நம் தமிழக மக்களிடம் சாதிப்பிரிவு வேற்றுமைகளும் அது சார்ந்த உயர்வு-தாழ்வு பாகுபாடும், அதனால் தீண்டாமையும் அதன் காரணமாய் சாதிவெறி வன்முறைகளும் கலவரங்களும்... என இந்த சாதி படுத்தும் பாடு இருக்கிறதே..! அப்பப்பா. இதனை தவறு என்றும் அருவருக்கத்தக்கது என்றும் சொல்வோர் ஏன் சாதிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை?
நம் அரசாங்கமும் மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே, அவர்களின் அனைத்து பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே...
"தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
---என்று எழுதிப்போட்டும்,
அப்புறம்... பலமுறை பல வகுப்புகளில் மீண்டும் மீண்டும்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
---என்றும் சொன்னாலும், அவை எல்லாமே ஏன் விழலுக்கு இறைத்த நீராய் போகின்றன?