அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, December 6, 2010

11 அயோத்தி, டிசம்பர்-6 : தலைவெட்டு எப்போது?

      இன்று, டிசம்பர்-6, பாபர் மசூதியை மதவாத பயங்கரவாதிகள் இடித்த- முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கபட்ட இந்த துக்கம் மிகுந்த தினத்தில் என்ன நடக்கிறதென்றால்..... பொது இடங்களில் போவோர் வருவோரிடமெல்லாம் விசாரணைகள் – ஆவணப்பரிசோதனைகள் – உடை, உடைமைகளில் பாதுகாப்புச்சோதனை – காவலர் குவிப்பு – ராணுவ அணிவகுப்பு – பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னெச்செரிக்கை கைது - அரசியல் தலைவர்களின் சூடான அறிக்கை என்று எல்லா ஊடகங்களிலும் ஏதோ ஒரு ‘அதிபயங்கர போர்ச்சூழல் மிகுந்த பரபரப்பு நாள்’ போன்று இந்நாளை வழக்கம்போல ஆக்கிவிடுவார்கள்.

      இன்றோ நேற்றோ முந்தாநாளோ ஏதாவது ஒரு ‘அண்டார்டிக்கா-இ-தொய்பா’ அல்லது  ‘ஆண்ட்ரமீட்டா முஜாஹிதீன்’ அல்லது ‘பால்வீதி மண்டல ஜிஹாத் அமைப்பு’ –க்களிடமிருந்து போலிஸ் கமிஷனருக்கோ, சி.பி.ஐ-க்கோ ஒரு அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்திருக்கும்..!? உலகப்புகழ்பெற்ற அளவில் எவ்வளவோ கண்டுபிடிக்கும் இவர்களுக்கு முஸ்லிம் வேஷத்தில் வரும் அந்த மிரட்டல் இ-மெயில் அனுப்புபவர்களை மட்டும் யார் என்று எந்த வருடமும் கண்டுபிடிக்க முடியாதாம்..!? பகுத்தறிவு சிந்தனை மிக்க மக்களே, நம்புங்கள் இதனை..!?

     சரி. வருடா வருடம், அரசுக்கு அவமானம் தந்துகொண்டிருக்கும் சோகம் மிகுந்த இந்நாளில் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பரபரப்பு? சோதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனை? ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில் நடக்கும் இந்த வெட்டி அளப்பரைகள் எல்லாம் ஏன்?

     பொதுவாக கடந்த பதினெட்டு வருடங்களாக டிசம்பர் ஆறு அன்று முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்?

     அந்த வாரம் முழுதும், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அராஜகத்தை கண்டித்தும், நன்றாக எல்லோராலும் அறியப்பட்டும் இடித்தவர்களுக்கு இதுநாள்வரை தண்டனை தரப்படாத அநீதியை சாடியும், ‘மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டித்தருகிறேன்’ என்ற மத்திய ஆரசின் வாக்குறுதியை நியாபகப்படுத்தியும்... கட்டுரைகள், துண்டுப்பிரசுரம், சுவரொட்டி, தெருமுனை மேடைப்பேச்சு, முச்சந்தி கோஷம், பதாகைகளுடன் ஊர்வலம் போன்ற அறப்போராட்டத்தில் ஈடுபடுவர்.

     இதை எல்லாம் பார்க்கும் பெரும்பான்மை சமூக மிஸ்டர் & மிஸ்சஸ் பொதுஜனம் என்ன நினைப்பார்? .... “அடடா! இந்த முஸ்லிம்கள் சொல்வது சரியாக இருக்கே! இவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதே! இவர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?”.... என்றுதானே நினைப்பார்?

     அப்படி இவர்களை நினைக்க விடக்கூடாது. அவர்களை இந்நாளில் செமையாக அலைக்கழித்து சிரமப்படுத்தி அவர்களின் மாமூல் வாழ்க்கையை பாதித்து அதன்மூலம் அவர்களை கொதிப்படைய வைத்துவிட்டால்...? இப்போது அந்த ‘பெரும்பான்மை சமூக மிஸ்டர் & மிஸ்சஸ் பொதுஜனம்’ என்ன நினைப்பார்? ... “அடேய் சண்டாளர்களா..! உங்கள் வெடிகுண்டு மிரட்டலினால்தானேடா இவ்வளவு அலப்பறை எல்லாம்? ஏங்கடா இப்படி குண்டு வைத்து மக்களை கொல்கிறீர்கள்? போங்கடா பாகிஸ்தானுக்கு. இல்லையேல், நீங்கள் ஒழிந்தால்தாண்டா தேசத்துக்கு விமோசனம்.” என்று... ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதுபோலத்தானே நினைப்பர்?

     இவ்வாறு, மக்கள் நினைக்கவேண்டியதை மறக்கடித்து, மக்களை வேறு ஒன்றை சிந்திக்க வைப்பதே இந்த அதிகார வர்க்கம்+ஊடகங்களின் நோக்கம் என்று ஐயுற வேண்டியுள்ளது. அதில் கடந்த பதினெட்டு வருடங்களாய் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்களோ என்று எண்ணவும் வைக்கிறது.

     அப்புறம், சென்ற மாதம் ஊர் சென்றிருந்த போது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டே தானாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரனைக்கு உட்படுத்த வலியுறுத்தியும் நடைபெறவுள்ள ஜனவரி-4 போராட்டத்தை பற்றிய சுவர் விளம்பரங்களில்...,  “அலஹாபாத் தீர்ப்புக்கு பிந்தைய ‘முஸ்லிம்களின் அமைதி என்பது தீர்ப்புக்கு ஆமோதிப்பு அல்ல’ என்று புரியவைக்க பெருந்திரளாய் கூடுவோம்” ---என்ற வாசகத்தை கண்ணுற்ற போது எனக்கு முன்பொருமுறை படித்த ‘ஒரு முட்டாள் விஞ்ஞானியின் தவளை ஆராய்ச்சி’ பற்றிய காமடி கதைதான் நியாபகம் வந்தது.

     ஒரு விஞ்ஞானி ஒருநாள் தன் ஆய்வகத்தில் ஒரு தவளையை பிடித்து அதன் ஒருகாலை வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். ஒருகால் வெட்டப்பட்ட வலி தாங்க முடியாமல் மூன்று கால்களால் தவளை குதித்ததாம். உடனே அதனை பிடித்து மற்றொரு காலையும் வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். இருகால் வெட்டப்பட்டதால் மிகுந்த வலி தாங்க முடியாமல் மிச்சமிருக்கும் இரு கால்களால் தவளை குதித்ததாம். உடனே அதனை பிடித்து மற்றொரு காலையும் வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். மூன்று கால்கள் வெட்டப்பட்டதால் தாங்க முடியாத மிகுந்த வலியால் மிச்சமிருக்கும் ஒரு கால் மூலம் தன் பலத்தையெல்லாம் சேர்த்து தவளை அங்கும் இங்கும் தவ்விக்குதித்ததாம். உடனே அதனை பிடித்து மிச்சமிருந்த அந்த ஒரே  காலையும் வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். தாங்க முடியாத மரண வலியால் கஷ்டப்பட்டாலும் தவளை குதிக்காமல் அப்படியே மவுனமாய் கிடந்ததாம். உடனே முட்டாள் விஞ்ஞானி மிக உரத்த குரலில் தவளையின் காதருகே கத்தினானாம்... ‘குதி’ என்று. ஆனால், தவளை அப்படியே அசைவற்றுக்கிடக்க...
தன் ‘ஆராய்ச்சி முடிவை’(!?) இப்படி எழுதினானாம் அந்த முட்டாள் விஞ்ஞானி.... :-
தவளைக்கு அதன் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் அதற்கு காது கேட்காது ” ---என்று...!?!?!?!
தவளை, ‘வலியால் துடித்ததா’ அல்லது ‘இதுகாறும் தன் கட்டளையை கேட்டு குதித்ததா’ என்று கூட சிந்திக்கும் திறனற்ற அந்த முட்டாள் விஞ்ஞானி நியாபகம் இப்போது ஏன் வந்தது?

     இந்தக்காமடிக்கதைக்கும் அயோத்தி-பாபர் மசூதிக்கும் சம்பந்தம் இருக்கிறது. அந்த அப்பாவி தவளையை ‘இந்திய முஸ்லிம்கள்’ என்று உருவகப்படுத்திக்கொண்டால்...!

           1949-இல், அநியாயமாய் ராத்திரியோடு ராத்திரியாய் பூட்டிய மசூதி கதவை உடைத்து திருட்டுத்தனமாய் ராமன் சிலையை மசூதியினுள் கயவர்கள் வைத்தபோது, நீதியும் அரசு அதிகாரமும், அதுவரை தொழுகை நடந்து கொண்டிருந்த மசூதியை இழுத்துப்பூட்டி சீல் வைத்தபோதுதான் அத்தவளையின் ‘முதல் கால்’ வெட்டப்பட்டது. அப்போதும் தவளை குதித்தது. மேல்முறையீடு செய்தது.

     பின்னர், 1986-இல் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாய் வைக்கப்பட்ட சிலைகளுக்கு, ‘இந்துக்கள் வழிபாடு நடத்த திறந்து விட வேண்டும்’ என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அப்போதுதான் தவளையின் இரண்டாவது கால் வெட்டப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார்கள் முஸ்லிம்கள். சிறிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். அதாவது தவளை குதித்தது.

     பின்னர், 1992- டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை... உச்சநீதிமன்ற தடையை மீறி, ராணுவம் & போலிஸ் வேடிக்கை பார்க்க, ‘வருங்கால பிரதமர்’ என்று அறியப்பட்டவரின் முன்னிலையில், மத்தியில் முக்கிய கேபினெட் அமைச்சர்களாகும் அளவுக்கு அறியப்பட்ட பிரபல தலைவர்கள் புடைசூழ பட்டப்பகலில் உலகத்தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், பிரதமர், ஜனாதிபதி என்று எவரிடமிருந்தும் எந்த அதிகார எதிர்ப்பும், மசூதியைக்காக்க எந்த நடவடிக்கையும் அன்று மேற்கொள்ளப்படாதநிலையில், கொஞ்சமும் நெஞ்சத்தில் ஈரமில்லாமல்... கரசேவகர்கள் என்ற பயங்கரவாதிகள் அன்று முழுப்பகலும் நிதானமாக ரசித்து ரசித்து கடப்பாரையால் இடித்து முடித்தார்களே...! அன்றுதான் தவளையின் மூன்றாவது கால் வெட்டப்பட்டது. முன்பெப்போதையும் விட அன்று மிகுந்த வலி தாங்க முடியாமல் தவளை குதித்தது. நாடெங்கும் அப்படி குதித்த பல்லாயிரக்கணக்கான தவளைகள் கொல்லப்பட்டன. இருந்தும் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் -6 அன்று அதேநாளில் தவளைகள் மிச்சமிருக்கும் தங்கள் ஒரு காலால் குதித்துக்கொண்டுதானிருந்தன. 

     ஆனால், இவ்வருடம் செப்டம்பர் 30-ம் தேதி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தி்ன் லக்னெள பெஞ்ச் தனது ‘உலகப்பிரசித்தி பெற்ற தீர்ப்பை’ வெளியிட்டதே... அன்றுதான் ஒற்றைக்காலில் குதித்துக்கொண்டிருந்த தவளையின் மிச்சமிருந்த அந்த ஒரே காலும் வெட்டி எறியப்பட்டது. இப்போது வழக்கம்போல தவளை குதிக்கும் என்று எதிர்பார்த்துத்தானே நாடு முழுதும் ‘வரலாறு காணாத பாதுகாப்பு’ போட்டார்கள்..! ஆனால், நடந்தது என்ன? தவளை குதிக்கவில்லையாம்.  இது உயர்நீதிமன்றத்தீர்ப்புத்தானே! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்றோ, 'ச்சே! நீதிமன்றமே இப்படி என்றால் அப்புறம் என்னத்த பண்ணி என்னத்த சாதிக்க' என்று விரக்தியில் செயலற்று அதிர்ச்சியில் உறைந்து மவுனமாகி இருக்கலாம். அதனால், முஸ்லிம்கள் அத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டுவிட்டார்களாம். இப்போது முட்டாள் விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிவு நியாபகம் வருகிறதா?

     'இப்படி முடிவெடுத்துவிட்டார்களோ' அல்லது 'இனி முடிவெடுத்துவிடுவார்களோ' என பயந்துதான் த.த.ஜ–வினர் இவ்வாசகத்துடன் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள் போலும். மேலும், மூன்றுமாத மேல்முறையீடு கெடு இம்மாதம் முடிவடைவதால் அநேகமாய் முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில், அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும். அதாவது கால்களற்ற தவளை மிச்சமிருக்கும் தன் தலையை ஆட்ட ஆரம்பித்துவிட்டது...! 

மேல்முறையீடு செய்யப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் நேர்மையான நியாயவான்கள் நீதிபதிகளாய் அமையப்பெற்றுவிட்டால் நல்லது. தவளையின் தலை தப்பிக்கும்.

அவ்வாறின்றி ஒருவேளை வழக்கம்போல ‘காவிகோட்டு நீதிபாதிகள்’ அயோத்திவழக்கில் தீர்ப்பளித்தால்.... அந்தோ... தவளையின் தலை உச்சநீதிமன்ற தீர்ப்பில் வெட்டப்படலாம். 

ஆனால், ""அந்த தவளைக்கு... தலைவெட்டு எப்போதும்  வரவேண்டாம்"" --- என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

11 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...