அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, April 9, 2013

30 தர்கா வழிபாடு எனும் மூடநம்பிக்கை ஒழிக

“பிராத்தனையும் வணக்கமாகும்" :- நபி(ஸல்) (அபூதாவூத், திர்மிதி)
“அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத்தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” :-இறைவன்  (குர்ஆன் 31:30)
சாலையோர கி.மீ. கல்லை எல்லாம் கடவுளாக வணங்குவது அறியாமை என்றால்...  ஒரு மனிதரை அடக்கம் செய்து அதற்கு மேல் கல்லை கட்டி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்திப்பதும் அறியாமேயே..! அந்த கல்லுக்கு பக்கச்சுவரும் கூரையும் போட்டுவிட்டால் அதுதான் தர்காஹ்..! தர்கா வழிபாடு தாங்கொணா வழிகேடு..!
 
நன்றி : ஏகத்துவ அழைப்பாளன்.ஹுசைன்


பிரபலமான பெரிய தர்கா எனில், அங்கே முஸ்லிம் அல்லாத மாற்று மத மக்களும் ஏராளமாக வருவது சகஜம். அப்படியான ஒரு தர்காவுக்கு காரில் வந்து இறங்கி, அங்கே தாடி தொப்பி பச்சை ஜிப்பா வெள்ளை கைலி சகிதம் உட்கார்ந்திருந்த பெரியவரிடம், ஒரு சர்க்கரை பொட்டலம், ஊதுபத்தி பாக்கெட், மூன்று வாழைப்பழம் எல்லாம் தந்து ஃபாத்திஹா ஓத சொல்லி கேட்டு... நேர்ச்சை தாயத்து வாங்கி கட்டி, தர்ஹாவில் அங்க பிரதட்சணம் எல்லாம் செய்து, உண்டியலில் பயக்தியுடன் காணிக்கை செலுத்திவிட்டு, நீண்ட நேரம் சமாதியை கண்மூடி கும்பிட்டு பிரார்த்தித்துவிட்டு, அங்கே ஓரமாக ஒரு கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை நெற்றியில் திருநீறு போல பூசிக்கொண்டு வந்த  ஒரு படு டீக்காக ட்ரெஸ் போட்டிருந்த மாற்று மத நண்பரிடம்... மெல்ல பேச்சு கொடுத்தேன்...... 
.
"அண்ணே... நீங்க உங்கள் மதத்து கடவுளை நம்பவில்லையா...?"
"இதென்ன கேள்வி தம்பி. நான் எனது மதத்து கடவுளையும்தான் நம்புகிறேன்"
"அப்படின்னா... உங்கள் கடவுள் நம்பிக்கை, ஒரு கடவுள் கொள்கையா, பல கடவுள் கொள்கையா..?"
"ம்ம்ம்.... பல கடவுள் கொள்கை"
"ஒகே. உங்கள் கடவுள்களிலேயே  அதிக சக்தி கொண்ட மிகப்பெரிய கடவுள் யார்..?"
"மனிதன் உட்பட இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து ஆள்பவர்- பிரம்மா"
"ஒகே. அப்போ, இந்த தர்காவில் அடங்கி உள்ள அவுலியாவையும் கடவுளாக நம்புகிறீர்களா..?"
"ஆம்"
"அப்படின்னா இரண்டு கடவுள்கள் ஓகேவா..?"
"எங்களுக்கு நிறைய கடவுள்கள் ஓகேதான்னு முன்னமே சொன்னேனே..!"
"ஆமா... ஆமா... சொன்னீங்க. அப்போ, இங்கே தர்காவில் வந்து அவுலியாவிடம் பிரார்த்தித்தால், நீங்க அவரது வல்லமைக்கு செய்த இழுக்கு என்று உங்கள் பிரம்மா உங்களை கோவிச்சுக்க மாட்டாரா..?"
"மாட்டார்"
"அப்போ இந்த இரண்டு கடவுள்களில் யார் பெரியவர் என்று நினைக்கிறீர்கள்..?"
"ம்ம்ம்... வந்து... எதுக்கு இதை கேட்கிறீங்க..?"
"சும்மா சொல்லுங்க அண்ணே. இரண்டில் பெரியவர் யார்..?"
"இந்த அவுலியாவை விட அந்த கடவுள் பிரம்மாதான் பெரியவர்"
"அப்போ, அவரிடம் உங்கள் பிரார்த்தனையை கேட்காமல் இவரிடம் வந்து கேட்பது ஏன்..?" 
"நீங்க மட்டும் இவரிடம் கேட்கலாமா ..?"
"இல்லை... நான் என் 'ஒரே ஒரு இறைவன்' (அல்லாஹ்) இடம் மட்டுமே பிரார்த்திப்பேன். ஏனெனில் எனக்கு ஒரே கடவுள் கொள்கைதான், வேறு யாரையும் குட்டிக்கடவுளாகக்கூட  நினைக்கக்கூட மாட்டேன். ஸோ, இந்த மாதிரி தர்காவுக்கெல்லாம் நான் போறது இல்லை...."
"நீங்க என்றால் நீங்க இல்லைங்க... உங்க ஆளுங்க நிறைய பேரு இங்கே வந்து துவா கேட்கிறாங்க, நான் பார்த்து இருக்கேன்... அதோ பாருங்க..."
"இருக்கலாம், அவர்கள் செய்வது தவறு. ஏனெனில், 'வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரிய கடவுள் அல்லாஹ் தவிர வேறு கடவுளே இல்லை' என்று உறுதி சொல்லி முஸ்லிம் ஆகிவிட்டு அதற்கு அப்பட்டமாக முரண்படுகிறார்கள். அது தவறு"
"ஓஹோ"
"எனது கேள்விக்கு என்ன பதில்..?"
"என்ன கேள்வி..?"
"உங்க பெரிய கடவுளிடம் போய் உங்கள் வேண்டுகோளை கேட்காமல், இந்த மாதிரி சின்ன கடவுளிடம் வந்து நீங்கள் துவா கேட்பது... லாஜிக்கா பொருந்தலையேண்ணே..?"
"ம்ம்ம்..."
"அப்படி பார்த்தால்.. உங்க பிரம்மாவால் உங்களுக்கு செய்ய முடியாததை இந்த தர்காவில் எப்போவோ இறந்து போய் அடக்கப்பட்டு இருக்கும் மனிதர் செய்து விடுவார் என்று நம்புகிறீர்களா..?"
"இல்லை, அவரிடம் கேட்டுப்பார்த்து நடக்காததால்... இங்கே தர்ஹா வந்தேன்"
"அப்படின்னா...  பிரம்மாவின் விருப்பத்துக்கு மாற்றமாக இருந்தாலும்... அவரை எதிர்த்துக்கொண்டு அவரை வெற்றிக்கொண்டு உங்களுக்கு இந்த தர்காவில் அடங்கி இருக்கும் பெரியவர் நல்லது செய்து விடுவாரா..? அப்படின்னா இவரல்லவா உங்கள் நம்பிக்கை படி பிரம்மாவை விட ஆகப்பெரிய கடவுள்..?"
"ம்ம்ம்... இந்த பெரியவர் செய்ய மாட்டார்தான். பிரம்மாதான் எனக்கு ஆகப்பெரிய கடவுள்..!"
"அப்போ, எதுக்கு இங்கே வந்து பிரார்த்தித்து ஃபாத்திஹாவுக்கு செலவு செய்து பணத்தை வேஸ்ட் பண்றீங்க..?"
"ஹி...ஹி... நீங்க சொல்றதும் லாஜிக்கா சரிதான். இவரிடம் நான் பிரார்த்திப்பது ஆழ்ந்து யோசித்தால் தப்புத்தான்... இனி இந்த தர்கா பக்கம் வர மாட்டேன்"
"வெறி குட். ஆனால்... வேறு தர்காஹ் பக்கம் போவீங்களோ..?"
"இல்லை, எந்த தர்கா பக்கமும் இனி போக மாட்டேன்"
"அப்போ, வேறு சிறு சிறு இந்து கடவுள்களின் கோயில் பக்கம் போவீங்க..?"
"ம்ம்ம்... போவேன்"
"அப்போ, அவங்க எல்லாம் பிரம்மாவை எதிர்த்து அவரது விருப்பத்துக்கு எதிரா உங்களுக்கு நல்லது பண்ணுவாங்களா ..?"
"....................."
"சொல்லுங்க அண்ணே."
"அப்போ, பிரம்மாவை தவிர வேறு கடவுளிடம் கோரிக்கை வைக்க கூடாதா..?"
"என்னிடம் கேட்டால்...? நீங்க தர்காஹ் விஷயத்தில் ஒத்துக்கிட்டதுதானே..? தர்காஹ் அவுலியா இடத்தில் இப்போது உங்க குட்டி குட்டி தெய்வங்களை வைத்து அதே கேள்வியை உங்களிடம் அதே லாஜிக்கில் கேட்கிறேன்"
"ம்ம்ம்... எனக்கு பிரம்மா மட்டும்தான் ஒரே கடவுள்"
"ஆஹா...! இப்போ நீங்க ஒரே கடவுள் கொள்கைக்கு வந்துட்டீங்க..?"
"ஆமாம்... வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரிய கடவுள் ஒன்றுதான் இருக்க முடியும்"
"நன்றி அண்ணே..! நானும் கொஞ்சம் முன்னாடி இதைத்தான் சொன்னேன்..! நீங்கள் இப்போது புரிந்து கொண்டதைத்தான்... முஸ்லிம்களில் சிலர் இன்னும் புரியாமல் உள்ளனர். அவர்களைத்தான் தர்ஹாவில் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இறைவன் நாடினால்... உங்களைப்போலவே அவர்களும் ஒரே இறைவனை மட்டுமே வணங்கி பிரார்த்திக்க வேண்டும் என்று புரிந்து கொண்டபின்னர்... நாளடைவில்... இந்த இடம் ஆளரவம் அற்ற பாழடைந்த இடமாகி தானாகவே இடிந்து அழிந்து மண்ணோடு மண்ணாகி மட்கி தடயமின்றிப்போய் விடும்..!"
---------------------------------------------------------------
டிஸ்கி : சுமார் 10 வருடம் முன்னர் ஒருமுறை தூத்துக்குடியில் இருந்து அம்பாசமுத்திரத்துக்கு ஒரு நண்பனின் திருமணத்துக்கு நான்கு பைக்கில் எட்டு பேர் சென்று விட்டு திரும்பும் வழியில் மேலப்பாளையத்தில் ஒரு தர்கா அருகே நண்பனின் பைக் பங்க்சர். வீலை கழட்டி வேறு ஒரு பைக்கில் எடுத்துச்சென்று வல்கனைசிங் பண்ணிவிட்டு வரும் வரை காத்திருந்த நேரத்தில்... அந்த மாற்றுமத சகோதரரின் செயலை தர்ஹாவில் கவனித்துவிட்டு... பரஸ்பர அறிமுகத்துக்கு பிறகு (அண்ணன் மத்திய அரசு அதிகாரி) அவரோடு உரையாடியதன் சாரமே... நீங்கள் மேலே படித்தவை..!
---------------------------------------------------------------

எனக்கு அப்போது புரிந்தது என்னவென்றால்... 'முஸ்லிம்களை விட, முஸ்லிம் அல்லாதவர்களை மிக எளிதாக சில நிமிட விவாதத்தில் தர்கா வழிகேட்டில் இருந்து மீட்டு எடுத்து விடலாம் போல' என்று..!

ஆனால்... இவ்வளவுக்கும்... தர்காவுக்கு எதிராக மிகத்தெளிவான கிரிஸ்டல் கிளியர் குர்ஆன் வசனங்கள் ஹதீஸ் ஆதாரங்கள் இருந்தும் கூட... ((இது பற்றி விரிவாக காண விரும்புவோர் அடுத்து வரும் சாளரத்தினுள்ளே நுழைந்து ஸ்க்ரால் செய்து படித்துக்கொள்க சகோ..! வேண்டாதவோர் சாளரத்தை தாண்டிச்செல்க)) ...முஸ்லிம்களை அந்த வழிகேட்டிலிருந்து மீட்டெடுப்பதே மிகவும் கடினமாக இருந்து வருகிறது..!

'தர்காஹ்' : இது சரியா.. தவறா..?  

தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் 
( Persian: درگه ) அதாவது, ஒரு கட்டிடம் என்பதுவே இதன் பொருள்.  இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீக நாட்டைச்சேர்ந்த சூஃபிக்கள் தான். மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. 
தர்காஹ் வழிபாடு தகா வழிகேடு..!
---------
இறந்தவர்களை அடக்கிய கப்ருகளை மஸ்ஜித் ஆக்குவோரை அல்லாஹ் சபிக்கிறான்.
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர் (நூல்: புகாரி)
தர்காஹ் போவது பற்றி... பிறகு, அதற்கு முன்... கப்ரை கட்டலாமா..?
கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும்,அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி.
இஸ்லாத்தில் தர்காவை கட்ட அல்ல... இடித்து தரை மட்டமாக்கவே ஆதாரம் உள்ளது..!
 உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.

நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312

இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகள் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)
அவுலியாவிலேயே மிகப்பெரிய அவுலியா... அவர்களின் கப்ர் பற்றி... உன்னதமான நபிமொழி
எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.
கப்ருகள் கட்டப்பட்ட இடங்களில் உட்காருவதற்குக் கூட நபிகளார் (ஸல்) தடை செய்தார்கள்
கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக, “அபீமிர்சத்” என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம்
நபிகள் (ஸல்) சஹாபா பெருமக்களிடம் கேட்ட கேள்வியை பாருங்கள்
நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் நீ அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். ஆதாரம் : அபூதாவூத் அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத்(ரழி) பக்கம் : 298 பாகம் 1
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறையையும் (கழிவறை) குளியலறையையும் தவிர அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: அஹ்மத் (11801) 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: அபூ தாவூத் (1746)
அருமைச்சகோதரரிகளே நபிகள் (ஸல்) அவர்களின் சாபம் உங்களுக்கு வேண்டுமா?
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.
அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறுதான் கூறுகிறான்
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்என்னையே நம்பட்டும்.அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக. 
(அல்குர்ஆன் 2: 186)
 இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான்நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்குபதிலளிப்பேன். நிச்சயமாகஎன்னை வணங்குவதை விட்டும் பெருமைஅடிக்கிறார்களேஅத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம்புகுவார்கள்.  
(அல்-குர்ஆன் 40: 60)
 அல்லாஹ் என்ன கூறுகிறான் கேளுங்கள்
 மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. 
(குர்ஆன் 35:22)     

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!   (குர்ஆன் -10 : 18)
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், மதகுருமார்களையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்’. 
(அல்குர்ஆன்-9:31)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். 
(அல்குர்ஆன் 39 : 3)
  நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சிததப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
 (அல்குர்ஆன் 18 : 102)
 நபிகள் (ஸல்) கூறினார்கள்
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும்கெட்டவர்கள்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி மற்றும்முஸ்லிம்.

பிரார்த்தணை பற்றி இஸ்லாம் 

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:

'நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன்;
ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை' என்று கூறி நீங்கள்அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹுல் புகாரி 6340 


சப்போஸ்... பிரார்த்தித்து அது நிறைவேறவே இல்லை என்றால்... மறு உலகில் நன்மையாக அது நம்மை வந்தடையும். இவ்வுலகில் அது நமக்கு இல்லாமல் இருப்பதையே இறைவன் விரும்பி இருக்கிறான் என்று பொறுமையாக அமைதியாக இருக்க வேண்டும். 

விரைவில் கிடைக்கக்கூடிய (உலகப்) பலன்களை ஒருவன் விரும்புகிறான் எனில் அவனுக்கு இங்கேயே கொடுத்து விடுகிறோம், நாம் நாடுவதை! நாம் நாடுபவருக்கு மட்டும்! 
( குர் ஆன் - 17: 18)

இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது எவ்வாறு?
இறுதியாக அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை பரிபூரணமாக்கி இனி இதுதான் மார்க்கம் என்பதை வரையறுத்துத்தந்தான்! ஆதாரம் வேண்டுமா? பாருங்கள் கீழே உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை! 
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கிவிட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம்மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” 
(அல் குர்ஆன் 5:3)
இனி, இதில் யாரேனும் தர்ஹாவை மட்டுமல்ல வேறு எதையேனும் புகுத்த இடமுள்ளதா..?
 “(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்கு உரிய மற்றொருவரும் இருப்பதாக நீங்கள் சாட்சி கூற முடியுமாஎன்று கேளும். அப்படி நான் சாட்சி கூற மாட்டேன் என்று நீரும் கூறும்” (அல்குர்ஆன்: 6:19).

 لا اله الا الله محمد رسول الله



தமீஈழகத்து தர்ஹாக்களை பாஆர்த்து வரூ...வோம்...   
தூஊயவழி காஆட்ட சொல்லி கேட்டு வருவோம்...   
இறைவணக்கம் புரீஈபவர்க்கு எளீஈதில் நடக்கூஊம்   
இரசூல் நபி நாஆயகத்தின் ஆஆசி கிடைக்கும்.  

இப்பாடலும்.....   

அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் 
ஆன்மாவுக்கே சுகம்சுகம்   
எவருக்குமிதிலே சந்தேகம் வேண்டாம்   
ஏற்றுக்கொண்டோர்க்கே ஜெயம் ஜெயம்   
ஏற்றுக்கொண்டோஓர்க்கே ஜெயம் ஜெயம்  

இப்பாடலும்......   

பாடாத முஸ்லிம் வீடுகளே 80-களில் இல்லை எனலாம். வெள்ளிக்கிழமை காலை கட்டாயம் டேப் ரிக்கார்டர் மேற்படி பாடல்கள் காயல் ஷேக் முஹம்மத் குரலில் ஒலித்தே தீரும்..!   

"அடடே... இப்படி எல்லாம் பாடல்கள் இருந்ததே எங்களுக்கு தெரியாதே, கேட்டதே இல்லையே" ...என்று இன்று 90-களில் பிறந்தவர்கள் சொல்வீர்களாயின்....  அதற்கு காரணமானவர்களில் மிக முக்கியமானவர் மவுலவி சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள்தான்..!    

தமிழகத்தில் திரு.ஈ.வே.ரா.பெரியார் அவர்களுக்கு இந்துக்கள் மத்தியில் மூட நம்பிக்கை ஒழிப்பில் எந்த அளவுக்கு பங்கு உள்ளதோ அதை விட அதிக மடங்குப்பங்கு, சகோ.பிஜே அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் ஹதீஸை எடுத்து சொல்லி தர்கா வழிபாடு போன்ற எண்ணற்ற மூட நம்பிக்கைகளை ஒழித்ததில் உள்ளது என்றால் அது மிகை அல்ல; வரலாறு..!

நான் அறிந்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுமைக்கும் தெரியும்படி, முதன் முதலில் தர்ஹாவை அதி தீவிரமாக 'ஷிர்க்' என்று பகிரங்கமாக எதிர்த்தவர் அவர்தான். அவர், ஒரு சிலருடன் சேர்ந்து... அப்போது தமிழகத்தின் மிகப்பெரும் மார்க்க அறிஞர்களின் ஒன்று திரண்ட தலைமையில் நடந்த மாபெரும் தஞ்சை வலிமார்கள் மாநாட்டை எதிர்த்து துண்டு பிரசுரம் வெளியிட்டதில் 86-ல் ஆரம்பித்த இந்த தர்கா மூட நம்பிக்கை ஒழிப்பு சீர்திருத்தம்... அல்ஹம்துலில்லாஹ்...   இன்று 'தர்ஹா' 'அவுலியா' 'ஹத்தம்' 'ஃபாத்திஹா' 'சந்தனக்கூடு' 'கந்தூரி' 'உரூஸ்' 'கொடியேத்தம்' என்று வாயை திறக்கவே, அந்த பக்கமாக திரும்பக்கூட  பெரும்பாலானோர் இன்று நாணுகிறார்கள்.   

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால்... மக்களின் மூடநம்பிக்கையை மூலதனமாக்கி இன்றைய தேதியில் உழைக்காமல் குறுக்கு வழியில் தர்கா கட்டி ஆங்கே ஓர் உண்டியல் வைத்து விளம்பரம் செய்து வருஷத்துக்கு பல விழா நடத்தி அதன் மூலம் எல்லா வகையிலும் பணம் பண்ண துடிப்போரின் 'ச்சீப் பிஸினஸ் செண்டர்கள்'தான் தர்கா..!

இன்று தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் மிக தீவிரமாக செய்து வரும் 'தர்காஹ் வழிபாடு எதிர்ப்பு' இந்த நிலையில் வீரியமாக தொடர்ந்தால் நம் தலைமுறை காலத்திலேயே தர்காஹ் என்பதே என்னவென்று தெரியாத நிலை உருவாகும்... இன்ஷாஅல்லாஹ்...!..

30 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...