அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, March 30, 2013

5 நம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..?



கொலைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் மரணதண்டனை என்பது சரியான சட்டம்தான், அப்போதுதான் அக்குற்றம் செய்வோரின் மனதில் பயத்தை உண்டாக்குவதன்மூலம் அக்குற்றங்கள் குறையும், பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதியாகவும் அமையும் என்கிற வாதமும் சரியே..! இதை அப்படியே 100% ஏற்கிறேன்..!

ஆனால்... நம் நாட்டில் கொலைக்கு மரண தண்டனை சட்டம் பல்லாண்டுகளாக இருந்தாலும்... கொலைகள் ஏன் குறையவில்லை..? எப்படி அதிகரிக்கிறது..? எதற்கு மக்கள் மனதில் பயம் வரவில்லை..?

பாலியல் வல்லுறவுக்கு புதிதாக மரண தண்டனை சட்டம் வகுத்தாலும்... பாலியல் வல்லுறவு குறையுமா..? அல்லது கொலை போலவே அதுவும் கூடுமா..?

நம் நாட்டில் மரண தண்டனையே கூடாது என்று போராடுவோருக்கும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போருக்கும் இதில்   ஒரு தெளிவான புரிதல் அவசியம் வேண்டும்.  அதை நோக்கியே இப்பதிவு..!


கொலைக்கு மரணதண்டனை எனும் ஆகக்கடுமையான அதிகபட்ச தண்டனை சட்டத்தில்... பாரபட்சமின்றி 'உண்மையாக விசாரித்து',   'நீதியான முறையில்', கொலைக்குற்றவாளிகளிடம் 'நியாயமாக' அச்சட்டத்தை ஓர் அரசு அமல்படுத்தாவிட்டால்... சமூகத்தில் அதன் விளைவு மிகமிகக்கொடூரமாகத்தான் இருக்கும்..!

மும்பை - கோவை குண்டு வெடிப்புக்கொலைகளில் மரண தண்டனை தீர்ப்பு வருகிறது. மற்ற குண்டு வெடிப்புகளுக்கு அதே தீர்ப்பு வருமா..? கொலையாளிகள் தானாக இறக்கும் வரை வேண்டுமென்றே காலதாமதமா..?

மும்பை 26/11 க்கு சட்டப்படியும், பாராளுமன்ற தாக்குதலுக்கு சட்டத்துக்கு புறம்பாகவேனும் மரண தண்டனை தீர்ப்பு வந்து... அவை ரகசியமாகவேனும் விரைந்து நிறைவேற்றப்பட்டு விடுகிறது.  ஆனால், பாகல்பூர், அஸ்ஸாம், பஞ்சாப், மும்பை, கோவை, குஜராத், ஒரிஸ்ஸா கலவரங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கானவர்களுக்கான நீதியாக... அப்படியான அதே தண்டனை கொலையாளிகளுக்கு வருவதில்லை..! விதிவிலக்காக... குஜராத் கவுசர் பானு கொலையாளிக்கு மட்டும் தந்தது ஆயுள் தண்டனைதான். மரண தண்டனை அல்ல..!

மருத்துவ கல்லூரியில் படித்த பெண் என்பதாலும், அதுவும் குற்றச்சம்பவம் நடந்தது டெல்லியில் என்பதாலும்...  அப்பெண்ணுக்காக போராட்டம்... புதிய மரண தண்டனை சட்டம்... என்பதெல்லாம் சரிதான். நன்றி..! நல்ல மாற்றம்..! வருக..! ஆனால், அதற்கு முன்னர், டெல்லிக்கு பக்கத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில்  சுமார் 14 தலித் பெண்களின் மீது ஆதிக்க சாதியினரால் நடந்த பாலியல் வல்லுறவுகளுக்கு 'அது போன்ற மெழுகுவர்த்தி போராட்டமும் இல்லை... குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கோரலும் இல்லை' என்ற நம் நாட்டின் பாரபட்ச நிலைதான் மரண தண்டனை சட்டத்தை அதன் நோக்கம் நிறைவேறாமல் மண்ணைக்கவ்வ வைக்கிறது..! பாலியல் வல்லுறவு குறையாமல்... இதிலும் மண்ணைக்கவ்வ வைக்கும் என்பது உறுதி..!

ஏன் இந்த நிலை என்றால், இப்படியாக... அரசின் 'நீதியான-நியாயமான சட்ட அமலாக்கம்' சமூகத்தில் இல்லை என்றால்... தண்டனைகள் எல்லாம் ஒரு சாராருக்கு மட்டுமே என்றால்... மரணதண்டனை உட்பட எந்த சரியான சட்டமும் குற்றங்களை குறைக்காது..! மாறாக அக்குற்றங்களை இரு சாராரிடமும் அதிகரிக்கவே செய்யும்..!

பணம், பதவி, பெரும்பாண்மை பலம், ஆதிக்க சாதி இனம், மதம் என்ற அடிப்படையில் இச்சட்டம் பாரபட்சமாக அவர்கள் மீது அமலாக்கப்படாமல் அரசின் மயிலிறகால் குற்றவாளிகளில் ஒரு சாரார் வருடிவிடப்படும் போது... அங்கிருந்து கொலைக்குற்றவாளிகள் மென்மேலும் அதே குற்றத்தை துணிச்சலாக செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத்தான் நாம் நம் நாட்டில் காண்கிறோம்..!

இந்நிலை தொடருமானால்....

பணமில்லா, பதவியில்லா, பலமற்ற சிறுபாண்மை, ஒடுக்கப்பட்ட சாதி -மத -இனம் தங்களின் செய்யாத குற்றங்களுக்கும் கூட வேண்டுமென்றே வீண்பழி சுமத்தப்பட்டு  மரண தண்டனைகளை பெற்றுக்கொண்டு இருப்பது தொடர்ந்தால்...? அரசின் இந்த அநீதிகளை எல்லாம்  வேதனையோடு பார்க்கும் இந்த அநியாய பாரபட்ச நீதியின் மீது நம்பிக்கை இழந்து, தானே தனது கையால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் சட்டத்தை மேற்படி சமூக மக்கள் எல்லாருமே கையில் எடுக்க துணிந்து பயங்கரவாதிகளாகி விட்டால்... அப்புறம் எந்த அரசாலும் எத்தகையான கடும் சட்டத்தாலும் குற்றங்கள் நடப்பதை தடுக்கவும் முடியாது. அதன் பின்னர் சமூக அமைதியை தேடி கண்டுபிடிக்கவும் முடியாது..! 

சுயக்கட்டுப்பாடும் தனிமனித ஒழுக்கமும் இல்லாமல்... சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்று புரியாத ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே குற்றவாளிகளை சுயமாக கொலை செய்து செய்து வருவதால்... இதுவரை நாட்டுக்கு பாதகமில்லை. ஆனால்... இது போன்ற பொறுமையற்றவர்கள் அதிகரித்து விட்டால்...? அரசின் அநீதியான அணுகுமுறையினால் அதற்கு ஏற்ற சூழலே தற்போது நிலவியும் வருகிறது..! அதற்குள் எதிர்கால நாட்டின் நலனை பேணும அரசாயின் இதற்கு ஏதேனும் விரைந்து செய்தாக வேண்டும்..! அப்படி செய்யாவிட்டால்...? மக்கள் அப்படியான அரசை உருவாக்க முயல வேண்டும்..! 

எப்படி..?

நியாயமாக நீதியை சகலருக்கும் சமமாக பாரபட்சமின்றி அமலாக்கி செயல் படும் அரசைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..! அதற்கு மக்கள் முதலில்... நீதிமான்களாகவும் நல்லவர்களாக இருந்தாக வேண்டும்..! இனம்-சாதி-மொழி-மதம் பார்த்து தற்போது ஓட்டுப்போடுகிறார்கள்..! இதுதான் ஜனநாயக படுகொலை..! 'தனித்தொகுதி' என்று ஒன்று சட்டப்பூர்வமாக இன்றளவும் நம்மிடையே தேவைப்படுவதே... சமநீதியற்ற மக்கள்சிந்தனை போக்கு எவ்வளவு அநீதியாக பண்படாமல் வக்கிரமாக இன்னும் இருக்கிறது என்பதற்கு தக்க சாட்சி..! 

யாரும் காணாவிட்டால்... CCTV கண்காணிப்பு இல்லாவிட்டால்... ரகசியமாக குற்றம் இழைக்கும்... இறைவன் மீதும் மறுமை நரக வேதனை மீதும் நம்பிக்கை இல்லாத, ஊழல் நிறைந்த, அநீதியான தீய மக்களிடம் இருந்து அநீதியான தீய ஊழல் செய்யும் நபர்களைக்கொண்ட அரசே தேர்ந்தெடுக்கப்படும்..! 

ஏறக்குறைய எல்லா மதங்களும் சொல்லும்... எல்லா தரப்பினரும் ஒத்துக்கொள்ளும்... எல்லாருமே அறிந்த  ஒரே ஒரு சிம்பிள் லாஜிக் ஒன்று நம்மிடம் சரிவர பின்பற்றப்படாமல் உள்ளது..! அது...

"பிறர் உன் விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என நீ கருதுகிறாயோ, அதுபோலவே பிறர் விஷயத்திலும் நீ நட..!"

தீயவர்கள் தீய அரசையே தேர்ந்தெடுப்பார்கள். நல்லவர்கள் நல்ல அரசைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நல்ல அரசை  கொண்டு வர வேண்டுமானால்... மக்கள்தான் முதலில் பிறர்க்கின்னா செய்யா நல்லவர்களாக மாற வேண்டும்..! அதை எப்படி சாதியப்படுத்துவது..? இந்நிலை மாற என்ன வழி..?

மக்கள் நல்லோராக பண்பட்டு விட்டால்... எந்த நல்லவரும், எந்த தொகுதியிலிருந்தும், இனம்- சாதி- மொழி- மதம்- கட்சி ஆகியன கடந்து சுயேட்சையாகக்கூட தீயவர்களை வெற்றி பெற முடியும்..! இப்படி எல்லா தொகுதியிலும் நல்லவர்களே வென்றால்... அவர்கள்... நல்ல அரசைத்தான்  அமைப்பார்கள். நீதியான நல்ல சட்டங்களைத்தான் வகுப்பார்கள். நியாயமான நல்ல அதிகாரிகளைத்தான் நியமிப்பார்கள்..! அந்த அதிகாரிகள்... சகலருக்கும் சட்டத்தை சமமாகத்தான் சமூகத்தில் அமலாக்குவார்கள். சம நீதியை நியாயமுடன் நிலைநாட்டுவார்கள்..! நாடு சுபிட்சம் பெரும். எல்லா நாடும் இப்படி ஆனால்... போரே இன்றி உலகமே சுபிட்சம் பெரும்..!
.
அதுவரை  என்ன செய்யலாம்..?

நம் நாட்டில் 'மரண தண்டனையே கூடாது' என்று போராடுவோரும்... அப்படி போராடுவோரை 'அது வேண்டும்' என கடுமையாக எதிர்ப்போரும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு... சட்டங்கள் சம நீதியுடன் நிலை நாட்டப்பட்டே ஆக வேண்டும் என்று போராட வேண்டும்..! இந்த போராட்ட காலத்தில் அநீதியான மரண தண்டனையை ஒருக்காலும் அனுமதிக்கவே விடக்கூடாது..! இதில் வெற்றி பெரும்வரை சமநீதியில் கோளாறுள்ள மரண தண்டனை சட்டத்தை இடைக்கால நிறுத்தம் செய்ய கோரினாலும் தவறில்லை..!
.
'மரண தண்டனை வேண்டும்' என்று கூறுவோர்... அநீதியான மரணதண்டனை தரப்படுவதை தடுக்க வழியறியாமல்... அப்படி அநீதியான மரணதண்டனை தரப்பட்டவுடன், 'இந்த தண்டனை  அநியாயம்' என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை, 'இவர்களும் அந்த அநியாய கொலைக்கு மறைமுக உடந்தையாகி விடுகின்றனர்' என்பதைத்தவிர..!
.
மரண தண்டனை சட்டம் இருந்தால் மட்டுமே குற்றம் குறையாது. அது ஒழிந்தாலும்   குற்றம் குறைந்து விடாது. பாரபட்சமின்றி சமநீதியுடன் சரியாக விரைவாக நியாயமாக விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டு நேர்மையாக அச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்..! இனி இதற்காக மட்டும் இருக்கட்டும் நம் போராட்டம்..!

டிஸ்கி : இந்தியாவின் மரண தண்டனை சட்டத்தை எதிர்ப்பது இஸ்லாமிய மரண தண்டனை சட்டத்தை எதிர்ப்பதாகாது. அடிப்படையில் இரண்டின் வடிவத்துக்கும் வேறுபாடு உண்டு. நான் இஸ்லாமிய மரண தண்டனை சட்டத்தை அதன் முழுவடிவில் அப்படியே ஏற்று ஆதரிப்பவன்..!

5 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...