அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, February 2, 2012

33 சிறுகதை - ஹராம்

தானே புயல்... தானே உருவாகி, தானே மையங்கொண்டு, தானே பலம் பெற்று, தானே நகர்ந்து, தானே கரை கடந்து, தானே சுழன்றடித்து, தானே சேதப்படுத்தி, தானே வலுவிழந்து, தானே ஓய்ந்தும் போனது... ஆகிய அனைத்தும் தானேவா நிகழந்தது..? இல்லை... இது இறை விதியா..? இது மனிதர்களுக்கு இறைவனின் சோதனையா..? ...போன்ற கேள்விகளெல்லாம் மனதை ஆக்கிரமிக்க இடமே இன்றி... பெருந்துயருடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்து என் மனதை போலவே சுக்கு நூறாய் உடைந்து போன எனது தள்ளு வண்டி இட்லி கடையின் முன்னே அமர்ந்து இருந்தேன். 'இங்கே கடையை நிறுத்தினால், சாலையின் நியான் விளக்கின் உதவியுடன் இரவு வியாபாரம் களைகட்டும்' என்று நிறுத்தும்போது தெரியவில்லை... இப்படி புயல்வரும்... அதனால், இந்த மின்சார விளக்குத்தூண் என்  பொருளாதாரத்தின் மீதே விழுந்து இப்படி உடைத்து தொலைக்கும் என்று..!

அது சற்று வசதியானவர்கள் வாழும் தெரு. தெருவின் இருமருங்கிலும் பெரும்பாலும்  இரண்டடுக்கு வீடுகள். கார்கள். ஒரு வீட்டின் பெரிய டிஷ் அண்டெனா மாடியிலிருந்து வளைந்து  தொங்கி இடித்ததில் 30 X 10 அடி பால்கனி கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கி விட்டிருந்தன. என் கடையை உடைத்த லைட் போஸ்டுக்கு அடுத்த போஸ்டு ஒரு காரின் மீது விழுந்து... காரை 'V' போல வளைத்து இருந்தது. ஒரு வீட்டின் தென்னை மரம் விழுந்ததில் அந்த வீட்டினரின் மூன்று டூ வீலர்களும் வரிசையாக நசுங்கின. இதுபோல... அவரவருக்கு பல சேதங்கள்... ஆனால், அவை உடற்காயங்கள் மாதிரி... ஆறிவிடும். ஆனால், எனக்கு ஏற்பட்டது..? உயிருக்கே ஆபத்து மாதிரி..! என்ன பண்ணுவது இனி நான்..?

"அடடா...  என்னப்பா... இப்படி இடிஞ்சு போயிட்டே..?" 
கேட்டவர் எதிர்வீட்டுக்காரர்... சுமார் 55 வயது பெரியவர், 'இவருக்கு என்ன... லக்கி... சேதம் ஏதும் ஆகலை...'
"என்ன சார் பண்ண... என் பிழைப்பின் அஸ்திவாரம் சார் இது... அடுப்பு... இட்லி சட்டி, எல்லாமே போச்சு சார்... வீலு கூட மிஞ்சலை... இனி நான்... என் குடும்பம் என்னாகும்... திக்கற்றுப்போய் நிக்கிறேன் சார்..." தொண்டை அடைத்தது...
"சரி, வருத்தப்படாதே சகோதரா... இந்த தள்ளுவண்டி புதுசா எங்கே செஞ்சு விப்பாங்கன்னு தெரியுமா உனக்கு..?"
"தெரியும்... ஏன் சார்..?"
"இதோ காரை எடுத்துட்டு வரேன்... உடனே கிளம்பு என்னோடு... எல்லாத்தையும் புதுசா வாங்கிடலாம்..."
"உங்களுக்கு பெரிய மனசு சார், இந்த கடனை மெதுவா ஒரு... இல்லே... ரெண்டு வருஷத்துக்குள்ளே தவணையிலே அடைச்சிடறேன் சார்.."
"சேச்சே... இது உனது உரிமைப்பா... இது உன் பணம் தான்... திருப்பி எல்லாம் தர வேணாம்..."
"என்ன சொல்றீங்கன்னு புரியலே சார்"
"இதுமாதிரி திக்கற்றவர்களுக்கு எங்க இஸ்லாத்தில் 'ஜகாத்'... அதாவது  நான் தர்மம் செய்யனும்பா... 40-ல் ஒரு பங்கு என்னோடது இல்லை... அது உன்னை மாதிரியானவங்களுக்கு உரியது... அதையும் நான் சாப்பிட்டா மற்ற 39 பங்கும்  எனக்கு ஹராம்... புரியுதா..?"
"சார் என்னா சொல்றீங்கன்னு புரியலை... ஆனா, நான் திருப்பி தர வேணாம்... இது கடன் இல்லை... சரிதானே சார்..?"
"ஆமா... ஆனா, உனக்கு புரிய வேண்டியது சரியா புரிஞ்சிருச்சே.."
"சார்... நீங்க என் குலதெய்வம் சார்... கும்பிடறேன் சாமி..."
"ஏஏஏஏ என்னாப்பா நீ... இப்படி பேசறே... நாம் எல்லாரும் சகோதரர்கள். இனிமேல் மனிதனை கடவுளாக்காதே..! உனக்கும் எனக்கும் எல்லாருக்கும் சேர்த்து ஒரே இறைவன் தாம்பா... என் மூலமா உனக்கு வந்த இந்த உதவி கூட அந்த இறைவனின் கட்டளைதான்.." 
"ஒகே சா... சார்..."

*****************************************************

மறுநாள்...
புத்தம் புது வெளிநாட்டு கார்... வந்து நிற்க, மற்றவர்கள் காரினுள்ளே இருக்க, குழந்தைகள் அழுது கொண்டிருக்க... ஒருத்தர் மட்டும் வேகமா வந்து...
"நாலு நாலு இட்லியா ரெண்டு பார்சல்... கட்டுங்க... கட்டி சட்னி தனியா.."
"இது மட்டும் போதுமா சார்..."  
"போதும்... பசங்களுக்கு மட்டும்தான்... மண்டபத்துக்கு போறோம்... ஃபங்ஷன்ல சாப்பாடு லேட்டாயிரும்.. இப்போவே பசங்க 'பசிக்குது'ன்னு சொல்றாங்க... கொஞ்சம் சீக்கிரம்... ஃபங்ஷன் நேரம்  ஆயிருச்சி..."
அப்போது... ஒரு போலிஸ் புல்லட் வந்து நிற்க,


"பெரிய பெரிய ஹோட்டல் ஓனருங்களே இன்சுரன்ஸ் ஆபீஸ்ல கிடக்க... பிளாட் பாரம் கையேந்தி பவன் காரன்... நீ என்னடான்னா... அடுத்த நாளே... புத்தூ கடை... புத்தூ அடுப்பு... புத்தூ இட்லி சட்டி... புத்தூ தட்டு... கலக்கறே சந்துரு... அது சரி, இந்த மாசம் என்ன ஆச்சு..?"
"வாங்க எஸ்.ஐ சார்... இது எல்லாமே ஒரு பெரியவர் இனாமா தந்தார் சார்... எங்கிட்டே ஏது சார் அவ்ளோ பணம்..? இன்னும் மாசம் பொறக்கலியே சார்... பொறந்தவுடன் நானே ஸ்டேஷன் வந்துருவனே சார்..."
"யோவ்... மொதல்ல கஸ்டமரை கவனிச்சு அனுப்புயா..."
"இந்தாங்க சார் பார்ஸல்" 
"தேங்க்ஸ்..." என்று சொல்லிவிட்டு கார் நோக்கி அவர் நகர்ந்ததும்...
"யோவ்... நான் இப்போ இன்ஸ்பெக்டர்யா... ப்ரோமோஷன் வந்தாச்சி... நாளை டிரான்ஸ்பர்... அதனாலே இப்போவே என்னை கவனி... உங்கதையை எல்லாம், ஒன்னாம் தேதியிலிருந்து புது எஸ்.ஐ வருவார் இல்லே... அவருகிட்டே சொல்லு... எனக்கு கதை கேட்க நேரமில்லே..."

***************************************************

இன்ஸ்பெக்டர் புல்லட் நகர.... அடுத்து, 'இரண்டு கல்லூரி இளைஞர்கள்... ஒரு பைக்கில் வந்து சாப்பிட... 'இவர்கள் சாப்பிட்டு விட்டு சொல்லும் கணக்கு மீது நீண்டநாளாய் ஒரு சந்தேகம் உள்ளதால்... இன்னிக்கு ரெண்டு பேர்தானே... கூட்டமும் இல்லை... கவனிக்கணும்...'

"தல நம்ம கணக்கு 20 ரூபாய் வருது... இந்தாங்க..."
"இல்லை தம்பி... 35 ரூபாய் கணக்கு வருது "
"அது எப்படி வரும்..? இதப்பாருடா... மாப்ள இவர் கணக்கை.."
"அவர் கிடக்கார்.... நீ வண்டிய எடுமா..."
"ஒரு நிமிஷம் தம்பி... நீங்க நிறைய பேர் வருவீங்க... அப்போல்லாம் நீங்க சொல்றதுதான் கணக்கு... ஆனா இப்போ நல்ல கவனிச்சுதான் சொல்றேன்..."
"என்னத்தையா கவனிச்சீங்க..?"
அப்போது, சற்றுமுன் வந்த அதே  வெளிநாட்டுகார் வந்து நிற்க... அதிலிருந்து அவர் வேகமாக ஓடிவந்து... 
"சாரிங்க... பசங்க அழுது பண்ணிய களேபரத்துல அவசரத்துல இட்லிக்கு பைசா கொடுக்க மறந்துட்டேன்... இந்தாங்க..." 
"அதுக்கென்ன சார்... ஃபங்ஷன் முடிஞ்சி மெதுவா வந்து தந்திருக்கலாமே...?"
"இல்லைங்க... இப்போநான் அலுப்பு பட்டுட்டு  அப்புறம் மறந்து விட்டுட்டா... சாப்பிட்டது ஹராம் ஆகிரும்... ஊரே புயல் காரணமா தண்ணீர், சாப்பாடு விலையை எல்லாம் ஏத்தினாலும் நீங்க அதே விலைல விக்கிறீங்க... விலை ஏத்தலை.. சரி... நன்றி,  நான் வரேன்..."
சந்தடி சாக்கில் அவர்கள் பைக்கை ஸ்டார்ட் பண்ண சாவி போடும்போது, நியூற்றல் டியூன் அரபியில் ஏதோ ஓதும் சத்தம் வர, அந்த பைக்கின் முகப்பில் அரபி எழுத்துக்களில் ஏதோ எழுதப்பட்ட ஸ்ட்ரிக்கர் இருக்க... உடனேநான் அந்த அஸ்திரத்தை போட்டேன்...
"பாய், இது ஹராம் இல்லையா..?"
"மாமே, உங்க ரிலிஜனை வம்புக்கு இழுக்கரார்டா.."
வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன், உடனே என்கிட்டே வந்து...
"இப்போ என்னா பிரச்சினை..? நான் தப்பா கணக்கு போட்டுட்டேன் அவ்ளோதானே...? இந்தாங்க 15 ரூபாய்... தேவை இல்லாம பேசாதீங்க.."
"நன்றிப்பா.."

*****************************************************

மறுநாள்...
போலிஸ் புல்லட் கடையை ஒட்டி வந்து வந்து நிற்க.... புது எஸ்.ஐ...
"பிளாட்ஃபாரத்துலே கடை போடக்கூடாது, தெரியும் இல்லே... சரி, ஒரு வாரத்துல வேற இடம் பார்த்துட்டு கடையை காலி பண்ணிடனும்.. ஓகே..?"
"வாங்க புது எஸ்.ஐ சார், ரொம்ப நாளாவே இங்கே கடை வச்சி இருக்கேன்... பழைய எஸ்.ஐ யையும் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்லாவே கவனிச்சு இருக்கேன்... இப்போ உங்களுக்கு நான் என்ன.. எப்படி.. எவ்ளோ.. செய்யணும்னு நீங்களே சொல்லிருங்க சார்.."
"யோவ்... என்ன லஞ்சமா...? சட்டப்படி குற்றம் மட்டுமல்ல... ஹராம்யா அது... நான் வாங்க மாட்டேன்... அங்கே பாருயா... உன் வண்டி நிக்கிறதால அதுவரை நடைபாதையிலே வந்துட்டு... இப்போ கீழே மழைத்தண்ணிலே இறங்கி ஏறுறாங்க பாரு ஸ்கூல பசங்க... யாரால இது..? உன்னாலதானே..? தோ பார்... இதுவரை இங்கே நிலவரம் எப்படின்னு எனக்கு தெரியாது...  நாளைக்கு உன் கடை இங்கே இருந்தால்... அப்புறம் சட்டம் தன் கடமையை செய்யும்... அதை அமுல்படுத்த வேண்டியது என் பொறுப்பு... அதை மதிச்சு நடக்கிறது உன் பொறுப்பு... அவ்ளோதான்... நீ யாரோட அடியாளா வேணாலும் இருந்துக்க... அது பத்தி எனக்கு கவலை இல்லே... இதுவரை தண்ணியில்லாத காட்டுக்கே அனுப்பி அலுத்துப்போய்... இப்போ 'தண்ணிகாட்டு'க்கே அனுப்பிட்டானுங்க... விட்ருவேனா..?" படபடவென பொறிந்துவிட்டு கிளம்பினார்..!

***************************************************

எனக்கு உதவிய எதிர்வீட்டு பெரியவர் இதனை எல்லாம் பார்த்துவிட்டு வந்து கேட்டார்...
"என்னாப்பா பிரச்சினை..?"
"லஞ்சம் வாங்க மாட்டாராம்... பிளாட் பாரத்துலே கடை வைக்ககூடாதாம்... இன்னிக்கே கடையை காலி பண்ணணுமாம்... நான் எங்கே சார் போவேன்..? வேற இடத்திலே வைத்தால்... கஸ்டமர் யாருக்கும் புது இடம் தெரியாம போயி என் வியாபாரமே போயிருமே சார்... இவ்ளோ நாள் பாடுபட்டு கஸ்டமர் சேர்த்தது எல்லாமே வேஸ்டா போச்சே சார்.."
"இருப்பா... பிளாட் பாரத்துலே தானே வண்டியை நிறுத்த கூடாது..? உன் வண்டியை என் வீட்டிலே நிருத்திக்கலாம்னா... இடம் விடாம வீட்டை முன்னாடி வச்சு  கட்டிட்டேன்..."
"இது நல்ல யோசனை சார், இந்த சாரிலேயே... இவங்க வீட்டிலே கேட்டு பாப்போமா..? கடை இடமும் மாறாதே.."
"சரி, இந்த வீட்டு இடுப்புயர காம்பவுண்டுகுள்ளே கடையை உன்னோடு நிறுத்திக்கலாம்... மக்கள் காம்பவுண்டுக்கு வெளியேநிண்ணு வாங்கட்டும்.. நீ சொன்ன மாதிரி இப்போ அதே இடம்தானே...? உன் யாவாரமும் பாதிக்காது. ஓகே... எதிர் வீட்டு தோழர் கிட்டே உனக்காக நான் பேசறேன்...வா..."
"அவர் வீட்டுக்குள்ளே வைக்கிறதுக்கு நீங்க சொன்னா ஒத்துக்குவாரா சார்..? இடைஞ்சல் இல்லையா..? மேலும் அது கட்சி ஆபீஸ் வேற..."
"ஆமா.. இடைஞ்சல்தான்... ஒண்ணு செய்றியா..? இதுவரை போலிஸ் கிட்டே லஞ்சமா கொடுத்ததை... இந்த தோழர்கிட்டே வாடகையா கொடுத்திறேன்... உனக்கு சம்மதமா..?"
"ம்ம்ம்.... கேட்டா குடுத்திரலாம் சார்.. எனக்கு சம்மதம்.."

***************************************************

டிங்ங்ங்...  டாங்... டிங்ங்ங்...  டாங்...
"வாங்க பாய்.. என்ன விஷயம்..?"
"நம்ம சந்திரன் வெளியே இட்லி கடை போட்டு இருக்கார்ல.... 
... .....
(முழு கதையும் பெரியவராலும் இட்லி கடை சந்திரனாலும் தோழர் கிட்டே சொல்லப்படுகிறது...)
.... .... 
.... இப்போ நீங்க இவர் பிரச்சினைக்கு என்ன சொல்றீங்க சகோதரர்..?"
"இது வாராந்திர கட்சி மீட்டிங் போடற இடம்.. நிறைய தோழர்கள் எல்லாம் வருவார்கள்... வண்டி நின்னா உட்கார வசதி படாதே... இது உங்களுக்கே தெரியுமே..."
"அண்ணே... இத்தனை நாளா இங்கே இருக்கிறேன்... தெரியும்னே, மீட்டிங் அன்னிக்கு சாயந்திரம் மட்டும் வண்டியை வெளியே நிறுத்திக்கிடறேன்..."
"சரி, ஓர் எழைத்தொழிலாளியான உங்க கிட்டே எப்படி வாடகை... மேலும், இயக்க அலுவலகம் என்பதால் அப்படி வாங்கவும் முடியாது... தலைமையிடம் கேட்க வேண்டும்... கேட்டாலும் அவர்கள் சொல்லப்போவது இதுதான்... நீங்கள் வாடகையாக குறிப்பிட்ட அந்த தொகையை மாசாமாசம் இயக்க வளர்ச்சிக்கு நன்கொடையா தந்துருங்க தோழர்.."
"சரிங்க அண்ணே"
"தோழர்-னே சொல்லலாம்..."
"சரிங்க தோழர்"
"எல்லாம்... நம்ம ஊரில் போன வாரம்... 'பாதசாரி மக்கள் உரிமையான நடைபாதையை அமைக்க கோரி' நாங்க நடத்திய பிரம்மாண்ட போராட்டம் தான் அரசு இயந்திரத்தை எப்படி முடுக்கி விட்டு இருக்கிறது... பார்த்தீர்களா..!"
"...?..."
"பாருங்க பாய், நம்ம தோழர்.சந்திரனுக்கு இப்போ எவ்ளோ பிரச்சினை...? இவர் வண்டி உடைந்தது யாராலே... ஒரு புயலுக்கு தாங்காத அளவுக்கு இருக்கும் அரசின் மின்விளக்கு தூண்.. இதற்கு பொறுப்பேற்று அரசு நஷ்ட ஈடு தரவேண்டும்.. "
"சரிதான்... ஆனால், 'நடைபாதையிலே வண்டியை நிறுத்தி இருந்தது சட்ட விரோதம்' என்று சொல்வார்களே சார்...? எப்படி நஷ்ட ஈடு கிடைக்கும் சார்..?"
"ஆமாம்... அதற்குத்தான், அடுத்த வாரம் சென்னையிலே... எங்கள் இயக்கம்... 'நடைபாதை வியாபாரிகளின் உரிமையினை மீட்க மாநில அளவில் ஒரு போராட்டம்' நடத்த போறதா அறிவிச்சு இருக்காங்க..."
"....!?!?!?!?...."
"....?!?!?!?!...."
"அ..ஆமாம்... நாங்க நடுநிலையோடு எல்லா தரப்பு உழைக்கும் மக்களுக்காகவும் பாகுபாடு இல்லாமல் போராடும் இயக்கமாக்கும்... இது போன்ற மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தவறாம நீங்கள் எல்லாரும் அவசியம் கலந்துக்கணும்..!"

*****************************************************

இரவு வண்டியை தோழர் வீட்டுக்குள்ளே நிறுத்தி விட்டு, நாளை வாங்க வேண்டிய மளிகை சாமானுக்காக கடையை அடைந்தேன்... கல்லாவில் புதிதாக... ஓனரின் பையன் காதில் ஹெட்ஃபோன்...கையில் செல்ஃபோன்... சகிதமாக உட்கார்ந்து இருக்க... வழக்கமான பில் தொகை என்னவென்று எனக்கு தெரியும் என்பதால்... புயலால் விலை கூடி இருக்குமோ என்று நினைத்தவாறு கையில் எடுத்து வைத்திருந்ததை தர... எக்கச்சக்கமாக அவன் மீதி தருவதை பார்த்து குழம்பினேன்... அடடா... பையனின் கூட்டலில் குறைபாடு..! 
"என்னப்பா இது... நானூறு ரூபாய் ரவுண்டா பில்லிலே குறையுது பாருப்பா.."
"அ..அட... அஆமாங்க.... வேற யாராவதா இருந்தா.... வந்த வரைக்கும் லாபம்னு போயி இருப்பாங்க...நன்றிங்க..."
"நான் எப்படிப்பா போவேன்... இது எனக்கு ஹராம்"
"ஃகராம்-ன்னா...?"
"அது என்னுடைய காசு இல்லை... எனக்கு அது விலக்கப்பட்டது... அப்டீன்னு அர்த்தம்பா..."
"ஓ..."
மனதில் சாந்தி நிலவிக்கொண்டிருக்க, மளிகை சாமான் மூட்டையுடன் வீட்டை நோக்கி நடையை கட்டினேன்............

33 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...