அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, September 27, 2011

12 மனைவி எனும்...தாய் எனும்...(first part)

பொதுவாக ஆண் பெண் இருபாலருக்கும் கலவியல் இன்பம் என்பது பொதுவானதாகவே இருப்பினும், இதனால் விளையும் இனப்பெருக்கம் மூலம் கிடைக்கும் குழந்தைச்செல்வமும் இருபாலருக்கும் உரிமையுள்ள பொதுவானதாகவே இருப்பினும், இதில், பெண்ணுக்கு மட்டுமே சுமார் 280 நாட்கள் கருவை சுமந்து, வளர்த்து, பிரசவித்து சுமார் இரண்டு வருடங்கள் தினமும் பலமுறை அவ்வப்போது தாய்ப்பாலூட்டி கண்ணுங் கருத்துமாக சீராட்டி வளர்த்தல் என்று மனிதப்படைப்பு ஒரு பக்க பால் சார்பாக(?) விதியாகியுள்ளது.

இதில் குறை காணவும் இயலாது. காரணம்... கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களுமே இப்படித்தான் என்பது மட்டுமின்றி, 'ஒரு குழந்தை ஆணிடம் அடுத்தது பெண்ணிடம் பிறப்பது' (?) என்றெல்லாம் இதில் ஆண் பெண் சமத்துவம் பற்றி சிந்திப்பதற்கே நமக்கு தலை சுற்றுகிறது. ஆக, நடப்பில் உள்ளது உள்ளபடி இப்படித்தான் சாத்தியம் என்பது புரிகிறது. ஆனாலும், இந்த பிரசவ அமைப்பு ஒரு பக்க பால் சார்பு போல நம் அறிவுக்குப்படுவதை எப்படி நேர் செய்வது..?

இஸ்லாமிய மார்க்கத்தில், இதற்கு நான் விடை காண்கிறேன். இந்த மகப்பேறு என்ற ஒரு விஷயத்தின் காரணமாக இதில், காலாகாலத்துக்கும் மனைவிக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் மற்றும் இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளை எல்லாம் நிறைவு செய்ய இறைவனால் (குர்ஆன்-4:34) கணவன் பொறுப்பளிக்கப்பட்டு கட்டளையிடப் பட்டுள்ளான் என புரிகிறேன். இதை, கணவனிடம் கேட்டு பெறுவதை மனைவியின் உரிமையாகவும் (குர்ஆன்-2:228) இறைவன் ஆக்கியுள்ளதாக புரிகிறேன். ஏனெனில், இந்த மகப்பேறு கஷ்டம் எல்லாம் இறைவனின் படைப்பின் அடிப்படையில் பெண்ணுக்கு நேர்ந்தது என்பதால் இதற்கு பரிகாரம் இறைவனாலேயே வழங்கப்பட்டு விடுகிறது. எந்த கணவனும் தன் மனைவியை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த இயலாது.

மனைவியின் பேறுகால மருத்துவ செலவு, குழந்தைக்கான செலவு என்று அனைத்தும் கணவன் மீதுதான் இஸ்லாமிய வாழ்வியல் மார்க்கத்தில் சுமத்தப்படுகிறது. மேலும், இக்காலத்தில் மற்ற நாட்களில் மனைவியிடம் சில பல உதவிகளை எதிர்பார்ப்பது போன்று எந்த ஒரு சராசரி கணவனும் மகப்பேறு காலத்தில் அதிகம் மனைவியை வேலை செய்ய விடுவதில்லை என்பதையும் நாம் அறிவோம்.

அந்த புதுமணத்தம்பதியினர் திருமணம் முடிந்து சிலமாதங்கள் ஆனவர்கள் என வைத்துக்கொள்வோம். புதிய பைக்கில்...சீறிப்பாய்ந்து... டாப் கியரில் சாலையில் 'S'  எல்லாம் போட்டு... வளைத்து நெளித்து ஓட்டி எல்லாரையும் ஓவர்டேக் செய்து... சிக்னலில் முதல் ஆளாய் முந்திக்கொண்டு நின்று... கிரீன் விழுந்தவுடன்... முதல் ஆளாய் துப்பாக்கி குண்டைபோல முன் சக்கரம் எவ்வ சீறிப்பறந்து... ஸ்பீடு பிரேக்கரில் ஜிவ்வ்வ்வ் வெனத் தவ்வ்வ்வி... ஸ்டைலாக பைக் ஓட்டிச்சென்று... மகப்பேறு மருத்துவமனை வந்தவுடன்... மனைவியுடன் சேர்ந்து பைக் பின் சக்கரம் உயரே எவ்வ சடன் பிரேக் போட்டு நிறுத்துவான் கணவன். 'மந்த்லி செக்-அப் '-புக்காக செல்லும்போதுதான் இப்படி..!

அங்கே... ஸலாம், சுய அறிமுகம், சுக விசாரிப்பு எல்லாம் முடிந்த பின்னர்...
கணவன் மருத்துவரிடம்...
"ம்... டாக்டர், வந்து... என் மனைவிக்கு இந்த மாசம்..." என்று மனைவி பக்கம் திரும்ப,
உடனே டாக்டர் மனைவியிடம்... 
"கடைசியா தொழுகை எடுத்து எத்தனை நாளாச்சுமா..?"
"45 நாள் டாக்டர்".
"சரி, இந்த டெஸ்டை எடுத்துட்டு வாங்க" என்று ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுப்பார்.

மெடிகல் ஷாப் சென்று அந்த பிரக்னன்சி டெஸ்ட் கார்டை பெற்றுக்கொண்டு, லேபில் டெஸ்ட் சாம்பிள் எடுத்து கொடுத்து... அதன் உடனடி ரிசல்ட் வந்தவுடன்... டாக்டர் அதை பார்த்துவிட்டு... கணவன் பக்கம் திரும்பி... ஒரு புன்சிரிப்புடன்... 

"கங்க்கிராட்ஸ்... நீங்க அப்பாவாக போறீங்க..:-)" ...என்றதுக்கப்புறம் நீங்க பார்க்க்க்க்க்கணுமே..!

மூன்றாவது கியரை அந்த பைக் தாண்டவே தாண்டாது..! சைக்கிள்காரன் கூட ஓவர்டேக் செய்வான்..! ரோட்டில் இருக்கும் பள்ளத்திற்காக அன்று முதல் நகராட்சியை கணவன் திட்டித்தீர்ப்பான்..! சாலை விதிகளை மதிக்காமல் செல்லும்-வரும் வாகன ஓட்டிகளுக்கு கடும் வசை விழும்..! ஸ்பீடு பிரேக்கர் வந்தாலோ... "டியர்... கொஞ்சம் எறங்கி ஏறு கண்ணு.." என்பான் கணவன்..! இப்படி... பல விஷயங்கள் அத்தம்பதியினர் வாழ்வில் தலைகீழாய் மாறும். அதற்கு முன் சூறாவளிப்புயலாக  சுழன்றடித்தவர்கள் இனி தென்றல் என வருடிக்கொள்வது போல் அனைத்து செய்கைகளிலும் நிதானம் கடைபிடிப்பர்.

அன்றிலிருந்து... கணவனுக்கு மனைவி மீது ஆரம்பிக்கும் ஒரு தனிப்பாசம், தனிக்கவனிப்பு எல்லாம்..! சில வாரங்கள் கழித்து மனைவிக்கு மயக்கம் வரும். இதனை 'மசக்கை' என்பர். இக்காலத்தில்... செய்து கொண்டிருக்கும் சமையல் பாதியில் நிற்கும் அல்லது சமையலே நடந்திருக்காது. வீடு துப்புரவின்றி அலங்கோலமாக கிடக்கும். வாஷிங் மெஷின் ஓடி நாளாகி இருக்கும். சராசரி மாமூல் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருக்கும்.

அன்று, மதிய உணவுக்காக அலுவலில் இருந்து வீடு வந்த கணவன், மேற்படி சூழலை உணர்ந்து... "நோ ப்ராப்ளம் டியர்..." என்று விரைந்தோடி பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வரும் வேகம் என்ன..! பின்னர் சாப்பிட்டவுடன் அதையே மனைவி மசக்கை வாந்தி எடுத்தால்... ஒருமணிநேரம் ஆபீசுக்கு பர்மிஷன் சொல்லிவிட்டு, வாந்தி அள்ளி எடுத்து க்ளீன்பண்ணி கழுவி விட்டு ஈரம் துடைத்து... பின்னர், பிற்பகல் வேலைக்கு விரையும் கணவன்கள் பலர் உளர். மாலையில் வாஷிங் மெஷின்... வேகுவம் கிளீனர்... சமையல்... அனைத்தையும் கணவன் கவனிக்க ஆரம்பிப்பான். மகிழ்வான குடும்ப வாழ்வுக்காக வீட்டுக்கு வெளியே உழைக்கும் கணவனும் அதே மகிழ்ச்சிக்காக வீட்டுக்குள் உழைக்கும் மனைவியும்  இணைந்து நடத்தும் ஒரு நடுத்தரவர்க்க தனிக்குடித்தனத்தில் இவை அடிக்கடி நடக்கும்.

இதுவே கூட்டுக்குடும்பம் என்றால், கணவன் தன் குடும்ப பொருளாதாரத்துக்கான அலுவல் முடிந்து வீட்டுக்குள் வருகையில்... "என்ன டியர், எங்க அம்மா-வயசானவங்க கிச்சன்ல அப்படி கஷ்டப்படறாங்க... நீ என்னடான்னா ஹால்ல ஹாயா சாஞ்சிக்கிட்டு டீவி பார்த்துக்கிட்டு இருக்கே... உங்க அம்மாவா இருந்தா இப்படியா இருப்பே..." என்று முன்பு சொன்ன அதே கணவன், இப்போது...  "என்னம்மா, பாவம்... புள்ளதாச்சி பொண்ணு கிச்சன்ல நிண்ணு கஷ்டப்படது... நீங்க என்னடான்னா ஹால்ல ஹாயா படுத்துக்கிட்டு டீவி பார்த்துக்கிட்டு இருக்கீங்க...உங்க பொண்ணா இருந்தா இப்படி விட்டிருப்பீங்களா..." என்பான்..!

அடுத்த சில மாதங்கள் இப்படித்தான் போகும்..! பின்னர் சிசுக்குழந்தை சற்று வளர்ந்தவுடன் ஆங்காங்கே வயிற்றினுள் எட்டி உதைத்து தாயை நேரத்துக்கு தூங்க விடாது. பல சிசுக்கள் பகலில் பதூசாக தூங்கிவிட்டு இரவில் தூங்க விடாமல் உள்ளே குட்டிக்கரனை அடித்து விளையாடும். சரியான நேரத்தில் ஒழுங்கான தூக்கம் இல்லாமல் அவதியுருவதும், சிசுக்குழந்தை தூங்கும் நேரம் பார்த்து கிடைத்த கண்ட நேரத்தில் தூங்கி எழுவதுமாக இது, பிரசவ மாசத்துக்கு முந்திய மாசம் வரை தொடரும். அதுவரை, தன் உடல் எடையை தாங்கிய முட்டிகால்கள்... இப்போது... கூடுதலாக சில கிலோவை சுமப்பதால் ஓவர்லோடு தாளாமல் வலிக்கவும்  ஆரம்பிக்கும்.

முன்பக்கம் உள்ள எடையை ஈடுகட்ட பின்பக்கம் சற்று சாய்ந்து நிற்பதால், அப்படியே நடப்பதால் முதுகுவலி தொடர்ந்து இருக்கும். இதெல்லாம் விட, இறுதியில் வரும் பிரசவவலி அல்லது சிசேரியன் ஆபரேஷன் செய்து அதனால் சில மாதம் தையலில் வலி இதெல்லாம் மிகப்பெரிய வலிகள்.

பிரசவத்துக்கு பின்னர், குழந்தைக்கு பாலூட்டல். இதில் குழந்தை எந்நேரம் அழும், எந்நேரம் தூங்கும், எந்நேரம் பால்குடிக்கும் என்றெல்லாம் கணக்கில்லை. அனுபவத்தில் அறிந்து அதற்கேற்றவாறு தன் அன்றாட தூக்கம், உணவு மற்ற அனைத்து தேவைகளையும் குழந்தை இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது குறைந்தது ஒரு வருடமாவது தாய்மார்கள் பாலூட்டுகின்றனர். நல்ல ஆரோக்கியமும் திடமான உடலும் சிறுவயதில் தாய்ப்பால் அருந்தி போஷாக்கான ஊட்ட உணவுடன் வளர்ந்த தாய்மார்கள் என்றால்... இரண்டு வருடம் வரைக்கூட பாலூட்ட முடியும்.

தாய்ப்பாலுக்கு ஈடாக ஏதும் இல்லை இவ்வுலகில்..! இதற்கு பெரிய அறிவியல் மருத்துவ சுட்டி எல்லாம் வேண்டாம். உங்களுக்கு தெரிந்த எந்ந்ந்த... குழந்தை பால் பவுடர் கம்பெனி டப்பாக்களையும் வாங்கி பாருங்கள். 'இது தாய்ப்பாலை காட்டிலும் உயர்ந்தது' என்றோ, 'அதற்கு நிகரானது' என்றோ விளம்பரம் போட்டிருக்க மாட்டார்கள். மாறாக, 'தாய்ப்பால்தான் பெஸ்ட்; அதற்கு ஈடு இணையில்லை; இந்த பவுடர்பால் கடைசி சாய்ஸ்' என்றுதான் "எச்சரிக்கை" அல்லது "Important Notice" என்று போட்டிருப்பார்கள்..! இது ஒன்றே போதும், ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாத அவசியம் என்பதற்கு..!

வாழ்க்கைக்கு உரிய நோய் எதிர்ப்பு சக்தி, பலம், ஆரோக்கியம் அனைத்திற்கும் அஸ்திவாரம் தாய்ப்பால். சொல்லப்போனால்,  இது குழைந்தையின் பிறப்புரிமை என்பேன். கணவனால் விவாகரத்து செய்யப்பட்டாலும், அல்லது மனைவியே விவாகரத்து கேட்டுப்பெற்று கணவனை பிரிந்து சென்று விட்டாலும் கூட 'முதல் இரண்டு வருடம் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியாக வேண்டும்' என்றுதான் இறைவன், விதியாக்கி இருக்கிறான். அதேநேரம் எவரையும் அவரின் சக்திக்குமேல் சோதிப்பதில்லையாம் இறைவன்.

எந்த நீதிமன்றமும் இதுபோன்ற விவாகரத்து வழக்கில், இந்நிலையில் கணவன் பக்கமோ மனைவி பக்கமோதான் வாதாடும். ஆனால், அனைவரையும் படைத்த இறைவன் குழந்தைக்காக அதன் உரிமைக்காக தீர்ப்பளித்து (குர்ஆன்-2:233) நல்வழியை கூறுவதை இஸ்லாமிய மார்க்கத்தில்தான் காணலாம். இன்னும்... ஒரு குழந்தை உண்டாகி இருக்கும்போது கணவன் இறந்தாலோ... அல்லது விவாகரத்து ஆனாலோ... அந்த குழந்தை பிறக்கும் வரை வேறொரு திருமணம் செய்ய அந்த தாய்க்கு உரிமையும் இல்லை எனில் பார்த்துக்கொள்ளுங்கள். இது இஸ்லாத்தில் சிசுஉரிமை..!

ஆக... இப்படியெல்லாம் மிகுந்த சிரமப்படும் தன் மகப்பேறுகால தாய்மை அடைந்த மனைவியிடம், ஒரு சராசரி கணவன் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்பதை இப்பதிவில் ஓரளவு பார்த்தோம். சரி. அதே.... அந்த மனைவி வேலைக்கு சென்றுவரும் நிலையில், அவர் மகப்பேறு அடைந்து விட்டால்... ஊதியம் தரும் முதலாளி... அல்லது அந்த தனியார்/அரசு நிறுவனம் எப்படி இவரிடம் நடந்து கொள்ள வேண்டும்; ஆனால் எப்படி நடந்து கொள்கிறது... கணவன் தன் மனைவியிடம் காட்டும் அதே உதவியை-அனுசரணையை முதலாளியிடமோ அல்லது நிர்வாகத்திடமோ மகப்பேறு காலத்தில் ஒரு பெண் தொழிலாளி பெறுகிறாரா... பேறுகாலத்திற்கு பின்னர் அந்த பிறந்த குழந்தையின் உரிமை பாதுகாக்கப்படுகிறதா... என்பதை எல்லாம் இங்கே நாம் அவசியம் சிந்தித்து அலசியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.


இறைநாடினால்... அடுத்த பதிவு : (final part)
"மனைவி எனும்...தாய் எனும்... மகப்பேறுகாலத்தில் ஏமாற்றப்படும் ஊழியர்கள்..!" (பேறுகால பெண்களை ஏமாற்றும் அமெரிக்க-ஆஸி.அரசுகள்)

12 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...