ஜல்லிக்கட்டு..!
ஊரெல்லாம் இதே பேச்சு..!
செங்கல் ஜல்லியோ..? கருங்கல் ஜல்லியோ..? ஜல்லியை கட்டுன்னா... இதில் எதை கட்டுவது..?
அப்படியே கட்டினாலும், ஜல்லியை எப்படி கட்டுவது, கயிற்றாலா... கம்பியாலா... அல்லது வாழை நாராலா..?
இப்படி எல்லாம் சந்தேகம் எனக்கு சிறு வயது முதலே ரொம்ப காலமாகவே உண்டு. உங்களுக்கும் இதே ஐயம் இருக்கலாம். எனக்கு மட்டும் எப்படி அர்த்தம் தெரியும்..? வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்... இன்றும் கூட 'ஜல்லிக்கட்டு' என்றால் என்ன அர்த்தம் என்று நிறைய பேருக்கு தெரியவில்லையே..! அதன் பெயர்க்காரணம் பற்றி அறிய முற்படுதலே இப்பதிவு.
எனது அந்த ஜல்லிக்கட்டு அனுபவம்... ஓர் அலாதியான அதிபயங்கர அனுபவம். நம்பிக்கை மோசடி, வெறித்தனமான துரத்தல், , காயங்கள், உயிருக்கு பயந்து ஓடுதல், த்ரில், காமடி, டிராஜடி... இப்படி எல்லாமே உண்டு. என்னால் மறக்க முடியாதது. ஏனெனில் அன்று நான் விரட்டப்படும் போது... ஓடு ஓடு ஓடு என்று அப்படி ஓடி இருக்கிறேன்... தலைதெறிக்க ஓடி இருக்கிறேன்..!
அப்போது, நான் அதிராம்பட்டிணத்தில் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். நானும் என் நண்பனும் பள்ளிக்கு செல்லும்போது அங்கே ஒரு சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் படத்தின் பெயர் 'ஜல்லிக்கட்டு' என்று எழுதப்பட்டிருந்தது.
எனது நண்பன் நிறைய சினிமா பார்ப்பவன். அவனிடம் கேட்டால் பதில் சொல்வான் என்று 'ஜல்லிக்கட்டு'க்கு அர்த்தம் கேட்டேன். ஏனெனில், எனக்கு புதிய வார்த்தைகளுக்கு உடனுக்குடன் அர்த்தம் அறிந்து கொள்வதில் அப்படி ஓர் அலாதி ஈடுபாடு..! :-))
அவன் சொன்ன, "எனக்கு தெரியாதுடா" என்ற பதிலில் ஏமாற்றம் அடைந்தேன்.
"இந்த படம் நீ பார்த்துட்டியாடா மும்மால்கார்..?" (முஹம்மத் அப்துல் காதர்)
"இப்பத்தானடா வந்தீக்கிது..? இன்னும் பாக்கலடா".
"நான் படம் பாத்துட்டு, நாளைக்கு வந்து இதுக்கு அர்த்தம் சொல்றேண்டா" என்று சொன்னான்.
"டேய்... நீ, இதை பட்டுக்கோட்டையிலே பாக்கலையா?" என்றேன்.
"இல்லடா... இது எங்க வாப்பா துபைக்கு போவர்துக்கு முந்தி வூட்டுல லீவுல ஈக்கசொல்ல வந்துச்சா... அதான் பட்டுக்கோட்டையில பாக்கல. சினிமாக்கு போனா வாப்பா கொன்றுவாவோ. விசா வாரதுக்குலே தூக்கிட்டான் வீணாப்போன வீராத்தேட்டர்க்காரன்...இன்னிக்கு பார்த்துருவோம்ல..."
"டேய்... நீ, இதை பட்டுக்கோட்டையிலே பாக்கலையா?" என்றேன்.
"இல்லடா... இது எங்க வாப்பா துபைக்கு போவர்துக்கு முந்தி வூட்டுல லீவுல ஈக்கசொல்ல வந்துச்சா... அதான் பட்டுக்கோட்டையில பாக்கல. சினிமாக்கு போனா வாப்பா கொன்றுவாவோ. விசா வாரதுக்குலே தூக்கிட்டான் வீணாப்போன வீராத்தேட்டர்க்காரன்...இன்னிக்கு பார்த்துருவோம்ல..."
மறுநாள் காலை அவனை பள்ளியில் தேடினேன். அவன் வரவில்லை. மதியமும் பள்ளிக்கு வரவில்லை. நான்கரை மணிக்கு பள்ளி விட்டதும் அவனை பார்த்து 'அர்த்தம் கேட்டால்தான் ஆச்சு' என்று அவன் வீட்டுக்கு விரைந்தேன்.
"அதுலாமா இருக்கானா?" என்று கேட்டேன்.
"இன்னும் இஸ்கூலு வுட்டு வரலியே" என்று அவங்க உம்மா சொன்னார்.
உடனே நான், "அவன்தான் இன்னிக்கி ஸ்கூலுக்கே வரலியே மாமி. அதான் கேட்டுட்டு போக வந்தேன்."
அப்போது, அவங்க உம்மம்மா (அம்மாவின் அம்மா) உள்ளேயிருந்து வந்து... "பாத்தியாடி மொவ்ளே, நேத்து நீ அவனை சினிமாவுக்கு வுடலைன்னதும் இன்னிக்கி 'ஸ்கூலுக்கு போக மாட்டேன்'னு கோச்சிக்கிட்டு அழுதான். 'கோழிக்கறியானம் தேங்கா சோறு ஆக்கி தந்தா ஸ்கூலு போறேன்'னு சொல்லி. நல்லா திண்ணுட்டு எங்கே போனான்... உம்மவன்...?"
"பத்தாயத்துலே (நெற்களஞ்சியம்) பந்து கிடக்கு. வெளயாடவும் போவல. புத்தவ்மூட்டையை(ஸ்கூல் பேக்)யும் காணோம். அப்போ, இஸ்கூலுக்கு போவாம எங்கிட்டு போயீப்பான்..? இரு, அய்யாப்புள்ளயாரை தேடிட்டு வாறன். யா, அல்லாஹ் என் பேரனை காப்பாத்து..!" என்று குப்பாயத்தை (துப்பட்டி) அணிந்து கொண்டு தேடக்கிளம்பினார்.
அப்போது, காதிர் முஹைதீன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அவனின் ராத்தா(அக்கா) வீட்டுக்குள் நுழையும்போதே... "உம்மா... காலைலே கிளம்பும் போது என் ஜாமன்றி பாக்ஸில் எடுத்து வச்ச ரெண்டு ரூவாவ காணலம்மா. இந்த... அதுலாமா களவாணிப்பய எங்கே...? அவந்தா களவாண்டு ஈப்பான்..."
"அவனைத்தாம்டி காணோம்னு தேடிட்டு ஈக்கிறோம், ஸ்கூலுக்கு போவாம மேபலி (மெஹ்பூப் அலீ) வூட்டு மெத்தை(மாடி)யிலே பட்டம் உட்டுட்டு ஈக்கிறானான்னு பாத்துட்டு வாரேன். அடியே... மொம்லியாத்மா, (முஹம்மத் அலீ ஃபாத்திமா)கேட்டுக்கு கொலுக்கி (தாழ்ப்பாள்) போட்டுக்கடி, " என்ற அவன் உம்மா... என்னிடம் திரும்பி, "தோளன இஸ்கூலுல காணோம்னா என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க வீட்டுக்கு வந்து கேக்குறீஹலே. நல்லா ஈப்பியமா. ஒம்பேரு என்ன வாப்பா..?" என் பெயரை சொல்லி விட்டு நடையை கட்டினேன்.
நண்பன் சில சமயம் மதியம் ஸ்கூலுக்கு வர மாட்டான். மறுநாள், ஆசிரியர்கள் கேட்டால், "தேசப்பொடி(மீன்) ஆனம். முள்ளு எடுத்து சாப்பிட டைம் ஆச்சு"ன்னு சொல்வான். இல்லைன்னா... "அவசரமா சாப்பிட்டேனா சார்... மீன் முள்ளு தொண்டைல மாட்டிக்கிச்சு, உடம்புக்கு ஏலலை சார்" என்பான். இல்லைன்னா... "எங்க உம்மா... சோறு கறி ஆக்க லேட்டு டீச்சர்"ன்னு இப்படி ஏதாவது காரணம் சொல்வான். கூட்டிக்கழிச்சு யோசிக்கையில் எனக்கு ஓரளவுக்கு 'என்ன நடந்திருக்கும்?'னு யூகிக்க முடிஞ்சது. :-)) ஆனால்... உண்மையா அது..? தெரியலை.
அப்போதுதான், தூரமா நம்ம அதுலாமா வேகவேகமா வந்துட்டு இருந்தான். என்னை பார்த்ததும், புத்தக பையை அவசரமா முதுகில் மறைத்தான். என்னை பார்க்காதது மாதிரிகடந்து போக முயன்றான்.
"டே... அதுலாமா, நில்டா" என்றேன். காதில் விழாதது போல போனவனை இழுத்து பிடித்து நிறுத்தி...
"எங்கேடா, ஸ்கூல் பேகோடு இந்த பக்கத்திலேருந்து வறே..?"
"இல்லைடா, நேத்திக்கி ராத்திரி சாச்சி (உம்மாவின் தங்கை) மவளுக்கு கடக்கரை தெருவ்ல காதுகுத்து. ஸ்கூல் வுட்டு நேரா அங்கே போயிட்டேன். இன்னிக்குத்தான் சாச்சி வூட்டுக்கு போயி பையை எடுத்துட்டு வீட்டுக்கு போறேன். மதியம் சாச்சி வீட்ல விருந்து, அதான் ஸ்கூல் வரலை"...(அடடே... இப்ப நமக்குலே நல்லா காது குத்தறான்)... என்று சொன்னவன்... அப்போது அப்பக்கமாக சென்றவரிடம்...
"கச்சிமீயாக்கா, டைம் என்னா..?" (ஹாஜி.மைதீன் காகா; காகா=அண்ணன்)
அவர், "அஞ்சரை" என்றதும்,
"அந்தா... லேட்டாச்சி, உம்மா தேத்தண்ணி (Tea) போட்டு வச்சி தேடுவாகடா...." என்று ஓடினான்.
"டேய் அதுலாமா... நான் உங்க வீட்டுக்கு போனேன்டா, மதியம் வீட்டில் தான் நீ சாப்பிட்டு இருக்கே. காது குத்தா..? யாருகிட்டே ரீலு உடறே..?" என்று கத்தினேன்.
"என்னாது, வீட்டுக்கு போனியா..? அட வெளங்காதவனே, நான் ஸ்கூலுக்கு வரலைன்னு சொல்லிட்டியா..?" என்று திரும்பி வந்தான்.
"ஆமா, 'நீ எங்கே'ன்னு உங்கும்மாவிடம் கேட்டேனா, வேற வழியில்லாம...சொல்லும்படி ஆயிருச்சுடா. உங்க உம்மாவும் உம்மம்மாவும் உன்ன தேட கிளம்பிட்டாக..."
"அட ஒரு கலுச்சல்ல போயிருவா... இப்டி மாட்டி வுட்டுட்டியேடா, உன்னை எவன்டா எங்க வீட்டுக்கு போவ சொன்னது..? நீ என்னத்துக்குடா போனே..?"
"நேத்து நீ, ஜல்லிக்கட்டு படம் பார்த்து இருப்பேன்னு நெனச்சி.. அதான்.. அந்த 'ஜல்லிக்கட்டு'க்கு என்னா அர்த்தம்னு சொல்றேன்னு சொன்னியல்லெ ... அதை கேட்டுட்டு போலாம்னுதான் போனேண்டா"
"இது ஒனக்கு இப்போ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியோ"
"சரி, படம் பாத்த நீ அதுக்கு என்னா அர்த்தம்ன்னு இப்போவாச்சும் சொல்லு"
"அத படம் பாத்தவங்கிட்ட கேளுடா லூசு. எங்கிட்டே கேட்டா..?"
"அப்ப.... நீ, படம் பாக்கல..?"
"இல்ல"
உடனே, அவன் சட்டை பாக்கட்டில்... 'சடார்' என்று கையை விட்டு எடுத்தேன். சிக்கியது ஆதாரம். ஆம்... அதிராம்பட்டினம் ஜக்கரியா தியேட்டர் II Class Rs.1-75 டிக்கட்..!
"இது என்னாடா..? அடப்பாவி, ராத்தாவோட ஜாமன்றி பாக்ஸ்ல இருந்த ரெண்ரூவாவ லவட்டுனது (ஆட்டைய போட்டது) நீதானாடா..?"
"அடே...என்னாடா... சொல்றே, இதுவும் தெரிஞ்சி போச்சா..? ஆ..........ஹா, ஊட்டுக்கு போனா என்னைய ஆப்பக்கட்டையால விளாச போறாக உம்மா..." என்று தலையில் கையை வைத்துக்கொண்டு அங்கே கட்டுமானத்தில் இருந்த ஒரு வீட்டு மனை வாசலில் ஒரு லாரி லோடு கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்குவியலின் மீது தடால் என அமர்ந்தான்..! அல்மோஸ்ட்... விழுந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.
"ம்ம்ம்... சரி மீதி காருவா எங்கேடா..?"
"ம்ம்ம்... அது எதுக்குடா ஒனக்கு..? இன்ட்றோல்ல எலந்த வடையும், கல்கோனாவும் வேங்கி சாப்புட்டுட்டேன். இந்தா... ஒரு கமார்க்கட்டு சிருவாவுளே (பேண்ட்) பாக்கி இருக்கு. வேணுமா..?"
"வேணாம். சரி, இப்போ நீ சொல்லு, 'ஜல்லிக்கட்டு'ன்னா என்னா.." கேட்டுக்கொண்டே... (எனக்காக(?!).... பொய், திருட்டு, நம்பிக்கை மோசடி, ஸ்கூல் கட், வீடு திரும்ப லேட், சினிமா... இப்படி நிறைய வழக்குகளில் வகைதொகையாக சிக்கி இருக்கும்) நண்பன் பக்கத்தில் நானும் மெல்ல அமர்ந்தேன்..!
"சொல்லு அதுலாமா"
"ம்ம்ம்... சொல்றேன்டா... சொல்றேன், (என்று ஜல்லிக்கற்களை ஒவ்வொன்றாக பொறுக்கிக்கொண்டே விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்) படத்துலே ஜிவாஜி நல்லவெ. அவ்வோ வூட்டுலே ஈக்கிற சத்தியராஜி கெட்டவெ. ஜிவாஜி வூட்டுலே இதேமாதிரி ஜல்லிக்கல்லு நிறையா கொட்டி ஈக்கும். சத்தியராஜி தப்பு செய்யும் போதெல்லாம்... ஜிவாஜி என்ன பண்ணுவாப்ப்லேன்னா... இப்படித்தான்... ஜல்லிக்கல்லக் கொண்டு (எந்திரிச்சி கொஞ்சம் நகர்ந்து நின்று கொண்டான்) இப்படித்தான் கெட்டவன அடியடின்னு போட்டு கல்லால அடிப்பாக..." என்று என்னை ஜல்லிக்கல்லால் அடிக்க ஆரம்பித்தான்...!
அடிவாங்கிக்கொண்டே விட்டேன் ஒரு ஓட்டம். விரட்டிக்கொண்டே வந்தான். பின்னந்தலையில் கையை வைத்து தலையை மட்டும் காத்துக்கொண்டு வளைந்து வளைந்து வேகமாக ஓடினேன். என்னா ஒரு ஓட்டம்ங்கிறீங்க...! அவனும்... என்னா ஒரு விரட்டல்..! தெரு முனை திரும்பும் வரை, அப்படி ஒரு ஓட்டம் ஓடினேன்..! அப்படி வேகமா ஓடியும் கூட.... தோள்பட்டை முதல் குதிகால் வரை ஜல்லியால் நாலைந்து அடி வசமாக விழுந்து விட்டது.
வீட்டுக்கு வந்து பார்த்தால்... ஜல்லி அடி விழுந்த இடங்கள் எல்லாம் கட்டு கட்டாக வீங்கி இருந்தன. கடுமையான வலி. ஜல்லிக்கட்டில் வீரனுக்கு விழுப்புண்கள் சகஜம்தானாமே..?!
'அடடே, இதுதான் 'ஜல்லிக்கட்'டா...! நன்றி நண்பா..!' மானசீகமாக மனதினுள் எனது 'மொழி விளக்க ஆசிரியன்' அதுலாமாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.
டிஸ்கி -
பதிவில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கால்வாசிதான் கற்பனை.
16 ...பின்னூட்டங்கள்..:
ஹ ஹ ஹா..... சிரிச்சு மாளலை ஆஷிக் பாய்..... உண்மையா இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கலை.... தஞ்சை பாஷை அருமை.... எஙக் வீட்டில் எல்லாம் பேரை சுருக்கியோ மாற்றியோ கூப்பிட்டால் பிச்சோ பிச்சுதான்.... ஆனாலும் எல்லாப் பெயர்களையும் இயற்பெயர்/ புனைப் பெயர் வரை நினைவும் வைத்திருக்கிறீர்களே கிரேட்தான்....
..ஆனால் ஜல்லிக்கட்டுக்கு உண்மையான அர்த்தம் பின் எப்போது தெரிந்து கொண்டீர்கள் என எழுதவில்லை... :)
ஸ்லாம் நண்பா !
பதிவில் அதிரை வாடை ரொம்ப தூக்கலா ஈக்கீது
பாத்து மாடு[கள்] முட்டிடப்போவுது :)
அருமையான பதிவு சகோதர....
சலாம் சகோ. வித்தியாசமான ரசிக்கத்தக்க பதிவு! :-)
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக
உங்களுக்கு வாய்த்த நண்பன் மிகவும் நல்லவன்....... :)
ஜல்லி(க்)கட்டுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் உண்டா....
சலாம் ஆஷிக் பாய்,
ஹா ஹா ஹா!! செம காமெடி பாய்.நான் கூட நீங்க ஆரம்பத்தில் ஜல்லிக் கட்டு பற்றி விவரித்ததை பார்த்து சின்ன வயசுல எங்கோ ஜல்லிக் கட்டு பார்க்க சென்று மாட்டிக் கொண்டு மாடு துரத்தும் பொழுது ஓடினீர்கலோ என்று நினைத்தேன்.மேலும் மேலும் படிக்கும் பொழுது தான் உண்மை தெரிந்தது நீங்கள் ஓடியது எந்த ஜல்லிக் கட்டில் என்று.
ஸலாம் சகோ.
ஜல்லிக்கட்டில் விழுந்த தழும்புகள் கதையை படிச்சு சிரிப்பு தாங்க முடியலை. :) :)
//அட ஒரு கலுசல்ல போயிருவா... // இது தேவையா உங்களுக்கு,
"சும்மா கிடந்த சங்கை ஊதிக்கொடுத்தானாம் ஆண்டி" கணக்கா சும்மா இருந்தவனை தூண்டியும் விட்டு விட்டு இப்புடி அநியாயமா போட்டுக்கொடுத்தீட்டீங்களே. பாவம்.
ஓ... ஜல்லி “கட்டு“க்கு இப்படி ஓர் அர்த்தம் இருக்கிறதா...?
அருமையான நகைச்சுவை.
படித்துச் சிரித்து மகிழ்ந்தேன் ஐயா.
ஜல்லிக்கட்டா கேக்குது ஜல்லிக்கட்டு....! :)
ஸலாம் முஹம்மத் ஆஷிக் ( மம்மாசி? )
இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நகைச்ச்சுவை சுவையாகவே இருக்கிறது.
/////"அட ஒரு கலுசல்ல போயிருவா... இப்டி மாட்டி வுட்டுட்டியேடா, உன்னை எவன்டா எங்க வீட்டுக்கு போவ சொன்னது..? என்னத்துக்குடா போனே..?"/////
ஏழாவது படிக்கும்போதே ஆர்ம்பிச்சிட்டீங்களா? ஹா...ஹா....ஹா.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உங்கள் பதிவுகளில் சில.. சிந்திக்க,அறிய,பகிர வைத்தது போல இது மனம் விட்டு சிரிக்க வைத்தது..என்ன வயதானால் என்ன..?? சிறு வயது நினைவுகள் நம்மை எப்போதும் சிறு பிள்ளைகளாகவே உணர வைக்கிறது..
மனம் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி சகோதரரே...:)
ஸலாம் சகோ
ஹா ஹா ஹா...... ஒரு ஜல்லிக்கட்டு அனுபசத்தை வசிக்க போய் பல புதிய வார்த்தைகள் ரசித்தேன்.
மும்மால்கார் (முஹம்மத் அப்துல் காதர்)
அதுலாமா (அப்துல் ரஹ்மான்)
பத்தாயாத்துலே (நெற்களஞ்சியம்)
குப்பாயத்தை (துப்பட்டி)
மேபலி (மெஹ்பூப் அலீ)
இது எல்லாம் புதிய உச்சளிப்பாக இருக்கிறது, உங்களுக்கு இது போன்று எதாவது பெயர் இருக்குதா காகா??? :)
சலாம் நண்பரே..
மலரும் நினைவுகள்..
என்னடா நண்பரே என்கிறான் என பார்க்காதீர்.. இந்தப் பதிவை படித்தவுடன் நீங்கள் என் நண்பராகத்தான் இருக்கக் கூடும் என்று புரிந்து கொண்டேன்..
பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.. இன்னும் ஞாபகம் வரவில்லையா? மேலதிக விபரம் பெற hassan.jafar@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக
தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்.
அஸ்ஸலாமு அழைக்கும்,
ஆஷிக் பாய்
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை, உங்க ஊர் பாசை நல்லா இருக்கு..
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
நம் ஊர் வார்த்தைகளை படிக்கும் போது ஒரு சந்தோசம் தான் .
/////"அட ஒரு கலுசல்ல போயிருவா... //
இது மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கு . அட கல்ச்சள்ள வோவா (போவா )என்று சொல்வார்கள் .மற்ற ஊர்களில் தான் ஒரு கலுசல் .ஊருக்கு போய் விட்டு வந்த நினைப்பு வருது இதை படிக்கும் போது
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!