அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, January 13, 2012

27 General : தமிழர்களின் தவறான புரிதல்..!

General என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் உள்ளது. பொதுமை, முழுமை, பெரும்பாண்மை என்ற பொருள் மட்டுமின்றி, தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் என்றும் பொருள் உண்டு..! ஆனால், நாம் பொதுவாக இந்த ஆங்கில வார்த்தைக்கு 'பொது' என்ற ஒரே அர்த்தத்தையே எல்லா இடங்களிலும் கொடுத்து விடுகிறோம். இது நிச்சயம் தவறான புரிதல். சில இடங்களில் சரியாக இருக்கும்; எல்லா இடங்களுக்கும் சரியாக இல்லை. மேலும் இது, 'தவறு' என்று அறிந்தவுடன், உடனே சரியான பொருளுக்கு நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய தவறுங்கூட..!

உதாரணமாக....., 

ஒரு நிறுவனம் என்றால்... அங்கே (உதவி)Deputy Manager / (இணை)Joint Manager / (துணை)Assistant Manger / (கூடுதல்)Additional Manager என்றெல்லாம் பல Junior Managers இருப்பார்கள். அதில் ஒருவர் பதவி உயர்வு பெற்று (மேலாளர்) Manager ஆவார். சில ஆண்டுகள் கழித்து அவர், அடுத்த பதவி உயர்வு பெற்று Senior Manager ஆவார். பின்னர், Chief Manager ஆவார். அப்புறம் ஒருநாள்... இவரின் 'சிறப்பான செயல்பாட்டை' பாராட்டி அந்த நிறுவனம் GM என்ற பதவியை அளிக்கும்..! அதாவது General Manager என்று..! இப்போது இவருக்கு 'தனித்தமிழ்ப்பெயர்' என்ன தெரியுமா...? "பொது மேலாளர்"..! ஏன்..? திடீரென்று எப்படி இவர் நிறுவனத்தின் பொதுச்சொத்தாக மாறினார்..? யாருக்கு இவர் 'பொது' என்றானார்..? நீங்கள் என்றைக்காவது இப்படி யோசித்தது உண்டா... என்னருமை 'தனித்தமிழ் ஆர்வளர் சகோஸ்'..?

பின்னர், அவர் அந்நிறுவன இயக்குனர்களில் ஒருவராக (Joint/Dputy Director) ஆவார். பின்னர், Director ... அப்புறம் Senior.. Chief... என்றாகி Executive Director ஆகி இறுதில் அந்நிறுவனத்தின் Managing Director (மேலாண் இயக்குனர்) ஆகி விடுவார். இதே போல இன்னொரு நிறுவனம்... அதில் இன்னொரு MD... எனில், இந்த இரு MD-க்கும் மேலே ஒரே ஒருத்தர்தான் இருப்பார்..! அவர்... Director General..! இவரை "பொது இயக்குனர்" என்று "தனித்தமிழ் ஆர்வளர்கள்" அழைக்கின்றனர்..! அந்நிறுவவனங்களின் இயக்குனர்களுக்கு எல்லாம் தன்னிகரில்லா தலைவரான இவர், திடுமென எப்படி... யாருக்கு  பொதுவாகிப்போனார் இப்படி..? அந்த இரண்டு நிறுவனத்துக்கும் பொதுவானவர் என்றா..? அதுதான் இல்லை..!

இதேபோலத்தான்... 

IG : Inspector General. DeputyIG யாக இருந்து பதவி உயர்வு பெற்று IG ஆன இவர் ஆய்வாளர்களுக்கெல்லாம் தர நிலையில் மிகவும் உயர்ந்தவர். ஆனால், நம் தனித்தமிழர்கள் இவரை... 'பொது ஆய்வாளர்' என்கின்றனர்..!  எனில், மற்ற இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் பொதுவானவர்கள் இல்லையா..? இவர்மட்டுமே பொதுவா..? யாருக்கு பொது..? எதற்காக பொது..?
DGP ======<<<======= IG ========<<======= DIG
DGP : Director General of Police. இவர்தான் ஒரு மாநில காவல் துறையிலேயே ஆக உச்சநிலையில் உள்ள காவலர்..! இவரை "காவல்துறை பொது இயக்குனர்" என்கிறார்களே "தனித்தமிழர்கள்"..! இது சரியா..?

இல்லை... இல்லை... இப்படி உயர்ந்த இடத்தில் தலைமை பொறுப்புக்கு சென்றவர்கள் எல்லாரும்... தனக்குக்கீழே பணியாற்றும் மற்ற சாதாரண ஊழியர் அனைவருக்கும் 'பொதுவானவர்' என்பதால் இப்படி அழைக்கப்படலாம்..... என்று நினைக்கிறீர்களா..?

ம்ம்ம்.... அப்படியென்றால், உங்களுக்கு இன்னும் சொல்கிறேன், கேளுங்கள் சகோ..!


இந்தியாவில் 13 GPO (General Post Office)  இருந்தாலும், தமிழகத்தில் சென்னையில் மட்டுமே உள்ளது, ஒரு GPO..! இதை, "பொது தபால் நிலையம்" என்கின்றனர். எனில், இது மட்டும்தான் 'பொது'வானதா..? ஏனைய தலைமை அஞ்சல் நிலையங்கள் (HPOs), கிளை அஞ்சல் நிலையங்கள் (Branch POs) எல்லாம் மக்களுக்கு 'பொது'வானவை இல்லையா..? தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டவையா..? மேலும், மற்ற அஞ்சல் நிலையங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் Postmasters ~ Chief Postmasters (அஞ்சல் அதிகாரி ~ தலைமை அஞ்சல் அதிகாரி) என்றால், அந்த 13 GPO-க்களில் உள்ளவர்கள் மட்டும் Chief Postmaster General எனப்படுகின்றனர். இவர்களை 'தனித்தமிழ் ஆர்வளர்கள்' "பொது தலைமை அஞ்சல் அதிகாரி" என்று 'பொது'வானவர்களாக்கி விடுகிறார்கள்..! இவர்கள் எந்த அடிப்படையில் 'பொது'வாகிறார்கள்..? சிந்திக்கவும் சகோ..!


ஆங்காங்கே பல ஊர்களில் 'அரசு மருத்துவமனை' (GH) என்றும், கிராமங்களில் 'அரசு ஆரம்ப சுகாதார நிலையம்' என்றெல்லாம் பார்த்து இருப்பீர்களே சகோ..! ஆனால், சென்னையில் மட்டும், Govt. General Hospital (GGH) என்று இருக்கிறது..! இதை "அரசு பொது மருத்துவமனை" என்கின்றனர். மாநிலத்தின் மற்ற மருத்துவமனைகளைவிட எல்லாம் உயர்வான... இதற்கு மட்டும் "பொது" என்ற புதிய அடைமொழி எதற்கு..? இது பொதுமக்களுக்கானது எனில், மற்ற அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களுக்கு பொதுவானதுதானே..? அவற்றுக்கு எல்லாம் ஏன் இல்லை, "பொது" என்ற அடைமொழி..?

சரி...., இந்த General என்ற வார்த்தை எப்போது... எங்கிருந்து முளைத்தது...?

பிரிட்டிஷ் ஆட்சியின் போது..!

அப்போது, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் கைப்பற்றப்பட்ட மாநிலங்களில் எல்லாம் ஒரு பிரிட்டிஷ் கவர்னர் இருந்தார். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் தலைவராக கல்கத்தாவில் ஒரு கவர்னர் இருப்பார். தலைமை ஆளுநர் போன்று..! அவரை Governor General என்று பிரிட்டிஷ் அரசு அழைத்தது..! நம்மவர்களும் அப்போது அவரை அதேபெயரை சொல்லி "கவர்னர் ஜெனரல்" என இப்படித்தான் அழைத்தனர்...!

இவர்களை, "பொது ஆளுநர்" (?) என்று எந்த தமிழ் மீடிய வரலாற்று புத்தகத்திலாவது நீங்கள் படித்ததுண்டா...! At-least கேள்விப்பட்டதாவதுண்டா..?

சில... "பின் நவீனத்துவ தனித்தமிழ் முற்போக்குகள்..."  இஸ்லாமை... இசுலாம் என்று தமிழ்ப்பெயராக்கியது(?)போல... நைசாய்... "வைசுராய்" என்று தமிழில் எழுதுவது போல நம்மை அவர்களது பதிவுகளில் எழுதி ஏமாற்றுவார்கள்..! அவர்களை விடுங்கள்..!

இதனை இன்னும் தெளிவாக அறிய நாம் இதன் மூலமான பிரிட்டிஷ் நடைமுறையை அறிந்து கொள்ளவேண்டும்..!

இந்த பிரிட்டிஷ் நடைமுறை என்னவென்றால்... ஆகக்கூடிய உயர்ந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்களை 'ஜெனெரல்' என்று அடைமொழி கொடுத்து அழைப்பது அவர்களின் வழக்கம்..!

இந்த 'ஜெனெரல்' என்ற வார்த்தை வேறொன்ரோடு சேர்ந்து வந்தால்தானே நம்மை "பொது" என்று கூறவைத்து குழப்புகிறார்கள்..? தனியே வந்தால்..? இப்போது என்ன சொல்கிறார்கள் நம் தனித்தமிழர்கள்..?


இதோ... நம் இந்திய இராணுவத்தின் தரைப்படைக்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் யார்..? General..! (A General is an officer of high military rank, usually in the army) இவரை 'தனித்தமிழ் விரும்பி'கள் எப்படி அழைக்கிறார்கள்..? 
General (பொது?)
பொது(?)முஷரஃப்
"பொது" என்றா..?
ஹி..ஹி.. இல்லையே..!
 அப்புறம்...?  
 'ஜெனரல்' என்றுதான்..!
 அவ்வ்வ்வ்....
 சிலர் 'இராணுவ ஜெனரல்' என்பர்..!
 ஓஓஓ..... தெளிவாம்..! :-))
 .
ஆனால்............
எந்தத்தனித்தமிழ் மொழிபெயர்ப்பாளரும் இவரை "பொது"(!?!?!?) என்றோ "இராணுவப்பொது" (!?!?!) என்றோ அழைத்தது இல்லையே...? ஹா..ஹா...ஹா... ஏன்..? பர்வேஸ் முஷரஃப் இந்தியா வந்தபோதுகூட, "ஆக்ரா சென்றார், 'ஜெனரல்' முஷரஃப்..." என்றனரா... அல்லது 'ஆக்ரா வந்தார், "பொது" முஷரஃப்' (!?!) என்றனரா..? மண்டையை பிய்த்துக்கொண்டு கடைசியில் 'எதுக்குடா வம்பு...' என்று General-ஐ 'ஜெனரல்' என்றே மொழிபெயர்த்தார்கள் அல்லவா..? 

அடி சக்கை..! General என்பதற்கான தங்களின் 'பொது' என்ற தவறான தமிழாக்கத்தால், 'தனித்தமிழ் ஆர்வளர்கள்' வசமாக மாட்டிக்கொண்ட இடம் இந்த வார்த்தை ஒற்றையாக வரக்கூடிய இங்கேதான்..! இந்த இடத்தில் மட்டும்தான் அது தவறு என்று உங்களுக்கும் நன்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்..! 

இப்போது புரிகிறதா சகோ..?  
நான் இப்பதிவில் சுட்டிய மேற்கண்ட இடங்களில் "General" என்பதற்கான மொழியாக்கம் "பொது அல்ல" என்று...?

ஆகவே....  General என்ற ஆங்கில வார்த்தைக்கு... 
பொதுமை (general election), 
முழுமை (general body check up), 
பெரும்பாண்மை (general opinion of the people) என்ற அர்த்தங்கள் மட்டுமின்றி...  
நாம்  இப்பதிவில் பார்த்த உதாரணங்கள் மூலம்...
'தனித்துவ உயர்நிலை' அல்லது  'உச்சம்'  என்ற அர்த்தமும் உண்டு..! (http://www.thefreedictionary.com/general)  (General - Highest or Superior in rank is another meaning)

இப்பதிவில் நான் சுட்டிய அனைத்து இடங்களிலும்... தனித்துவ உயர்நிலை அல்லது உச்சம் போன்ற பொருளே வரும் என்று உறுதியாக கூறுகிறேன்..!

அதாவது  இப்படி....

General Manager -- உயர் மேலாளர் (இவருக்கு மேலே பலர் அதிகாரத்தில் உள்ளதால் 'உச்ச' சேர்க்கவில்லை)
Director General -- உச்ச இயக்குனர் (இவருக்கு மேலே யாரும் அதிகாரத்தில் இல்லாததால் 'உச்ச' சேர்த்திருக்கிறேன்)
Inspector General -- உயர் ஆய்வாளர்
Director General of Police -- காவல்துறை உயர் இயக்குனர் (இவருக்கு மேலேயும் ஒரே ஓர் உச்ச IPS அதிகாரி... (DIB) Director of Intelligence Bureau இருக்கிறார் என்பதால் உயர் போட்டுள்ளேன்)

General Post Office -- உயர்நிலை அஞ்சல் அலுவலகம் (Head Post Office -- "தலைமை அஞ்சல் அலுவலகம்" என்று அழைக்கப் படுவதாலும், மேலும் 12 GPO-க்கள் இந்தியாவில் இருப்பதாலும்... உச்சம் அல்லாமல் உயர் சேர்க்கப்பட்டுள்ளது...)
Chief Postmaster General -- உயர் தலைமை அஞ்சல் அதிகாரி 
Govt.General Hospital -- அரசு உயர் மருத்துவமனை

Governor General -- உச்ச ஆளுநர்
General --உச்சராணுவத்தார்

டிஸ்கி :-
General-க்கான மேற்படி 'பொது' எனும் மொழிபெயர்ப்பு 'தவறு' என்பது மட்டும் என் அறிவுக்கு நன்கு எட்டிவிட்டது.
மற்ற எனது புதிய மொழிபெயர்ப்புகள் குறித்து :
இதெல்லாம்... ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவை மட்டுமே..! 
'தனித்தமிழ் மொழிபெயர்ப்பு ஆர்வளர்கள்'... தங்களுக்கு இதைவிட சிறந்த மொழியாக்கங்கள் தெரிந்து இருந்தால் அவசியம் கூறுங்கள் சகோ. 
எனது பதிவில் விமர்சனம் அல்லது பொருட்குற்றம் இருந்தாலும் மறக்காமல் பின்னூட்டத்தில் பலரும் அறிந்துகொள்ள ஏதுவாக அவசியம் தெரிவியுங்கள் சகோ..!  
தமிழ் - கற்றது கைமண் அளவு..!

27 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...