அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, November 10, 2010

2 அல்லாஹ்வின் நெருக்கம் ஓர் அறிவியல் விளக்கம்

என் தந்தை, ஓய்வு பெற்ற பேராசிரியர், T.A.M.ஹபீப் முஹம்மது அவர்களால் சிந்திக்கப்பட்டு  மேற்படி இதே தலைப்பில் எழுதப்பெற்ற  இக்கட்டுரை, (2010-செப்டம்பர்) 'இனியதிசைகள்' எனும் மாத இதழில் வெளிவந்துள்ளது. சற்று பெரிய அக்கட்டுரையை தேவை கருதி சற்று சுருக்கி தந்துள்ளேன் :


வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டு நம் கண்புலனுக்கு அப்பாற்பட்டு அல்லாஹ்வுக்கு பணிந்து சிரவணக்கம்  செய்து பிரபஞ்சம் எங்கும் பரவி அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் மனிதர்களை பாதுகாக்கிறார்கள். உயிரை கைப்பற்றுகிறார்கள். மனிதர்களின் செயல்களை  தங்கள் பதிவேட்டில் பதிவு செய்கிறார்கள் என்பதனை...

"  நிச்சயமாக உங்கள்மீது பாதுகாவலர்கள் (வானவர்கள்) இருக்கிறார்கள். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். 82:10-12"   

...இக்குர்ஆன் வசனங்கள் வாயிலாக அறியலாம்.

வானவர்கள்  நம்மைச்சூழ்ந்து இருப்பதால்தான்  நாம் தொழுகையை முடிக்கும்போது வானவர்களுக்கு 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் ' என்று ஸலாம் சொல்கிறோம். இவ்வாறு நம்மை படைத்து  பாதுகாத்து நம்முடனேயே மலக்குகளை  இருக்கவைத்து (குர்ஆன்  50:17,18)கண்காணித்துக்கொண்டிருக்கும் சர்வ வல்லமைமிக்க அல்லாஹ்விற்கு முரணாக நாம் தவறு செய்ய நினைப்போமா? 

மனிதனது ஈமானில் சிறந்தது அவன் எங்கிருந்தாலும் அவனுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை எப்போதும் மனிதன் உணர்ந்த நிலையிலேயே இருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம்: மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த அந்த இக்கட்டான நிலையில், முஹம்மது நபி (ஸல்...) அவர்களும் உடன் ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் அபுபக்கர் (ரலி...) அவர்களும் மக்காவிற்கு வெளியில், தவ்ர் குகையில் தங்களை கொல்லவரும் மக்கா குறைஷிகளிடமிருந்து  தற்காத்துக்கொள்ளவேண்டி ஒளிந்து கொள்ள  நேரிட அப்போது அக்கொடியவர்கள் படை குகை வாசலுக்கே வந்துவிட, அப்போது அபுபக்கர்(ரலி...) அவர்கள் பயத்தால் நடுங்கி நபி(ஸல்...) அவர்களிடம், 'நாம் இருவர்தானே இங்குள்ளோம், என்ன செய்வது?' எனக்கேட்க, உடன் நபியவர்கள்  'நீர் கவலைப்படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்' (குர்ஆன் 9:40) என உறுதிபட கூறி தோழருக்கு துணிவூட்டினார்கள். இதற்கிடையில், குகைவாசலில் சிலந்தி ஒன்று   வலை பிண்ணி முடித்துவிட, அதற்கப்புறம் அங்கே வந்த குறைஷியர் படை அதைக்கண்டு 'இக்குறுகிய இக்குகைவாசல் வழியே யாரும் இச்சிலந்தி வலையை கிழிக்காமல் குகையினுள்ளே சென்றிருக்க முடியாது' என்று எண்ணி வந்த வழியே திரும்பி சென்றதை நம்மில் யாரும் அறியாதோர் இருக்க முடியாது. ஆக, இது எவ்வளவு ஆபத்தான இக்கட்டான சூழலிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தில் இறைத்தூதர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையின் காரணமாக இறைத்தூதரின் பாதுகாப்பிற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டு பலவீனமான ஒரு சிலந்தி வலை மூலம் பலமிக்க ஒரு குறைஷிப்படையை விரட்டியடித்த வரலாற்று அற்புத நிகழ்வு. இந்த அல்லாஹ்வின் நெருக்கத்தை ...

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவனின்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். .(50:16)

---என்ற வசனம் மூலம் அறியும் நாம், மேலும் இவ்வசனத்தில் நெருக்கத்திற்கு கூறப்பட்ட உவமையான உள்ள பிடரி நரம்பு என்பதை அறிவியல் துணைகொண்டு மேலும் ஆராய்வோம். 

பிடரிப்பகுதியில் தண்டுவட நரம்பு (spinal cord)விரிந்து சற்று முடிச்சு போன்று உருவாகியுள்ளது.இப்பகுதி முகுளம் (medulla)எனப்படும். இப்பகுதியின் நரம்பு மையங்கள் (nerve centres) சுவாசித்தல், இதயத்துடிப்பின் அளவை நிர்ணயித்தல்(heart rate), இரத்தக்குழாய்கள் சுருங்கிவிரிதல்(blood pressure), உணவுப்பாதையின் உறுப்புகளில் உள்ள தசைகளின் இயக்கங்கள் அவற்றில் நடைபெறும் ஜீரணம், கழிவு உறுப்புகளில் நடைபெறும் கழிவு நீக்கம் போன்ற நம்முடைய இச்சைக்கு கட்டுப்படாத உடலில் நிகழும் நிகழ்வுகளை கட்டுப்படுத்துகின்றன. இவ்வியக்கங்கள் அல்லாஹ்வின் நேரடிப்பார்வையில் உயிர்முடிச்சாகத்திகழும் பிடரியிலுள்ள முகுலத்தின் மூலம் நிகழ்கின்றன. இந்த பிடரியிலுள்ள முகுலத்தைவிட நாம் மிக அருகில் இருக்கிறோம் என்று அல்லாஹ் சொல்வதை எந்த அளவுக்கு அல்லாஹ்வின் நெருக்கம் நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. 

மேலும், முகுலத்தின் தொடரான தண்டு வடப்பகுதி உடலில் நிகழும் அனைத்து அணிச்சைசெயல்களுக்கும் (reflex action) மையமாக உள்ளது. உதாரணமாக, சூடான ஒரு பொருளை நம்மை அறியாமல் நாம் தொடும்போது  நம்முடைய கை சட்டென பின்னுக்கு இழுக்கப்படுகிறது. நம் கட்டளை அதாவது பெருமூளையின் தலையீடு இல்லாமலேயே இச்செயல் துரிதமாக கழுத்தில் உள்ள தண்டுவடப்பகுதியின் கட்டளையால் நடைபெறுகிறது. ஏனெனில் மூலையிலிருந்து செய்தி வரும்வரை காத்திருந்தால் விரலின் பாதிப்பு அதிகாமாகிவிடும் என்பதால் பிடரியின் தண்டுவடமையமே அணிச்சைசெயல் மையமாக விறைந்து செயல்பட்டு நம் கைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதைவிட மிக அருகில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பதை இந்த இறைவசனம் அறிவியில் ரீதியில் சுட்டிக்காட்டுகிறது.

மேற்படி கட்டுரையை படித்தபின்னர் ஒரு முக்கிய தெளிவு ஒன்றை பெற முடிகிறது. அதாவது, மனிதனிடத்தில் அல்லாஹ்வின் நெருக்கம் சம்பந்தமாக திருக்குர்ஆனில் சில ஆயத்துகள் இருந்தாலும், ஓராயத்தில் மட்டும் '...பிடரி நரம்பை விட சமீபமாக...' என்று பல குர்ஆன் தமிழ் மொழியாக்கங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

ஆனால்,  Pikthal, Yusuf Ali, Madina university english translation உட்பட பல ஆங்கிலமொழியாக்கங்களிலும்  " jugular vein " (மூலையிலிருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய்) என மொழியாக்கப்படுகின்றன.  இரண்டையும் படிக்கும் போது இவற்றில் எது சரியானது என்ற ஐயப்பாடு நிலவுதல் இயற்கை

நம் தமிழ் சொல் வழக்கில் இரத்த நாளங்களை நரம்பு என்றும் சொல்வர். (உதாரணம்: 'டாக்டர் நரம்பு ஊசி போட நரம்பை தேடுகிறார்' ---இதில் 'நரம்பு' என்ற சொல் இரத்தக்குழாயை(vein)த்தான் குறிக்கிறது என்பதில் ஐயமில்லைதானே?). ஆக, தமிழாக்கத்திலும், 'பிடரிநரம்பு' என்று குறிப்பிட்டாலும் அது 'இரத்தக்குழாயா' அல்லது 'நரம்பா' என்ற ஐயம் தீரவில்லை. இதற்கு பிரபலமான எந்த தர்ஜுமாவிலும் நேரடியான விளக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் என் தந்தையின் இக்கட்டுரை வாயிலாக மேலும் சிந்திக்கும்போது, 'இரத்தக்குழாய்' என்பதைவிட சிறந்த மொழியாக்கம் நரம்பு மண்டலத்தின் 'பிடரி நரம்பு' என்பதே சரி எனப்படுகிறது. ஏனென்றால், jugular vein (The jugular veins are veins that bring deoxygenated blood from the head back to the heart via the superior vena cava) பிடரிப்பகுதியில் இல்லாமல் கழுத்தின் ஓரத்தில் (http://en.wikipedia.org/wiki/Jugular_vein) அமைந்துள்ளது.

மேலும், அல்லாஹ்வின் நெருக்கம் ஆனது அணிச்சைசெயலைவிட நெருக்கமானது என்று சொல்வதே சிறப்பு.

இதைவிட, இந்த வசனத்தில் அரபி மூலத்தில் உள்ள வார்த்தை 'ஹப்ல்' என்பதாகும். இதற்கு நேரடி அர்த்தம் 'கயிறு' என்று அறிகிறோம்.

இதே 'ஹப்ல்' என்ற வார்த்தை,

அல்குர்ஆனில் 3:103-இல்,

'நீங்கள் யாவரும்  'அல்லாஹ்வின் கயிற்றை' பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்...' என்றும்,

111:5 -இல்,

'அவளுடைய(அபூலஹபின் மனைவி) கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு இருக்கும்' என்றும் வருகிறது.

ஆகையால், ஹப்ல் என்ற உவமான வார்த்தை கயிறு என்பதால் அது ஒரு பைப் போன்ற ஒரு குழாயாக- இரத்தக்குழாயாக-jugular vein-ஆக இருக்க முடியாது;  மாறாக நரம்பு மண்டலத்தின் நரம்பாகத்தான் இருக்க முடியும் என்று சிந்திக்கும் வேளையில் அறிய முடிகிறது.

அல்லாஹ்வே யாவரையும் விட மிகவும் அறிந்தவன்.

2 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...