நான் சென்றவாரம், இம்முறை சவுதியிலிருந்து இந்தியா வரும்போது 'ஒரு விஷயத்தை' முற்றிலுமாய் மறந்துபோனேன். அது எப்போது நியாபகம் வந்தது என்றால்...
வழக்கம்போல விமான நிலையத்திலிருந்து வெளிவந்து என் (லக்கேஜ்)சுமைகளுடன் அந்த காலைப்பொழுதில் 'எப்படியும் பத்து நிமிஷங்களுக்கொருமுறை நாலைந்து(!?)பயணிகளுடன் ஒரு குடந்தை செல்லும் பேருந்து என்னருகே வந்து நின்று என்னை உள்ளே ஏறச்சொல்லி அழைக்கும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மீனம்பாக்க பேருந்து நிறுத்தத்தில் நிற்கையில்...
ஆனால், எனக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாய் ஒரு தஞ்சை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் –பைப்பாஸ் ரைடர்- மிதவைப்பேருந்தே மிதந்து வந்து நின்று கதவைத்திறந்தால், கேட்கவா வேண்டும்?
உடனே சுமைகளுடன் அவசரமாய் ஏற முற்பட...
நடத்துனர் ‘’எந்த ஊர்’’ எனக்கேட்க...
நான் ஏறிக்கொண்டே ‘’பாபநாசம்’’ என்க...
அவர் ‘‘போகாது’’ என என்னை தடுக்க...
‘‘ஏன்’’....
‘‘இது பெரம்பலூர், திருச்சி வழியாக தஞ்சாவூர் போகுது’’ ...!?
எனச்சொல்லும்போதுதான் எனக்கு புத்தியில் அது உரைத்தது.
‘அடடா... அணைக்கரை பாலம் இன்னும் கட்டி முடிக்கல போலடா...’ என்பது.
ஏன் இப்படி? எதற்கு இந்த தாமதம்? என்று பேருந்துனின்றும் இறங்கிக்கொண்டிருக்கும்போதும்... அடுத்துவந்த குடந்தை செல்லும் பேருந்தில் பிரயாணிக்கும்போதும்... ஊரெல்லாம் சுத்தி எல்லா பேருந்து நிலையங்களிலும் நங்கூரமிட்டு நிற்கும்போதும்... கடைசியாய் நொந்து நூடுல்ஸ் ஆகி கசங்கிப்போய் வீடு வந்து சேர்ந்தபோதும் யோசித்தேன்.
பாதுகாப்பான பயணம், நெரிசலில்லா துரித போக்குவரத்து, எரிபொருள் சிக்கனம் போன்ற நோக்கங்களை அடைய, சாலை மற்றும் பாலக் கட்டமைப்புகள் மிகவும் இன்றியமையாதவை. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரையில் அமைந்துள்ள கொள்ளிடம் பாலத்தை தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், பெரம்பலூர் மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பாலம் இரண்டு வருடங்களுக்கு முன் பழுதடைந்ததால், முதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தற்போது சிறிய வாகனங்கள் மட்டுமே இந்தப் பாலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால், குடந்தையில் இருந்து விழுப்புரம்-விக்கிரவாண்டியை அடைய பிற வாகனங்கள் மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் வழியாக சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தைக் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நிதி ஒதுக்கியும் அதன்பிறகும் மற்ற இடங்களில் நடப்பது/நடந்தது போல இங்கே மட்டும் வேலை துரிதமாக நடக்கவில்லையே, ஏன்?
அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் பழுதடைந்ததால், கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்காளாகியும், மாற்றுப் பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நடக்கின்றன... நடக்கின்றன... இன்னும் மந்தமாக நடந்துகொண்டிருக்கின்றன. சென்னை - தஞ்சாவூர் வழியில் உள்ள, இந்த முக்கியமான பாலத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானோர் பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் இந்த அணைக்கரை-கொள்ளிட பாலத்தைப்பற்றிய ஒரு சிறு வரலாற்றுக்குறிப்பை பார்த்துவிடுவோம்:-
காவிரி ஆற்றில், மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் உபரி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக, நாகை மாவட்டத்தைக் கடந்து கடலில் கலக்கிறது. கடலில் கலந்து வீணாகும் நீரை, பாசனத்திற்கு பயன்படுத்தும் நோக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கடந்த 1836ம் ஆண்டில் தற்போதைய கடலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்கள் சங்கமிக்கும் எல்லையில் உள்ள, அணைக்கரை தீவு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கீழணை கட்டப்பட்டன. அணைக்கரை கிராமத்திற்கு கிழக்குப் பகுதி ஆற்றின் குறுக்கே, 493 மீட்டர் நீளத்திற்கு 40 மதகுகள், 8 மணல் போக்கிகளுடனும், மேற்குப் பகுதி ஆற்றில் 372 மீட்டர் நீளத்திற்கு 30 மதகுகள், 8 மணல் போக்கிகளுடன் பிரமாண்டமாக இரண்டு அணைகள் கட்டப்பட்டன. தண்ணீரைத் தேக்கி வைத்து பாசனத்திற்கு திறந்துவிடும் வகையில், மதகுகளில் 55.34 அடி உயரத்திற்கு ராட்சத ஷட்டர்கள் பொருத்தப்பட்ட மேற்படி தகவல்களை எல்லாம் ஏற்கனவே பல இடங்களில் படித்திருப்பீர்கள்.
பாசன மதகுகளை, தினசரி கண்காணித்து பராமரிப்பதற்காக வாகனங்களில் அதிகாரிகள் சென்று வருவதற்கு ஏதுவாக, 1854ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கீழணைகளையொட்டி 10 மீட்டர் அகலத்தில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில், சொற்ப எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே சென்று வந்த கீழணை பாலம் தற்போது, சென்னை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பாலமாக மாறி விட்டது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இப்பாலத்தை பொதுப்பணித் துறை முறையாக பராமரிக்காததாலும், அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் செல்வதாலும், பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து விட்டது என்ற தகவல்களும் தெரிந்திருக்கும்.
இந்நிலையில்தான்.... கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் மாதம் பாலத்தில் உள்ள மதகு ஒன்றில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் குழு ஆய்வு செய்து விரிசலை சரி செய்த பின், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்தாண்டு மார்ச் 28ம் தேதியன்று, 13வது மதகில் விரிசல் ஏற்பட்டு செங்கல் பெயர்ந்து விழுந்ததால், பாலத்தில் வாகனப் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 21ம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளை சேர்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அணைக்கரையின் மேற்குப் பகுதியில் உள்ள, கீழணை பாலத்தில் 11, 12 மற்றும் 13வது மதகுகள் விரிசல் விட்டிருப்பதாகவும், மேலும் 7 மதகுகள் வலுவிழந்திருப்பதாகவும் நிபுணர் குழு தெரிவித்தது. மேலும், பாலத்தில் பேருந்து, சரக்குந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தடை விதித்தனர். பத்து டன்னிற்குட்பட்ட வாகனங்களை, மெதுவாக இயக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை அரசுக்கு செய்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி முதல் பாலத்தின் வழியே வேன், ஆட்டோ, மினி லாரி, கார், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதுபோன்ற மேற்படி செய்திகளை அவ்வப்போது செய்தி ஊடகங்களை பார்வையிடுவோர் படித்திருப்பீர்கள்.
சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பாலத்திற்கு மேற்குப் பகுதியிலும், கும்பகோணம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பாலத்தின் கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்படுகின்றன. பேருந்துகளில் இருந்து பயணிகள் இறங்கி பாலம் வழியே நடந்தே சென்று, மறு முனையில் நிற்கும் வேறு பேருந்தில் ஏறி பயணத்தை தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை பாலம் வரை 26 கிலோ மீட்டர் தூரம் வருவதற்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 7.50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ‘லக்கேஜ்’ எடுத்து வரும் பயணிகள் பாலத்தைக் கடக்க, ஆட்டோவிற்கு 20 ரூபாய் அழ வேண்டியுள்ளது.
சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பாலத்திற்கு மேற்குப் பகுதியிலும், கும்பகோணம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் பாலத்தின் கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்படுகின்றன. பேருந்துகளில் இருந்து பயணிகள் இறங்கி பாலம் வழியே நடந்தே சென்று, மறு முனையில் நிற்கும் வேறு பேருந்தில் ஏறி பயணத்தை தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை பாலம் வரை 26 கிலோ மீட்டர் தூரம் வருவதற்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 7.50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ‘லக்கேஜ்’ எடுத்து வரும் பயணிகள் பாலத்தைக் கடக்க, ஆட்டோவிற்கு 20 ரூபாய் அழ வேண்டியுள்ளது.
கனரக சரக்கு வாகனங்கள் ஜெயங்கொண்டம், திருமானூர் பாலம் வழியாக 70 கி.மீ., தூரம் சுற்றிக் கொண்டு, தஞ்சாவூருக்கு சென்று வருகின்றன. இதேநேரத்தில் இரட்டை துயராய் இருந்துவந்த மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதை போடும் பணி நீ...........ண்டகாலமாக நடந்து.... இல்லை ....ஊர்ந்து முடிந்து ஒரு வழியாக ரயில் போக்குவரத்து தற்போதுதான் இயங்கி வருவது அப்பகுதி மக்களுக்கு ஒரு மிகப்பெரிய தற்காலிக ஆறுதல். ஆனால், சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு அணைக்கரை பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். பாலம் பழுதாகியுள்ளதால் கூடுதலாக 40 கிலோ மீட்டர் தூரம் மயிலாடுதுறையை சுற்றிக் கொண்டு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் ஒன்றரை மணி நேரம் அதிகரித்து, மக்கள், பேருந்து கட்டணமும் 12 ரூபாய் கூடுதலாய் அழ வேண்டியுள்ளது.
கீழணை பாலம் பழுதடைந்துள்ளதை தொடர்ந்து, விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் தஞ்சை மாவட்டம் தத்துவாஞ்சேரி முதல் அரியலூர் மாவட்டம் தென்னவநல்லூர் கிராமம் வரை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஒரு கி.மீ., நீளத்திற்கு புதிய பாலத்துடன் 5 கி.மீ., நீளத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய மத்திய அரசு அப்போதே 14.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததையும், கீழணை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 15 மாதங்களுக்குப் பின் அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலமும், வேம்புகுடி கிராமத்தில் 22 ஏக்கரும், தஞ்சை மாவட்டம் உக்கரை கிராமத்தில் 26 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்வதற்காக அளவீடு செய்து கல் பதித்துள்ளனர்.அளவீடு செய்த நிலங்களை கையகப்படுத்துவதற்காக, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குவதற்காக பூர்வாங்க பணியை கடைசியில் ஒருவழியாக அரியலூர் மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளதையும், இதற்கிடையே, ஆற்றில் பாலம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள மண்ணின் தன்மையை கண்டறிய, ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளதையும் செய்தி ஊடகங்களின்மூலம் அறிந்திருப்பீர்கள்.
கொள்ளிடம் ஆற்றில் ஒரு கி.மீ., நீள பாலத்துடன் சேர்த்து, ஐந்து கி.மீ., நீள புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் வழங்கிட தனியார் நிறுவனத்துக்கு NHAI (National Highways Authority of India Limited) அனுமதி வழங்கியுள்ளதையும், இதற்கு பிறகு, திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்த பின், டெண்டர் விடப்பட்டு பாலம் கட்டும் பணி துவங்கும் என கூறப்பட்டதையும் செய்தி ஊடகங்களில் படித்தேன். அந்த பணிகள் சொன்னபடி ஆரம்பித்து விட்டனவா எனறு விபரம் அறிந்த அப்பகுதி வாசகர்கள் மறுமொழிகளில் தெரிவியுங்கள்.
பின்னர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குனர் செய்தித்தாள்களுக்கு பேட்டி அளிக்கும்போது, அணைக்கரை-கீழணை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உள்ள இரண்டு பாலங்களுக்கு பதிலாக, தற்போது ஒரே பாலமாக 1 கி.மீ., தூரத்திற்கு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்காக (NH.45C) 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இந்த நிதியில் அணைக்கரை புதிய பாலமும் அடங்குமாம். இதற்கான திட்ட மதிப்பீட்டை, விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் டெண்டர் விடப்பட்டு, பாலம் கட்டுமான பணி துவக்கப்படும். அதற்குள், தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் நில ஆர்ஜிதம் செய்து, எங்களிடம் ஒப்படைத்தால் புறவழிச் சாலை பணிகளும் துவக்கப்படும்' என்பதையும் செய்தி ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.
இது உண்மையிலேயே இப்பகுதி மக்களுக்கான ஒரு கனவுத்திட்டமாகும். ஆனால், அது நினைவாகமாலேயே வெறும் கனவாகவே நீடித்தால் யாருக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்ட அனைத்து துறையினர்களும், அதிகாரிகளிகளும், அரசும் துரிதமாக இயங்கி இவ்விஷயத்தில் மக்களின் துயர்துடைக்க இப்பகுதிமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இந்த லட்சணத்தில்... விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் வரையிலான 165 கி.மீ., நீளமும், அதிகபட்சம் 7 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலை, “NH45C” என்ற தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த கூத்தை மேலும் சற்று அலசவேண்டி உள்ளது... இறைநாடினால்... அது அடுத்த பதிவில்.
இந்த லட்சணத்தில்... விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் வரையிலான 165 கி.மீ., நீளமும், அதிகபட்சம் 7 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலை, “NH45C” என்ற தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த கூத்தை மேலும் சற்று அலசவேண்டி உள்ளது... இறைநாடினால்... அது அடுத்த பதிவில்.
16 ...பின்னூட்டங்கள்..:
என்ன திடிரென்று பாலத்திற்கு போய் விட்டீர் திரு ஆஷிக் அவர்களே, உழைத்து உழைத்து தேய்ந்து விட்டது அந்த பாலம், புதிய பாலத்தின் வேலைகள் இன்னும் துவங்கவே இல்லையெனில் அதை தற்போது எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை, மயிலாடுதுறை சென்னை அகல ரயில் பாதையை பயன்படுத்துங்கள்.
வருக, திரு.கார்பன் கூட்டாளி அவர்களே.
//புதிய பாலத்தின் வேலைகள் இன்னும் துவங்கவே இல்லையெனில் அதை தற்போது எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை//---அப்படியில்லை.
மிக அருகில், இதற்குப்பிறகு ஆரம்பிக்கப்பட்டு தஞ்சை-திருச்சி நான்குவழிச்சாலை, திருச்சி-மதுரை நான்குவழிச்சாலை, விழுப்புரம்-திருச்சி நான்குவழிச்சாலை எல்லாமே வேகுஜோராய் பூர்த்தியாகி அல்லது முடியப்போகும் நிலையில் உள்ளதை காணுகிறேன். அப்படியிருக்க, இந்த சாலைக்கு மட்டும் எதற்கு இந்த ஓரவஞ்சனை? எங்கே தவறு நடக்கிறது? எதற்கு அது உடனடியாக கலையப்படவில்லை? இப்பகுதிக்காரன் என்பதுடன், கீழ்க்காணும் ஏக்கமே இப்பதிவிற்கு காரணம்.
பொதுவாய், ஒரு வருடம்/ இரு வருடம் என வெளிநாட்டில் இருந்து ஊர் வருபவர்களுக்கு மிகுந்த மலைப்பாய் இருப்பது சென்னை விமானநிலையத்திலிருந்து... வீடு இருக்கும் தூரத்தை கடப்பதுதான். ஆறுமணிநேரம்தான் என நினைத்திருந்து, திடீரென்று பத்துமணிநேரம் ஆனால்...?
'இதோ வந்துட்டிருக்கேன்...', 'இதோ வந்துட்டேன்...', 'இன்னும் கொஞ்ச நேரம்தான்...', 'நெருங்கிட்டேன்...' என்று தன் இனிய குடும்பத்தாரிடம் சொல்லிக்கொண்டே பொறுமையாக பிரயாணித்துக்கொண்டு இருப்பதுதான் செம அவஸ்தை.
அனுபவித்துப்பார்த்தவர்களுக்குத்தான் அது புரியும்.
பதிவில் இல்லாத உயிரோட்டம் உங்கள் பின்னூட்டத்தில் உள்ளது.
அப்புறம், உங்கள் 'அவசரத்துக்கெல்லாம்' பாலம் கட்ட முடியாது சார்.
வருக. என் பிளாகில் வந்த முதல் அனானி...!
என் அவசரம் மட்டுமா? ஐந்து மாவட்ட மக்களுக்குமான அவசரம் அனானி சார்/மேடம்...!
//பதிவில் இல்லாத உயிரோட்டம் உங்கள் பின்னூட்டத்தில் உள்ளது//---இருக்கலாம்.
பதிவு எழுதுவதில் ஒருமாத அனுபவம் மட்டுமே. பின்னூட்டம் போடுவதில் இரண்டு வருடத்துக்கும் மேல் அனுபவம். எனினும்... இனி பதிவிலும், நீங்கள் எதிர்பார்க்கும் உயிரோட்டம் இருக்கும்படி அமைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்தான்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
கும்பகோணத்தையும் சென்னையையும் இணைக்கும் அணைக்கரை பாலம் சீக்கிரம் கட்டப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏனெனில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் அந்த பாலம் உடைந்ததால் நாங்களெல்லாம் இப்போது ஈசிஆர் வழியை உபயோகிக்கிறோம். ஈசிஆர் வழி பயணம் சுகமாகவும் இருக்கிறது.
//பதிவில் இல்லாத உயிரோட்டம் உங்கள் பின்னூட்டத்தில் உள்ளது.
அப்புறம், உங்கள் 'அவசரத்துக்கெல்லாம்' பாலம் கட்ட முடியாது சார். //
அனானி இந்த வலைப்பூவில் முந்தைய இரண்டு பதிவுகளையும் படித்தீர்கள் என்றால் உயிரோட்டம் இல்லை என்று சொல்ல மாட்டீர்கள்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வைக்க தான் நாம் அரசை தேர்வு செய்கிறோம். எனவே தேவைக்கேற்ப துரிதமாக அரசு செயல்பட வேண்டும். ஆனால் அணைக்கரை பால விவகாரத்தில் அரசு இயந்திரம் ஆமையை விட மெதுவாக நகர்கிறது என்பது தான் இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டு. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அப்ப எல்லாரும் நம்ம ஏரியா தான்னு சொல்லுங்க.
ஆஷிக் பாய் வருசத்துல ஒரு நாள் போரவங்கலே இப்டி சொன்ன, டெய்லி போற மக்க எவ்ளோ கஷ்ட படுவாங்க.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஏன் சென்னைக்கி டிக்கேட் எடுத்தீக ஏர்லங்கா திருச்சிக்கி
வருகிறது திருச்சியிலிருந்து ஊரு பக்கம் தானே
நான் சென்ற முறை ரியாத் to திருச்சி வந்தேன்
காலை 9மணிக்கி திருச்சியில் இறங்கி மதியம் 2மணிக்கி
சாப்பட்டுக்கு வீட்டுக்கு போயிட்டேன்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருக சகோதரர்கள் ஷேக்தாவூத், fa மற்றும் ஹைதர் அலி அவர்களே...
இப்பதிவின் நோக்கம் : 'இலகுவாக என் ஊருக்கு செல்ல வழி என்ன' என்பதல்ல. மாறாக, இத்தடம் பூர்த்தியடைய வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட இந்த காலதாமதம் மக்களுக்கு சோகமானதும் கஷ்டமானதும் என்பதால்- அதை இப்பகுதி மக்களில் ஒருவன் என்பதால்- ஒரு பதிவர் என்பதால்- அத்துன்பம் அனுபவித்தவன் என்பதால்- இப்பதிவு அவசியாயிற்று.
கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்
http://newstbm.blogspot.com/2010/10/blog-post_694.html
அணைக்கரை பற்றி தெரியாத சில தகவல்களை தெரிந்து கொண்டேன் சகோ.
என்னுடைய ஆதங்கமும் இதுவே.
சகோ பி.ஏ. ஷேக்தாவுது சொன்னது:
//ஆனால் அந்த பாலம் உடைந்ததால் நாங்களெல்லாம் இப்போது ஈசிஆர் வழியை உபயோகிக்கிறோம். ஈசிஆர் வழி பயணம் சுகமாகவும் இருக்கிறது.//
ஈ.சி.ஆர் பயணத்தில் எப்படி சுகங்கள் இருக்கிறதோ அதைப் போலவே அந்த சாலை பயணம் பாதுக்காப்பற்றது என்பதும் உண்மை.
இதை பற்றி சகோ ஜாக்கி சேகர் எழுதிய பதிவு
http://www.jackiesekar.com/2010/11/blog-post.html.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ஹாஜா மைதீன்,
நீங்கள் சொல்வது போன்று ஈ சி ஆர் வழி பயணம் அதிக ஆபத்துக்கள் நிறைந்தது தான். பெரிய வண்டியில் (அதான் பேருந்தில்) பயணம் செய்வதால் விபத்தின் அளவு கார் பைக்கை விட கம்மி. ஆனால் கண்டிப்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு குறிப்பாக ஈ சி ஆர் வழியில் இருக்கிற அனைத்து கிராமங்களும் நகரங்களும் திரண்டு பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தினால் விடிவு காலம் சீக்கிரம் கிடைக்கும் என்று தோன்றுகிறது.
@ மு.ஜபருல்லாஹ் said...
தங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி.
தஞ்சை மாவட்டம், நீலத்தநல்லூரையும், அரியலூர் மாவட்டம், மதனத்தூரையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 36.5 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலமும் சென்ற ஆண்டு பெய்த கனமழையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று சென்றமாதம் செய்தியில் வந்தது. அத்தோடு கோடிரூபாய் பெறுமானமுள்ள கட்டுமானப்பொருட்களும் ஆற்றோடு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு (?!?!?) விட்டதால், மேலும் ஒரு வருடம் ஆகும் என்று சம்பந்தப்பட்ட பொறியாளர் பேட்டி அளித்திருந்தார்.
ம்ம்ம்ம்....பார்ப்போம்... எப்போது கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படுகிறது என்று.
@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சகோதரரே.
உங்கள் சுட்டியை படித்தேன். ஒருவழிப்பாதையில் செல்வது எப்போதுமே ஆபத்து நிறைந்ததுதான்.
நான் இம்முறை திரும்பி வரும்போது சகோ.ஷேக்தாவுத் கூறியபடி இ.சி.ஆர் சாலையில்தான் (ராஹத் டிராவல்ஸ்) வந்தேன். இடையில் அவ்வப்போது விழிக்கும்போதெல்லாம் சுத்தமாக சாலை வெறிச்சோடித்தான் இருந்தது. அந்த திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை போல டிராபிக் இல்லை. நல்ல அனுபவம்.
வ அலைக்கும் ஸலாம் சகோ.ஷேக்தாவுத்,
முந்திய என் பின்னூட்டத்தையும் படிங்கள்.
உங்கள் ஐடியாவிற்கு நன்றி.
சென்னைவரை தனி வாகனத்தில் வரலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இ.சி.ஆர் சாலையில் செல்ல வேண்டுமானால் முன்னாலேயே பணம்கட்டி பெர்மிட் வாங்க வேண்டுமாம். அதனால் பேருந்தில் வந்தாயிற்று. பேருந்துப்பயணம் நல்ல பாதுகாப்பானதுதான்.
தோழர்களே,
சென்னையில் மெட்ரோ ரயில் 14500 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது.
தற்போதைய முதல்வரின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் சுமார் 11000 (பதினோரு ஆயிரம் ) கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
ஆனால் செங்கல்பட்டு - திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழக அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ?
அல்லது மதிய அரசாங்கத்தை போராடி கேட்டு பெற முடியாதா ??
தன் குடும்ப வருவாய்க்கு டெல்லி சென்று பல நாட்கள் தங்கும் கருணா , விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை பாதைக்கு பணம் பெற நடவடிக்கை எடுக்க முடியாதா ?
கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?
சேது திட்டம் - வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது போக மீதம் தலைவர் கருணா குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?
-- நெல்லைக் குமரன் --
@Venkatசரமாரியான வினாக்கள். பணமிருந்தால் மட்டும் போதுமா...? மனமிருந்தால்தான் மார்க்கமுண்டு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!