அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, September 1, 2011

55 பதிவரே..! நிறுத்துங்கள் மூளைச்சலவையை..!

தற்கொலையை 'போராட்டம்' என்பதை நான் ஒவ்வொரு முறையும் எதிர்த்துள்ளேன். எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும் எதிர்த்துள்ளேன். இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு போராடுவது போராட்டம் அல்ல. எதிரியால் கொல்லப்படாத அது வீரமரணமும் அல்ல. தற்கொலை என்பது... 'போராட்டத்தில் எங்கே நாம் தோல்வி அடைந்து விடுவோமோ' என்று அஞ்சும் கோழைகளின் செயல்..! தற்கொலை என்பது... ஒருவேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து தப்பிக்க எண்ணி முன்பே எடுத்து வைத்துக்கொள்ளும் முன்ஜாமீன்..! ஒரு வீரருக்கு வெற்றியை அனுபவிக்க உயிர் மிக அவசியம்.  

சுமார் இரண்டரை வருடங்களுக்கு முந்திய... முத்துக்குமரனுக்கும்... இவ்வார செங்கொடிக்கும் இடைப்பட்ட கடந்த சுமார் இரண்டரை ஆண்டுகளில்தான் பதிவுலகில் எவ்வளவு பெரிய சிந்தனை மாற்றம்..! எத்தனை விவேகம்..! அணுகுமுறையில்தான் எவ்வளவு அறிவுப்பூர்வமான முன்னேற்றம்..! தற்போது ஏகப்பட்ட பதிவர்கள் செங்கொடியின் தற்கொலை பற்றி மிக நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துகளை எழுதுகின்றனர். அழகாய் சிந்திக்கின்றனர்.
.

ஆனால், அதேநேரம்... சகோ.வினவு போன்றவர்களின் தற்கொலை மற்றும் கொலை செய்ய ஆதரவு தேடும் பிற்போக்கான பயங்கரவாத பதிவுகளும் வந்திருக்கின்றன..! தங்கள் கருத்தை ஐடி அற்ற பல அனானிகளாக பின்னூட்டங்களில் வந்து தெரிவிப்பார்கள் என்று ஏற்கனவே  "வினவின் பித்தலாட்டம் அம்பலம்..."   மற்றும்    "திருந்த மாட்டீர்களா வினவு..?" ஆகிய பதிவுகளில் 'எதிர்க்குரல்' சகோ.ஆஷிக் அஹமத் ஆதாரங்களுடன் வெளியிட்டுவிட்டார். இப்போது இவர்களின் துப்பாக்கிக்குண்டு கருத்துகளை பதிவிலேயே "ஓர் அனானி(?)பெரியவர்" மேலே எல்லாம் ஏற்றிக்கூறி அப்பாவிகளை கொலை செய்ய தூண்டி விடுவதை பாருங்கள்..!

 (மேலுள்ள 'snip shot' வினவின் இடுகையிலிருந்து...)


சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்...

சிங்கள ராணுவத்தின் ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் முத்துக்குமார் செய்த தற்கொலையை ஒரு பதிவர் கூட எனக்குத்தெரிந்து அந்த தற்கொலையை விமர்சித்து பதிவிட்டதாக நியாபகம் இல்லை. அதேநேரம் பெரும்பாலோனோர் அத்தற்கொலையை 'வீரமரணம்' என்றும் அவரை 'தமிழினத்தியாகி' என்றும் பதிவுலகிலும் வெளியிலும் வினவும் அவர் போன்றோரும் பலரும் போற்றிப்புகழ்ந்தனர்.

அன்று -- முத்துக்குமார்

அப்போது வலைப்பூ இல்லாத வெறும் பின்னூட்டவாதியான நான் அவர்களிடம் திரும்பத்திரும்ப பின்னூட்டங்களில் கேட்டவை எல்லாம் இவைதான்..!

அச்சமயம் வந்த செய்திகளை வைத்து அதன் அடிப்படையில்...

"அடுத்தநாள் அரைஇறுதித்தேர்வை வைத்துக்கொண்டு இன்று லைவ் டெலிகாஸ்ட் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்த மகனை கண்டித்து கேபிள் வயரை துண்டித்த தந்தையின் 'அடக்குமுறை- அத்துமீறல்-  அராஜகத்தை' கண்டித்து தற்கொலை செய்துகொண்ட மகனை 'மாணவர் குலத்தியாகி'  என்றும் அவன் செயலை 'வீரமரணம்' என்றும் சொல்வீர்களா..?"  

"அப்போது சில நாட்களுக்கு  முன்னர் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் தலைவர் படம் ரசிகர் ஷோவுக்கு  டிக்கட் வாங்க ஆயிரம் ரூபாய் தரமறுத்த ஏழைத்தாய்க்கு எதிராக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட மகனின் செயலை 'வீரமரணம்' என்றும் மகனை 'ரசிகர் குலத்தியாகி'  என்றும் சொல்வீர்களா..?" 

"இனி எப்போதுமே கிரிக்கெட் மேட்ச் / தலைவர் படம் காண இயலாத நிலை... காதல் தோல்வி தற்கொலை... கண்டதற்கெல்லாம் தற்கொலை... இதன்மூலம் தற்கொலை என்பது வெற்றியை ருசிக்க முடியாத தோல்வி... எனில்... ஒருபோதும் அது போராட்டம் ஆகாதே..?" 

"முத்துக்குமார் செய்த இச்செயலை... 'தற்கொலை போராட்டத்தை'... முன்பு வல்லாதிக்க எதிர்ப்பில் ஃபிடல்  கேஸ்ட்ரோ, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் காந்தி, ஹிந்தி எதிர்ப்பில் கருணாநிதி, அவ்வளவு ஏன்... இதே சிங்கள இனவாத எதிப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்திருந்தால் அதை 'போராட்டம்' என ஏற்றுக்கொண்டு பாராட்டி புகழ்ந்து இருந்திருப்பீர்களா..? அல்லது...  'போய்யா கோழை' என்று தூற்றி  இருப்பீர்களா..?"

...என்ற கருத்துக்களில் நான் கேட்டவுடன்...

"" இல்லை இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவை மூடத்தனங்கள். முத்துக்குமரனின் தற்கொலை நல்ல நோக்கத்துக்கான உயர்வான நற்செயல் - போராட்டம் - தியாகம்"    

...என்பது போல சொன்னார்கள்...!  உடனே நான்...

"இது சரியான செயல் என்றால்...
இது தியாகம் என்றால்...
இதுவும் ஒரு வகை சிறந்த போராட்டம் என்றால்... 
இதுதான்  தமிழகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஓர் உந்தாற்றலை வழங்கியிருக்கிறது என்றால்...
இதை ஏன் இப்பதிவை எழுதிய நீங்கள் செய்யக்கூடாது..? 
உங்கள் குடும்பத்தினர் ஏன் செய்யக்கூடாது..?
இந்த நல்ல செயலை உங்கள் தலைவர் ஏன் செய்யவில்லை..?
தன்  கட்சி தோழர்களை/தொண்டர்களை  செய்ய ஏன் வலியுறுத்தவில்லை..?
உங்கள் கட்சியினர் ஏன் இந்த  'அறப்போராட்டத்தை' முதலில் செய்யவில்லை..?"

...என்ற கருத்துக்களில் நான் கேட்டவுடன்...

என் கருத்துக்களை பல பதிவர்கள்  வெளியிடவில்லை.  வெளியிட்ட சிலரோ... ஈழத்தமிழனின் உயிர்காக்க தாய்த்தமிழனின் உயிர் போய் விட்ட வருத்தத்தில் 'உணர்வுப்பூர்வமாக' பதிவுகள் இட்டவர்கள். இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமாக கேள்விகள் கேட்ட என்னை 'தமிழினத்துரோகி' என்றனர்..! 

இன்னும் ஒரு பிரபல வலைத்தளத்தினரிடம் இதுபோன்று நான் 'வினவி'யவற்றை எல்லாம் தங்கள் பதிவின் கருத்துக்கு ஒத்துவராதவை  (???) என்று கூறி "ஒத்துவராத மறுமொழிகள்"  என்ற பாழும் மரணக்கிணற்றில் என் பின்னூட்டங்களை எல்லாம் 'நல்லடக்கம்' செய்தனர்...!

அப்போதும், அங்கிருந்து அதனை படித்துவிட்டு... 

பாலஸ்தீனில், இராக்கில், ஆப்கனானில், காஷ்மீரில்  நடக்கும் போராளிகளின் தற்கொலை தாக்குதல் பற்றியெல்லாம் கூறி, "இதை ஜிஹாத் என்கிறதே இஸ்லாம்...? இதை மட்டும் 'சரி' என்கிறீர்களே..?"  என்றனர் வேறு சிலர்.

நான் இவற்றை எங்கே... எப்போது... என்றைக்கு... 'சரி' என்றேன்..?
இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்க அல்லவா செய்கிறது..!

பிறரை கொலை செய்தால் அனைத்து நாட்டு சட்டத்திலும் அதற்கு தண்டனை உண்டு. தன்னையே கொலை செய்யும் தற்கொலைக்கு சட்டத்தில் என்ன தண்டனை..?

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள். 
--அல் குர்ஆன் (2:195)


உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான். 
-- அல் குர்ஆன் (4:29) 


நமது உயிருக்கு சொந்தக்காரன் இறைவன் மாத்திரமே. அதனை கொடுத்த இறைவனுக்கே மட்டுமே எடுக்கும் உரிமையும் உண்டு. இறைவனால் தடுக்கப்பட்ட செயலான தன்னைக்கொல்லும் இந்த கொலையை செய்த குற்றத்துக்கு இறைவன் அளிப்பது மிகப்பெரும் தண்டனையான நிரந்தர நரகம் என்பதல்லவா இஸ்லாமிய அடிப்படைவாதம்..!

"(போர்க்களத்தில்) ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத்தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், 'என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்.  எனவே அவனுக்குச்சொர்க்கத்தை நான் விலக்கிவிட்டேன்"  என கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி) நூல்:  புஹாரி-1364)

இதுபோன்று தற்கொலை செய்த நபித்தோழருக்கு இறுதி ஜனாஸா தொழுகை/பிரார்த்தனை செய்யவில்லை நபி(ஸல்) அவர்கள். ஏனெனில், 'நிரந்தர நரகம்' என்று அறிவிக்கப்பட்டவருக்கு என்ன பிரார்த்தனை..?

தன்னிடம் பிக்பாக்கெட் அடித்தவனிடம் இருந்து அதை மீட்க எடுக்கும் முயற்சி... தன்னை பாலியல் வல்லாதிக்கம் செய்ய முனையும் கொடியவனுடன் தன் கற்பை காக்க ஒரு பெண் போராடுதல்... தன் வீட்டை சொத்தை வஞ்சகமாக சூறையாடிய, நாட்டை அபகரித்த வேற்றுநாட்டு வல்லாதிக்க அடக்குமுறை சக்திக்கு எதிராக புரியப்படும் போர் முயற்சி வரை 'ஜிஹாத்' என்பது ஒரு விரிவான விஷயம். இஸ்லாத்தில் மிக உன்னதமான காரியமாக கருதப்படுவது இந்த 'ஜிஹாத்' எனப்படும் "அநியாயத்துக்கு எதிரான புனிதப்போர்". ஆனால்... இதில் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.  

ஒரு போர்க்களத்தை பொருத்தவரை, 'நாம் உயிருடன் வெற்றி அடைய வேண்டும்; வெற்றி கிடைக்காவிட்டால் வீர மரணம் அடைவதற்கு தயாராக இருக்க வேண்டும்' என்பதுதான் போர்க்களத்தில் உள்ள எதிர்பார்ப்பு.      

ஆனால் தற்கொலைத்தாக்குதலில் நாம் உயிரைக்காத்துக்கொண்டு எதிரிகளை அழித்தல் என்பது அறவே இல்லை. முற்றிலும் சாவு என்ற ஒரே எதிர்பார்ப்பு தான் உள்ளது. அதாவது... இலாபம்/நஷ்டம் என்று இரு சாத்தியமும் உள்ள ஹலால்-வியாபாரத்துக்கும், இலாபம் ஒன்றே சாத்தியமான ஹராம்-வட்டிக்கும் உள்ள வேறுபாடு போல..!  

'ஆனாலும்... மதத்தின் பெயரால்தானே தற்கொலை தாக்குதல்  செய்கின்றனர்..?'  ...என்றனர் மீண்டும் சிலர் விடாமல்..! 

இஸ்லாமிய வாழ்வியல் நெறியை மக்களுக்கு சொல்லி... சொல்லிய வண்ணம் வாழ்ந்துகாட்டிய முஹம்மத் நபி (ஸல்)  அவர்கள்... 'தற்கொலை போராட்டமும் ஒரு சொர்க்கம் செல்லும் நற்செயல்' என்றிருக்குமேயானால்  அதையல்லவா முதலில் செய்துகாட்டி  இருப்பார்கள்..!?!   அவரின் நபித்தோழர்கள் அனைவரும் அவ்வழியை தேர்ந்தெடுத்து இருப்பார்களே..!

'இல்லை... தற்கொலை போராட்டம் என்பதும் 'ஜிஹாத்' தான் என்றும் அதில் உயிர் நீத்தால் நிரந்தர சொர்க்கம்' என்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் உலக காரியத்தை நயவஞ்சகமாக சாதித்துக்கொள்கின்றனர்... சில அரசியல் பிழைப்புவாதிகள். இதுதான் 'நிரந்தர சொர்க்கத்துக்கு' வழி என்றால்... இதை  சொல்பவர்கள் எதற்காக இந்த பெல்ட் பாமை தங்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு சொர்க்கம் செல்ல முதலில் தாங்கள் முயல்வதில்லை..?


தான்  செய்யும் நல்லவற்றை  அடுத்தவருக்கு பரிந்துரைப்பதுதான் அறிவுரை.

'தவறு' என்று தமக்கு நன்கு அறிந்ததை சுயநலமியாக சொந்த அனுகூலத்துக்கு தான் செய்யாமல் பிறருக்கு மட்டும்  பரிந்துரைப்பதுதான் மூளைச்சலவை. 


---இப்படித்தான் நாம் சிந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்டவர்களை சிந்திக்க சொன்னேன்..!


பதிவர்களே..!


முத்துக்குமரன், செங்கொடி போன்றவர்களின் தீக்குளிப்பு தற்கொலையை 'தியாகம்', 'வீரமரணம்', 'தீரம்மிக்க போராட்டம்', 'தியாகி' என்று பிரேம் போட்ட போட்டோவுக்கு குங்குமம் இட்டு மாலையிட்டு மரியாதையுடன் அவர்களை வாழ்த்தி பதிவுகள் போட்டு... சில அரசியல்வாதிகள் உடனடியாக சென்கொடிக்கு சிலை திறப்பதையும் பதிவுகளாய் போட்டு... இவற்றை படிக்கும் சில அப்பாவி இளைஞர்களை 'தற்கொலை செய்தல் மிகவும் போற்றத்தக்கது' என மூளைச்சலவை செய்கிறீர்களா..? 

இன்று - செங்கொடி
இந்த செங்கொடி தீக்குளிப்புக்கு... 'தற்கொலை & கொலை அதரவு பதிவு' எழுதும் வினவு போன்ற பதிவர்களோ தற்கொலைக்கு தயார் இல்லை..! கொலைக்கும் தயார் இல்லை..! யாராவது ஒரு அப்பாவி இளைஞன் அல்லது இளைஞி செய்தால் இல்லையேல் ஓர் 'அனானி பெரியவர்' செய்தால் கூட போதும், இல்லையா..? தாங்கள் செய்ய பிரியப்படாத ஒன்றை பாராட்டி போற்றி பதிவுகள் எழுதுவது ஏன் சகோ..?


தங்கள் இயக்க கொள்கை கோணத்தில் மட்டுமே பார்ப்பதும், இறந்தவரின் குடும்பசூழலில் சிந்திக்காமையும் இருத்தல் சரியா..? அப்படியெனில், இது ஒரு கடைந்தெடுத்த சுயநல பிழைப்புவாத மூளைச்சலவை அரசியல் அல்லவா..?

மதத்தின் பெயரால் தவறான நச்சு அறிவுரை கூறி பயங்கரவாதிகளை உருவாக்கும் அந்த அரசியல் இலாப குறிக்கோள் கொண்ட பிழைப்புவாதிகளின் மூளைச்சலவைக்கும்... 

இனத்தின் பெயரால் இதுபோல தீக்குளித்து தற்கொலை புரியும் மூடர்களை இங்கே உருவாக்கும் சில பதிவர்களின் மூளைச்சலவை பதிவுகளுக்கும்... 

அப்படி என்ன பெருத்த வித்தியாசம்..?

முத்துக்குமாரின் - செங்கொடியின் தற்கொலையை இனியும் 'போராட்டம்' என்போரிடம் கடைசியாக ஒன்றே ஒன்றை கேட்கிறேன் நான்..!


தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இதே தீக்குளிப்பு தற்கொலை போராட்டத்தை...


பேரறிவாளன்
சாந்தன்
முருகன்

---ஆகிய இம்மூன்று சகோதரர்களும் செய்திருந்தால்... 'மரண தண்டனைக்கு எதிராக  போராடி மரண தண்டனையையே நிறைவேற்ற விடாத வீர தியாகிகள்' என அவர்களின் செயலை ஏற்றுக்கொள்வீர்களா..?

அப்படி அவர்கள் செய்திருந்தால்... அப்போது அவர்களுக்காக அவர்களின் உயிர் மீட்புக்காக போராடிய - போராடும் உங்கள் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கும்..?

பாசிஸ கொலைகளுக்கு எதிரான பகுத்தறிவற்ற தற்கொலைகளும், முறையற்ற மரணதண்டனைகளுக்கு  எதிரான சிந்தையற்ற 'சுய-மரணதண்டனை'களும் இனி நம்மை விட்டு ஒழிய வேண்டும்..! இவற்றுக்கு என் வருத்தத்துடன் கூடிய கண்டனங்கள்.

இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெருவாரியான அனைத்து பதிவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..! இனி... இவற்றை ஆதரிப்போருக்கு எதிராகவும் நாம் குரல் எழுப்புவோம் சகோ..!


டிஸ்கி:

சுமார் 20 ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய சகோதரர்கள் சிறைதண்டனை அனுபவித்துள்ளனர்.

பொதுவாக, நேரடி கொலைக்குற்றத்துக்கு நம் நாட்டில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்றுதான் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுப்பார்கள்.

ஒருவேளை அவர்கள் கொலையே செய்ததாகவே வைத்துக்கொண்டாலும்...

இந்நேரம் அவர்கள் ஆயுள் தண்டனையையும் தாண்டி அனுபவித்து விட்டனரே..!

இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை கொடுப்பது என்பது எவ்வகையில் நீதியாகும் என்றுதான் எனக்கு புரியவில்லை.

அப்படி மரண தண்டனைதான் தர வேண்டும் என்றால்... அதை 2000க்கு முன்பே தந்திருக்க வேண்டும்.

இனிமேல் மரணதண்டனை என்பது ஒரு கொலைக்குற்றத்துக்கு ஆயுள்தண்டனை  + மரணதண்டனை என்றாகிறது.

ஒரு குற்றத்துக்கு இரண்டு அதிகபட்ச தண்டனைகளா..!? இதற்கு சட்டத்தில் இடம் உண்டா..? சட்டப்படி இது செல்லுமா..?

ஆக, இந்த மரணதண்டனைகள் நீதிக்கு எதிரானது. முற்றிலும் அநீதியானது என்பதில் ஐயம் இல்லை. இன்ஷாஅல்லாஹ் இந்த மரணதண்டனைகள்  நிறைவேறாது என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன். 

55 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...