அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, August 29, 2011

10 பண்டிகை அகதிகள்

தீபாவளி, பொங்கல், பூஜா, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ் என்று நம் அரசு பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கின்றது. அதோடு அதன் பொறுப்பு முடிந்துவிட்டதா..? மக்கள் உண்மையிலேயே பண்டிகைகளை திருப்தியாக கொண்டாடுகிறார்களா, அந்த தினத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கொள்வதில்லை. தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அந்த ஊழியர்கள் அந்த பண்டிகையை கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் 'மதச்சார்பற்ற அரசுகள்' தீபாவளி போனஸ் வழங்கி விடும்.   எந்த சமயத்தினர் ஆனாலும் அதனை பெற்றுக்கொள்வார்கள். பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். இவ்வளவு ஏன்..? 'மதமே இல்லை ; கடவுளே இல்லை; தீபாவளியே இல்லை' என்போர் கூட கொடி- கோஷம்- உண்ணாவிரதம்- வேலைநிறுத்தம் என்றெல்லாம் முன்னின்று நடத்தி அடித்துபிடித்து 8.34% யாவது தீபாவளி போனஸ் வாங்கிவிடுவர்..!


மக்கள் என்போர் அரசு ஊழியர்கள் மட்டும்தானா..? மற்றவர்கள் எல்லாம்..? சுயதொழில் செய்து பொருளீட்டுவோர், தனியார் முதலாளிகளிடம் பணிபுரிவோர், வேலை இல்லாதோர் நிலையெல்லாம் பண்டிகை  நாள் அன்று என்ன..? இவர்கள் பற்றி எல்லாம் எந்த அரசாவது கவலைப்பட்டது உண்டா..?

மேலும், காவல்துறை, மருத்துவம், மின்சாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து, தொலைதொடர்பு, செய்தித்துறை, பால் விநியோகம், ரசாயன தொழிற்சாலைகள் போன்ற வருடம் முழுதும் எந்நேரமும் இயங்கும் Round  the  clock  shift  duty -இல் பணியாற்றும் இன்னோரன்ன அத்தியாவசிய பணியில் இருப்போர் எல்லாருக்கும் என்னதான் அரசு,  பண்டிகைகால விடுமுறை அளித்திருந்தாலும், அவர்கள் அன்றும் கூட பணியாற்றத்தான் வேண்டும். இதற்கான இழப்பீடாக அன்றைய பண்டிகைதினம்  அல்லது எந்த ஒரு விடுமுறை நாள் அன்றும் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அந்த நாளுக்குரிய ஊதியம் அரசால் இரட்டிப்பாக வழங்கப்பட்டுவிடுகிறது.

"இது போன்றவர்களைத்தான் நான் "பண்டிகை அகதிகள்" என்கிறேனா என்றால் அதுதான் இல்லை..! ஏனெனில் இவர்கள்தான் அதற்குரிய இழப்பீடாக அன்றைய தினம் இரட்டை சம்பளம் பெற்று விடுகிறார்களே..! மகிழ்ச்சியோடு பண்டிகைகளை தியாகம் செய்யும் இவர்கள் 'பலியாடுகள்' கூட அல்லர்..! பின் யார் அந்த "பண்டிகை அகதிகள்"..?

ஓர் உதாரணமாக,

ஒரு பள்ளியில், ஒரு வகுப்பில், 50  மாணவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்து இறுதித்தேர்வு எழுதிகின்றனர். இப்போது சற்று ரிலாக்ஸ் செய்ய மகிழ்ச்சியாக ஒரு சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்கிறார் வகுப்பாசிரியர். அப்போது 10 மாணவர்களால் மட்டும் அந்த சுற்றுலாவிற்கான கட்டணத்தை வீட்டின் வறுமை காரணமாக செலுத்த இயலவில்லை.  இவர்கள் நிலை எவ்வளவு வேதனையானது..? இவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் மட்டும் சுற்றுலா செல்வது சரியாகுமா..? அதேநேரம், இவர்களுக்காக மற்ற 40 மாணவர்கள் சேர்ந்து அந்த கட்டணத்தை கட்டிவிட்டால் எவ்வளவு சந்தோஷமாக... முழுநிறைவுடன் அந்த சுற்றுலா அமையும்..? இந்த ஏற்பாட்டை ஆசிரியரே-பள்ளியே முன்னின்று செய்தால்..? இது இன்னும் சிறப்பாக இருக்குமே..!

நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏதேனும் ஒரு பண்டிகையில்... ஓர் உதாரணத்துக்கு நம் நாட்டில் பெரும்பான்மையாக கொண்டாடப்படும் தீபாவளியை எடுத்துக்கொண்டால்... பல சிறார்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து பலகாரம் உண்டு மகிழ... சில சிறார்கள் பழைய கிழிந்த ஆடையுடன் மனசு நிறைய ஆசையுடன் வயிறு நிறைய பசியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே நிற்பார்களே..! இவர்கள்தான் "பண்டிகை அகதிகள்"..! தீபாவளி மட்டுமல்ல மற்ற சமய பண்டிகைகளிலும் இவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஏனெனில், ஏழைகள் அனைத்து சமயத்திலும் உள்ளனர்.

ஒரு சமய பண்டிகை என்பது ஒருசிலர் தனியே கொண்டாடுவது அல்ல. அந்த சமயத்தின் அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவதுதான் பண்டிகை. ஒரே சமூக மக்கள் ஒரே சமய மக்கள் "நமக்கெல்லாம் இன்று பொங்கல்" என்றால்தான் அது பண்டிகை. அதில் ஓரிருவர் மட்டும் "எங்க வூட்ல இன்னிக்கு பொங்கல்" என்றால்... அது பண்டிகை அல்ல..! அவர்கள் வீட்டில்  காலை சிற்றுண்டி..!  இதேபோலத்தான் "எங்கவூட்ல இன்னிக்கி பிரியாணி"யும்..!

இப்படி வசதி நிறைந்த ஒருசாரார் பண்டிகை கொண்டாடி மகிழ்வதும் ஏழ்மையுற்ற இன்னொரு சாரார் இவர்களை வேடிக்கை பார்ப்பதையே தம் பண்டிகைகால குதூகலமாக கொள்வதும் சரியா..? இந்நிலை மாற வேண்டாமா சகோ..? இதையெல்லாம் ஏனோ எந்த அரசுமே கண்டு கொள்வதில்லை..! மக்கள் மகிழ்ச்சியாக வாழத்தானே அரசு..? பண்டிகையில் கூட பசிக்கொடுமை என்றால்..?

ஆனால்... இன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த "பண்டிகை கால அகதி"களின் அவலநிலைக்கு ஓர் அரசின் ஆட்சியாளர் முடிவு கட்டி விடுகிறார்..! அது எப்படி..?

பக்ரீத் எனப்படும் 'ஈத் உல் அல்ஹா'வில் குர்பானி இறைச்சியில் ஏழைகளுக்கு கட்டாயமாக கொடுக்கப்பட்டு பண்டிகை அன்று எந்த ஏழையும் பசியின்றி  இன்புற்று பண்டிகை கொண்டாடுதல் பேணப்படுகிறது. அதேபோல, ரம்ஜான் எனப்படும் 'ஈத் உல் ஃபித்ர்'  பணிடிகையிலும் எந்த ஏழையும் பசியின்றி  இன்புற்று பண்டிகை கொண்டாடுதல் பேணப்படுகிறது. எப்படி..?


ஆண், பெண், அடிமை, சுதந்திரமானவர் (குழந்தைகள் உட்பட) அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.


அரைஸாவு தீட்டிய கோதுமை ஒரு ஸாவு தீட்டாத கோதுமைக்கு சமம் என மக்கள் கருதினார்கள்.  ( ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.) 


உமர்(ரலி) நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீச்சம் பழத்தையே கொடுத்து வந்தார்கள். மதீனாவின் மக்களுக்கு பேரீச்சம் பழத்தட்டுப்பாடு வந்தபோது தீட்டாத கோதுமையை கொடுத்தார்கள். (தம்குடும்பத்திலுள்ள) சிறியவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும், (அவரின் பணியாளராக நானிருந்ததால்) என்னுடைய குழந்தைகளுக்காகவும் கொடுத்து வந்தார்கள். இந்த தர்மத்தைப் பெற்றுக்கொள்பவருக்கெல்லாம் கொடுத்து வந்தார்கள். மேலும், பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி). ( நூல்:  புஹாரி - 1511.)

"ஃபித்ரா" எனப்படும் தர்மம் வழங்கப்படும் பெருநாள் என்பதால் "ஈத் உல் ஃபித்ர்" என்றே அழைக்கப்படுகிறது. சரி..! என்ன காரணங்களுக்காக இந்த "ஃபித்ரா" எனும் இந்த "பெருநாள் தர்மம்" கடமை ஆக்கப்பட்டுள்ளது என்பதனை அடுத்த ஹதீஸில் அறியலாம். 

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டு நோன்பாளியை தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு (பெருநாள் அன்று) உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் 1371 , இப்னுமாஜா 1817


பிற தமிழக பண்டிகைகள் போலவே "ஈத் உல் ஃபித்ர்" (ரம்ஜான்) பண்டிகை என்பது வசதி படைத்ததோர்களுக்கு  மட்டும் என்ற அவலநிலை  முன்பு தமிழகத்தில் இருந்து வந்தது.  கடந்த சுமார் இருபது வருடங்களாக தமிழக முஸ்லிம்களிடம் வந்த இஸ்லாமிய விழிப்புணர்வால்-சரியான இஸ்லாமிய புரிந்துணர்வால் நிறைய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.


ஏழைகளும் பெருநாள் கொண்டாடி மகிழ வேண்டி, ஏழைகளுக்கு தந்தே ஆக வேண்டிய ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம், இறைவன் புறத்து கட்டளையே என்பதனை நன்கு புரிந்து இதனை பெருநாள் அன்றைய தொழுகைக்கு முன்பே தந்துவிட வேண்டும் என்று முனைப்புடன் முன்கூட்டியே மக்கள் பெருமளவில் அரிசியாகவோ கோதுமையாகவோ தர ஆரம்பித்து விட்டனர்.


நம் சுற்றுப்புறங்களில் அதுபோன்ற ஏழைகளை நாமே தேடிச்சென்று வழங்க வேண்டும். அதுபோன்று யாரும் கிடைக்கவில்லை எனில் வேறு ஊர்களில் இது போன்ற தர்மம் பெற்றுக்கொள்ளும் நிலையில் ஏழை மக்கள் இருப்பர் என்பதால்... அவர்களுக்கு நம் தர்மம் சென்று சேரும்படி (இஸ்லாமிய அரசு என்று ஒன்று இருந்தால் இந்த ஃபித்ராவை திரட்டி தேவைப்படுவோருக்கு விநியோகிக்கும் வேலையை அது பொறுப்பேற்றுக்கொள்ளும்) தமிழகத்தில் இறை திருப்திக்காக ஃபித்ராவை வசூலித்து வினியோகிக்கும் ஒரு சில அமைப்புகளிடம் கொடுத்து தேவையுடையோருக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.


இதன்மூலம் இறையருளால் 'ஈத் உல் ஃபித்ர்' பண்டிகையில் வசதியற்றோரும் பங்குபெற்று கொண்டாட முடிகிறது. இதனால் "பண்டிகை அகதிகள்" என்போர்  ஈத் பெருநாள் அன்று பெருமளவில் குறைந்துள்ளனர். இதில் மென்மேலும் கவனம் செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆக, இன்றே சகோதரர்கள் ஃபித்ராவை உரியமுறையில் உரியவர்களை தேடிக்கண்டுபிடித்து உடன்  கொடுத்து விடுமாறு அன்போடு உங்களை நியாபகப்படுத்திக் கொள்கிறேன்.


இதேபோன்று மற்ற சமய சகோதரர்களும் அவரவர் பண்டிகையில், 'பண்டிகை அகதிகள்' என இனி யாரும் நம் சுற்றுப்புறத்தில் இல்லாமல் ஆங்காங்கே உள்ள ஏழைகளை அரவணைத்து அவர்களுடன் இணைந்து பண்டிகைகளை கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.10 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...