அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, February 28, 2013

18 ஊடகங்களா... உயர் உச்ச நீதி மன்றங்களா..?

ஒரு குற்றம் நடந்த அன்றே, வெறும் வெற்று பரபரப்புக்காக ஊடகங்களே தம் யூகத்தால் "முதல் தீர்ப்பை" நான் முந்தி நீ முந்தி என்று செய்தியாக எழுதி விடுகின்றன. முதல் நாள் சொன்ன தீர்ப்பை அடுத்தடுத்த நாள் ஊதி பெரிதாக்குகின்றன. பின்னர் அதன்மீதே மற்ற அனைத்து செய்திகளையும் 'ஆதாரங்களாக' கட்டமைக்கின்றன. இந்நிலையில்... பல தரப்பு வாதங்கள், விசாரணைகள், சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் அலசி ஆய்ந்து... ஒரு நீதிபதியால் அந்த ஆரம்ப 'ஊடக தீர்ப்பை'... sorry... 'ஊடக திரிபை' மாற்றி... இப்போது உண்மையை தீர்ப்பாக எழுதி தர்மத்தை நிலைநாட்ட முடிவதில்லை..! இதற்கு அரசும் ஆதரவாக இருக்க முடிவதில்லை. It is really pathetic now a days..!  

இதோ... மற்றுமோர் உதாரணம்..! கேரளாவில்... இருவாரம் முன்னர், பல ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது. அந்த செய்தி இதுதான்.

கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் 

திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவி 'அம்ரிதா மோகன்' என்பவர் தன்  தோழிகளுடனும், குடும்பத்தினருடனும் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் குடும்பத்தார் வந்த ஜீப் மற்றும் தோழிகளுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பார்க்கிங்கில் இருந்த இரு  இளைஞர்கள் நடனம் ஆடி ஆபாச சொற்கள் பேசி ஈவ் டீசிங் செய்தனர். இதனால் ஆவேசமான அம்ரிதா விறுவிறு வென்று இளைஞர்களை நோக்கி பாய்ந்து சென்று அவர்களை தான் கற்றிருந்த கராத்தே மற்றும் களரி வித்தைகள் மூலம் அடித்தார். மாணவியுடன் தந்தையும், குடும்பத்தினரும், தோழிகளும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டினார்கள். பின்னர் இளைஞர்கள் பற்றி அம்ரிதா போலீசில் புகார் செய்தார். கராத்தே / களரி தற்காப்பு கலை தக்க சமயத்தில் துணிச்சலை வரவழைத்து உதவி செய்ததாக மாணவி அம்ரிதா பெருமையுடன் ஊடக பேட்டியில் கூறினார். 20 வயதாகும் அம்ரிதா பி.ஏ. படித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமைகளில்  ஈடுபடுவோரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்வதில் கொலையே செய்து இருந்தாலும் நீதி மன்றம் அப்பெண்ணை மன்னிக்கத்தான் செய்யும்..!
சமீபத்தில் டெல்லி மாணவி கொடூர கொலையை கண்டு வந்த மக்களுக்கு இந்த மாணவி நிச்சயமாக சாதித்த பெண்மணியாகத்தான் மனதில் பதிவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..! இதனை நன்கு புரிந்து கொண்டண ஊடகங்கள்..! உடன் செய்தி சமைக்க ஆரம்பித்தன, டிஆர்பி எகிறியது..!

ஈவ் டீசிங் பண்ணிய கொடூரர்களை, அரக்கர்களை, மனித மிருங்களை, பாலியல் வன்முறை யாளர்களை, பெண் தொல்லையர்களை (மீடியாவின் விதவிதமான இழிவு பட்டங்கள்தான்) அடித்து விரட்டியதால்... வீராங்கனை, இரும்பு பெண்மணி, அஞ்சா நெஞ்சி, பெண்ணுக்கு இலக்கணம், வீரத்திலகம், பாயும் புலி, சீறும் சிறுத்தை என்றெல்லாம் மீடியா தயவால் விதவிதமான சிறப்பு பட்டம் சேர்ந்து கொண்டது.

இந்த வீராங்கனைக்கு பள்ளி, கல்லூரி, மாதர் சங்கம், ரோட்டரி கிளப் என எங்கும் பல பாராட்டு விழா கூட்டங்கள். மாநில அமைச்சரே வீடு தேடி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பல ஒளி ஊடகங்களின் ஸ்பெஷல் ஷோ பேட்டிகள், வார இதழ்கள் பேட்டிகள் என்று அவ்வாரம் இவர் புகழின் உச்சத்தில் இருந்தார். கராத்தேயும் களரியும் கூட சைடில் புகழ்பெற்றது.
 .
இப்படித்தான், இவரின் புகழை மீடியா உயர்த்த உயர்த்த... அந்த இளைஞர்கள் நாளுக்கு நாள் கேவலப்பட்டு பெரிய வில்லனாகிப் போனார்கள். 

இதற்கிடையில், அவர்களுக்கு இந்த கராத்தே அடி எல்லாம் போதாது, சட்டப்படியும் தண்டனை தர வேண்டும் என்ற பலரின் ஊடக கோரிக்கை விளைவால், அவர்களை தேடும் பணி தொடங்கியது. ஒருவனை பிடித்துள்ளார்கள். விசாரிக்கிறார்கள். இன்னொருவனை தேடி வருகிறார்கள் என்று பல செய்திகள்.

இதோடு ஒருவழியாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி முடிவு பெற போகும் சமயம்... அப்போதுதான், விஷயம் வேறு மாதிரி போனது..! 

தேடிப்பிடிக்கப்பட்ட அந்த இளைஞர் மூலம் வந்த செய்தி யாதெனில், அவர் செமை அடி வாங்கி உள்ளார். மூக்கு எலும்பு உடைந்து உள்ளது. ஆஸ்பத்திரியில் இருந்த அவரை போலீஸ் விசாரித்ததில் அவர், அம்ரிதா மீது அவருடைய புகாரை அளித்தார். இப்போது, இவர் தரப்பு போலீஸ் செய்தியை பார்ப்போம்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவரும் இவருடைய நண்பரும் சென்றார்கள். இவர்கள் இருவரும் அரசின் IT@School project இல் தற்காலிக வாகன ஓட்டுனர்கள். அப்போது அரசு வாகனத்தை அங்கு பார்க்கிங் செய்வதில் இவர்களுக்கும் அவருடைய பெற்றோருக்கும் சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா, தம் தந்தை சார்பாக அந்த இருவரையும்  தான் கற்ற கராத்தே களரி வித்தை கொண்டு
மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. மற்றவருக்கு வேறு வகை காயம். காயமடைந்த இருவரும் மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டனர். 

இந்த பிரச்சனை விவகாரமாக உருவெடுக்கும் முன்னரே அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை இரண்டு பேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர்கள் தன்னையும் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் அடிக்க வந்தோரை தற்காப்பிற்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்து அவர்களை முந்திக்கொண்டார்..!

வழக்கம்போலவே ஊடகங்களும் உண்மை நிலை அறியாமல், அம்ரிதாவின்  ஒரு பக்க வாதத்தை மட்டுமே வைத்து, அதை மட்டுமே உண்மை என நம்பி சகட்டுமேனிக்கு அந்த பெண்ணை அளவில்லாமல் ஆதரித்து அவரை கதாநாயகியாக சித்தரித்தும் அந்த இளைஞர்களை அவர் தரப்பு வாதத்தை கேட்காமல், காமகொடூர வில்லன்களாகவும் சித்தரித்து செய்திகள் சமைத்து வெளியிட்டன. விளைவு இந்த இரு இளைஞர்களும் ஓட்டுனராக வேலை செய்து வந்த அரசுப்பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்ககோரி அமிர்தாவிற்கு எதிராக இளைஞர்கள் காவல்நிலையத்தில் மேல்முறையீடு செய்ய இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையில் தவறு முழுக்கமுழுக்க அமிர்தா தரப்பில் உள்ளதாகவும் அவர் தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் தன்னுடைய கராத்தே களரி பயிற்சியை அந்த இளைஞர்கள் மீது பிரயோகித்த தாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த இரு சாதாரண இளைஞர்கள், தோழிகளுடன்
குடும்பத்துடன் உள்ள ஒரு பெண்ணை பாலியல் சீண்டல்கள் செய்திருக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் இப்போது நமக்கு எழுகிறது அல்லவா..? 

இதனை நன்கு விசாரித்த நீதிபதி, அமிர்தா, அவரின் தந்தை மோகன், அவரின் நண்பர் வில்லியம், மற்றும் அம்ரிதாவின் இரு தோழிகள்  ஆகிய ஐவர் மீதும், அரசுப்பணியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்தல், அரசுப்பணிக்கு இடையூறு விளைவித்தல் போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார். 


எனவே, தமது தன்மானத்தை காக்கும் பொருட்டாக, இந்த விஷயத்தையும் ஊடகங்கள் ஜோடனை செய்து நீதிபதியை 'பெண்ணாடிமைத்தனத்தை ஆதரிப்பவர்', 'ஆணாதிக்கவாதி', 'பெண்ணுரிமைக்கு எதிரான தீர்ப்பு' என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விவாதம் நடத்தியது. மீண்டும் அதிக டிஆர்பி எகிறல்..!  பெண்ணிய அமைப்புகள் எதிர்க்கின்றன..!

அரசும் ஏற்கனவே இந்த பெண்ணுக்கு கடும் ஆதரவு தெரிவித்து இருந்ததால்... விளைவு..? அந்த நீதிபதியும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..! ஊடகத்தால் சமைக்கப்பட்ட மக்கள் மன ஓட்டத்துக்கு மாற்றாக ஏதும் செய்ய முடியாத நிலையில்தான் அரசும் இருக்க வேண்டி உள்ளது..! மக்கள் ஓட்டு முக்கியமாயிற்றே..! இது மோசமானநிலை.

மிக மிக சில ஊடகங்கள் மட்டும் விதிவிலக்காக உண்மை நிலையை ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், பெருவாரியான முன்னணி ஊடகங்களின் இந்த விஷமச்செயலால்... அரசு வேலையும் போய், பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்று... காமகொடூரன் என்ற அவப்பெயரும் வாங்கி, அந்த இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்..! இவர்களுக்காக இவர்களின் தரப்பு நீதியை நிலைநாட்ட முயற்சித்த காவல்துறையினரும் நீதிபதியும் கூட அரசால் பந்தாடப்படுகின்றனர் என்றால்...  

இதற்கெல்லாம் மூல காரணம் யார்..?

ஆகவே, நம் நாட்டில் எந்த ஒரு குற்றத்துக்கும், செய்தி என்ற பெயரில் முதல் தீர்ப்பை எழுதுவது ஊடகங்களே என்ற துர் நிலைக்கு நாம் வந்து விட்டோம்..! மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்ட இந்த செய்தியை... மன்னிக்கவும், 'நீதியை' மாற்ற ஒரிஜினல் நீதி மன்றமே எவ்வளவு கஷ்டப்படுகிறது... பாருங்கள் சகோஸ்..!

அப்சல் குருவுக்கு எதிரான 'கூட்டு மன சாட்சி' உருவாக்கப்பட்டது, நடுநிலை அற்ற ஒரு பக்க சார்பு ஊடகங்களால் தான்..! அதற்கு ஜீ தொலைக்காட்சி ஆவணப்படம் எடுத்து வாஜ்பாய் அத்வானி சப்போர்ட்டுடன் தலைமை தாங்கியது. அதனால்தான், அந்த நீதிபதியே கூட சட்டப்படி அல்லாது அந்த ஆவணப்படத்தின் பாதிப்பில் விளைந்த "இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தும்" அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக கூறியிருக்கலாம்..! ஒருவேளை மாற்றி மட்டும் தீர்ப்பு சொல்லி இருந்தால்... 'பாக்கிஸ்தானின் கைக்கூலி', 'பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் துரோகி', 'தேசப்பற்று அற்றவர்' என்றெல்லாம் இந்த நாக்கில் நரம்பில்லாத ஒரு சார்பு ஊடகங்கள் அவரை நிச்சயமாக சொல்லி இருக்கும்..! ஆக, ஊடகம் சமைத்துவைத்த அரசு மற்றும் மக்கள் மனோவிருப்பப்படி உச்ச நீதி மன்றமும் தீர்ப்பு வழங்கும் காலமும் வந்தாயிற்று..! இது மிகவும் மோசமான நிலை.

ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் இப்படித்தான் ஒரு பக்க சார்பு செய்திகள், ஊடகங்களால் சமைக்கப்படுகின்றன. எப்படி நியூஸ் சொன்னால் போனியாகுமோ, எதை சொன்னால் தமது டிஆர்பி எகிருமோ அப்படித்தான் அதைத்தான் நியூஸ் சொல்கின்றன..! எது உண்மை எது பொய் என்பது பற்றி பெருவாரியான ஊடகங்களுக்கு கவலையே இல்லை..!

இறுதியில் அவர்கள் சொன்ன செய்திகளுக்கு முற்றிலும் மாற்றமாக அவர்களால் சித்தரிக்கப்பட்ட வில்லன்கள் எல்லாம் 'நிரபாராதிகள்' என்று ஒரு சில நேர்மையான சிறந்த நீதிபதிகளால் விடுவிக்கப்படும் போது, அதை அதேபோல தலைப்புச்செய்திகளில் சொல்ல வெட்கப்படுகின்றன. அல்லது நீதிபதியை அவதூறு செய்கின்றன..!

2000 துவக்கத்தில், முகத்தை மறைத்து கண்களை மட்டும் காட்டும் ஒரு கருப்பு புருக்கா போட்ட பெண் புகைப்படத்தை காட்டி... தமிழ்நாட்டில் "மனித வெடிகுண்டு ஆயிஷா, இவர்தான்..!" என்று தலைப்புச்செய்திகளில் ஊடகங்கள் அலறின. மொத்த நாடும் அது போன்ற ஆடை உடுத்திய முஸ்லிம் பெண்களை பயங்கரவாதிகளாக பார்த்தன. முஸ்லிம் பெண்களின் முகத்திரையை கழற்றிப்பார்த்துவிட்டு, கையில் உள்ள ஆயிஷாவின் முகத்திரை அணிந்த போட்டோவை வைத்துக்கொண்டு "சரி, போ... முகத்திரை இல்லாத நீ ஆயிஷா இல்லை" என்ற வயிறு எரியும் வேதனை காமடி கூத்துக்கள் ஒவ்வொரு போலீஸ் செக் போஸ்டிலும், டிராஃபிக்  சிக்னலிலும் அரங்கேறின..! ஆனால், 'அது போலி நியூஸ்', 'மனித வெடிகுண்டு உண்மை அல்ல' என்று போலிஸே சொன்ன போது, அந்த உண்மையை ஊடகங்கள் சொல்ல வெட்கப்பட்டு அப்டியே அமுக்கின..!

இதோ... இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பில் கூட... 

முதன் முறையாக 'ஸ்லீப்பர் செல்கள்' வந்து விட்டனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத ஊடகங்கள்  'துப்பாக்கி' படத்தின் கதையை ஹைதராபாத் குண்டு வெடிப்பு செய்திகளில் ரீல் ஓட்டிக்காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். 

அந்த 'ஊடக துப்பாக்கியின்' முதல் ரீலே....... பிக் ஃப்ளாப்...!

பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இங்கே ஹைதராபாத் வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து குண்டு வைத்த ஓர் 'இந்தியன் முஜாஹிதீன் ஸ்லீப்பர் செல்' என்று ஒருவரின் புகைப்படத்தை முஸ்லிம் என்று சொல்லி போட்டார்கள். பல ஊடகங்களில் இந்த ஃபோட்டோ வர...

அய்யகோ... அந்தோ பரிதாபம்..!

அந்த நபர் பாகிஸ்தானின் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர்..! ஆனால், இவர் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பால் கராச்சியில்  சுட்டுக்கொல்லப்பட்டு, பப்ளிக்காக அடக்கம் செய்யப்பட்டு விட்டவர்..!!! (பாக். செய்தி தள சுட்டி)



"போனமாசம் எங்க நாட்டில் செத்து அடக்கப்பட்டவன், எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்..? மயான குழியிலிருந்து எழுந்து வந்தா..?"  

-----என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..? 

ஜனநாயகத்தின் ஒரு தூணாக  உம்மில் பெரும்பாலோர் இல்லை..! மீதி தூண்களையும் வெட்டும் கோடரியாகத்தான் உம்மில் பெரும்பாலோர் இருக்கிறீர்கள்..! செய்திகளை நடுநிலையாக தாருங்கள். ஒரு பக்க சார்பாக சமைக்காதீர்கள். குற்றங்களில் தீர்ப்பு எழுதும் அதிகப்பிரசங்கி வேலை உங்களுக்கு இனி வேண்டாம்..! தயவு செய்து திருந்துங்கள் ஊடகங்களே..!

எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 
---திருவள்ளுவர்

செய்தியை சொல்லும் ஊடகம் அப்படி மெய்ப்போருள் காணாவிட்டால்...?

(உண்மையை ஆராயாமல்) ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  
(ஹதீஸ்நூல்: முஸ்லிம் 6)

18 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...