அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, January 22, 2011

18 26 / 1 : 'குடி' அரசு தினமா இனி...?

டிஸ்கி  :

                  என் இந்திய குடியரசு சார்பாக தமிழக 'குடி'அரசுக்கு ஓர் ஆதங்க மடல்.

டிஸ்கி ஆஃப் டிஸ்கி  :

                                            ( இந்த மடல் உரைநடை வடிவில் எழுதப்படவில்லை...! )

-----------------------------------------------------------------------------------------------------------------

      விடுனர்                                                                                                              பெறுனர்

















அன்பு குடியரசே..! ( இல்லை.. இல்லை..)  தமிழ்க்'குடி'அரசே..!
முன்பு பூரண மதுவிலக்கை ரத்துசெய்து
பின்பு  மெல்ல ஏன் நீ 'மலிவு விலை மது' தந்தாய்? - அன்று...

'கள்ள மதுவை ஒழிக்க' என காரணித்தாய் - உன்
உள்ள நாட்டம் - கொள்ளை இலாபம்
அள்ள மட்டும் - என்பதனை ஏன் மறைத்தாய்? - இன்று...

திகட்டத்திகட்ட டாஸ்மாக் குவிக்கும் நிதிகண்டு - அதை
பகட்டு  விளக்கால் அலங்கரித்து பட்டித்தொட்டி எங்கும்
சகட்டு மேனிக்கு பொது இடங்களிலும் ஏன் திறந்தாய்?

கள்ளுண்ணாமை எனும் குறளதிகாரம் இயற்றிய
வள்ளுவரை வாழ்த்தி வானுயர சிலைவடித்த நீ
கிள்ளுகீரை என அவர்தம் அறிவுரையை ஏன் புறந்தள்ளினாய்?

'வேஸ்டாகிப்போகுமே இவர்கற்ற கல்வி' என்றெண்ணாமல்,
பாஸ்பண்ணிய இளம் மாணாக்கரை - உன்
டாஸ்மாக்கில் 'அரசு ஊழியமென' சொல்லி ஏன் நியமித்தாய்?

'ஊத்திக்கொடுக்க' தொகுப்பு ஊதியம் அளித்து
ஊரான் குடியை கெடுக்கும் ஈனச்செயலுக்கு - உன்
ஊக்கத்தொகை வேறு ஒரு கேடா?

கக்கத்திலே சரக்கை பதுக்கிச்செல்ல அவசியமின்றி -கடை
பக்கத்திலே பார் திறந்துவிட்டு, இனி சொல்வாயோ
வெக்கமின்றி, 'பாரினிலே சிறந்தது நம் அரசு-பார்' என்று?

குடித்து வந்த ஆசிரியர் தம் சுத்துமாறி-தான்
படித்து வந்த அத்தனையும் குழம்பி - வகுப்பில்
தடித்த குரலில், 'சந்திரனை சுத்துது சூரியன்' என்று நடத்த...

மப்பில் வந்த மாணவர் கூட்டத்திற்கோ
தப்பாக ஏதும் தெரிவதில்லையே - மது
கப்படிக்கும் இந்த கல்விக்கும் மூலகாரணம் நீதானே? - மதுவின்...

'கிக்'கில் செய்த ஆப்பரேஷன் முடிந்தவுடன்
பக்கத்தில் கிடந்த கத்தரிக்கோலை காணவில்லை என
தூக்கம் கெட்ட டாக்டர் கூட்டம் - அதை...

எக்ஸ்ரே எடுத்து தேட - காணாமல்போன
அக்கத்தரி இதயத்துக்கு கீழே 'பளிச்'- இதுகண்டு
விக்கித்துப்போன அந்நோயாளிக்கு மீண்டும் மாரடைப்பாம்!

மதிகெட்ட மாக்கள்கூட்டம் - உன் டாஸ்மாக்கில்
சுதி ஏற்றியபின் மனிதவிலங்காய் மாற
கதிகலங்குகின்றனர் நல்லோரெலாம் சாலைதனிலே!

குறைய குடித்தோர் ஈவ்-டீசிங்கில் ஈடுபட
நிறைய குடித்தோர் வாந்தி எடுத்து அசிங்கம் செய்ய
பறையொலிக்க இறுதி ஊர்வலத்திலும் குடித்துவிட்டு ஆட்டம்!

அறிவுகெட்டு வாகனத்தில் வந்தோர் - குடித்தபின்
தறிகெட்டு தம் வாகனத்தை ஓட்ட - விபத்து..!
குறிப்பிலடங்கா உயிர்ச்சேதம், பொருட்ச்சேதம்!

நெறிப்படுத்த இயலா டிராஃபிக் - விபத்தில் வீசி
எறியப்பட்ட சடலமாய் சிதறிக்கிடக்கும் மனிதவளம் - தினம்
பறிகொடுக்கப்படும் மனித உயிர்க்கும் மூலகாரணம் நீதானே?

சட்டத்திற்கு புறம்பாய் குடித்துவிட்டு
ஓட்டும் வாகன ஓட்டிகளை
கட்டம் கட்டி விரட்டிப்பிடித்து...

சட்டப்படி தண்டிக்கின்றாய் - ஆனால்
பட்டப்பகலில் அப்பட்டமாய் நீ நடத்தும்
கட்டுப்பாடில்லா மது விற்பனைதானே மேற்பட்ட...

ஒட்டுமொத்த சீரழிவுக்கும் காரணம்? -ஆனால்
ஓட்டுப்போடும் மக்களில் கணிசமாய் குடிகாரர் இருக்க
கெட்டுப்போன உன்னை யார் தண்டிப்பது?

மதுவிலக்கு - இது முன்னாள் தேர்தல் வாக்குறுதி!
அதுமறந்து திளைக்கும் 'பின்னேற்றக்கழகங்களுக்கு'
எது சிறந்த ஞாபக மீட்பு மருந்து? - கேவலமான...

ஈட்டிக்காரன் தொழிலை செய்ய குஜராத்தி தேவைப்பட்டான்-அன்று!
பட்டித்தொட்டி எங்கும் அரசு வங்கி அதைச்செய்ய-இன்று
வட்டித்தொழில் ஆனதே தமிழர்க்கு அதொன்றும் கேவலமில்லை-என்று!

சகுணியாட்டம் எனும் கெட்டபெயர் சூதாட்டத்திற்கு
தகுந்த பெயரில் 'தமிழக அரசு பரிசுச்சீட்டு'-என நீ தந்ததால்
மிகுந்த கெளரவம் பெற்றது லாட்டரி சூதாட்டம்!

'போதைப்பொருள் விற்பனை சட்டப்படி குற்றம்' என்ற
சட்டம் போட்ட அரசே... டாஸ்மாக் மூலம்... 
'போதைப்பொருள் விற்பனை கடை' நடத்துவதால்...

குடிப்பது பாவமாகவோ தவறாகவோ அநாகரிகமாகவோ
சட்டத்துக்கு புறம்பானதாகவோ பார்க்கும் எண்ணம்
இளைய தலைமுறையிடம் காணாமல் போய்விட்டது.

அறமற்ற செயல்களை அரசே இனி நடத்தும்போது
'காசு சம்பாரிக்க எச்செயலுமே தவறில்லை'
என்ற சமூக நச்சுக்கருத்துருவாகி...

அரசு விபச்சார நிலையம்,
அரசு கொலையுதவிக் கூடம்,
அரசு கொள்ளைச்சேவை மையம்... என்றினி பல உருவாகலாம்..!

குடிமக்களின் நலன் காக்கும் அரசே குடியரசு - எனில்
குடிமக்களின் சுகவாழ்வில் அக்கறையற்று தன்
வடிகட்டின  சுயநல டாஸ்மாக் சுரண்டலுக்காக...

குடிமக்களை 'குடிக்கும் மாக்களா'க்கி என் இந்திய மனிதவளத்துக்கு
வெடிவைக்கும் மேற்படி தமிழ் 'குடி' அரசுக்கு கொடியேற்ற இனி
'குடியரசு தினம்' எனும் பெயரில் ஏதேனும் ஒன்றுண்டா..? - சுதியேற்ற இனி...

'குடி'அரசு  தினமே... எல்லா நாளும் தமிழ்நாட்டில்....!


18 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...