அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, April 6, 2011

19 தமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக்..! இந்திய பட்ஜெட்டுக்கு..?

ஓர் ஊரில் மேலத்தெருக்கும் கீழத்தெருக்கும் நடுத்தெருவில் அடிதடி சண்டை நடக்கும்போது, வயதிலும் அறிவிலும் முதிர்ந்த ஊர்ப்பெரியவர்கள், 'நாமெல்லாம் ஒரூர்காரங்கப்பா... அடிச்சிக்காதீங்கப்பா...' என்று சமாதானப்படுத்துவார்கள். 

இதேபோலத்தான்... இரு ஊர் அடித்துக்கொண்டால்... 'நாமெல்லாம் ஒரே ஜில்லா காரங்கப்பா...' என்று கலெக்டர் வருவார்..! இரு மாவட்டம் அடித்துக்கொண்டால், 'தமிழேண்டா' என்று  முதல்வர் வருவார்..! இரு மாநிலம் அடித்துக்கொண்டால், 'சாரே ஜஹான்செ அச்சா... ஹிந்துஸ்தான் ஹமாரா...' என்று பிரதமர் வருவார்..! 

இதேபோல... இரு நாடுகள் அடித்துக்கொண்டால்...? 

'Don't fight within us; as, we are all citizens of this world' என்று எவரும் சமாதானம் பேச முன் வருவதில்லையே..! அது ஏன்..?


ஏனெனில் "தேசப்பற்று" இருக்கும் அளவுக்கு நமக்கு "உலகப்பற்று" என்று ஒன்று இருப்பதில்லை..! 

இதனால்தான் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் அணுகுண்டுகள் வீசுகின்றன. அதை காணும் பாதிக்கப்படாத இடத்தில் உள்ள பிறநாடுகள் அமைதி காக்கின்றன. ஓர் உடம்பின் உறுப்புக்களான, 'தன் கையால் தன் கண்ணை ஓங்கி குத்திக்கொள்வதை' போலத்தான் இது..! அவை ஒரே உடம்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, 'கை-பற்றும்', 'கண்-பற்றும்' போடும் சண்டையை 'உடம்பு-பற்று' என்ற ஒன்றே இல்லாமல் முழு உடம்பும் வேடிக்கை பார்க்கின்றது..! அனைத்து உறுப்புக்களையும் கட்டுப்படுத்தும் மூளை என்ற ஒன்று சிந்திக்காமல் செயலிழந்து பைத்தியமாய் கிடந்தால் மட்டுமே 'தன் கையால் தன் கண்ணை ஓங்கி குத்திக்கொள்ளும் மடத்தனம்' சாத்தியம், அல்லவா..? ஆனால், இங்கே அப்படித்தான் ஐ.நா. சபை என்ற அனைத்து நாட்டுமக்களுக்குமான ஒரு 'கோமா அமைப்பு' உள்ளது. அதனால், இதை சாத்தியப்படுத்த இயலாது..! வேறு யாரால் இயலும்..?

அதேநேரம், அனைத்து உறுப்புக்களுக்கும்(நாடுகளுக்கும்) தனித்தனியாக சிந்திக்கும் மூளையும்(அரசும்) உண்டு எனில், இவர்கள் அனைவரும் 'வேற்றுமையில் ஒற்றுமை' காண முடியாதா? 

ஏன் முடியாது..? முடியும்..!
.
நம் நாட்டில்..... பல்வேறு மாநில அரசுகள், மொழிகள், இனங்கள், நிறங்கள், சாதிகள், மதங்கள், கடவுள்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தொழில்கள், செல்வத்தரங்கள் இப்படி... நூறு பல்வேறு வேறுபாடுகள் இருந்தும்... 'இந்தியர்' என்று நாம் 'வேற்றுமையில் ஒற்றுமை காண்பது' போல...  நூறோடு நூற்றி ஒன்றாய்... பல்வேறு நாடுகள் சேர்ந்து நாமனைவரும் "உலகக்குடிமக்கள்" (citizen of world) என்று ஒரே அரசின் கீழ் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ்ந்தால் என்ன..? (எனது பலவருட கனவு இது..!)  இப்படி நடக்குமா..? இது சாத்தியம் ஆகுமா..?

இந்தியாவில் அந்த "உலகப்பற்று" எண்ணத்தை ஏற்படுத்த ஒரே ஒரு அமைப்பால்தான் இயலும்..! அது... BCCI..! (இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட்டை ஆளும் தனியார் வாரியம் -Board of Control for Cricket in India- என்றுதான் பெயர்..! ஆனால், பெயருக்கு மாறாக, உலகில் உள்ள அத்தனை கிரிக்கெட்டையும் தன் பண பலத்தால் ஆளுகிறது..! தான் நினைத்ததை சாதிக்கிறது..!) 

'அது எப்படி உலகப்பற்றை மக்களிடம் உயிர்ப்பிக்கும்' என்று சந்தேகம் இருக்கிறதா..? அதற்கு அவசியமே இல்லை...! அது ஏற்கனவே நம் நாட்டு மக்களுக்கு "தேசப்பற்று" என்ற ஒன்றை மனதில் நன்கு ஆழமாய் உருவாக்கி, அடுத்து "உலகப்பற்று" என்ற ஒன்றையும் உருவாக்கும் ஓர் உயரிய குறிக்கோளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

அது எப்படி என்று பார்க்கும் முன்... முதலில்...

1911-ல், இந்திய தேசிய காங்கிரசும், முஸ்லிம் லீக்கும்  இந்திய சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒருபக்கம் போராடிக்கொண்டு இருக்கையில், இன்னொரு பக்கம் பாட்டியாலா மஹாராஜா தலைமையில் ஓர் அணி இங்கிலாந்து சென்று அவர்களை எதிர்த்து கிரிக்கெட் விளையாடி தங்கள் "ஒரிஜினல் தேசபக்தியை"  உலகுக்கு உணர்த்தினர்..!

பின்னர், 1926-லிருந்து, இருதரப்பினருக்கும் இடையே நடந்த சில வட்டமேஜை மாநாடுகளுக்குப்பிறகு, 1928, டிசம்பர்  மாதம்  R.E. Grant Govan முதல் President ஆகவும் Anthony S. De Mello முதல் secretary ஆகவும் அறிவித்துக்கொண்டு, இந்திய மக்களிடம் ஒரிஜினல் தேசபக்தியை வளர்க்க வேண்டி... Board of Control for Cricket in India (BCCI) என்ற மிக முக்கியமான 'தனியார் நல வாரியம்' ஒன்று ஆங்கிலேயர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
.

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட,எத்தனையோ சமஸ்தானங்களை இந்தியாவிடம் இணைத்த தலைவர்களால் இந்த (BCCI) சமஸ்தானத்தை மட்டும் இந்தியாவுடன் இணைக்கவே முடியவில்லை..! அது 1946 முதல் 1951  வரை BCCI President - Anthony S. De Mello என்ற ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ்தான் செயல்பட்டு வந்தது. பின்னர் அவர் அதை தனது இந்திய பினாமிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். அன்று முதல் இன்றுவரை இவர்களிடம்தான் அந்த சமஸ்தானம் இருந்து வருகிறது. இந்திய அரசிடம் மட்டும் இணையவே இல்லை. இந்திய அரசும் ஏனோ, அதை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் மட்டும் இன்றுவரை ஈடுபடவே இல்லை.  

செல்வம் கொழிக்கும் அந்த BCCI சமஸ்தானம் இன்றும் இங்கிலாந்தின் ICC வசம் தான் அடிமைப்பட்டு கிடக்கிறது. அவ்வப்போது இந்தியாவின் மில்லியனர்கள் BCCI சமஸ்தானத்தை ஆளுவார்கள்... தாங்கள் பெரிய பில்லியனர்கள் ஆக வேண்டியதற்காக..! இந்திய பினாமிகளே இப்படி என்றால்... அதேநேரம் அதன் ஒரிஜினல் உரிமையாளர் லண்டனில் 'ட்ரில்லியனர்' ஆகிக்கொண்டு இருப்பார்..! இப்போது அங்கேயும் ICC தலைவராய் ஓர் இந்தியர்..! (ICC -ன் உலகப்பற்று..!)



முன்பு  WILLS இப்போது SAHARA நிதி மூலதனத்தால் நடத்தப்படும் BCCI என்ற ஒரு தனியார் வாரியத்திற்கும் இந்திய அரசுக்கும் எந்தவித அரசாங்க, பொருளாதார, அதிகார, ஆலோசனை  தொடர்பும் இல்லாதபோதும், 

எந்த கிரிக்கெட் விளையாட்டு மைதான அரங்கமும் அரசு தன் உடைமையாக்கி கொள்ளாமல், ஆளுபவர்களை சரிகட்டிக்கொண்டு, கோடி கோடியாய் நம் இந்திய மக்களிடமிருந்து அந்த தனியார் வாரியம் தமக்கு மட்டும்  லாபம் பார்த்த போதும்,

உச்சநீதி மன்ற உத்தரவால் வேறு வழியே இன்றி இந்திய மக்களின்  சொத்தான தூர்தர்ஷனுக்கு இந்தியா ஆடும் ஆட்டங்களையாவது மட்டும் - அதுவும் இலவசமாக தந்து அரசு லாபம் பார்த்து விடாமல்- நம் வரிப்பணத்தை வாரிக்கொண்டு... தான் லாபம் பார்த்துவிட்டு பின்  DD-க்கு உரிமம் தந்த போதும்,

நம்  நூறு கோடி இந்திய மக்களின் கிரிக்கெட் ரசனையை தொலைக்காட்சி உரிமமாக அந்நிய டிவிக்களுக்கு விற்று அதன் மூலமும் கோடி கோடியாய் லாபம் பார்த்த போதும்,

நம் இந்திய நாட்டு அரசுக்கு -- அதாவது இந்திய மக்களுக்கு -- இத்தனை லாபத்திலும் ஒரு பைசா பங்கும் தராதபோதும்,

மென்மேலும் சுங்க வரிச்சலுகையும், கேளிக்கை வரி இல்லாமையும், வாரியம் தான் பெற்ற லாபத்தை அரசுக்கு கணக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லாமையும், தானாக முன்வந்து வாரியம் கொடுக்கும் (பொய்?)கணக்குக்கு மட்டும் வருமான வரி கட்டும் போதும்,

BCCI என்ற ஒரு தனியார் வாரியத்தின் " Team India " என்ற அணி... (கவனிக்கவும்: அதிகாரபூர்வமான 'Indian Team' அல்ல )... 'INDIA' என்ற நம் நாட்டு பெயரையும், நம் மூவர்ண தேசிய கொடியையும் உரிமையின்றி  அநீதியாய் உபயோகித்தபோதும், 

இதன்மூலம் 'தேசப்பற்று என்ற இந்திய வெறியூட்டி, மக்களிடம் பணம் சம்பாரிக்க வாரியம் போடும் ஆட்டம்தான் கிரிக்கெட்' எ...ன்...ற...     போ...து...ம்.............................,

'நாம் இந்தியர்' என்று நம்மை 'வேற்றுமையில் ஒற்றுமை' காண வைக்கும் இந்தியாவின் தற்போதைய ஒரே சக்தி BCCI மட்டுமே என்பதாலும்...,

அதன் அணி, மற்ற நாட்டு அணிகளை வென்று உலகக்கோப்பையை வெற்றி பெற்று இந்தியாவிற்கு உலக கிரிக்கெட் அரங்கில் நல்ல பெயர் பெற்றுத்தந்ததாலும்,

இந்திய அரசுக்கு என்று தனியாக (Indian Boxing Federation, Indian Olympic committee... etc.,போன்று...) " Indian Cricket Federation" அல்லது " Indian Cricket Board"  என்று ஒரு அரசுத்துறை, Sports Authority of India of SPORTS MINISTRY-யின் கீழ் இல்லாததாலும்... 

வேறு வழியே இன்றி... 

இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை 2011-ல் BCCI என்ற ஒரு தனியார் வாரியத்தின் " Team India " என்ற அணி பெற்ற வெற்றி... "அது நம் இந்தியாவின்  வெற்றிதான்" என்று போராடி உலகக்கோப்பையை வென்ற நம் நாட்டு வீரர்களை கைத்தட்டி பாராட்டுவோம்..! சரிதானே..? அவர்களின், 'கிரிக்கெட்' என்ற அந்த நுட்பமான விளையாட்டை ஆடும் அந்த திறமை உலகத்தரத்தில் இருப்பதை உலகக்கோப்பை வென்று நிரூபித்ததற்காக கஷ்டப்பட்டு திறமையுடன் விளையாடி வென்ற நம் நாட்டு வீரர்களை கைத்தட்டி பாராட்டுவோம்..! சரிதானே..? 



நோபல் பரிசு பெற்றவர்களையும் விண்வெளி வீரர்களையும் அவர்கள் இந்தியராக இல்லாவிட்டாலும் அவர்களின் மூதாதையர் இந்தியர் என்பதற்காக  பாராட்டியோர் தானே நாம்..? இந்தியரை பாராட்ட என்ன தயக்கம்..?

Congratulations to BCCI's 'Team India'... for winning the ICC Cricket World Cup - 2011 and making Indian Cricket Fans happy..!

சரி...இனி...
.
BCCI எப்படி "நாட்டுப்பற்றை" மக்களிடம் உண்டாக்குகிறது என்று பார்ப்போம்.
.
யார் செய்த குற்றம் என்றே தெரியாத கோத்ரா ரயில் எரிப்பிற்காக, ஆயிரக்கணக்கான தன் சக அப்பாவி முஸ்லிம் இந்தியர்களை தேசபக்தியே இன்றி கொன்று குவித்த நரேந்திர மோடிக்களிடமிருந்து உயிர் தப்பிப்பிழைத்த குஜராத்திகளான, ஜஹீர் கான், முனாஃப் படேல், யூசுஃப் பதான் ஆகியோர் விளையாடிய காலிறுதியில் 'இந்தியா' வெல்லும்போது கைதட்டி ஆர்வமாய் 'நாட்டுப்பற்றுடன்' மோடியை பார்க்க வைத்ததும், அத்வானியை ஒரிஜினல் நாட்டுப்பற்றுடன் இப்படி எழுத தூண்டியதும்  இந்த BCCI தானே..?

தன் மாமியாரும், பாட்டியும் ஆன இந்திராகாந்தி ஒரு சீக்கியரால் கொல்லப்பட்டதால், ஆயிரக்கணக்கான தன் சக அப்பாவி சீக்கிய இந்தியர்களை தேசபக்தியே இன்றி கொன்று குவித்த தன் காங்கிரஸ் கட்சிக்காரகளிடமிருந்து உயிர் தப்பிப்பிழைத்த ஹர்பஜன் சிங் முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுத்ததால் அறையிறுதியில் எளிதாக 'இந்தியா' வெல்லும்போது கைதட்டி ஆர்வமாய் 'நாட்டுப்பற்றுடன்' மருமகளையும் பேரனையும் குதூகலமாய் குதிக்க வைத்தது இந்த BCCI தானே..?
.
'இந்தியா  நம் எதிரி நாடு; நான் அங்கே போக மாட்டேன்' என்றெல்லாம் வெட்டி உதார் விடாமல், பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பை ஏற்று இந்தியா வந்து, எட்டு மணிநேரம் பிரதமர் கிலானியை 'பாகிஸ்தான் நாட்டுப்பற்றுடன்', மொஹாலியில் உட்கார்ந்து கிடக்க வைத்தது இந்த BCCI தானே..?
  .
(லட்சக்கணக்கான  தன் சக நாட்டவரை கொன்று குவித்த) "இலங்கை ராணுவவீரர்களுக்கே இலங்கை வெல்லப்போகும் உலககோப்பை அர்ப்பணம்" என்று ராஜபக்சே பேட்டி குடுத்தாலும், தமிழராய் சகித்துக்கொண்டு அந்த இறுதிப்போட்டியில்...'இறுதியாய்'... "இலங்கை-நாட்டுப்பற்றுடன்" முத்தையா முரளிதரனை விளையாட  வைத்தது   இந்த BCCI தானே..? மற்ற சிங்கள வீரர்கள் இந்த தமிழருக்காக கைதட்டும்போதும், பாராட்டும் போதும் அமைதியாய் ராஜபக்சேயை  "சிலோன்-நாட்டுப்பற்றுடன்" ரசிக்கவைத்ததும் இந்த BCCI தானே..?
.
போஃபர்ஸ் பீரங்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை அபகரித்தமை, குவார்ட்டர்  விஸ்கிக்கு எல்லாம் நம் நாட்டு ராணுவ ரகசியங்களை அந்நியருக்கு விற்றமை, சக இந்திய மக்களையே குண்டு வைத்து கொல்ல, ஆர்.எஸ்.எஸ்-ற்கு இந்திய ராணுவத்திலிருந்தே ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து சப்ளை செய்த ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மீண்டும் நாட்டுப்பற்றை விதைத்து அவர்களும் இந்தியஅணி வெற்றி பெறும் போது தேசபக்தியுடன் விசிலடித்து கைதட்ட வைத்தது இந்த BCCI தானே..?

நாட்டில்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மத்திய விவசாய அமைச்சராக இருந்தும்... அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்-அதற்கு எல்லாம் சரியான நடவடிக்கை எடுக்காமல், அதே நேரத்தில் நாட்டுப்பற்றுடன் BCCI பிரசிடென்ட் ஆக இருந்து இப்போது உலகப்பற்றுடன் ICC பிரசிடென்ட் ஆகவும் இருக்கும், மத்திய விவசாயம் மற்றும் உணவு அமைச்சரை, அதே அரங்கில் ஜனாதிபதி இருந்தும், "நான்தான் உலகக்கோப்பையை குடுப்பேன்" என்று நாட்டுப்பற்றுடன் குதூகலமாக தொப்பை குலுங்க ஓடிவர வைத்தது இந்த BCCI தானே..?
.
"Get my kidney... Give me ticket "--என்று தன் கிட்னியை ஆகக்குறைந்த விலையில்(Rs.25,000)விற்றாவது அரை இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்கும் சஞ்சய் குமார் என்ற ஓர் ஏழை ரசிகனை உறுப்பை விற்று டிக்கெட் கேட்கும் அளவுக்கு அவனுக்கு 'இந்திய நாட்டுப்பற்றை' ஊட்டியது இந்த BCCI தானே..?
.
இந்திய  கலாச்சார பண்பாட்டில் வளர்ந்த ஒரு இளம்பெண், "இந்தியா வென்றால்... ரசிகர்கள் மத்தியில், தான் நிர்வாணமாக காட்சி அளிக்கவும் தயார்" என்று பேட்டி அளிக்கும் தேசபக்தியை அந்த பூனம் பாண்டே என்ற மாடல்/நடிகைக்கு வரவழைத்தது இந்த BCCI தானே..?

தாவூத்  இப்றாஹிமின் சம்பந்தியான, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டடுக்கு ரசிகனாய் இருந்து அவரை தன் மும்பை வீட்டிற்கு அழைத்து விருந்துபசாரம் செய்து தேசபக்தி இல்லாமல் கிடந்த பால் தாக்கரே, "பாகிஸ்தான் இங்கே வந்தால் கிரிக்கெட் விளையாடும் பிட்சை நொண்டி குதறி வைப்பேன்" என்று நாட்டுப்பற்றுடன் அறிக்கை விடும் அளவுக்கு அவருக்கு தேசப்பற்றை ஊட்டியது இந்த BCCI தானே..? 

இதே போன்று  அலுவலகத்துக்கு மருத்துவ விடுப்பு, பள்ளி/கல்லூரிக்கு மட்டம், வேலைக்கு போகாவிட்டால் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லை என்றாலும்... 8 மணிநேரம் மேட்ச் பார்த்து பட்டினி கிடப்பது என்று தேசபக்தியே இல்லாத சகல பாமர மக்களுக்குள்ளும் நாட்டுப்பற்றை ஊட்டிய இப்பேர்பட்ட BCCI 'எப்படி "உலகப்பற்றை" அதே மக்களிடம் உண்டாக்குகிறது' என்றும் இனி பார்ப்போம்.

ஒரே அணியில் பல நாட்டு வீரர்களையும் உள்ளடக்கி,
'வெவ்வேறு நாட்டவர்களான நாமெல்லாம் ஒரே அணிதான்...'
நாமெல்லாம் இருப்பது ஒரே உலகம்தான்... 
நாமெல்லாம் 'citizen of world'-தான், 
'யாதும் நாடே யாவரும் கேளிர்'-தான்...

---என்பதை நமக்கு இதே தனியார் துறையான BCCI தன்னுடைய IPL போட்டிகள் மூலம் அடுத்த வாரம் முதல் நியாபகப்படுத்த போகிறது..! 
.
எனவே... வாருங்கள்...! IPL Twenty/20 போட்டிகளை ஆதரிப்போம்...! Fifty/50 உலகக்கோப்பைக்கு 'தேசப்பற்றுடன்' கொடுத்த அதே ஆதரவை IPL-ற்கும் கொடுத்து 'உலகப்பற்று' கொள்வோம்..! 'We are all citizens of this world' என்று குரல் கொடுப்போம்..!

இந்த போட்டிகள், நாடுகளுக்கு இடையேயானது இல்லை. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட்அணிகளையும் சேர்ந்த வீரர்களையும், ஆடு, மாடுகளை ஏலம் எடுப்பது போல் எடுத்து, போனால் போகிறது என, ஒரு சில உள்ளூர் வீரர்களையும் சேர்த்து, இந்த போட்டிகள் நடத்தப்படுவதால்... " IPL போட்டிகளை ஆதரிப்பது தேசப்பற்று ஆகாது " ...என்றோ,

இந்திய மக்களிடையே இருக்கும் வெறித்தனமான கிரிக்கெட் மோகத்தை பணமாக்கி, IPL மூலம் 'கல்லா' கட்டி வருகிறது BCCI ...என்றோ,

போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணம், விளம்பரம், டிவி ஒளிபரப்பு உரிமை ஆகியவற்றின் மூலமாக கோடிக்கணக்கில் ஐ.பி.எல் அமைப்புக்கு பணம் குவிந்தாலும், இதனால் நாட்டுக்கு எந்த பயனுமில்லை. இதனால் தேசியநலன் ஏதுமில்லை என்றோ...

கோடிக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாமல் இருக்கும் நம் நாட்டில், ஒரு விளையாட்டு அமைப்பும், அதைச் சார்ந்தவர்களும், Cheer leaders எனும் இளம் பெண்களின் ஆபாச நாட்டியம் மூலம் பணத்தைக் குவித்து குளிர் காய்ந்து வருவது கவலையான விஷயம் என்றோ...

லலித்மோடி ஊழல் செய்து சுருட்டிய கோடிகள், பினாமி பெயரில் சசிதரூர் சுருட்டிய கோடிகள், பல அரசியல்வாதிகள்/பணக்காரர்கள் சுருட்டிய கோடிகள் என பட்டியல் போட்டு, இந்த ஊழல் ஆட்டங்களை புறக்கணியுங்கள் என்றோ...

நாட்டு நடப்பையும், மக்கள் மனநிலையையும் புரிந்து கொள்ளாமல், தேசிய நலன் கருதி 'கிரிக்கெட் வெறுப்பு' பதிவு போட்டால்... வழக்கம்போல நெகடிவ் ஓட்டு குத்த மறந்துவிடாதீர்கள் கிரிக்கெட் ரசிகர்களே..! ஏனெனில், " IPL போட்டிகளை ஆதரிப்பது உலகப்பற்று ஆகும் "--என்பதை அவர்களுக்கு பின்னூட்டமிட்டு உணர்த்துங்கள்.

டிஸ்கி :

பொய், பித்தலாட்டம், லஞ்சம், ஊழல், பேராசை, நாட்டுப்பற்று இல்லாமை, பணத்துக்காக கொலை, கொள்ளை, Cheer leaders ஆபாச நாட்டியம், குடி, கூத்து, கும்மாளம், என எல்லாம் நீக்கமற நிறைந்த காரணத்தினால்தான் கிரிக்கெட்டையே வெறுக்கிறார்கள் பலர்...! இது சரியா..?

இங்கே கிரிக்கெட்டையும், அதனை ஆக்கிரமித்துள்ள அரசியல்+முதலாளித்துவத்துவம் மூலம் மக்களின் பணத்தை சுரண்டி வயிறு வளர்த்து, வாதம் கண்டு வாய் கோனும் அரசியல்வாதிகளை... மக்களுக்கு நன்கு பிரிக்கத்தெரிந்து இருக்கிறது..!

யாருக்குமே கிரிக்கெட் அரசியல் சாக்கடை பிடிக்கவில்லைதான். ஆனால், பாமர ரசிகர்ளுக்கு கிரிக்கெட் எனும் விளையாட்டு பிடித்திருக்கிறது. அது சாக்கடையில் கிடந்தாலும்...!

'அதை அந்த 'அரசியல் ஊழல் சாக்கடை'யிலிருந்து வெளியே எடுத்து கழுவி சுத்தமாக்கி நம் கையில் யாரேனும் கொடுக்க மாட்டார்களா' என்றுதான் ரசிகர்கள் ஏங்குகிறார்கள்... 'பந்தை சாக்கடையில் விழும்படி தவற விட்டுவிட்ட அழும் குழந்தைகள் போல...!'

"சாக்கடையில் விழுந்துட்டுதா...விட்டுத்தொலை... இனி பந்து ஒரு கேடா உனக்கு... வேண்டாம் அதை மற..!" என்றால் குழந்தை அழ ஆரம்பிக்கும்..!  நெகடிவ் ஓட்டு குத்தும்..! பின்னூட்டத்தில் வசை பாடும்..! அப்புறம், நாம் கவனிக்காத சமயம் சாக்கடையில் இறங்கி பந்தை எடுக்க ஆரம்பிக்கும்..!

இதற்கு ஒரே வழி... சாக்கடையில் பந்து விழுவதை தடுப்பது மட்டுமே..! இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்..!

தனியாரிடம் உள்ள கிரிக்கெட்டை இனி அரசுப்பூர்வமாக்க வேண்டும். அதன் லாபம் அரசு கஜானாவுக்கு (அதாவது மக்களுக்கு) மட்டுமே போக வேண்டும்..!

(பூனைக்கு யாராவது மணிகட்டியே ஆகவேண்டும். பூனையை கொல்வது அறிவீனம். அது இயலாத காரியம்)

அதாவது... கிரிக்கெட் வாரியத்தை இனி மத்திய அரசே ஏற்று நடத்துவதன் மூலம், அரசுக்கு ஏராளமான நிதி கிடைக்கும். இந்த நிதியை நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இரு வருடங்களுக்கு முன்னர் Indian Hockey Federation-ஐ ஊழல் காரணமாய் அரசு கலைத்து விட்டது. கடுப்பான அதன் அதிகாரிகள் சென்ற வருடம் தனியாக Hockey India என்று (BCCI போல) ஒரு தனியார் வாரியம் துவக்கி விட்டனர். அரசு அதை நிராகரித்து விட்டது. 'இனி ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு அல்ல' என்று ஆகிவிட்ட நிலையில்... அமோக மக்கள் ஆதரவுள்ள கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரித்து அதை அரசுடைமை ஆக்கிகொள்ள நல்ல வாய்ப்பு! விடுவாரா சரத்பவார்? யாராவது பொதுநல வழக்கு போடலாம். 

தமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக் (இதுவே தவறில்லை என்றாகிவிட்டபோது...)
இனி... இந்திய பட்ஜெட்டுக்கு SPONSOR கிரிக்கெட்..! ---இதிலென்ன தவறு..?

இனியாவது, கிரிக்கெட் வருமானம் மூலம், நாட்டு நலனில் அக்கறை கொள்ளுமா மத்திய அரசு..?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

19 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...