அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, November 9, 2011

28 எண்:100க்கு அப்படி என்ன முக்கியத்துவம்..?

தற்போது 'ஹாட் டாபிக்', "சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் தன் "நூறாவது 100"-ஐ இத்தொடரில் அடிப்பாரா" என்பதுதான்..! கிரிக்கெட்டில் batsman நூறாவது ரன்னை அடைவதான 'century' / 'சதம்'  என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நரம்பு புடைக்கும் இரத்த அழுத்த துடிதுடிப்பு... உடலெங்கும் வியர்த்து ஊற்றும் படபடப்பு... இப்படி எல்லாமே அது ஏன் நூறை எட்டும்போது மட்டும் வருகிறது..? டெண்டுல்கரை பலவருடங்களாக நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் 'டக் அவுட்' (ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆவது) ஆகும்போது கூட அந்த அளவுக்கு ஏமாற்றத்தை முகத்தில் காட்ட மாட்டார்; ஆனால்... 99, 98, 97...90 போன்ற "nervous nineties" ரன்களில் அவுட் ஆனாலோ... "நாக்குக்கு எட்டியது தொண்டைக்குள் இறங்கவில்லையே" என்பது போல மிகப்பெரும் ஏமாற்றத்தை தன்முகத்தில் காண்பிப்பதை அப்போதெல்லாம் கண்டிருக்கிறோம். 

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனான சச்சினுக்கு மட்டுமா இந்த  டென்ஷன்..? எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும், இன்றைக்கு 56.14 ரன் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் சச்சினால் ஒரே ஒரு சாதனையை மட்டும் தன் வாழ்வில் என்றுமே கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங்கில் சாதனை ஒன்றை சாதித்து வைத்துவிட்டு சென்றாரே ஒருவர்..! அவருக்கும்தான் சகோ அன்று செம டென்ஷன்..! சரி... யார் அவர்..?

"கிரிக்கெட் உலகின் டான்" என்று புகழப்படும்... அந்த சாதனையாளரான  ஆஸ்திரேலியாவின் டான் ப்ராட்மேனுக்கும் கூட அந்த சாதனையை நிகழ்த்தும் போது அதே பதட்டம்தானே..! அதனால்தானே அந்த இமாலய சாதனையின் சிகரமான '100 என்ற எவரெஸ்ட்' சரிந்தது..? என்ன அதுவா..?

அதாவது, அன்றுதான் அந்த உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரரின் கடைசி டெஸ்ட் போட்டி..! அத்துடன் அவர் ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்..! அந்த கடைசி innings-ஆட்டத்துக்கு முந்திய அவரின் அப்போதைய பேட்டிங் சராசரி... 101.39..!!! (அதாவது அவர் பேட்டை தொட்டால் போதும்... 'ஒவ்வொரு தடவையும் சராசரியாக 101 ரன்கள் அடிப்பார்' என்பதே அந்த 'சராசரி' நமக்கு உணர்த்துவது) ஆகவே, சில பல கணக்குகளின் அடிப்படையில் அந்த கடைசி ஆட்டத்தில் நான்கு ரன்கள் எடுத்து அவுட் ஆனால், அவரின் பேட்டிங் சராசரியானது காலா காலத்துக்கும் 100 ஆகவே நிலை பெற்றுவிடும்..! ஆனால், அதேசமயம்... அவர் எக்காரணம் கொண்டும் 4 ரன்களுக்கு குறைவாக எடுத்து அவுட் ஆகிவிடவே கூடாது..! அப்படி   அவுட் ஆகிவிட்டால்... அந்தோ பரிதாபம்..! அதுவரை மூன்று இலக்க சராசரி இனி இரண்டு இலக்கமாகி விடும்..!  யாரோ சில புள்ளிவிபர புலிகள் இப்படி சொல்லிவிட்டார்களா..? பிடித்தது கிலி..! டானுக்கு ஏறியது செம டென்ஷன்..!

"களத்தில் இறங்கினால் ஒவ்வோர் ஆட்டத்திலும் 100 ரன்னுக்கு மேலே அடிப்பவருக்கு 4 ரன்கள் அடிப்பது எல்லாம் எம்மாத்திரம்..? ஜுஜுபி தானே..?" என்று நீங்கள் நினைக்கலாம்... ஆனால், டான் பிராட்மேன் அன்று அப்படி நினைக்கவில்லை போலும்..! ஒரு பெரிய 'மலையளவு' ஸ்கோராக அவருக்கு முன்னால் அந்த 4 நின்றிருக்க வேண்டும்..! அதனால் வந்தது அவருக்கும் டென்ஷன்..! ஆமாம்...அன்று அவர் ஆனார், 'டக் அவுட்'..! இதனால் அவரின் பேட்டிங் சராசரி   99.94 என்றே நிலைத்து விட்டது..! ஏன் இப்படி ஆனது..? காரணம் '100'-என்ற பூத எண்..! இம்முறை 'சராசரி' என்ற வடிவில்..!

ஆக, நூறு என்ற எண்ணுக்கு பல்வேறு இடங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது சில முன்னணி பத்திரிகைகள்... 'உலகின் முதல் நூறு பணக்காரர்கள்', 'உலகின் முதல் நூறு சிறந்த நிறுவனங்கள்', 'இவ்வாண்டின் உலகின் சிறந்த நூறு புத்தகங்கள்', 'உலகின் சக்திவாய்ந்த பிரபல நூறு பெண்கள்'... இப்படி பலவற்றில் நூறுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நாம் காண்கிறோம். உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூறு சாதனையாளர்களை வைத்து "The 100" என்று ஒரு ஒரு புத்தகம் வந்தது. (அதில் முதல் இடத்தை முஹம்மத் நபி ஸல்... அவர்களுக்கு அளித்திருப்பார் அதன் ஆசிரியரான திரு.மைக்கேல் ஹார்ட்).


இதுமட்டுமில்லாமல், உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளின் கரன்சிகள் நூறை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது, நூறு பைசா = ஒரு ரூபாய்; நூறு ஹலாலா = ஒரு ரியால்; நூறு சென்ட் = ஒரு டாலர்... இப்படியாக..! 

இந்த "நூறு ஜுரம்" சினிமாவிலும் பலமாக அடிக்கிறது..! நூறு நாள் ஓடினால் அது வெற்றி விழா..! இதற்காகவே... வேண்டுமென்றே சில தியேட்டர்களில் சிலபல பொறாமை அரசியல் உள்குத்து காரணமாக 99 நாட்களுடன் படத்தை தூக்குவதையும் பார்த்துள்ளேன். அதேநேரம், 90 நாட்கள் ஓடி மக்கள் கூட்டம் குறைந்த பின்னரும், சில தயாரிப்பாளர்கள் தியேட்டருக்கு பணம் கொடுத்து படத்தை காலி தியேட்டர்களில் நூறாவது நாள் வரை ஓட்டி வெற்றிவிழா கேடயம் கொடுப்பார்கள்..! நூறுக்கு அப்படி ஒரு முக்கியத்துவம்..! வாராவாரம் ஒருநாள் நடக்கும் ஏதாவது ஒரு டிவி ஷோ ஒன்று, இரண்டு வருஷம் நெருங்கி தன் நூறாவது எபிசோடை அடைந்து விட்டால் போதும்..! 'ஸ்பெஷல் கெஸ்ட்' எல்லாம் கூப்பிட்டு பரிசு மழை அறிவித்து ஒரே கொண்டாட்ட ரகளைதான்..!

அதுமட்டுமா..? சினிமா கதாநாயகர்கள் 99 படங்கள் நடித்துவிட்டு அப்புறம் நூறாவதுபடம் என்றால்... இதுவரை இல்லாத புதுமையான ஒரு முயற்சி(!?) என்று கூறி நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு பயங்கர கதை டிஸ்கஷன், ஜாம்பாவான்கள் ஒன்று கூடல், வெளிநாட்டில் ஷூட்டிங், மெகா பட்ஜெட் பந்தா, எங்கு நோக்கிலும் பட விளம்பரம், செமத்தி செலவு, நிறைய பிரிண்ட் போட்டு நிறைய தியேட்டரில் ரிலீஸ், அதிக விலை டிக்கெட் என்று அதகளம் நடக்கும். பொதுவாக (ஓரிருவரை தவிர) பெரும்பாலான நடிகர்களுக்கு அந்த 'நூறாவது படம்' மட்டும் 'செமத்தியா ஊத்திக்கும்' என்பது வேறு விஷயம்..! ஆனாலும், அந்த நூறு என்ற எண்ணுக்கு மட்டும் அப்படி ஒரு மவுசு..! அதனால் வரும் பவுசு..! பின்னர் காட்டும் ரவுசு..! அப்பப்பா..!

பொதுவாக... பொருளின் தரம், தள்ளுபடி, வட்டி, போனஸ், அல்லவன்ஸ், பங்குத்தொகை, கல்வியில் பாட மதிப்பெண், இலாப-நஷ்ட கணக்கு இப்படி எத்தனையோவற்றில்... ஒரு விஷயத்தை அது எவ்வளவு என்று சொல்வதற்கு கூட  %  உபயோகிக்கிறோம். ஆனால், % என்றாலே... 'பத்துக்கு பத்து' என்றோ... 'ஆயிரத்துக்கு ஆயிரம்' என்றோ நாம் சொல்வதில்லை. அதென்னவோ... 'நூற்றுக்கு நூறு' என்றுதான் சொல்கிறோம். 'சத'விகிதம் என்றும் per'cent'age என்றும் % இதனுள்ளே நூறை நுழைத்திருக்கிறோம்.

முக்கியமான "அவசர தொலைபேசி எண் 100" என்று பல நாட்டில் வைத்து இருக்கிறார்கள். இந்தியா மற்றும் பல நாட்டில் அது அவசர போலிஸ் எண். வேறு பல நாட்டில் அது ஆம்புலன்ஸ். இன்னும் சில நாடுகளில் அது தொலைபேசி இணைப்பகத்தாரின் எண். ஆனாலும், அவசரத்துக்கு என்றால் ஒரே எண்ணை அழுத்துவதுதானே எளிது..? அல்லது பக்கத்து பக்கத்துக்கு எண்களை அழுத்தலாம். அதென்ன... 1...அப்புறம் 0...0..? நூறு படுத்தும் பாடு..!

ஒரு அரசு புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டால் போதும்...பிரதமரின் அல்லது ஜனாதிபதியின் அல்லது முதல்வரின் "முதல் நூறு நாட்கள்" என்று சிலாகிப்பார்கள். இந்த பம்மாத்து... எல்லா ஜனநாயக நாட்டிலும் நடக்கும் விஷயம்தான்..!

ஒரு திருமணம் என்றால்... "மணமக்கள் நூறாண்டு வாழ வாழ்த்து" தெரிவிப்பார்கள்..! ஒரு குழந்தை பிறந்தால்... "நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என்பார்கள்..! ஏன்..? 99 வயசில் என்ன குறை..? அல்லது, 101 வயசில்தான் என்ன மிகை..? அது ஏன் 100 வயசில் மட்டுமே ஒரு நிறை..? 

இப்படி ஒருவரோ அல்லது ஒரு தம்பதியோ அல்லது ஒரு நிறுவனமோ வாழ்ந்து விட்டால் போதும்... உடனே கேக்வெட்டி கொண்டாட்டம்... கேட்டால், 'நூற்றாண்டு விழா' என்பார்கள்..! 

வெப்ப அளவை அளக்க உதவும் செல்சியஸ் வெப்பமானியானது, நீரின் உறைநிலை மற்றும் கொதிநிலை இவற்றை அடிப்படையாக கொண்டது. இரண்டுக்கும் இடையில் நூறு கோடு போடப்பட்டது ஏன்..? இங்கும் நூறுக்கு முக்கியத்துவம்.


இஸ்லாமும் எண் நூறும்..!

இறைவனை 'திக்ர்' செய்தல் பற்றிஅறிவிக்கும்... புஹாரி(843)-ல் வரும் ஒரு நீண்ட நபிமொழியின் இடையில்,

//"நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் 
(சுபஹானல்லாஹ் என்று கூறி) 33 தடவை இறைவனை துதியுங்கள்.
(அல்ஹம்துலில்லாஹ் என்றுகூறி) 33 தடவை இறைவனை புகழுங்கள்.
(அல்லாஹுஅக்பர் என்றுகூறி) 33 தடவை இறைவனை பெருமைபடுத்துங்கள்''
---என்று கூறினார்கள்.// ---என்றுள்ளது.

நபித்தோழர்கள் சிலர், இதில் 'அல்லாஹ்அக்பர்' என்பதை மட்டும் 34 என்றாக்கி திக்ரை ஆக மொத்தம் நூறாக முழுமை (?!) படுத்த நாடியுள்ளனர் என்று அதே ஹதீஸில் மேலும் படித்தால் தெரிகிறது. எப்படி..?

//சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறினோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '''சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 தடவைகள் கூறியதாக அமையும்'' என்று விளக்கமளித்தார்கள். //---என்று நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அதே ஹதீஸில் தொடர்ந்து அறிவிக்கிறார்.

தன் பண்புகளை பறைசாற்றும் வேறு பல அழகிய திருநாமங்கள் பற்றி அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் (7:180, 17:110, 20:8) ஆகிய வசனங்களில் ,
 //அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன// 
---என்று கூறி இருப்பதை நாம் அறிவோம்.

"அது எத்தனை பெயர்கள்" என்று அறிய வேண்டுமெனில்... பிரபல நபிமொழி தொகுப்புகளான புஹாரி (6410)  மற்றும் முஸ்லிம் (2677) ஆகியவற்றில் இருக்கும் ஒரு ஹதீஸ் (நபிமொழி) சொல்வது என்னவென்றால்...

//அல்லாஹ்வுக்கு நூற்றுக்கு ஒன்று குறைவான, 99 திருநாமங்கள் உள்ளன// என்றுதான்..!

உடனே மக்கள் குர்ஆனை வரி வரியாக வாசித்து வார்த்தை வார்த்தையாக தேடி, அந்த பெர்யர்களை எல்லாம் கண்டுபிடித்து தொகுத்து விட்டனர். (இவை எல்லா பெயர்களும்தான் அந்த 99 பெயர்கள் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் இல்லை என்றாலும், இந்த லிஸ்ட் பெரும்பாலும் எவரும் மறுக்காதது..!)மேலும் அதே ஹதீஸில் //'அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.// 
---என்றும் இந்நபிமொழி அறிவிப்பாளர் கூறி இருப்பதால்... 

அப்படியொன்றும் நூறு முழுமை பெற்றதோ, முக்கியத்துவம் பெற்றதோ அல்ல என்பது தெளிவாகுகிறது..! இதனால்... 99 சிறந்தது என்று கூறவரவில்லை..! :-) "99 என்றவுடன் அதொன்றும் குறைவு அல்ல; 100 என்றால்தான் நிறையும் அல்ல"  என்று சொல்லவே மேற்படி உதாரணங்கள்.

நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எப்படி ரொம்ப முக்கியமோ, அதில் ஒவ்வொரு வருடமும் வரும் நம்முடைய 'பிறந்தநாள்' என்ற ஒரு நாள் எப்படி அதுவும் வாழ்வில் நம் வயதை காட்டும் மற்றுமொரு வந்துபோகும் நாள் மாதிரிதானோ...

அதேபோலத்தான்,

நூறுக்கு அப்படி ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்பதும், இதெல்லாம் நாம் கடந்து செல்லும் ஒரு பாதையில் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் முக்கியத்துவம் பெற்றது என்ற அளவில், தூரம் அறிவிக்க சாலையோரம் நடப்பட்ட... நாம் கடந்து போகும்  ஒருமைல்கல் போலத்தான் இந்த எண் 100-ம்..! 

ஆகவே, 100-க்கு அப்படியொன்றும் ஸ்பெஷல் முக்கியத்துவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை சகோ..!

28 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...