டிஸ்கி :
என் இந்திய குடியரசு சார்பாக தமிழக 'குடி'அரசுக்கு ஓர் ஆதங்க மடல்.
டிஸ்கி ஆஃப் டிஸ்கி :
( இந்த மடல் உரைநடை வடிவில் எழுதப்படவில்லை...! )
-----------------------------------------------------------------------------------------------------------------
விடுனர் பெறுனர்
அன்பு குடியரசே..! ( இல்லை.. இல்லை..) தமிழ்க்'குடி'அரசே..!
முன்பு பூரண மதுவிலக்கை ரத்துசெய்து
பின்பு மெல்ல ஏன் நீ 'மலிவு விலை மது' தந்தாய்? - அன்று...
'கள்ள மதுவை ஒழிக்க' என காரணித்தாய் - உன்
உள்ள நாட்டம் - கொள்ளை இலாபம்
அள்ள மட்டும் - என்பதனை ஏன் மறைத்தாய்? - இன்று...
திகட்டத்திகட்ட டாஸ்மாக் குவிக்கும் நிதிகண்டு - அதை
பகட்டு விளக்கால் அலங்கரித்து பட்டித்தொட்டி எங்கும்
சகட்டு மேனிக்கு பொது இடங்களிலும் ஏன் திறந்தாய்?
கள்ளுண்ணாமை எனும் குறளதிகாரம் இயற்றிய
வள்ளுவரை வாழ்த்தி வானுயர சிலைவடித்த நீ
கிள்ளுகீரை என அவர்தம் அறிவுரையை ஏன் புறந்தள்ளினாய்?
'வேஸ்டாகிப்போகுமே இவர்கற்ற கல்வி' என்றெண்ணாமல்,
பாஸ்பண்ணிய இளம் மாணாக்கரை - உன்
டாஸ்மாக்கில் 'அரசு ஊழியமென' சொல்லி ஏன் நியமித்தாய்?
'ஊத்திக்கொடுக்க' தொகுப்பு ஊதியம் அளித்து
ஊரான் குடியை கெடுக்கும் ஈனச்செயலுக்கு - உன்
ஊக்கத்தொகை வேறு ஒரு கேடா?
கக்கத்திலே சரக்கை பதுக்கிச்செல்ல அவசியமின்றி -கடை
பக்கத்திலே பார் திறந்துவிட்டு, இனி சொல்வாயோ
வெக்கமின்றி, 'பாரினிலே சிறந்தது நம் அரசு-பார்' என்று?
குடித்து வந்த ஆசிரியர் தம் சுத்துமாறி-தான்
படித்து வந்த அத்தனையும் குழம்பி - வகுப்பில்
தடித்த குரலில், 'சந்திரனை சுத்துது சூரியன்' என்று நடத்த...
மப்பில் வந்த மாணவர் கூட்டத்திற்கோ
தப்பாக ஏதும் தெரிவதில்லையே - மது
கப்படிக்கும் இந்த கல்விக்கும் மூலகாரணம் நீதானே? - மதுவின்...
'கிக்'கில் செய்த ஆப்பரேஷன் முடிந்தவுடன்
பக்கத்தில் கிடந்த கத்தரிக்கோலை காணவில்லை என
தூக்கம் கெட்ட டாக்டர் கூட்டம் - அதை...
எக்ஸ்ரே எடுத்து தேட - காணாமல்போன
அக்கத்தரி இதயத்துக்கு கீழே 'பளிச்'- இதுகண்டு
விக்கித்துப்போன அந்நோயாளிக்கு மீண்டும் மாரடைப்பாம்!
மதிகெட்ட மாக்கள்கூட்டம் - உன் டாஸ்மாக்கில்
சுதி ஏற்றியபின் மனிதவிலங்காய் மாற
கதிகலங்குகின்றனர் நல்லோரெலாம் சாலைதனிலே!
குறைய குடித்தோர் ஈவ்-டீசிங்கில் ஈடுபட
நிறைய குடித்தோர் வாந்தி எடுத்து அசிங்கம் செய்ய
பறையொலிக்க இறுதி ஊர்வலத்திலும் குடித்துவிட்டு ஆட்டம்!
அறிவுகெட்டு வாகனத்தில் வந்தோர் - குடித்தபின்
தறிகெட்டு தம் வாகனத்தை ஓட்ட - விபத்து..!
குறிப்பிலடங்கா உயிர்ச்சேதம், பொருட்ச்சேதம்!
நெறிப்படுத்த இயலா டிராஃபிக் - விபத்தில் வீசி
எறியப்பட்ட சடலமாய் சிதறிக்கிடக்கும் மனிதவளம் - தினம்
பறிகொடுக்கப்படும் மனித உயிர்க்கும் மூலகாரணம் நீதானே?
சட்டத்திற்கு புறம்பாய் குடித்துவிட்டு
ஓட்டும் வாகன ஓட்டிகளை
கட்டம் கட்டி விரட்டிப்பிடித்து...
சட்டப்படி தண்டிக்கின்றாய் - ஆனால்
பட்டப்பகலில் அப்பட்டமாய் நீ நடத்தும்
கட்டுப்பாடில்லா மது விற்பனைதானே மேற்பட்ட...
ஒட்டுமொத்த சீரழிவுக்கும் காரணம்? -ஆனால்
ஓட்டுப்போடும் மக்களில் கணிசமாய் குடிகாரர் இருக்க
கெட்டுப்போன உன்னை யார் தண்டிப்பது?
மதுவிலக்கு - இது முன்னாள் தேர்தல் வாக்குறுதி!
அதுமறந்து திளைக்கும் 'பின்னேற்றக்கழகங்களுக்கு'
எது சிறந்த ஞாபக மீட்பு மருந்து? - கேவலமான...
ஈட்டிக்காரன் தொழிலை செய்ய குஜராத்தி தேவைப்பட்டான்-அன்று!
பட்டித்தொட்டி எங்கும் அரசு வங்கி அதைச்செய்ய-இன்று
வட்டித்தொழில் ஆனதே தமிழர்க்கு அதொன்றும் கேவலமில்லை-என்று!
சகுணியாட்டம் எனும் கெட்டபெயர் சூதாட்டத்திற்கு
தகுந்த பெயரில் 'தமிழக அரசு பரிசுச்சீட்டு'-என நீ தந்ததால்
மிகுந்த கெளரவம் பெற்றது லாட்டரி சூதாட்டம்!
'போதைப்பொருள் விற்பனை சட்டப்படி குற்றம்' என்ற
சட்டம் போட்ட அரசே... டாஸ்மாக் மூலம்...
'போதைப்பொருள் விற்பனை கடை' நடத்துவதால்...
குடிப்பது பாவமாகவோ தவறாகவோ அநாகரிகமாகவோ
சட்டத்துக்கு புறம்பானதாகவோ பார்க்கும் எண்ணம்
இளைய தலைமுறையிடம் காணாமல் போய்விட்டது.
அறமற்ற செயல்களை அரசே இனி நடத்தும்போது
'காசு சம்பாரிக்க எச்செயலுமே தவறில்லை'
என்ற சமூக நச்சுக்கருத்துருவாகி...
அரசு விபச்சார நிலையம்,
அரசு கொலையுதவிக் கூடம்,
அரசு கொள்ளைச்சேவை மையம்... என்றினி பல உருவாகலாம்..!
குடிமக்களின் நலன் காக்கும் அரசே குடியரசு - எனில்
குடிமக்களின் சுகவாழ்வில் அக்கறையற்று தன்
வடிகட்டின சுயநல டாஸ்மாக் சுரண்டலுக்காக...
குடிமக்களை 'குடிக்கும் மாக்களா'க்கி என் இந்திய மனிதவளத்துக்கு
வெடிவைக்கும் மேற்படி தமிழ் 'குடி' அரசுக்கு கொடியேற்ற இனி
'குடியரசு தினம்' எனும் பெயரில் ஏதேனும் ஒன்றுண்டா..? - சுதியேற்ற இனி...
'குடி'அரசு தினமே... எல்லா நாளும் தமிழ்நாட்டில்....!
18 ...பின்னூட்டங்கள்..:
மதுவிலும் சூதிலும் பெரும் தீமை இருக்கிறது. எனவே தவிர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது இறை வசனம்.
மிக அருமையான பதிவு ஆஷிக். உங்களுக்கு ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதர். கவி முஹம்மது அஷிக்
கவிதை அருமை
//அரசு போதைப்பொருள் விற்பனை மையம்
அரசு விபச்சாரவிடுதி - இப்படி எந்தக்கேவலத்தையும்
அரசே நடத்தத்துவங்கினால் 'இனி எதுவும் தவறில்லை' என்றாகிடுமே?//
இந்த வரிகளை ரசித்தேன்
அஸ்ஸலாமு அலைக்கும்...
அனல் பறக்கும் வரிகள் .
'தமிழக அரசு பரிசுச்சீட்டு'-என நீ தந்ததால்
மிகுந்த கெளரவம் பெற்றது லாட்டரி சூதாட்டம்!
அரசு போதைப்பொருள் விற்பனை மையம்
அரசு விபச்சாரவிடுதி - இப்படி எந்தக்கேவலத்தையும்
அரசே நடத்தத்துவங்கினால் 'இனி எதுவும் தவறில்லை' என்றாகிடுமே?
அச்சச்சோ, அப்படி என்றால் தமிழகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதே!
சகோ.ஆஷிக், சரியான நேரத்தில் அருமையான பதிவிட்டு அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ எப்ப கவிஞரானீங்க???????
நாட்டுக்கு வருமானம் சேர்க்க ஏற்படுத்தியிருக்கும் மதுகடைகளை நாட்டுக்கே அவமானகேடு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
சகோ,கவிதை வரிகள் அருமை.
சகோதரர் ஆஷிக், உங்களுடைய இன்னொரு பரிமாணம் கவிதையாக விரிந்ததில் மகிழ்ச்சி. சும்மா "நச்". அரசாங்கத்திற்கு இல்லாத சமூக அக்கரையும் மக்கள் நலனையும் உங்கள் கருத்தில் பார்க்கும் போது நீங்கள் ஒரு நல்ல குடிமகன் என்பது விளங்குகிறது. தொடருங்கள்! பாராட்டி வரவேற்கிறேன்.
சிந்திக்கட்டும் அரசாங்கங்கள்
மவனே நான் எவண்டா ஜெலளிதாக்கு டாஸ்மாக் ஐடியா குட்த்தான்ன்னு தேடிட்டு இருகேன். நீ எனடாண்டா இப்போ விபச்சார விடுதி, பிரவுன் சுகர் கஞ்சா விக்கேல்லாம் ஐடியா குட்கறே. இத மட்டும் அரசாங்கம் கொண்டு வந்தான்னா அப்புறம் வீடு தேடி வந்து ஓத இருக்குடி உனக்கு.
குடிகாதவன்.
பாமக.
//பக்கத்திலே Bபார் திறந்துவிட்டு, இனி சொல்வாயோ
வெக்கமின்றி, 'பாரினிலே சிறந்தது நம் அரசு-Bபார்' என்று?//==என்றுதானே சொல்லி இருக்கிறீர்கள்? நல்ல சிந்தனை.
//அரசு போதைப்பொருள் விற்பனை மையம்
அரசு விபச்சாரவிடுதி - இப்படி எந்தக்கேவலத்தையும்
அரசே நடத்தத்துவங்கினால் 'இனி எதுவும் தவறில்லை' என்றாகிடுமே?//==மெய்தான். ஆண்களுக்கு டாஸ்மாக் பெண்களுக்கு இது. சமநீதி!
மேலும், இதில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு{?} முப்பது அல்லது நாப்பது வயதிலிருந்தே பென்ஷன் தந்து விடுவார்களோ? அடடா! அன்ன பேனா இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்டம்{!} தானே? நல்ல யோசனை என்று இதையும் சீக்கிரமா ஆரம்பித்து விடுவார்களோ என்று உள்ளூர பயமாக உள்ளது. எங்க இப்படில்லாம் எழுதறீங்க?
அன்ன பேனா இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்டம்{!} தானே?
திருத்தம்
\\அன்ன பேனா\\ ===தவறு.
ஆண் பெண் இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்டம்{!} தானே?
== என்பதே சரி.
சகோ கஸாலி,
உங்களுக்கு ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
//மதுவிலும் சூதிலும் பெரும் தீமை இருக்கிறது. எனவே தவிர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது இறை வசனம்.//---சரியான கருத்தை இட்ட உங்களுக்கு மிக்க நன்றி சகோ.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
//சகோதர். கவி முஹம்மது அஷிக்
கவிதை அருமை//--அங்கீகாரத்திற்கு(!?)ம் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
சகோ.இளம்தூயவன்,
//அனல் பறக்கும் வரிகள்//
ஏதோ நம்மால முடிஞ்சுது.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
சகோ.ஜபருல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//அச்சச்சோ, அப்படி என்றால் தமிழகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதே!//--இவ்வளவுதான் ஆண்டவனால் முடியும் என்று இறைசக்திக்கு வரையறை கூறும் ரஜினி பேசலாம் இந்த வசனத்தை...
ஆனால், நாமுமா சகோ.?
"உலகின் அனைத்து சீர்கேட்டிலும் தமிழகமே தலைகீழே புரண்டு கிடந்து மூழ்கி திளைத்தாலும் அடுத்த நொடியில் அனைத்தும் சரியாகும்... ஆண்டவன் நினைத்தால்..." இல்லையா சகோ.?
//சகோ.ஆஷிக், சரியான நேரத்தில் அருமையான பதிவிட்டு அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.//--வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆமினா & சகோ.ஆயிஷா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//எப்ப கவிஞரானீங்க//
//கவிதை வரிகள் அருமை//
--நன்றி.
உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக.
சகோ.உதயம்,
//நீங்கள் ஒரு நல்ல குடிமகன்//--சக பதிவரிடமிருந்து இதுதான் எனக்குக்கிடைத்த பெரிய விருது சகோ. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
சகோ.Issadeen Rilwan - Changes Do Club said...
//சிந்திக்கட்டும் அரசாங்கங்கள்//--இனிமேலாவது...!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
@ Anonymous said... 9
வாங்க சகோ.குடிகாதவன்.பாமக. குடியை எதிர்ப்பதில் உங்கள் காட்சி காட்டும் அக்கறை மீது என்றுமே எனக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.
என்னை வீடு தேடி வந்து உதைப்பது இருக்கட்டும். இங்கே நான் ஒரு பதிவில் ஐடியா கொடுத்து... அதை உடனே அமல்படுத்தும் நிலையில்தான் அரசு இருக்கிறதோ? செம காமடி. இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயமே அரசிடமிருந்துதான் எனக்கு வந்தது. எப்படி?
அரசின் 'எய்ட்ஸ் விளம்பரம்' என்ன சொல்கிறது?
எய்ட்ஸ் பரவாமல் தடுக்க காண்டம் உபயோகிக்க அல்லவா சொல்கிறது? உண்மையில் 'எய்ட்ஸ் பரவாமல் தடுக்க விபச்சாரம் செய்யாதீர்கள்' என்றல்லாவா சொல்லியிருக்க வேண்டும்? இங்கே விபச்சாரத்துக்கு மறைமுக ஆதரவு அல்லவா அரசிடமிருந்து வருகிறது?
விபச்சார வழக்கில் கைது செய்து தண்டிப்பது பெண்களை மட்டும்தான். அதாவது அதில் சம்பாரிப்பது அவர்கள் மட்டும் என்பதால்..! (விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ஏன் ஆண்களை கைது செய்வதுமில்லை, தண்டிப்பதுமில்லை என சிந்திக்கவும். ஒருவர் மட்டும் ஈடுபடும் குற்றமா விபச்சாரம்?)
இங்கே கூர்ந்து சிந்தித்தால், உங்களுக்கு ஒன்று விளங்கும். அதாவது அரசு, விபச்சாரத்தை ஒரு தொழிலாய்த்தான் பார்க்கிறதே அன்றி ஒழுக்கக்கேடாய் பார்க்கவில்லை... பார்க்கவில்லை... பார்க்கவில்லை...! அதனால்தான் பயப்படுகிறேன். பெருமளவில் தகுந்த ஊழியர்கள் மட்டும் கிடைத்துவிட்டால், இந்த 'பணம் கொழிக்கும் தொழிலையும்' விரைவில் அரசே நடத்த முன்வரப்போகிறதோ என்று..!
நான் உண்மையிலேயே ரொம்ப சீரியசாகத்தான் எழுதுகிறேன்.
@ சிந்தனை செய் said...
//ஆண்களுக்கு டாஸ்மாக் பெண்களுக்கு இது. சமநீதி!//
//மேலும், இதில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு{?} முப்பது அல்லது நாப்பது வயதிலிருந்தே பென்ஷன் தந்து விடுவார்களோ?//
நீங்க ரொம்ப ஓவரா சிந்திக்கிறீங்க சகோ. இது நல்லாயில்லை. அம்புட்டுத்தான் சொல்வேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!