அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, January 31, 2013

26 முஸ்லிமல்லாதோருக்காக...



நாம் சொல்லும் கருத்தை பிறர் தவறாக சித்தரிக்கும் ஒரு துர்சூழ்நிலை,
நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் போன ஆற்றாமை,
நம்மை வைத்தே தனது அரசியல் வியாபாரத்தை செய்வோரின் சூழ்ச்சி,

இவற்றுக்கு நடுவே...
//அப்படியே தவறாக முஸ்லிம்கள் பற்றி சினிமா & ஒலி/ஒளி/எழுத்து ஊடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதை பார்த்து எங்களுடன் பழகும் நம் முஸ்லிம் நண்பர்களை நாம் வெறுத்திடுவோம் என்ற வாதம் எத்துனை தூரம் சரியாகும்..? தேவையா முஸ்லிம்களின் இந்த விஸ்வரூப எதிர்ப்புகள்..?//
...என்று இன்னமும் கேட்டுக்கொண்டு இருப்போருக்காக கனத்த மனநிலையில்தான் இந்த இடுகையை எழுதுகிறேன் சகோஸ்.


என்னுடைய இந்த மனநிலை நிச்சயமாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தெரியாது. அதை புரிய வைக்கும் முயற்சியே இது. 

காரணம், அமெரிக்க விமான நிலையத்தில் 'ஷாருக்கானுக்கு' இந்த மனநிலை புரிந்தது. அந்த ஆற்றாமையின் விளைவு : "My name is Khan, I'm not a terrorist" என்று அமெரிக்க எதிர்ப்பு படம் ஒன்றை தனது ஆற்றாமையாக பெரும் பொருட்செலவில் அழகாக வெளிப்படுத்தினார். இந்த வசனத்தை சுப்ரீம் கோர்ட்டே தனது தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டி பெருமை படுத்தியது.

அதே அமெரிக்காவில் 'அப்துல் கலாமுக்கு' அதே கசப்பான அனுபவம் ஏற்பட்டது. சிரித்த வாயுடன் ஆற்றாமையை மவுனமாக சகித்துக்கொண்டு ஆதரிக்கவோ எதிர்க்கவோ இன்றி சும்மா இருந்து விட்டார். இந்த மனநிலை புரிந்தாலும் மென்று விழுங்கி நல்ல பெயர் பெறுவது அவரின் சுபாவம் ..! (கூடங்குளம் மட்டும் விதிவிலக்கு)

அதே அமெரிக்காவில் அதே அனுபவம் 'கமால் ஹசன்' என்ற தவறான பெயர் உச்சரிப்பு புரிதலால் கமல் ஹாசனுக்கு ஏற்பட்டபோது.... அந்த மனநிலையை புரிபவராக அவர் இருக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால்...

அந்த புரிதலை குத்தி குதறி பெரிதாக்கும் 'உன்னைப்போல் ஒருவனும்'...  உலகில் உயிரிழந்த லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம் ஆண்-பெண் & குழந்தைகளின்  வில்லனான ஜார்ஜ் புஷ்..  'உலக நாயகன் நீ' என்ற புகழார பாடல் பின்னணியில் ஒலிக்க, ஸ்டைலாக மேடையில் ஸ்லோ மோஷனில் கோட் -டை பறக்க எழுந்து நடக்கும் 'தசாவதாரமும்', அதை தொடர்ந்த அமெரிக்காவை ஆபத்தில்(?!) இருந்து காப்பாற்றும் 'விஸ்வரூபமும்'  அவரிடம் இருந்து அமோக அமெரிக்க ஆதரவாக வெளிப்பட்டு உள்ளது..!

ஆக, இந்த மூவருக்கும் ஏற்பட்ட ஒரே அனுபவத்தின் வெவ்வேறுபட்ட மூன்று விளைவுகளின் வித்தியாசங்களை படிக்கும் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் சகோஸ்..!

ஆகவே, எனதருமை சகோ, நீங்கள் இப்படி 'கமால் ஹசன்' நிலையில் இருந்து, உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் வெறுப்பை காட்டோதாராக இருக்கலாம். ஆனால், உங்களை போன்றே எல்லாரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எனக்கு ஏராளமான முஸ்லிம் அல்லாத அறிந்த/அறியாத நண்பர்கள் உண்டு. 

உதாரணமாக, எனது நேர்முகத்தேர்வில் அறிவில் சிறந்த மெத்தப்படித்த சான்றோர் மூவர், என்னை முஸ்லிம் என்பதற்காக பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, குண்டு வெடிப்பு என்று துளைத்து துளைத்து கேள்வி கேட்டபோது துணுக்குற்றேன். பாஸ்போர்ட் எடுக்கும்போதும் இப்படித்தான்.

ஒருமுறை, ஒரு செக் போஸ்டில் நானிருந்த பேருந்தை மறித்து பேருந்து உள்ளே ஏறிய போலிஸ், அப்பேருந்தில் பலர் தாடி வைத்து இருந்தாலும்... புருக்கா போட்ட எனது மனைவி அருகே நான் தாடி வைத்து அமர்ந்து இருந்ததால் என்னிடம் மட்டும் எனது புகைப்பட அடையாள அட்டை கேட்டனர், தன்னிடம் உள்ள தீவிரவாதியின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்க..! அந்த பேருந்தில் அதற்கு பிறகு எங்களை கண்டோர் பார்வை வேறாக இருந்தது.

ஓவ்வொரு குடியரசு தினமும், சுதந்திர தினமும் ஏண்டா வருதுன்னு இருக்கிறது..! அந்த அளவுக்கு நோகாடிக்கிறது... அரசும் ஊடகங்களும். இதுபோல கசப்பான அனுபவம் நிறைய உண்டு..!

யாரென்று அறியாத என்னை தெரியாத பிறர் நம்மிடம் எழுத்தால் பேச்சால் நடவடிக்கையால் இப்படி குத்துவதையாவது நான் சகித்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.

ஆனால், இப்படி வெறுப்புக்கு எவ்வித காரணமும் என்மூலமாக இல்லாத நிலையில், நம்மை நன்கு அறிந்த பல ஆண்டுகள் பழகியோரின் நட்புக்கண்ணோட்டம் சந்தேகக்கண்ணோட்டமாக திடீரென்று மாறும்போதுதான் என் மனம் மிகவும் ரணப்படும்.

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒவ்வொரு முறை இப்படி ஆருயிர் நண்பர்களால் பாதிக்கப்படும் போதும் இதயம் ஸ்தம்பித்து நின்று விட்டு பின்னர் மெல்ல வெறுப்பாக துடிக்க ஆரம்பிக்கும். 

'இந்த நண்பனின் மனமாற்றத்துக்கு காரணம் யார்' என்று யோசிக்கும் போது அவர்கள் எல்லார் மீதும் கோபம் கோபமாக வரும். அந்த கோபம் தன்னிடம் நட்பில்லாத முகமறியாத தீவிரவாதிகளிடம் வருவதை விட, தான் நீண்ட நாட்கள் நன்கு அறிந்த நட்புக்களிடம்தான் அதிக கோபம் வரும்.

அதாவது, உங்களின் ஒழுக்கத்தை பற்றி தவறாக யாரோ ஒருவர் சொன்னதை வைத்து, அதை நம்பி... உங்கள் வீட்டார் உங்களை சந்தேகப்பட்டால்... முதலில் நீங்கள் உங்கள் வீட்டார் மீது தான் கோபப்படுவீர்கள் அல்லவா..? அது போல..!

கோபத்தை நீங்கள் வெளிப்படுத்தும் போது..."பார்த்தியா, நான் அப்போவே சொல்லலை..? இவன் அப்படித்தான்..! இவனைப்பற்றி அவர் சொன்னது சரிதான் போல..! குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்... கோபத்தை பாரேன்..!" என்று சொல்லும்போது அவர்களுடனான உறவும் நட்பும் முற்றாக அங்கே அன்றே முறியும்.

இந்த  விஸ்வரூப விவகாரத்தில் அது போன்ற உயிர்க்கொல்லி நச்சுப்பேச்சுக்களை ஊடகத்தில் பதிந்தோரை என்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது..!

சில உதாரணங்கள்.....

"தேசப்பற்று இல்லாத 'கலாச்சார தீவிரவாதிகள்'தான் எனது இப்படத்தை எதிர்க்கிறார்கள்".

"தீவிரவாதத்துக்கு எதிரான இப்படத்தை எதிர்ப்பதன் மூலம், 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள் முஸ்லிம்கள்."

"அஜ்மல் கசாப்பை எல்லாம் பார்த்து விட்டுத்தான் மக்கள் சகிப்புத்தன்மையோடு உங்களை எல்லாம் எம்.எல்.ஏ ஆக்கி இருக்கிறார்கள்"

"அரேபிய, ஆப்கானிய கைக்கூலிகள் இவர்கள்"

"ஜெ.விடம் பொட்டி வாங்கி விட்டார்களா.."

"அப்படி ...இருக்குமோ... என்னவோ.."  

"இப்படி ...இருக்குமோ... என்னவோ.."  

----என்று அடிக்கடி இப்படி இட்டுக்கட்டி சுடும் சந்தேக வாக்கியத்தை ஈவிரக்கமின்றி சொல்வோர்-எழுதுவோர், ஒரு நிமிஷம் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் அந்த இடத்தில் வைத்து நிதாணிக்கவும்.

தேசப்பிதாவை சுட்ட கொலைகார்களாக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.

தென்காசி, மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர், ஜெய்ப்பூர், அஹமதாபாத் உட்பட... இந்தியாவில் பல இடங்களில் குண்டு வைத்தவர்களாக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் முஸ்லிம்கள்  பார்க்க வில்லை.

ஒரிசா, பாகல்பூர், அஸாம், குஜராத், மும்பை, கோவை கலவரங்களில் ஈடுபட்டு கணக்கின்றி சிறுபான்மையோர் மீது கொலைபாதக அக்கிரம் செய்தோரின் சமூக மக்கள் எல்லாரையும்  சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.

மீனம்பாக்கம் விமான நிலையம், ராஜீவ் காந்தி படுகொலை இவற்றை செய்தோராக காரணகர்த்தாவின் சமூக மக்கள் எல்லாரையும் சந்தேக கண் கொண்டு முஸ்லிம்கள் பார்க்க வில்லை.

பாலஸ்தீன், இராக், ஆப்கான், லிபியா போன்ற நாடுகளில் நேசப்படை, நாசப்படையாக இருந்தபோது, அந்த நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் அப்படித்தான் என்று காரணகர்த்தாவின் நாட்டு மக்கள் எல்லாரையும் துவேஷம் கொண்டு பார்க்க வில்லை முஸ்லிம்கள்.

நமக்கு  தண்ணீர் தராத அண்டை மாநில மக்களை நமது எதிரிகளாக துவேஷத்துடன் நாம் பார்க்கவில்லை.

இந்த நெறியான பார்வையை - இந்த சரியான புரிதலை எல்லாரும் எல்லா சமூகத்தினரோடும் பின்பற்றினால், சமூகம் நல்லிணக்கத்துடன் நட்போடு இருக்குமே என்பதே... எனது  & முஸ்லிம்களின் ஆற்றாமை..!

''பொம்பளை கஷ்டம் பொம்பளைக்கு மட்டும்தான் புரியும்''. ---இது சிரிக்க வைக்கும் சீரியஸ் சினிமா டயலாக் அல்ல என்று திருமணம் ஆன பின்னர் மனைவியை நேசிக்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்தேன்.

இதுபோல, ''ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தால்தான் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உள்ளக்குமுறலை உணர முடியும்'' என்பதை எப்படியோ யாரோ ஒரு சில ஆளுங்கட்சி அரசியல் தலைவர் புரிந்து கொண்டு சீத்திருத்தம் கண்டது போல...

''நம் நாட்டில் முஸ்லிமா வாழ்ந்து பார்த்தால்தான் ஒரு முஸ்லிமின் உள்ளக்குமுறலை உணர முடியும்'' என்பதை முஸ்லிம் அல்லாத ஆத்மாக்கள் புரிந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்..!

---இது ஒவ்வொரு முஸ்லிமின் உள் மனக்குமுறல்..!

இறுதியாக,
இதை படிக்கும் முஸ்லிமல்லாதவர்களிடம்  நான் கெஞ்சி கேட்டுக்கொள்வது இதுதான்...

தயவு செய்து,
தவறான ஊடக பொதுப்புத்தியால், 
நல்லவர்களையும் தீவிரவாதிகளாக்கிப் பார்த்து வக்கிர திருப்தியுறுவோர்களுடன் நயமாக பேசி, முடிந்த அளவுக்கு நம் நாட்டின் எதிர்கால நன்மைக்காக நாட்டின் இறையாண்மைக்காக அவர்களிடம் மனமாற்றம் ஏற்பட நீங்கள் முயற்சி செய்யுங்கள்..!

முஸ்லிம்களின் மேற்கொண்ட அது போன்ற முயற்சியில்,
அநாகரிக வார்த்தைகள், அவரசத்தில் தகாத சொற்கள், ஆத்திரத்தில் மரியாதை குன்றிய சுட்டல்கள் இருந்து விடுகின்றன என்பதால்... அவை பெற வேண்டியிருக்க வேண்டிய வெற்றியை- எதிர்கருத்து கொண்டோரின் மனதில்  மனமாற்றத்தை தொற்றுவிக்காமல் செய்து விடுமோ என்று அஞ்சுவதாலுமே,
உங்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் சகோஸ்..!

அப்புறம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த தமிழ் சினிமா காரர்களிடம் இதையும் சொல்லுங்கள்.  நூறு படங்களில் முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக காட்ட ஆப்கான் பாகிஸ்தான் இராக் பாலஸ்தீனம் எல்லாம் கஷ்டப்பட்டு செல்பவர்களை, அடுத்த ஒரு படத்திலாவது... இதோ... இங்கே இருக்கும் தென்காசிக்கும் மாலேகானுக்கும் ஹைதராபாத்துக்கும் அஜ்மீருக்கும் புநேவுக்கும் ஜெய்ப்பூருக்கும் வாரனாசிக்கும் குஜராத்துக்கும் பாகல்பூருக்கும் அயோத்திக்கும் ஒரிசாவுக்கும் சென்று மிக இலகுவாக ஹிந்துக்களையும்  தீவிரவாதிகளாக காட்டி, அவர்கள் சார்ந்த இயக்கம் மற்றும் கொடி இவற்றோடு அவர்கள் செய்த பயங்கரவாதங்களையும் தெள்ளத் தெளிவாக படமாக எடுத்து காட்ட சொல்லுங்கள். நூற்றுக்கு ஒரு பங்கு கணக்கு ஓரளவுக்காவது நேரான மாதிரியாகவும் இருக்கும். படத்தை படமாக பார்க்க முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்தா மாதிரியும் இருக்கும். 

ப்ளீஸ்..! டூ சம் ஃபேவர் ஃபார் அஸ்..! இட்ஸ் அன் அர்ஜென்ட் ரிகுவஸ்ட்..!

26 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...