அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, February 4, 2011

13 நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு?

நம் தமிழக மக்களிடம் சாதிப்பிரிவு வேற்றுமைகளும் அது சார்ந்த  உயர்வு-தாழ்வு பாகுபாடும், அதனால் தீண்டாமையும் அதன் காரணமாய் சாதிவெறி வன்முறைகளும் கலவரங்களும்... என இந்த சாதி படுத்தும் பாடு இருக்கிறதே..! அப்பப்பா. இதனை தவறு என்றும் அருவருக்கத்தக்கது என்றும் சொல்வோர் ஏன் சாதிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை?

நம் அரசாங்கமும் மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே, அவர்களின் அனைத்து பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே... 

"தீண்டாமை ஒரு பாவச்செயல்,
 தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
 தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
 ---என்று எழுதிப்போட்டும், 

அப்புறம்... பலமுறை பல வகுப்புகளில் மீண்டும் மீண்டும் 
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" 
---என்றும் சொன்னாலும், அவை எல்லாமே ஏன் விழலுக்கு இறைத்த நீராய் போகின்றன? 

அது மட்டுமா? சினிமாவில் அந்தக்காலம் முதலே... "ஒன்று எங்கள் ஜாதியே..."  "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்..." "நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம்"... "உன் ரத்தமும் என் ரத்தமும் நம்ம எல்லார் ரத்தமும் சிவப்பு"... என்றெல்லாம் பாடி ஆடினாலும், இந்த சாதி விஷயத்தில் மட்டும் மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் எந்த கதாநாயகனும் எப்போதும் ஏற்படுத்த முடியவில்லையே? ஏன்?  ஏன் முடியவில்லை?

'முடியவில்லை' என்றால்... இவ்விஷயத்தில் எங்கோ, ஏதோ, அடிப்படையில் தவறு உள்ளது. அது என்ன?

இதைபற்றி பார்ப்பதற்கு முன் இந்த சாதி 'எப்படி நம்மிடம் வந்தது?' 'எங்கிருந்து உற்பத்தியாகிறது?' என்றும் பார்த்து விடுவோம்.

உலக சிருஷ்டிக்கே காரணகர்த்தா 'பிரம்மா' எனவும், பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள் 'பிராமணர்' என்றும், மார்பிலிருந்து பிறந்தோர் 'ஷத்ரியர்' என்றும், இடுப்பில் இருந்து பிறந்தோர் 'வைசியர்' என்றும், காலிலிருந்து பிறந்தோர் 'சூத்திரர்' என்றும் கூறி மக்களை நான்காக பிரித்து 'வர்ணாசிரமம்' கூறுகிறது சாஸ்திரங்கள். இதை பிரம்மாவின் மகன் மனு எழுதியதாக கூறி 'மனுதர்மம்' என நம்பவைத்து அப்பாவி மக்களிடம் அமலுக்கு கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். இவர்கள் தம்மை 'பிராமணர்கள்' என்றும் கூறிக்கொண்டனர். இவர்கள் அல்லாத இங்கிருந்த மற்றவர்களை அவரவர் அப்போது செய்து வந்த தொழிலுக்கும் தொழில் சார்ந்த முக்கியத்துவத்துக்கும், அப்போது அவரவர் கொண்டிருந்த வலிமைக்கும் ஏற்ற வகையில் தரம்பிரித்து மற்ற மூன்று பிரிவுகளில் அவர்களை எல்லாம் இட்டு நிரப்பினார்கள்.
  • the Brahmins: Scholars, teachers and fire priests
  • the Kshatriyas: Kings and soldiers warriors
  • the Vaishyas: Agriculturists and merchants
  • the Shudras: Service providers and artisans
அதோடு முடியவில்லை..! இந்த ஆரியர்கள், தங்களுக்கான சுயநல சட்டமாய், 'தங்களுக்கு கடின உடலுழைப்பு ஏதும் தேவையற்றது' என்றும், 'அது மற்றவர்களுக்கானது' என்றும், 'தாங்கள் மட்டும் எந்த மோசமான குற்றம் செய்தாலும் தண்டனை கொடுக்க யாருக்கும் அருகதை இல்லை' என்றும், 'மற்றவர்கள் தம்மை தீண்டத்தகாதோர்' என்றும், 'தன் வழியாக மட்டுமே கடவுளை மற்றவர் சந்திக்க முடியும்' என்றும், 'தாங்கள் மட்டுமே உயர்ந்தோர் என்றும்' தம் இஷ்டத்திற்கு வசதியாய் இவர்கள் சட்டங்களை எழுதி வைத்துக்கொண்டதை பார்த்தால், இந்த சாதிப்பிரிவு சட்டங்கள் அல்லது மனுதர்மங்கள் எல்லாமே, தங்களை இந்நாட்டில் ஆதிக்க மணப்பான்மையுடன் ஸ்திரப்படுத்திக்கொண்டு இங்கிருந்த மற்றவர்களை அடக்கி ஒடுக்கி ஆள ஏற்படுத்திக்கொண்ட ஆரியர்களின் சாமர்த்தியமான திறமையேயன்றி வேறில்லை என்பது கண்கூடு. ஏனெனில், ஒரு கடவுளால் தான் படைத்தவர்களை பிரித்துப்பார்க்க ஒருக்காலும் இயலாது.

இந்த 'ஆரிய தகிடுதத்தங்களை' எல்லாம் கடவுள் பக்தியுடன் இணைத்து, காலப்போக்கில் அதை வெற்றிகரமாக ஒரு மதமாக மாற்றி, அப்பாவி மக்களிடம் சேர்த்து, அதன்மூலம் மற்றவர்களை அஞ்சவைத்து  தமக்கு வழிபட வைத்தமையில்தான் ஆரியர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். 

இந்த 'ஆரிய தந்திர மூட நம்பிக்கைகளை' மக்கள் மனதிலிருந்து முற்றாக ஒழித்தால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்று எளிதாக புரிய முடிகிறது.  

இதை புரிந்தவர்கள் பலர், இந்த 'ஆரிய->பிராமண->பார்பனிய->ஹிந்து' மதத்தைவிட்டு வெளியேறி வேறுமதம் சென்றனர்; சிலர் நாத்திகராயினர்.

நாத்திகர்களுக்கு :

இப்போது தமிழகத்தில் நாத்திகம் பேசும் இரு பிரிவினரில் ஒருவர் கம்யுனிஸ்ட்கள் மற்றவர் திராவிடர் கழகத்தினர். கடவுள் மறுப்புக்கொள்கை கொண்ட இவர்கள் மிக எளிதாக இந்த சாதி வலையில் இருந்து வெளியேற முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. என்னதான் ஒருவர் நாத்திகம் பேசி அவர் தம் வாழ்வில் விலகினாலும், அவரின் சந்ததி மீண்டும் அதே சாதிச்சகதியில்தான் வீழ்கின்றன. இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாதியை பெரியாரால் அழிக்க முடியவில்லை..! பெரும்பாலும் கம்யுனிஸ தலைமைக்கும் கூட இங்கே பார்ப்பணிய பாரம்பரியத்திலிருந்துதான் வரவேண்டியதிருக்கிறது..!

இதன்மூலம் தம் சாதியை தம்மிடமிருந்து இவர்களால் அழிக்க முடியாததைத்தான் பார்க்கிறோம். எதனால்? சாதியை மறுக்க சரியான எதிர்கொள்கை இவர்களிடம் இல்லாததால்..!

இவர்கள் சொல்லலாம்... நாங்கள் 'டார்வினின் பரிணாமக்கொள்கையை' நம்புகிறோம் என்று..! இது இன்னொரு மிகப்பெரிய மூட நம்பிக்கை..!

"எது மனிதகுல சீரழிவுக்கு அதிகம் வித்திட்டது? 
             #  டார்வினின் நிற வருணாசிரமகொள்கையா?
             #  பார்ப்பனரின் சாதி வருணாசிரமக்கொள்கையா?"
-----இதொன்றும் பட்டிமன்ற தலைப்பு அல்ல. உலக நிதர்சனம்.

முன்னது வெவ்வேறு இனத்துக்குள் நிற வேற்றுமை காரணமாய் உயர்வு தாழ்வு உருவாக்கியது என்றால் பின்னது ஒரே இனத்துக்குள் தொழில் சார்ந்து உயர்வு தாழ்வு உருவாக்கியது.

சார்லஸ் டார்வின் எழுதிய DESCENT OF MAN புத்தகத்தில்,  பக்கம்-201-ல் அவர்...

கறுப்பினத்தவரை (நீக்ரோ என்று குறிப்பிட்டு) மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைக்கிறார். பின்னர் மேலும் இப்படி சொல்கிறார்... "நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்". 

அவர் யாரை 'காட்டுமிராண்டிகள்' என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இவ்வுலகில் இருக்கிறார்கள். இவர்களுக்கே அவர்களில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக.! அவர்கள் அழிந்துவிடவில்லை. இவர்களுடைய அறியாமை தான் அழிந்து விட்டது. இன்று அவர்கள் சிந்தனையிலும் திறமையிலும் இந்த ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை.  டார்வினின் கட்டுக்கதை மூட்டையின் ஒட்டை வழியே எட்டிப்பார்க்கும் அவரின் அறியாமை நன்றாக வெளிப்படும் இடம் தான் இது. 

சரி... டார்வினின் மனிதப்பரிணாமத்தில் "கருப்பும் பழுப்பும் மஞ்சளும் கலந்துள்ள ஆசியர்களாகிய நாம் எந்த படித்தரம்" என்று டார்வின் சொல்ல மறந்துவிட்டார் போலும்..! (இவற்றை 'இல்லை' என மறுப்பவர்கள்/ பரிணாம ஆதரவாளர்கள் கைவசம் விவாதிக்க சரக்கு இருந்தால் இங்கேயோ.. அல்லது இங்கேயோ.. சென்று ஆதாரங்களுடன் தமிழிலேயே மறுத்துவிட்டு வாருங்களேன்..!)

"பாம்பையும்  பார்ப்பனரையும் கண்டால் முதலில் பார்ப்பனரை அடி" என்றார் ஈ.வெ.ரா.பெரியார். ஆனால், டார்வினியம் பற்றி முழுமையாக அறிந்திருந்தால்,  "பார்ப்பனரையும் டார்வினிஸ்டுகளையும் கண்டால் முதலில் டார்வினிஸ்டுகளைத்தான் அடிக்க வேண்டும்" என்றிருப்பார் போல..! ஏனெனில், பார்ப்பணியமாவது மனிதரில் சிலரை 'இழிபிறவி' என கேவலம் மட்டுமே படுத்துகிறது. ஆனால், டார்விணியமோ 'மனிதரில் சிலரை மனித இனமே  இல்லை' என்கிறது..!

ஆக, மிளகாய்ப்பொடி விழுந்த கண்ணை கழுவ தண்ணீர் தேடிப்போனால் அங்கே டார்வின் கடையில் அமிலம்தான் கிடைக்கிறது..!?  ''சரி, பரவாயில்லை அவசரத்துக்கு இருக்கட்டும்" என்று எப்படி கழுவுவது? முதலுக்கே மோசமாகாதா?

சரி... நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க வேறு என்னதான் தீர்வு?

ஆப்ரஹாமிய (யூத,கிருத்துவ,இஸ்லாமிய) மதங்களின் பார்வையில் 'மனிதன் தோற்றம்' பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஜோடி மனிதனிலிருந்து பல்கி பெருகியவர்களே உலகமாந்தர் அனைவரும் என்கின்றன..! இந்த சித்தாந்தம் சாதி ஒழிப்புக்கு உகந்ததாய் தெரியவில்லையா? ஒரே பெற்றோருக்கு 'ஒரே விதமாய்' பிறந்தவர்கள் மத்தியில் எப்படி சாதி, இன வேறுபாடு உண்டாகும்? "மதஅடிப்படைவாதம்" சரியானதை சொன்னாலும் 'நிராகரித்தே தீர வேண்டும்' என்ற வறட்டு பிடிவாதத்தை தயவு செய்து கொஞ்ச நேரம் ஓரமாய் வைத்துவிட்டு  தொடருங்கள். சென்ற நூற்றாண்டு நாத்திகர்களை விட்டுவிடுவோம். ஆனால், இந்த நூற்றாண்டு நாத்திகர்களுக்கு... இந்த நூற்றாண்டு கண்டுபிடிப்பான, "உலக மக்களின் ஜீனோம் சங்கிலித்தொடர்பு ஓர் ஆப்ரிக்கத்தாயிடம் போய் முடிகிறது" ('Mitochondrial Eve': Mother of All Humans Lived 200,000 Years Ago) என்ற அறிவியல் உண்மை வெளிவந்த பின்னும் எதற்கு இந்த வீண் வெட்டிப் பரிணாமவாதம்?

அப்புறம், 'பகுத்தறிவுவாதி' என்று தங்களை சொல்லிக்கொள்வது யாரை ஏமாற்ற? தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளவா? இதை மதங்கள் சொல்லி இருந்தால் என்ன கெட்டுவிட்டது இப்போது? சாதியை ஒழிக்க இப்போதைக்கு இவ்வுலகில் இருக்கும் உருப்படியான அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரே கொள்கையான இந்த "ஒரே தாய்" கொள்கையை ஏற்றுக்கொண்டால்... ஆத்திகவாதிகள் ஆகிவிடுவோம் என்ற பயமா? ஏன்? இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டே நாத்திகர்கள், நாத்திகவாதியாக இருந்துதான் பாருங்களேன்...! ஏன்? முடியாதா?

ஆத்திகர்களுக்கு:

இதில் இன்னொன்றும் சொல்லவேண்டும். யூத மதத்தினர் தங்கள் மத அடிப்படையில் இஸ்ராயீல் சந்ததியினரான தாங்களும் மற்றவர்களும் சமம் என்று நினைப்பதில்லை. இங்கே, கிருத்துவரிடையே 'கிருத்துவ நாடார்', 'தலித் கிருத்துவர்' என்று இருப்பதிலேயே சாதிய விழுமியங்களிருந்து இவர்கள் இன்னும் மீண்டு வரவில்லை என்றாகிறது.

அதாவது, 'சாதி இல்லை' என்ற கருத்து தம் மதத்தில் இருந்தாலும் அதை தம் வாழ்வில் நடைமுறைப்படுத்தும் மக்கள் அந்த மதத்தினில் மிக மிக மிகுதியாக கடைப்பிடித்தவாறு இருத்தல் மிக மிக அவசியம்.

இந்த அடிப்படையில் இஸ்லாம் சொல்வது என்னவென்றால்...

மனிதரிடம் சாதி, இன, நிற வேறுபாட்டை உடைக்கும் இறைவசனம் :
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" (குர்ஆன் 49:13) என்று அனைத்து மனிதரையும் படைத்த இறைவன் கூறுகிறான்..!

இன, நிற,  மொழி வேறுபாட்டை உடைக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  இறுதிப்பேருரை !

ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (ஹதீஸ்: தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (ஹதீஸ்: அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

ஆத்திகர்களுக்கும்  நாத்திகர்களுக்கும் :

இப்போது நம்மிடம் இக்கருத்தை ஏற்க எஞ்சி நிற்கும் ஒரே ஐயம், "பரிணாமம் பொய் என்றால் ஆதாம் ஏவாள் இருவரில் இருந்து படைக்கப்பட்டதாக நீங்கள் சொல்லும் மக்கள் எப்படி பல்வேறு நிறங்களுடன், முக அமைப்புகளுடன் இனக்குழுக்களாக ஆகிப்போனார்கள் ?" -- என்பதுதானே?

ஒருவேளை... அந்த முதல் ஜோடி "ஒரே இனம்; ஒரே திடம்; ஒரே நிறம்" என்றால்... நம்மில் எத்தனையோ சிவப்பான தம்பதிகளுக்கு கருப்பு குழந்தை பிறப்பதில்லையா? அதற்கு, "என் குழந்தை அவன் தாத்தா நிறம்" என்பதில்லையா? அல்லது சிவப்பான குழந்தை கருப்பு தம்பதிகளுக்கு பிறப்பதில்லையா? கேட்டால், "அவளோட கொள்ளுப்பாட்டியோட அத்தை செம சிவப்பாம்" என்பதில்லையா?

'சரி',  இந்த குழந்தை எப்படி இவர்களிடமிருந்து? மேலும் விபரங்களுக்கு...

உலக  மாந்தர்கள் அனைவரும்... "ஒரே ஓரு மனிதனிடமிருந்து வந்தவர்" என்றால்தான் இந்த சந்தேகம் வரவேண்டும். மாறாக, ஒரு ஜோடி என்றால் இருவர் அல்லவா? அந்த முதல் ஜோடியில், " ஒருவர் வெள்ளையர்..! இன்னொருவர் கருப்பர்...!"  --- ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? 'இல்லை' என்பதற்கு என்ன ஆதாரம்? 

கீழே சில புகைப்படங்கள்... செய்திகள்... அதில், இரட்டைக்குழந்தைகளில் எப்படி இப்படி எல்லாம் சாத்தியம்?  (3 படங்கள் அடுத்தடுத்து கீழே)

 

இதெல்லாம் DNA -ஜீனோம் காலத்தில் கூட மக்கள் அதிசயமாக நம்ப மறுக்கும் படி, பார்க்கும் நிலையில்... சுமார் 1430 வருஷத்துக்கு முன்னரே சர்வசாதாரணமாம்..!

(கிராமவாசியான) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)’ என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் நிறம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்’ என்று கூறினார்கள்.


புஹாரி - பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5305.  அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி)

சகோதரர்களே..! சிந்திப்பீர்களாக..! தீர ஆலோசித்து ஒரு முடிவெடுப்பீர்களாக..!

------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:
சகோ.ஆஷிக் அஹம்துவின் கேள்வி, (பின்னூட்டம் #11) மற்றும் அதற்கான எனது மறுமொழி (பின்னூட்டம் #12) ஆகியவற்றை படித்தும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் சகோ..!

13 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...