அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, October 27, 2011

35 "Stop Fire-Crackers" : இனி,வேண்டாம் பட்டாசு..!

டிஸ்கி:- சென்றவாரமே வந்திருக்க வேண்டிய இந்த பதிவை நான் வேண்டுமென்றே தீபாவளி முடிந்து வெளியிட காரணம், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும், சரியான உட்கருத்து சரியானவர்களிடம் சற்று நிதானமாகவே சென்று சேர்ந்தாலும் ஆழமாகவும் அழுத்தமாக சேரட்டும் என்பதாலுமே..! 

பொதுவாக மதச்சார்பற்ற நம் நாட்டில் சகல சமயத்தவரும் அவரவர் பண்டிகைகளை கொண்டாட உரிமை பெற்றவர்கள். அந்த வகையில் தீபாவளி கொண்டாடுவோர்...  (பலவகையினர் எனினும், இந்த பண்டிகைக்கு அவர்களால் காரணமாக நிறைய புராணக்கதைகள் கூறப்படுகின்றன... அவை பிற சாராரால் மறுக்கப்படுகின்றன... வேறு சாரார், அவை தமிழருக்கு எதிரானது என்று கடும் ஆவேசத்துடன் புறக்கணிக்கின்றனர்... என்றாலும் இப்பதிவுக்கு இதெல்லாம் அவசியமல்ல... காரணம் நான் தீபாவளி பண்டிகையை ஆதரிப்பவன் அல்லன், மாறாக... அதை கொண்டாடுவோரையும் புறக்கணிபோரையும் இணக்கமாக கருதுபவன்... அவர்களின் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக பாதுகாப்பாக கொண்டாட வாழ்த்துபவன்...) ஏறக்குறைய அனைவருமே, அதை தம் சமயப்பண்டிகையாக கொண்டாடும் போது மிக முக்கியமாக பட்டாசு வெடித்துத்தான் கொண்டாடுகிறார்கள். பட்டாசு ..! இதுதான் இப்பதிவின் மையப்பேசுபொருள்.

This creation by Vikas Gupta conveys it so well..! Thanks Brother Vikas..!

பொதுவாக பண்டிகை என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இந்த தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது என்பது ஒரு கட்டாயமான சடங்காகவே மக்களால் கருதி செய்யப்படுகிறது.

உண்மையில், "தீபாவளிக்கும் பட்டாசுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா" என்று ஆராய ஆரம்பிக்கும் போதே, நமக்கு உடனடியாக கிடைக்கும் பதில், "அறவே தொடர்பு இல்லை" என்பதே..!

தீபாவளி பண்டிகை எப்போது ஆரம்பித்தது என்று சொல்லவே வேண்டாம். அது பட்டாசை விட மிகவும் பழமை வாய்ந்தது என்று புரியும்..! பட்டாசு  வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து 'பட்டாசு' கண்டு பிடித்தனர் சீனர்கள்..! நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..!

அதில் வெடிக்கும் போது, சிலருக்கு ஏற்பட்ட குதூகலம் பின்னாளில் சீன புது வருட பண்டிகையில் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்கவும் ஆரம்பித்தனர். அப்படியே உலகம் முழுக்க புது வருடம் மற்றும் அவரவர் நாட்டு பண்டிகையில் வெடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றியது. இன்று உலகம் முழுக்க டிசம்பர் 31 இரவில், ஜனவரி 1 அதிகாலையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது..! நம் நாட்டை பொறுத்த மட்டில், தீபாவளியில்தான் பட்டாசு அதிகம்..!

ஆக, 'பட்டாசு வெடித்தல்' என்ற இந்த "அந்நிய மூடக்கலாச்சாரம்" பின்னர் எப்படியோ... இந்தியாவுக்குள் ஊடுருவி, அது எப்படியோ... தீபாவளி பண்டிகையில் மட்டும் படு விஸ்தாரமாக பெரிய துண்டை போட்டு ஜம்பமாக அமர்ந்து கொண்டு விட்டது. எனவே, தீபாவளி வரும்போது தான் பட்டாசு நம் நாட்டில் நிறைய விற்கப்படுகிறது. வாங்கப்படுகிறது. இப்படியாக, தீபாவளி பண்டிகையில் சிறிதும் சம்பந்தப்படாத இந்த பட்டாசை, இஸ்லாமிய, கிருஸ்த்துவ, சீக்கிய சமய சகோதர்களும் ஒரு ஜாலிக்காக வாங்கி வெடிக்கிறார்கள். 'தங்கள் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள்' என்று சப்பைக்கட்டு கூறி வாங்கியும் தருகிறார்கள். 

இந்த  பட்டாசு கேளிக்கையை தர, இதற்காக... "கந்தக பூமி" என்றழைக்கப்படும் சிவகாசி போன்ற ஊர்களில் சின்னஞ்சிறிய பிஞ்சுக்கரங்கள்  பட்டாசு செய்கின்றன. என்னதான் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என்று அரசு நடவடிக்கை எடுத்தாலும் இந்த சமூக அநீதி ஒருபுறம் நம் கண் முன்னே நமது மகிழ்ச்சிக்காக(?!) நடக்கத்தான் செய்கிறது. மேலும், பெண்களும் இந்த வேலையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இப்படி பட்டாசு செய்வோர் உடல் நிலை அதில் உள்ள ரசாயன நச்சுப்பொருட்களால் கெடுகிறது. மகப்பேறு பெற்ற மகளிர் எனில் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கிறது. பின்னர் அந்த பகுதி இந்த பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவு நீர் நிலத்தடிநீரையும் மண்ணையும் மாய்க்கிறது.

அத்தோடு, இந்த ரசாயண நச்சு வாயுக்கள் காற்றையும் மாசுபடுத்தி பல்வேறு நோய்களை அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் சுகாராத சீர்கேட்டை கொடையாக அளிக்கிறது. நன்றாக நினைவில் நிறுத்துங்கள் சகோ..! நாம் வாங்கும் ஒவ்வொரு பட்டாசும் பலரின் உடல்நலனை கெடுத்து விட்டுத்தான் நம் கைக்கு வந்து சேர்கிறது..!

இந்த பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.

உலகின்  பல நாடுகள் பட்டாசு வெடிக்க தடை போட்டுள்ளன..! ஏன்..?

பட்டாசை நாம் காசு கொடுத்து வாங்கி விட்டோம். இதனை எதற்கு வாங்கி இருக்கிறோம்..? வெடிக்க..! இப்போது நாம் இன்னொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும் சகோ..! நம்மில் எத்தனையோ வீடுகளில் இன்னும் சமையல் செய்ய அடுப்பெறிக்க விறகு வாங்க எரிபொருள் தேவைக்கு காசு இல்லாமல் பட்டினியால் இருக்கிறார்களே..! அவர்கள் வீட்டில் அடுப்பெறிவதை விடவா நமக்கு இந்த "காசை கரியாக்கும் கேளிக்கை" அவசியமாகப்போய் விட்டது..?

சரி, அதையும் தாண்டி "யார் என்ன சொன்னாலும் வெடித்தே தீருவது" என்று முடிவு எடுத்து விட்டோமா..? அப்படியெனில், வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் சகோ..!

நம் காசு..! நம் இஷ்டம்தான்..!
ஆனால், இவ்வாறு திருக்கிடும் படியாக அதிக சப்தத்துடன் பட்டாசு வெடிப்பது... வயோதிகர், பச்சிளங்குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், தூங்குபவர்கள், பட்டாசு விரும்பாதோர்  இவர்களின்... அமைதியான சூழல் என்ற தனிமனித உரிமைக்கு எதிரானது அல்லவா..? ஏனெனில், சாதாரண நாட்களில் தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் அன்றாடம் செவியுறுகிறோம். அப்படியிருக்க... தீபாவளியில்... 60, 90, 120 டெஸிபல் அளவுக்கு வெடிச்சத்தம் கிளப்புவதற்கு நாம் எப்படி தனிமனித உரிமை பெறுவோம்..? கொஞ்சமேனும் மனித நேயம் வேண்டாமோ..? பிறர் நலம் பேண வேண்டாமா..?

நமக்கு வெடிக்க இருக்கும் அதே உரிமை, அமைதியை விரும்புவதற்கும் அவர்களுக்கு உண்டு அல்லவா..? "125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச்செய்தால் அவர் 1986-ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்" என்ற சட்டம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? முதலில் இதை அமல்படுத்துவோருக்காவது தெரியுமா..?

சரி, இவை பற்றி கவலை படாமல் வேடிக்கிறோம்..! இப்படி வெடிக்கப்படும் பட்டாசில் என்னவெல்லாம் வேதிப்பொருள் கலந்துள்ளன... அவை வெடித்த புகையாக, சாம்பலாக நிலத்திலும், நீரிலும், காற்றிலும் எப்படி கலந்து மாசு படுத்துகின்றன என்று எண்ணிபார்த்தோமா சகோ..?

ஆண்டிமோனி சல்பைடு, ஆர்செனிக், பேரியம் நைட்ரேட், காப்பர் காம்பவுண்ட், ஹெக்சா குளோரோ பென்சின், லெட் காம்பவுண்ட், லித்தியம் காம்பவுண்ட், மெருகுரஸ் குளோரைடு, நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைட், ஓசோன், சோடியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட், பொட்டாசியம் பெர்குலோரெட், பொட்டாசியம் குளோரேட், பொட்டாசியம் நைட்ரேட், ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை எல்லாமே சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகின்றன.

இவற்றை சுவாசிப்போருக்கு... சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறு.. என்று  இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக்கேட்டை ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தை மற்றும் கருவில் உள்ள குழந்தையை கூட பாதிக்கிறது. முக்கியமாக ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கவே முடியாது.

நகரெங்கும் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து, என நீக்கமற நிறைந்து எங்கும் பரவிக்கிடக்கும் இந்த பட்டாசுக்குப்பைக்கழிவுகளை தீபாவளியின் மறுநாள் காலை மலையளவு வேலையாக அவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் நகராட்சி/ஊராட்சி துப்புரவாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சகோ..! பாவம் அவர்கள்..! அனைத்தும் நச்சுக்குப்பைகள் என்று அறியாமல் எவ்வித பாதுகாப்பும் இன்றி இராசாயன நச்சு நெடி தாங்காமல் இருமிக்கொண்டே... அவ்வேலையை செவ்வனே செய்து முடிக்கும் அவர்களைக்கண்ட பிறகாவது பட்டாசு கொளுத்துவது பற்றி சிந்தித்துப்பாருங்கள் சகோ..!

சில சமயம் தீபாவளி அன்று இரவு மழை பெய்தாலோ கேட்கவே வேண்டாம். காற்றை மட்டுமே மாசுபடுத்திய பட்டாசு, அடுத்து நீர் நிலையை மாசு படுத்துகிறது. பட்டாசு வெடித்தபின்னர் மிகுந்து கிடக்கும் அத்தனை இரசாயன கழிவும் மழை நீரினால் அடித்துச்செல்லப்பட்டு குளம், ஆறு இவற்றில் கலக்க... நீர் வாழ்வன, அவற்றை உண்டு வாழும் நில வாழ்வன, பறப்பன என அனைத்தையும் பாதிக்கிறது பட்டாசு..! பின்னர் இந்த இராசாயன நீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதால் அதனை அருந்தி வாழும் மனிதர்கள், என்னதான் காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நோய்க்குள்ளாகிறார்கள்.  நிலத்தில் வாழும் மண்புழுக்கள், தாவரங்கள் என்று அனைத்தும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும், வளர்வதும் தடை படுகிறது. விவசாயம் பேரிழப்பு அடைகிறது. நீர் மாசு படுகிறது.

சரி, இதையும்தாண்டி பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்... அப்பப்பா... சொல்லி மாளாதே..! கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்... என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை..? இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..?

இனி, அடுத்த வருடம் முதல்...!

பாத்தீர்களா சகோ..? பட்டாசு வெடிப்பதால் நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்கிறோம்...? நம்மை நாமே அழித்துக்கொள்வதுடன், நாம் சமுதாயத்தில் உள்ள மற்ற மக்களையும் அல்லவா சேர்த்து அழிக்கிறோம்..? மென்மையான தற்கொலையும் மென்மையான கொலையும் போலல்லவா இஃது உள்ளது..? இது சரியா சகோ..? இப்பேர்பட்ட பாவத்தை செய்ய வைக்கும் இந்த பட்டாசு நமக்கு அவசியமா சகோ..?

மற்ற சயத்தவர்கள் செய்வது 'தவறு' என்றாலும், குறிப்பாக ஒருசில விபரமற்ற முஸ்லிம்கள் பட்டாசு வாங்குவதும், வெடிப்பதும் 'பாவம்' மற்றும் 'ஹராம்' என்பேன் நான்..! எப்படி..?

நமக்கு அளிக்கப்பட பொருளாதாரமும் இறைவனின் ஓர் அருட்கொடை அல்லவா..? அதைக்கொண்டு "காசை கரியாக்கும்" இந்த 'பட்டாசு வெடித்தல்' என்பது எவ்வித நன்மையையும் நமக்கு அளிக்காத வீண்விரயம்தானே சகோ..?
.
(நியாயத்தீர்ப்பு விசாரணை நாளான) அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 102:8)

பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை 'எப்படி செலவழித்தோம்' என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டாமா சகோ..?

''ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்..? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்..? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்..? அதனை எப்படிச் செலவழித்தான்..? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்..? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)
நூல்: திர்மிதீ 2341

இந்த நபிமொழியின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பொருளாதாரத்துக்கு நாம் பதில் சொல்லாமல், மறுமையில் ஒரு எட்டுகூட  நம்மால் எடுத்து வைக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..!

Our sincere thanks to these Sources:-
http://hotglobalwarming.blogspot.com/2010/11/benefits-of-eco-friendly-green.html
http://www.mnn.com/earth-matters/translating-uncle-sam/stories/are-fireworks-bad-for-the-environment
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article875129.ece
http://www.backcountryattitude.com/toxic_fireworks.html

35 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...