அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, September 13, 2011

21 காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...

தலையே சிதறப்போகுது...! ஆனால், ஒரு காது மட்டும் செவிடாகக்கூடாதாம்...!
சகோ..! சிலர் ஒரு கருத்தை சொல்லுவர். அதற்கு நேர்மாறாய் அவர்களின் செயல் இருக்கும். இதுபோன்ற முரண்பாடுகள் நம்மை சுற்றி நிறைய உண்டு என்றாலும்... எனக்குத்தெரிந்த என்னை அதிகம் அலைக்கழித்த பத்து முரண்பாடுகளை கீழே தொகுத்துள்ளேன். காரணம், இவற்றால் மக்களுக்கு நல்லது ஏதும் விளைவதில்லை அல்லது கேடு விளைகிறது. உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். மேலும், புதிய முரண்பாடுகள் என்று நீங்கள் வேறு சிலவற்றை நினைக்கலாம். அவற்றையும் பகிருங்கள்.

1  தமிழக  அரசு

மது போதையில் அடிமைப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் நடத்திக்கொண்டே... ஊருக்கு ஊர்... வீதிக்குவீதி... டாஸ்மாக்கும் நடத்துவது.

2  தமிழக கல்வித்துறை

"சாதிகள் இல்லையடி பாப்பா... 
 குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..."

"தீண்டாமை ஒரு பாவச்செயல்... 
 தீண்டாமை ஒரு பெருங்குற்றம்... 
 தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"

... ...என்றெல்லாம் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டே அவர்களிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது.

3  இந்திய அரசு

எயிட்ஸை தடுக்க, "விபச்சாரம் செய்யாதீர்கள்" என்று சொல்லி, விபச்சாரத்தை செய்வோர்மீது கடும் தண்டனையுடன் சட்டம் போடுவதை விட்டுவிட்டு... "அதை செய்யும்போது காண்டம் பாவியுங்கள்" (?!) என்று பரப்புரை செய்வதும்... பின்னர், 'தம் பரப்புரை மிகச்சரியாக பின்பற்றப்படுகிறதா' என்று "சம்பவம்" நடக்கும்போது அங்கே பிரசன்னமாகி (!?) பொறுப்புடன் பரிசோதிக்காதிருந்து விட்டு... "ஐயோ... ஐயோ... இந்தியா உலக அரங்கில் எயிட்ஸில் இரண்டாமிடத்துக்கு வந்துருச்சே... கூடிய சீக்கிரம் முதல் இடத்தை பிடித்திடும் போலிருக்கே... இந்த இந்தியாவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கே..." என்று புலம்புவதும்.

4  இந்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை 

நம் நாட்டு அமைதிக்காக, முதல் பிரதமர் பண்டித ஜவர்ஹர்லால் நேருவால் வகுக்கப்பட்ட "பிற அந்நிய நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது நடுநிலை பேணல்" என்ற  ஐந்தில் ஒன்றான ஒரு "பஞ்சசீலக்கொள்கை" என்று ஒரு கொள்கையை தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்டே... அதை உருவாக்கிய நேருவே அதை மதிக்காமல் வீசி எறிந்துவிட்டு... அடைக்கலம் தேடி ஓடி வந்த மன்னருக்கு அவரின் நாட்டை மீட்டுத்தர தன் ராணுவத்துடன் கஷ்மீருக்குள் புகுந்தது...  (விளைவு..? இத்தனை வருடங்களாக இன்றுவரை கஷ்மீர் "மீட்புப்பணி"(?)யில் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே செல்லும் இந்திய ராணுவ பட்ஜெட்... 18.6% of total budget is being spent on defense. India has the world's 10th largest defense budget spending $36.03 billion (or) Rs.1,64,415.49 crore this year..!) 

பிறகு அவரின் மகள்... பெங்காளி பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக -உருது ஆதிக்க சக்திக்கு ஏதிராக...  கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து, மேற்கு பாகிஸ்தானுடன் போரிட்டு அவர்கள் நாட்டை உடைத்து 'பங்களாதேஷ்' என்ற புது நாட்டை உருவாக்கி நம் நாட்டு இராணுவ உயிரிழப்புகள் மூலம் தேவையின்றி பாடுபட்டது... (விளைவு..? தீராத பகையாளியை கழுத்திலேயே கட்டிக்கொண்டது)

அப்புறம் அவரின் பேரன்... இலங்கையினுள் சிங்கள இனவெறி பாஸிச அரசாங்க பயங்கரவாதத்துக்கு ஆதரவாக ராணுவத்துடன் புகுந்தது... என இவற்றின் மூலம் நம்மை சுற்றி எதிரிகளை சம்பாரித்து அதனால் பல இழப்புகளையும் குழப்பங்களையும் நம் நாட்டிக்குள் ஏற்பட செய்தது. (விளைவு..? தானும் கொல்லப்பட்டு... தமிழர்களும் கொல்லப்பட்டு...)

5  ஊழல் ஒழிப்பு 'புரட்சியாளர்கள்'

ஊழலுக்கு எதிரான சட்டம், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்றெல்லாம் ஃபிலிம் காட்டிக்கொண்டிருப்போரை...

அந்த அனைத்து ஊழலுக்கும் அடிப்படை காரணகர்த்தாக்களாகிய லஞ்சம் கொடுப்பவர்களும், அந்த ஊழல்களை திரைமறைவில் இருந்துகொண்டு ஆசைவார்த்தை காட்டியோ... நிர்ப்பந்தம் செய்தோ... கொலை மிரட்டல் மூலமோ அதிகாரிகளை அமைச்சர்களை செய்யவைத்து செல்வத்தில் கொழிக்கும் தனியார் நிறுவன அதிபர்களும் ஊடகங்களும் தூக்கு தூக்கு என்று தூக்குவது.

6  உலக அரசுகள் 

உலக வெப்பமயமாதலுக்கு தெளிவான தீர்வான 'மரம் வளர்ப்பு'க்கும் மழை நீர் -நிலத்தடி நீர் சேகரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டியதால்... பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடும் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள்.

7 அமெரிக்க நேட்டோ படை அரசுகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு... அந்த போரில் ஈடுபடும் முன்னேறிய மேலை நாடுகள் எல்லாம்...

எக்கச்சக்கமாக மனித அழிவிற்கு வித்திடும் அதிபயங்கர நவீன ஆயுதங்களாக உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தி கொள்ளை இலாபம் அடித்து தம் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதும், தாங்கள் யாருக்கு விற்றோம் என்பதைக்கூட ரகசியமாக வைத்துக்கொள்வதும்..!

வளைகுடா அரசுகள்

"இஸ்லாத்தில் உலக மக்கள் அனைவரும் மொழி, இன, மத, நிற வேறுபாடு தாண்டி சமம்" என்று மூச்சுக்கு ஒருவாட்டி சமத்துவம் பேசிக்கொண்டு... "அதனை பின்பற்றும் நாடுகள் நாங்கள்" என்றும் மார்தட்டிக்கொண்டு... தந்நாட்டு பிரஜைகளின் சம்பளத்தில் பாதி கூட... (அதே வேலையை செய்யும்) ஆனால்... அதிக திறன் படைத்த அயல்நாட்டவருக்கு கொடுக்காமல் இறையச்சத்தில் பித்தலாட்டம் புரிவது..! (the so called இஸ்லாமிய நாடுகளே..! தொழிலாளர் சம்பளம் மட்டும் 'உங்கள் சமத்துவத்'தில் வராதா..?)  

9   நாத்திகவாதிகள்
ஆறாவது அறிவாகிய... 'பகுத்தறிவை' பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், ஏதோ  'தங்களை பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள்' போல நினைத்துக்கொண்டு... 'கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன்' என்பதும்... கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்பதும்..! 

10  கம்யூனிச அரசுகள் 

கம்யூனிசம் பேசிக்கொண்டே... 'அதுதான் உலக சமத்துவத்துக்கு' வழி என்று சொல்லிக்கொண்டே... அந்த கடைசி படியை அடைய சோஷலிசம் என்ற முதல் படியைக்கூட நடைமுறை படுத்தி அதை கடக்காமலேயே கார்ப்பரேட்டுகளின் காலில் சரணடைந்துவிட்டு இன்னும் கம்யூனிசம் மலரப்போவதாக புரட்சிக்கதை பேசித்திரியும் அரசுகள் மற்றும் அதன் தோழர்கள்..!

டிஸ்கி:- 'அறியாமை, தவறான புரிதல், முரண்பாடு ஆகிய இவற்றின் மொத்த வடிவை' எளிதில் புரிய வைக்க ஒரு டைட்டில் யோசித்ததன் விளைவு... "காக்கா சுட்ட பாட்டியை  வடை தூக்கிட்டு போயிருச்சு...". 

21 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...