அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, September 16, 2011

34 குருபூஜைகள் அவசியமா..?

சகோ..! ஒரு நிமிஷம்..! நான் சாதிவெறிக்கு எதிரானவன் மட்டுமல்ல. சாதி மீது நம்பிக்கை இல்லாதவன் மட்டுமல்ல. சாதியை ஒழித்து அதை முற்றுமாய்  மறந்து வாழ்ந்துவரும் சமூகத்தில் பிறந்து வளர்ந்து அப்படியே வாழ்பவன் மட்டுமல்ல. என் சமூகம் போலவே என் மொழி பேசும் இதர மக்களும் சாதியிலிருந்து விடுபட வேண்டும் என்று பேராவல் கொண்டவன். ஆதலால், நான் யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ இந்த கோரிக்கையை இங்கே வைக்கவில்லை. சாதி வெறி மூலம் மக்கள் உயிருக்கும் உடமைக்கும் அமைதிக்கும் குந்தகம் நேரும் இந்நேரத்தில் நாம் சற்று நிதானமாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


நம் நாடு மதச்சார்பற்ற சட்டங்களை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சமயத்தவரும் அவரவர் சமய கருத்துக்களை பிரச்சாரம் செய்யலாம்; கடைப்பிடிக்கலாம்; பிடித்த சமயத்துக்கு மாறிக்கொள்ளலாம். அடுத்தவர் அதனை தடுக்க முடிலாது. காரணம்: இது அடிப்படை உரிமை. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதித்தலைவர்களுக்கான குருபூஜைகள் ஏதோ ஒரு சமய வழிபாடு போல... பிரச்சாரத்துடன் வெளிப்படையாக நடந்து வருகிறது. இது ஏதோ அடிப்படை உரிமை போல... அரசின் பாதுகாப்பும் மக்கள் ஆதரவும் கோரப்படுகிறது. இது சரியா..?

யாருக்காக குருபூஜைகள் நடக்கின்றனவோ அந்த தலைவர்கள் யாரும் அவரவர் வாழ்வில் வேறு யாருக்கும் குருபூஜை செய்தது இல்லை. "இந்த சாதி அமைப்பு முறையே ஒழியவேண்டும்" என்று நினைப்பவர்கள்... "அதை சார்ந்த இந்த குருபூஜைகளும் ஒழிக்கப்பட வேண்டியன" என்பதில் மாற்றுக்கருத்து கொள்ள இயலாது அன்றோ..?

ஆக, நமது நூற்றாண்டில் நம் கண் முன்னே ஆரம்பிக்கப்பட்ட இந்த குருபூஜைகள்... 'நம் சமூகத்துக்கு நல்லதா', 'இதனால் மக்களுக்கு பயன் உண்டா', 'இவை நடக்கவில்லையென்றால் அதனால் சமுதாயத்துக்கு கேடு ஏதும் நேருமா'... என்று நாம் அலசி ஆராய்கிறோம். முடிவெடுக்கிறோம். இதில் தவறேதும் இல்லை என்றே நான் நம்புகிறேன்.

இந்த குருபூஜைகள் எதோ ஒரு சாராரின் 'உரிமைப்பிரச்சினை' எனவும்... அதை தடுப்பது போன்ற கருத்துக்கள்... 'உரிமைகளை நசுக்குகின்றன' என்றும் சாதியை எதிர்க்கும் சில முற்போக்காளர்களே எண்ணுவதுதான் கவலை தருகிறது..! எனவே, 'எது உரிமை' என்று நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

சமூகத்துக்கு கேடுதரும் லாட்டரி சீட்டுகள், பான் பராக், ஜர்தா, பீடா, குட்கா அனைத்தும் முன்பொரு நாள் நம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன. இவ்வளவுக்கும்... அப்போது "தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டு" என்று தமிழக அரசே லாட்டரி விற்பனை சூதாட்டம் நடத்திக்கொண்டு இருந்த சமயத்தில்தான் அந்த தடை வந்தது. அப்போது மக்கள் நலன் கணக்கில் கொள்ளப்பட்டு அரசின் வருவாய் துச்சமாய் புறந்தள்ளப்பட்டது.

மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுத்த அதே முதல்வர் ஜெ. தான் இப்போதும் ஆட்சியில்..! இறைநாடினால்...மீண்டும் அதே போன்றதொரு நிலைப்பாடு நாளை  அவருக்கு 'டாஸ்மாக்' விஷயத்திலும் தோன்றி, தமிழகம் முழுதும் டாஸ்மாக் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் அப்பொன்னான நாளும் வரலாம்..! அப்போது, 'குடிகாரர்கள் உரிமை போச்சு' என்று நீதிமன்றம் செல்வீர்களா... அல்லது... தூரநோக்கில், சமூக நலன்... வருங்கால சந்ததி உடல்நலன் என்று பார்ப்போமா..? ஆக, ஒரு 'சமூக தீமை' எப்போதும் 'உரிமை' என்ற வட்டத்திற்குள் வரவே வராது என்பது தெளிவு..!


அப்படி என்றால்... இறைவன் படைத்த ஒரே மனிதப்படைப்பை பல வர்ணங்களாக பிரித்து அடிமைப்படுத்தும் முறையான இந்த சாதி - உரிமையா..? சமூகத்தீமையா..? சாதிவெறி... சாதித்தலைவர்களுக்கான குருபூஜை இதெல்லாம் அந்தந்த சாதியினர் உரிமையா அல்லது சமூகக்கேடா..? இவை ஒழிக்கப்பட வேண்டியவையா..? அல்லது 'உரிமை' என்று கூறி பாதுகாக்கப்பட வேண்டியவையா..? சற்று சிந்தியுங்கள் சகோ..!  மேலும் உங்கள் சிந்தனைக்கு.....

சில வருடங்களுக்கு முன்னர்... நம் பெரும்பாலான மாவட்டத்தின் பெயர்கள் எல்லாம் தலைவர்கள் பெயரில் அல்லவா இருந்தன..? இப்போது ஓடும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் எல்லாமே தலைவர்கள் அல்லது மன்னர்கள் பெயரில் அல்லவா ஓடின..? எதனால்..?

சில ஓட்டுக்கட்சிகள்... ஒருசில குறிப்பிட்ட சாதியினரின்/கட்சியினரின் ஓட்டுக்களை பெற அவர்கள் அதிகம் வாழும் இடமாக பார்த்து ஏற்கனவே இருக்கும் மாவட்டத்தை பிரித்து சாதித்தலைவர்/அரசியல் தலைவர் பெயரை சூட்டினர். இதைப்பார்த்த பிற சாதியினர்/கட்சியினர்... 'எனக்கும்...' 'எனக்கில்லையா...' என்றதால்... பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டனவே... அல்லது பெயர்மாற்றம் பெற்றனவே..! எத்தனை மாவட்டத்தின் பெயரைத்தான் மாற்றுவது..? அதனால்... சேர/சோழ/பாண்டிய/பல்லவ மன்னர்கள் பெயரில் ஓடிக்கொண்டிருந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் சில சாதியினர்/பிரிவினர் ஓட்டுக்காக சாதித்தலைவர்கள் பெயரிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் அல்லவா ஓட ஆரம்பித்தன..!

ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சாதியும், தனக்கு ஒரு கட்சி &  ஒரு கொடி என்று புற்றீசல் போல கிளம்பி... மாவட்ட பெயர், பேருந்து பெயர் ஆகிய இதற்காக அடிதடி... கலவரம்... வன்முறை... துப்பாக்கிச்சூடு என்று சாதிவெறி வளர ஆரம்பிக்க... அந்த சமயத்தில்தான் அந்த தடைக்கு அவசியம் வந்தது. அப்போது மக்கள் நலன் & சமூக அமைதி கணக்கில் கொள்ளப்பட்டு...  சமூக தீமையான சாதி புறந்தள்ளப்பட்டது. "அனைத்து மாவட்டங்களின் பெயரும் அந்தந்த மாவட்ட தலைநகர் பெயரிலேயே அழைக்கப்படும்" என்றும்... "அனைத்து அரசு பேருந்துகளும் இனி... 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து' என்றே அழைக்கப்படும்" என்ற நற்செய்தி ஒரு மிகச்சிறந்த உத்தரவாக அப்போதைய முதல்வர் கருணாநிதியிடமிருந்து வந்தது.

அப்போது யாரும் இதற்காக கொந்தளிக்கவில்லை. "எங்கள் உரிமை போச்சே" என்று கதறவில்லை. அனைவரும் அமைதியாக ஏற்றுக்கொண்டனர். காரணம்..? 'சாதி ஒரு சமூகக்கொடுமை' என்று அனைவருமே உணர்ந்து இருந்தனர் என்பது மட்டுமல்ல... பெயர் தூக்கப்பட்டதில் அனைவருக்கும் சமநீதி(!) என்ற ஒன்று இருந்ததாலேயே அன்று இது அனைவராலும் ஏற்கப்பட்டது.

குறிப்பிட்ட சாதியினர் குருபூஜைக்கு அந்தந்த சாதி அரசியல்வாதிகள், சாதி அதிகாரிகள், சாதி நடிகர்கள், சாதி பிரபலங்கள் செல்வதும்...  தங்கள் இருப்பை சாதி பலத்தை நிலைநாட்டும் ஒரு மாநாடாகத்தானே குருபூஜை நடக்கிறது..? இதைக்கண்ட மற்ற அனைத்து சாதியினரும் தத்தம் இருப்பை நிலைநாட்ட தங்கள் சாதியில் பிரபலம் ஒருவரை தெரிந்தெடுத்து அவருக்கு குருபூஜை ஒன்றை ஆரம்பிக்கிறார்களா இல்லையா..? அதற்கு முதல்வர், எதிர்கட்சித்தலைவர், அரசு அதிகாரிகள், நட்சத்திரங்கள்... மற்றும் பல முக்கியஸ்தர்கள் வரவில்லை எனில்... சாதி பாகுபாடு உண்டாகிறதல்லவா..?


இவை வளரும்போது என்னவாகிறது..? வீதி முதல் இணையம் எல்லாம்... சாதிப்பிரிவினையும் சாதிதுவேஷமும் தானே வளருகிறது..? இதுபோன்ற சாதி அரசியலை விதைக்கும் வேலையைத் தானே இந்த குருபூஜைகள் செய்கின்றன..? அப்படி நடக்கும் குருபூஜைகளில் அமைதி நிலவுகிறதா..? வெறி கிளப்பும் வார்த்தைகள், வன்மம், கொலை, வன்முறை, அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, பொது அமைதிக்கு நாசம், சட்டம் ஒழுங்கு பாழ்... என்றுதானே முடிகிறது..!

ம்ம்ம்... இப்படியும் ஆரம்பித்து விட்டார்கள்..! "எங்கள் குருபூஜைக்கு அரசு விடுமுறை விடு...", "இதை அரசு விழாவென அறிவி..." என்றெல்லாம்..! அன்று, 'மாவட்ட பெயர்கள்... அரசுப்பேருந்து பெயர்கள்...' இருந்த இடத்தைத்தானே இன்று குருபூஜைகள் பிடித்திருக்கின்றன..?

சாதி ஒரு சமூகக்கேடு எனில், அது சார்ந்த அனைத்தும் சமூகக் கேடுதானே..? ஆம் எனில், இந்த குருபூஜைகள் சமூகக்கேடுகள் தானே..? 

இவை எப்படி உரிமைகள் ஆகும்..? மதத்திற்கு அப்பாற்பட்ட இந்த குருபூஜைகள் தற்போது மக்களிடம் சாதிவெறியூட்டி பொது அமைதியை குலைக்கின்றனவா இல்லையா..??

"சமூகக்கேடு"களுக்கு அரசின் ஆதரவையோ, அனுமதியையோ, பாதுகாப்பையோ கேட்பது குற்றம் ஆகாதா..???


ஆகவே... எல்ல்லா சாதியினரின் குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்..!!!

அவை நிகழ்கால சமூகத்துக்கு அவசியமற்றவை என்று உணரவேண்டும் & உணர்த்தப்பட வேண்டும். 

இந்திய அரசியல் சாஸனத்தில் குருபூஜைகளுக்கு அனுமதி உண்டா..?


This is aptly clear from the statement of Pandit Jawahar Lal Nehru made by him on the floor of the Lok Sabha on 13.6.1951. He said :

"……After all the whole purpose of the Constitution as proclaimed in the Directive principles is to move towards what I may say a casteless and classless society……" (Lok Sabha Debates Vol XII-XIII (Part II) Page 9830-31)

குருபூஜைகள் தேச நலனுக்கு உகந்ததா..? அல்லது... எதிரானதா..?

This is aptly clear from: On 25th November, 1949, in Constituent Assembly, Dr. B. R. Ambedkar spoke:
 
"………….In India there are castes. The castes are anti-national. In the first place because they bring about separation in social life. They are anti-national also because they generate jealousy and antipathy between caste and caste."


"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; ... ...."  ---(குர்ஆன் 49:13 -ல் இறைவன் )

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" ---திருமூலர்.

"சாதிகள் இல்லையடி பாப்பா...
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..." ---பாரதியார்.

"தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்" ---தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்.



தொடர்புடைய  பதிவு:-

34 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...