அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, February 6, 2012

11 உழவர்சந்தை போல், இடைத்தரகர் இல்லா மீனவர்சந்தை..!

தற்போதய பறந்து விரிந்து வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரு மணமகன் அல்லது மணமகள் தேடுவதற்கோ, அல்லது நமக்கு ஒரு நிலம், வீடு, வாகனம் போன்றன வாங்க/விற்க வேண்டும் என்றாலோ 'அவை எங்கெங்கே உள்ளன' என்பதையோ, 'அதற்கான தேவைகள் உள்ளவர்கள் எங்கெங்கு உள்ளனர்' என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. இந்த இடத்தில் 'தரகு' என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிறது.


இதற்காகவே சிலர், அவர்களாக முயற்சித்து அதற்கான தகவல்களை முன்னமேயே திரட்டி வைத்திருந்து, பயனாளிகளுக்கு உடனுக்குடன் தருவதை தமது முழு நேரத்தொழிலாகவே செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட தொழிலை செய்வோரான இந்த 'தரகர்கள்' என்போர் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் சுணங்கும், இழுத்தடிக்கும் அல்லது தடைபட்டும் விடும்.

ஆனால் தரகர்களில் சிலர்,  பணம் பண்ணுவதற்காகவே எவ்வித பித்தலாட்ட-பதுக்கல்-மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இதனால், மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட இந்த தரகுத்தொழிலை முழுமையாக 'தவறு' என நிராகரிக்கவோ அல்லது 'சரி' என அப்படியே ஏற்றுக்கொள்ளவோ முடியாத குழப்ப சூழல்தான் இப்போது நிலவுகிறது. 

காரணம், அதில் தற்போது நிலவி வரும் ஏகப்பட்ட 'உள்குத்து' வேலைகள் தான். 'இன்ன வேலை'க்கு, 'இப்படியான உழைப்பு'க்கு இவர்களுக்கான கமிஷன் 'இன்ன %', என்று எந்த வரைமுறையும் இல்லை. இவர்கள் 'என்ன செய்யலாம்; என்ன செய்யக்கூடாது' என்றும் நெறிமுறை ஏதும் இல்லை.

உதாரணமாக, 'ஒருவருக்கு நிலம் வாங்கவேண்டும்; இன்னொருவருக்கு அதை விற்க வேண்டும்' என்று வைப்போம். அந்த இரு தரப்புக்கும் இடையில் பாலமாக இருந்து கஷ்டப்பட்டு தம் நேரம் மற்றும் உழைப்பினை தரும் இவர்கள், வீண் அலைச்சல் இன்றி உட்கார்ந்த இடத்திலேயே பலனடைந்த அந்த இரு தரப்பினர்களிடமும் பேரம்பேசி... தம் உழைப்பிற்குரிய ஒரு நியாயமான தொகையை... ஒரு கூலியாக வாங்குவதில் ஏதும் தவறு இல்லை. 

இன்னும், ஒரு தரப்புக்கு மட்டும் அவர் சார்பாக விசுவாசமாக உழைத்து அவருக்கு வேண்டிய தகவலை கொடுத்து அந்த ஒரு தரப்பு மட்டும் நலன் பெற உதவி அதற்காக அந்த ஒரு தரப்பிடம் மட்டும் கூலி பெற்றால் இதிலும் கூட ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், அந்த விற்பனைக்குரிய நிலத்தில் வில்லங்கம் இருப்பதை மறைத்து, 'மார்க்கெட் ரேட்டை விட அதிக விலைக்கு விற்று தருகிறேன் பாருங்கள்' என்று விற்கும் தரப்பில் ஒரு கமிஷனும், 'கிடைத்தற்கரிய பொக்கிஷ நிலத்தை அதுவும் மார்க்கெட் ரேட்டை விட குறைந்த விலைக்கு வாங்கித்தந்து விட்டேன் பார்த்தீர்களா' என்று வாங்கும் தரப்பிடம் ஒரு கமிஷனும் பெற்றால் இது கேவலமான ஏமாற்றுவேலை மற்றும் நம்பிக்கை மோசடி அல்லவா..? இதை தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுத்து தண்டிக்கும் சட்டங்கள் கொண்டு வர வேண்டியது தற்போது அரசுக்கு அவசியமாகிறது.

மேலே இதுவரை நாம் பார்த்த தரகுத்தொழில் ஒருவகை என்றால்... இன்னொரு வகையும் உள்ளது. இங்கே ஒரு பொருளை அதன் உற்பத்தியாளர்களிடம் தம் புஜவலிமையால் மோசமான விலைக்கு வாங்கி, அதனை சந்தையில் அதிக விலைக்கு விற்று, அன்றே பெருலாபம் பார்ப்போர்..! உற்பத்தியாளர்-பயனாளர் இருவரும் சந்திப்பதையே கூட விரும்பாமல் வலுக்கட்டாயமாக தடுத்து... கொள்ளை( லாபம் )அடிப்பவர்கள் இந்த தரகர்கள்..!

உதாரணமாக, காய் பயிரிடும் உழவர்கள், காய்கறி விற்பனை செய்வோர், காய்கறி வாங்குவோர் ஆகிய இவர்களில் முதல் இரண்டு பிரிவினர்களுக்கிடையே தரகர்கள். ஏனெனில், சில வகை காய்கறிகள் மலைகள் போன்ற இடங்களிலும் குறிப்பிட்ட மண்வகை நிலங்களிலும் மட்டுமே விளையும். அவற்றை அங்கிருந்து நாட்டின் அனைத்து சந்தைக்கும் சென்று சேர்க்கும் திறன்/சக்தி அந்த நலிந்த உழவர்கள்/விவசாயிகளுக்கு இருக்காது. இவர் என்ன செய்வார்..?

இங்கேதான் போக்குவரத்து சாதனங்களுடன் 'முளைக்கிறார்கள்' இந்த காய்கறி இடைத்தரகர்கள். இவர்கள் போக்குவரத்து மற்றும் உழைப்புக்கு ஏற்ற சரியான ஊதியத்தை பெற்றுக்கொள்ளாமல், அதிகப்படியாக பெறும்போது... சந்தை விலைவாசி ஏறுகிறது. இவர்கள் இதனை "தமது விலைக்கு" காய்கறி வியாபாரிகளிடம் விற்பனை செய்து விட்டு சென்று விடுவார்கள்.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு அரசு தமிழகத்தின் பல இடங்களில் உழவர் சந்தைகளை அமைத்தது. மிக அருமையான திட்டம்..!

உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள அந்த விவசாயிகளுக்குத் தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், அருகிலுள்ள சில பகுதிகளிலிருந்து உழவர் சந்தைக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கான பேருந்துகளில் காய்கறி மூட்டைக்கு சுமைக்கட்டணம் இல்லை என்ற சலுகையுடன்..!

உழவர் சந்தை ஒவ்வொன்றிற்கும் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அங்கே விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் நிர்ணயிக்கிறது.

ஆனால், மீனவர்கள்..?! இவர்கள் விடிய விடிய நடுக்கடலில் சென்று மீன்பிடித்துவிட்டு அதிகாலையே திரும்புகின்றனர். இரவெல்லாம் தூங்கா விழிகளுடன் சந்தைக்கு வந்து மீன் வெட்டி நிறுத்து விற்றுக்கொண்டு எல்லாம் இருக்க முடியாது. மேலும், கரைவரைதான் அந்த தோணி/படகு வரும். அதற்கு அடுத்து கடற்கரையிலிருந்து சந்தைக்கு மீனை எப்படி எடுத்துப்போவது..?       

இங்கேதான் போக்குவரத்து சாதனங்களுடன் 'முளைக்கிறார்கள்' மீன் இடைத்தரகர்கள். இவர்கள் போக்குவரத்து மற்றும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக்கொள்ளாமல், அதிகம் பெறும்போது... சந்தை விலைவாசி ஏறுகிறது.  இவர்கள் இதனை மீன் வியாபாரிகளிடம் "தமது விலைக்கு" விற்பனை செய்து விட்டு சென்று விடுவார்கள்.

நான் தூத்துக்குடியில் இருந்தபோது, ஷீலா மீன் (அங்கே.. நெய் மீன் என்பார்கள்) 2002 ல், கடையில் 120 ரூபாய் கிலோ. இதையே, கடற்கரையில் சென்று அந்த தரகர்கள் கண்ணில் படாமல் மீனவர்களிடம் இரகசிய நேரடி டீல் போட்டு நான் வாங்கினால் கிலோ 50 அல்லது 60 ரூபாய்தான்..!

எனவே, கடைக்காரரிடம்... 'ஏனய்யா.. இப்படி இலாபம் என்ற பெயரில் அநியாயமாக 70 ரூபாய் ஏற்றி விக்கிறீர்கள்' என்றால், 'நான் புரோக்கரிடம் வாங்கிய 100 ரூபாய் அடக்கம், வெட்டுகூலி, கடை வாடகை எல்லாம் போக என்ன இலாபம் எனக்கு? எல்லா லாபமும் புரோக்கருக்குத்தான்' என்பார் அந்த கடைக்காரர்.

"இப்படி டபுள் மடங்கு இலாபம் சம்பாதிக்கிறார்களே அந்த புரோக்கர்கள்..? இதற்கு நீங்களே நேரடியாக கடற்கரைக்கு சென்று மீனவர்களிடம் வாங்கிவந்து விற்றால் நம் இரு தரப்பினருக்கும் இலாபமாயிற்றே" என்றதற்கு....

"எனது கடைக்கு மட்டும் 50-100 கிலோ நான் வாங்க முடியாது... தினமும் ஒரு லாரி லோடுக்காவது பல தோணி மீன் வாங்க வேண்டும்... அடிமாட்டு ரேட்டுக்கு மீனை வாங்க அடியாள் வேண்டும்... போட்டியை சமாளிக்க அரசியல் பின்புலம் வேண்டும்.. அவ்ளோ என், மீனவர்களே நேரடியாக எங்களிடம் இங்கே வந்து விற்பதற்கும் பல முட்டுக்கட்டைகள்.." என்று ஏதேதோ அவர் சொல்ல.... "இதையல்லாம் எப்படிங்க நான் நம்பறது..?" என்றேன்..! 

அதற்கு அவர் அளித்த சூடான பதில்:- "என் வீட்டை வந்து பாருங்க... நான் வாழும் வசதியை பாருங்க... மீன் பிடிச்சிட்டு வரான் இல்லை..? அவன் வீட்டை போயி பாருங்க... அவன் வாழும் வசதியை பாருங்க... அதுக்கப்புறம், எங்க ரெண்டு பேருக்கும் இடையே மீனையே தொடாமலே சம்பாரிக்கிறான் இல்லே? -அந்த புரோக்கர்- அவன் வீட்டை போய் பாருங்க.. எவ்ளோ பெரிசு... எத்தனை மாடி? அவன் வாழும் வசதியை பாருங்க... எத்தனை கார், பைக், ஃபர்னிச்சர், எவ்வளவு நிலபுலன் சொத்து..! இதுபோல வாழ எங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன..?"     

உழைத்து உற்பத்தி செய்து விற்பவர் அடையும் இலாபத்தை விட, பல மடங்கு அதிக லாபத்தை தம் அநியாய கட்டாய கமிஷன் மூலம் வாங்கி-விற்கும் இடைத்தரகர்கள் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா...?

ஆகவே, தக்க சட்டம்/வரையறை மூலம் இதனை தடுத்து,  'உழவர் சந்தை' போல, மக்களும் மீனவர்களும் மட்டும் பலனடைய உடனடி தேவை, ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஒரு 'மீனவர் சந்தை'.  இதனை அறிமுகப்படுத்துமா அரசு..?அதற்கு முன்னர் அட்லீஸ்ட்... கடற்கரையில் இருந்து மீன் சந்தை வரை தமது மீனை கடையில் கொண்டு போய் விற்க அரசு ஏதேனும் போக்குவரத்து வாகன வசதியை குறைந்த கட்டணத்தில் சிறு மீனவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால்... தரகர்களிடம் விற்கும் விலையில் மீன் வியாபாரிகள் மீனை பெற்றுக்கொள்வார்கள் எனில், மீன் விலை பாதியாக குறையக்கூட வாய்ப்பு உள்ளதே..!

இங்கே சவூதி அரேபியாவில், நான் வாழும் கடற்கரை நகரான அல் ஜுபைலில்... கறி- கோழி- காய்கறி- எல்லாமே நம் நாட்டை பொறுத்த மட்டில் அதே விலைதான்..! ஆனால், மீன் மட்டும் நம்ம ஊரை விட விலை மலிவு..! நான் வாங்குவது எங்கே எனில், அதிகாலையில் நான்கைந்து பேராக சென்று, மீனை பிடித்து வந்து விற்கும் மீனவர்களிடம், இடத்தரகரின்றி நேரடியாய்..! இதையே மீன் கடைகளில் வாங்கினால், விலை இரட்டிப்பாகி விடுகிறது.


போன வாரம் இப்படித்தான் சுமார் ஒரு அடி நீள ஷீலா மீன்கள் (நெய்மீன்)... சேர்ந்து வாங்கினோம். எனது பங்கு 3 மீன்கள் வந்தன. அப்புறம், வீடு வந்து நிறுத்துப்பார்த்ததில் கிலோ 10 ரியால் கணக்குதான் வந்தது..! (2002-இல் நான் தூத்துக்குடி மீன் கடையில் வாங்கிய அதே ரேட்) :-)) 

ஆகவே... இதுபோன்ற, ஒரே ஊரில் வாங்கி-விற்று கொள்ளை(லாபம்)அடிக்கும் இடைத்தரகர்களை எதிர்த்து, 'உழவர்  சந்தை' & 'மீனவர் சந்தை' போன்ற நேரடி வர்த்தகத்தை எல்லாம் இஸ்லாமும் பலமாக ஆதரிக்கிறது தெரியுமா..!?

புஹாரி - பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2158
இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
“(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

“கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; 

அதற்கு அவர், ‘இடைத் தரகராக ஆகக்கூடாது..! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ்(ரஹ்) கூறினார். கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.

விளைய வைப்பதும் உழவரே..! விலையை வைப்பதும் உழவரே..!
வலையை விரிப்பதும் மீனவரே..! விலையை குறிப்பதும் மீனவரே..! 
இயன்றவரை இடைத்தரகர்களை தவிர்ப்போம்..! 
இருதரப்பும் இலாபம்பெற்று இன்புறுவோம்..!

11 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...