அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, October 8, 2011

49 'கையுங்காபி-பேஸ்ட்டுமாய்' அகப்பட்டேன் :-(

ந்த வினாத்தாளில் மொத்தம் 100 கேள்விகள். அனைத்தும் சிறு சிறு பதில்களுக்கான கேள்விகள்தான். 94 கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதினாலும் அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. விடை தெரியாத அந்த 6 கேள்விகளை சும்மா விட மனசு வரவில்லை. :-(  அந்த 6 கேள்விகளும் பூதாகரமாக உயர்ந்து நின்று... என்னை கேவலமாக பார்த்தது. ஏனெனில், என் வாழ்வின்  எதிர்காலத்திற்கான தேர்வுகளில் அது ஒரு மிக முக்கியமான தேர்வு.

அதுவரை குனிந்து என் பேப்பரை பார்த்தே தேர்வு எழுதியவன் முதன்முதலாக நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தால்... பக்கத்து டெஸ்க் நண்பன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்..!

'ஸ்ஸ்.. ஸ்ஸ்.. இந்த 5-க்கும் விடை  என்ன' என்றான்... கை விரித்து காட்டி, சைகையில்..!

முளைக்கும்போதே இதுகளுக்கு என்னாவொரு டெக்னிக்கு..!?

அவை ஐந்துமே நான் விடை எழுதிய வேறு கேள்விகள்..! சுற்றுமுற்றும் இலாவகமாக பார்த்துக்கொண்டு, அதற்குரிய பக்கத்தை திறந்து அவனுக்கு மிக நேக்காக காட்டினேன். பார்த்து பார்த்து பொறுமையாக எழுதிக்கொண்டான்.

இப்போது நான் அதேபோல 6 கேள்விகளின் எண்களை கையில் எழுதி... 'ஸ்ஸ்.. ஸ்ஸ்.. ' என்றேன்..! 'பண்டமாற்று முறை'..!? நண்பன் மிக நேர்மையானவன்..! பொறுப்பாக காட்டினான்..! ரொம்ப கிட்டே வந்து பேப்பரை உயர்த்திவேறு காட்டினான். காப்பி அடிக்க காட்டுவதில் நேக்கு போக்கு தெரியவில்லை. இருந்தாலும்... எட்டே செகண்ட்தான். அனைத்தையும் மனதினுள் உள்வாங்கி... அதாவது 'காபி' பண்ணி என் பேப்பரில் 'பேஸ்ட்' பண்ண... அதாவது எழுத ஆரம்பித்து விட்டேன்.

குற்றம் செய்ய என்ன ஒரு மினியேச்சர் திறமை..?!

'அப்பாடா...' என்று ஒரு வெற்றிக்களிப்புடன், அனைத்தையும் எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தால்... என் முன்னே மேற்பார்வையாளர் என்னையே பார்த்தவண்ணம் இடுப்பில் கைகளை முட்டுக்கொடுத்துக்கொண்டு நிற்கிறார்..! 

அப்புறம், என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி :-

"எத்தனை கேள்வி காபி அடிச்சே..?"  

"..................."

நண்பனிடம் திரும்பி... "என்னென்ன கேள்வி எல்லாம் காட்டினே..?"

"..................."

இப்போது என்னிடம் திரும்பி, "என்னய்யா இது..? அசிங்கமா இருக்குயா..! ஏதோ ஸ்கூல்... காலேஜ் பசங்க மாதிரி... கேவலமா... காபி அடிக்கிறீங்க..! வெக்கமா இல்லை..?"

இதிலேயும்... ஆணுக்குப்பெண் சளைச்சது இல்லை போலும்..!

இப்போது நண்பன்,  "ஹலோ, நீங்களும் நானும் இந்த கம்பெனி எம்ப்ளாயீஸ்தான்...  கம்பெனி ரூல்ஸ் படி இந்த பரீட்சை எழுத பேனா நீங்கதான் தரணும்... ட்ரைனீஸ் ஹாஸ்டல்ல ஒரு ரூம்ல மூணு பேர்தான் தங்கணும்... ஆனா, நாலு பேரை அடைச்சி வைக்கிறீங்க... நாங்க பயிற்சியாளர்கள் என்பதால் தொழிலாளர் சங்கத்திலேயும் சேரக்கூடாதுன்னு தடை..! ஆனா, இதைப்பத்தியெல்லாம் நாங்க வாயே திறக்கக்கூடாது... நீங்க மட்டும் கண்ணா பிண்ணா என்று எங்களை நிக்க வச்சு கேள்வி கேட்பீங்க...சபார்டிநேட்ஸ்  கிட்டே மரியாதையா பேசுங்க... நான் காபி அடிச்சதுக்கு... என்னங்க ஆதாரம்..?" என்று இஷ்டத்துக்கு சவுண்டாய் பொறிந்துதள்ள...

அவர், "உன் சொந்தக்காரங்க யாராவது கம்பெனியிலே இருக்காங்களாப்பா" என்றார். (பேக்அப் அறிந்து கொள்ள..!?)

அவன், ஹெட் ஆபீஸ்ல ஜி.எம் ரேங்க்ல ஒருவரை சொல்ல..."நீ போ.." என்றார் அவனை..!

நண்பன் பேப்பரை கொடுத்துவிட்டு போனதும், நானும் பேப்பரை கொடுத்துவிட்டு நடையை கட்ட எத்தனிக்க... என்னை மட்டும் தடுத்து நிறுத்தினார்.

"நீ முஸ்லிம்தானே..?"

'என்னத்துக்கு இந்த கேள்வி இப்போ...' என்று எண்ணியவாறே... 'ஆமாம்' என தலை ஆட்டினேன்.

"உழைக்காம வருகிற வட்டியையே வாங்கிக்காத உங்களுக்கு காப்பி அடிப்பது என்பது திருட்டு இல்லையா..? நேர்மையா எழுதுற மத்தவங்களை வஞ்சிக்கும் இது பாவம் இல்லையா..? Training period -இல் நடக்கிற இந்த பரிச்சையில் நீ எடுக்கும் மார்க் அடிப்படையிலேதானே நாளைக்கு உனக்கு இந்த  plant allocation,  control room or field, promotion, increment, housing allotment எல்லாமே வரும்..? அப்போது உனக்கு தோணாதா..? "இதெல்லாமே அந்த 'திர்ருட்டுமார்க்' மூலம்தானே வந்துச்சு"ன்னு அப்போ  மனசு குத்தாதா..? அப்போது உன்னிடம் இருப்பதெல்லாமே கராம் (ஹராம்) தானேன்னும் அதுக்கு பரிகாரம் இல்லாம லும் உனக்கு அப்போ மனசு தவிக்குமே..? நீ மெய்யாலுமே கடவுளை பயப்படுற ஓர் உண்மை முஸ்லிமா இருந்தா காப்பி அடிச்சிருந்திருப்பியா..?"

மாற்று சமயத்தவர் என்றாலும், அவரின் ஒவ்வொரு கேள்வியுமே தொடர்ந்து இடைவிடாத இடி மாதிரி என்னை தாக்க... என்னவென்றே சொல்ல முடியாத ஒரு பயம்- சோகம் -அவமானம் -குற்ற உணர்ச்சி எல்லாமே சேர்ந்து கொண்டு என் தொண்டையை அடைக்க, பேச்சே வராமல்... உடனடியாக அவரின் கைகளில் இருந்த பேப்பர் கட்டில் இருந்து என் பேப்பரை உருவி... நான் காப்பி அடித்து எழுதிய அந்த 6 பதில்களையும் உருத்தெரியாமல் கிறுக்கி அடித்து விட்டு, அவர் கையில் பேப்பரை திணிக்கும் போது என் கண்களில் கண்ணீர்க்குளம்...

'ஸாரி' என்ற ஒற்றை வார்த்தை கூட  சொல்ல முடியவில்லை. நா தொண்டையோடு ஒட்டிக்கொண்டது. விறுவிறு என்று நடந்தேன். மனதில் மட்டும் ஏனோ அன்று ஒரு இனம்புரியாத நிறைவு இருந்தது..!

நாளை என் இறப்புக்குப்பின் மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில் அனைத்துலக மக்கள் முன்னால் அவமானம் - தண்டனை இல்லாமல் தப்பித்தேன் என்பது மட்டும் அல்ல... இனி இந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு வரப்போகும் அனைத்து செல்வமும் ஹலாலான நம் சொந்த உழைப்பு மட்டுமே என்ற எண்ணமே அப்போது ஒரு மகிழ்வை கொடுத்தது. விட்ட 6 பெரிதாக தெரியாமல்...  எழுதிய 94 ரொம்ப ரொம்ப பெரிதாக தெரிந்தது..!


உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் (இறைவன்) படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.  (அல்குர்ஆன் 67 : 2)

நிச்சயமாக, "காப்பி அடிப்பது அழகிய செயல் அல்ல; தான் கற்றதை மட்டுமே தேர்வினில் எழுதிவிட்டு வருதலே அழகிய செயல்" என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.


எல்லாம் இப்படி எழுதினா இதுக்கு பேரு பரீட்சையா..?

ஆகவே.... இது அக்டோபர் மாசம்... தேர்வு மாசம்... மார்ச்சில் தவற விட்டதை இப்போது "எப்படியேனும்"(?) பிடிக்க வேண்டும் என்பதற்காக... பள்ளி கல்லூரி சகோக்கள்... காபி அடிக்காதீங்க..! நன்றாக படித்து உங்களுக்கு தெரிந்ததை மட்டும் எழுதுங்க..! மனதிருப்தியுடன் உங்களுக்கான மதிப்பெண் பெறுங்கள் சகோ..! அதுவே பிற்கால வாழ்வில் அமைதியையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரும்..!

இனி... இந்த பசங்களை எல்லாம் இப்படித்தான் தேர்வெழுத விடணும்..!

49 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...