்டும். இல்லையேல்... மறுமணத்தில் சட்டசிக்கல் வரும்..! 

தற்போது, மனதால் பிரிந்த தம்பதியர் 'பரஸ்பரம் விவாகரத்து கோரி' குடும்ப நலநீதி மன்றத்தில் விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண்டும்..! அதுவரை 'கவுன்சிலிங்' என்று சேர்த்துவைக்க முயல்வதாக இழுத்தடிப்பார்கள். இந்த நாட்களில் மீண்டும் மனம் மாறி, தம் தவறுணர்ந்து, பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, விவாகரத்து இனி தங்களுக்கு தேவை இன்றி  குடும்ப வாழ்வில் மகிழ்வோடு இணைந்தோரும் உண்டு..! ஆனால், இது மிக மிக சொற்பம்.

மனம் வெறுத்த தம்பதிகளின் மறு இணைப்புக்கு சிலமாதம் பேசிப்பார்க்கலாம். ஆனால், ஒன்றரை வருடம் என்பதெல்லாம் அதிகம்..! தேவை அற்ற கால விரயம்..! இதனால், எண்ணற்ற செக்ஸ் & கிரைம் குற்றங்கள் பெருகுவதைத்தான் நாம் பார்க்கிறோம்..! பெரும்பாலும் இளமையில் விவாகரத்து கோருவோர், இதுபோல ஒன்றரை வருஷம் எல்லாம் காத்திருக்க முடியாமல், பகிரங்க சட்டபூர்வ திருமணம் செய்யாமல் கள்ளத்தனமாக தமக்கு பிடித்தவருடன் உறவு கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் 'என்னை ஏமாற்றி விட்டான்/ள்' என்று வேறொரு புதிய வழக்கு முளைத்து விடுகிறது. 

வேறு சிலர், மனைவியை கொன்று விடுகின்றனர். சிலநாட்களில் சட்டப்படி புதுமாப்பிள்ளை ஆகவேண்டி..! இல்லையேல்... கள்ளக்காதலனோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ கணவனை கொன்று விடுகின்றனர். உடன் சட்டப்படி மணப்பெண் ஆகிவிடலாம் என்று..! ஆனால், சில சமயம் தம் கொலைக்குற்றம் வெளியே தெரிந்து, கைதாகி "மாமியார் வீட்டில் கம்பி எண்ண" செல்வோர் மூலம் இது போன்ற உண்மைகள் தினசரிகளில் அவ்வப்போது வெளிவருகிறது.

இத்தனை வருஷம் கழித்து இதையெல்லாம்  அவதானித்த மத்திய அரசு... புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருகிறது..! இதற்கு, மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 23 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற, இதன்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை வருட காத்திருப்புக்கு இனி வேலை இருக்காது.  "சேர்ந்து வாழவே முடியாத திருமணம்" (“irretrievable breakdown of marriage” clause) என்ற புதிய விதிமுறை ஒன்று இப்போது சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதில்... விவாகரத்து கோரியவர்கள் காத்திருப்பு இன்றி விரைவில் அதை பெற்று விட முடியுமாம்..!

'பரஸ்பரம்' (mutual consent) மூலம் விவாகரத்து மனுச்செய்துவிட்டு... 6 மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இனி ஏற்படாது என்று மட்டும் சொல்கிறார்கள்..! இவ்வகையில் இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய சட்டம்..!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத்தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புஹ்காரி 5273, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். பெண்கள் விவாகரத்துப்பெற இதை விட எளிமையான வழி எங்குமே காண முடியாததாகும். இந்த 21-ம் நூற்றாண்டில் கூட இன்றுவரை நம் நாட்டில் வழங்கப்படாத உரிமையை, இஸ்லாம் சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

ஆனால்... அதேநேரம்... 'பரஸ்பரம்' (mutual consent) என்று இல்லாமல்... தம்பதியரில் மனைவியோ கணவனோ யாரேனும் ஒருவர் மட்டும் தனியாக சென்று விவாகரத்து கோரினால், கணவனோ மனைவியோ எவரும் அந்த விவாகரத்தை எதிர்க்க முடியும் ஒரு நிலை இதுவரை இருந்தது..! 

இப்போது.... இந்த புதிய சட்டத்தில் ஒரு விபரீத சட்டத்திருத்தம் உள்ளது..!

"சேர்ந்து வாழவே முடியாத திருமணம்" என்ற இப்புதிய விதிமுறையின் கீழ், கணவன் தனியாக சென்று விவாகரத்து கேட்டால், அதை எதிர்த்து வழக்காட... மனைவிக்கு மட்டும் உரிமை உண்டாம்..!

ஆனா....ல்ல்ல், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்த்து வழக்காட கணவனுக்கு எவ்வித உரிமையும் இல்லையாம்..!

மேற்படி சட்டத்திருத்ததில், பெண்களுக்கு மட்டும் உரிமையை தந்துவிட்டு ஆண்களுக்கு இல்லை என்றது நிச்சயமாக சரியல்ல..! சமநீதியும் அல்ல..! இருவருக்கும்  இல்லை என்று சொல்லி இருக்கலாம். அல்லது இருவருக்கும் எதிர்க்கும் உரிமையை அளித்திருக்கலாம். நிறைய பிரச்சினைகளுக்கு இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கும்..! எப்படி..?

எங்கோ.. ஒரு சில பாதிக்கப்படும் மனைவிகள், அக்கிரம அராஜக கொடுமைக்கார கணவனிடம் இருந்து உடனடி விடுதலை பெறுவது நடக்கலாம்..! அதேநேரம், மனைவி சொல்வது உண்மையா... சரியா.... என்று சட்டத்துக்கு தெரியாத நிலையில்... தனது நிலையை எடுத்துச்சொல்லும் உரிமையைக்கூட ஒரு கணவனுக்கு மறுப்பது சட்டப்படி நீதியா..? அதே உரிமை மனைவிக்கு இருக்கும்போது கணவனுக்கு மட்டும் மறுப்பது சமநீதியா..?

கணவனை பழிவாங்க நினைக்கும் ஒரு மனைவி அல்லது ஜீவனாம்சம் என்ற பெயரில் கணவன் சொத்தை பங்கு கோரும் திட்டத்தில் அவன் மீது ஏதேனும் பெரிய அவதூறு கூறி விவாகரத்து கோரினால்... அதனை மறுத்து எதிர்க்க கணவனுக்கு முடியுமா என்று தெரியவில்லை..! தற்போது தவறாக பயன்படுத்தப்படும் இன்னொரு 'வரதட்சிணை வன்கொடுமை சட்டம்' IPC 498A போன்று இதுவும் ஆகிவிடுமோ என்ற கவலை எழாமல் இல்லை..!

இந்த சமநீதியற்ற சட்டம்... 'திடுமென என்னை விலக்கிவிட்டு மறுமணம் செய்யும் உன்னை சந்தோஷமா வாழ விட்டுருவேனா பார்' என்று மனைவியின் மானத்துக்கும் உயிருக்கும் கெடுதல் செய்யத்தான் பாதிக்கப்பட்ட கணவனை தூண்டும்..! 

பெண்ணை சட்டப்படி திருமணம் செய்தால்தானே ஆணுக்கு இவ்வளவு சட்டப்பிரச்சினையும்..? திருமணமே செய்யாமல் முடிந்தவரை 'லிவிங் டுகெதர்' மாதிரி... டேட்டிங் மாதிரி... 'வாழ்ந்தால்' என்ன..? -- என்றும் எண்ண வைக்கும்..!

முடிந்தவரை அனுபவித்துவிட்டு, பின்னர் வேறொன்று கிடைத்தாலோ... அல்லது இது கசந்தலோ... அல்லது இம்முறை அபார்ஷன் செய்ய முடியாத அளவுக்கு  பிரச்சினை ஏற்பட்டுவிட்டாலோ... அல்லது "மனைவி(?)"யின் உயிருக்கே ஆபத்து என்றாலோ... வயதாகி அழகு குலைந்து விட்டாலோ... "டாட்டா.. பை..பை..." என்று கூறி "கணவன்(?)" தப்பித்துக்கொள்ளலாமே..!?

ஒருவேளை அவள் வழக்கு தொடுத்தால்... 'அவளுடன் வாழ்ந்த பலரில் நானும் ஒருவன்' என்று எவனையாது ரெண்டு பேரை பிடித்து இவன் சாட்சி சொல்லவைத்து விட்டால்... இவனுக்கு முடிந்தது பிரச்சினை..! மானப்பிரச்சினைக்கு அவள் என்ன இவனுக்கு மனைவியா...?!

ஸ்கேனில் பெண்சிசுவாக இருந்தால் அபார்ஷனை சட்டப்படி அனுமதிக்காத நல்ல அரசு... அது ஆணா/பெண்ணா என்று பார்க்கப்படாத நிலையில் அபார்ஷனை அனுமதிக்கிறது..!?! இதனால்... இப்படியான தடை இல்லாமல் அல்லது சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படாமல்... 'மறைமுக அரசு ஆதரவுடன்' நடைபெறும் கலாச்சார சீர்கேடுகளான... கற்பழிப்பு, டேட்டிங், டிஸ்கோத்தே, பப், (தண்ணி)பார்ட்டி, லிவிங்-டுகெதர், இருவர் மனம் விரும்பிய உடலுறவு, அபார்ஷன்கள்... இன்னும் அரசு ஆதரவோடு நடக்கும் விபச்சாரம், ஓரினச்சேர்க்கை... என இவையெல்லாம் மென்மேலும் கொடிகட்டி பறக்கும்..! 

திருமணம் செய்யாமல் பெண்களுடன் வாழ்ந்து அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்லுதலில் சட்ட ரீதியாகவே ஏகப்பட்ட 'பாதுகாப்பு லூப் ஹோல்கள்' ஆண்களுக்கு தற்போது இருக்கிறது. உடல்/உள்ள ரீதியாக நஷ்டம் அனைத்தும் பெண்களுக்குத்தான். திருமணத்துக்கு முன்னர் சட்டத்தில் அந்த அளவு பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை..! ஆனால், 'பாதுகாப்பு' என்று நினைத்து இன்னும் சீர்கேட்டுக்குத்தான் வழிகோலும் போலிருக்கிறது இந்த சட்டத்திருத்தம்..! 

எனவே, மனைவிக்கு மட்டும் இருக்கும் 'விவாகரத்தை எதிர்த்து வழக்காடும் உரிமை'யை சட்டம் கணவனுக்கும் தர வேண்டும்..!

 Thanks to the News Source

26 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...