அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, May 31, 2012

25 அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

சகோ... இப்படி நீங்களோ நானோ அல்லது எவரா இருந்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே... ஏதோ ஒரு சூழலிலே... யாரோ ஒருத்தரிடமிருந்து... மேற்படி அர்ச்சனையை நாம் எப்படியோ பெற்றிருப்போம்..! இப்போது நம் நினைவை சற்று மெல்ல மீட்டிப்பார்த்தால்... எங்கே, எப்போது, எதற்காக, யார் நம்மை அப்படி கடிந்து கொண்டது என்று நியாபகம் வந்து விடும்..! அதன்படி நியாபகம் வராவிட்டால்... இதோ உங்களுக்காக சில க்ளூஸ்..! இதன்படியும் நியாபகம் வராவிட்டால்... ஸாரி... பதிவுலக சொல்வழக்குப்படி 'இதற்கு கம்பெனி பொறுப்பல்ல'..!
.



"நங்" என்று குட்டை நிலைவாசப்படியில் நெட்டையாக வளர்ந்தவர் நெற்றி  இடித்துக்கொண்ட போது... அந்த வீட்டுக்காரங்க எப்படி சொல்லி இருப்பாங்க...?

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

தரையை பார்த்து நடக்காமல் அங்கே சைடில் போகும் யாரையோ வேடிக்கை பார்த்துக்கொண்டு... ஏதோ யோசனையில் வேகமாக நடந்து... வீட்டு வாசற்ப்படியில் "நொச்" என்று கால் கட்டை விரலில் இடித்துக்கொண்டு... நகம் பேர்ந்த போது... 'தரையை பார்த்து கவனமாக நட'ன்னு முன்பு அப்படி அறிவுரை சொன்னவர்... சொல்லி இருப்பாரே...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

தராசையும் எடை நிறுக்க படிக்கற்களையும் கொண்டுவர சொன்ன முதலாளி வெறும் தராசை மட்டும் கொண்டுவந்து கொடுத்த வேலைக்காரரிடம் இப்படி கடிந்து இருப்பாரே...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

ஆவணங்களுக்கான ஜெராக்ஸ் காபி எனப்படும் படியை இணைக்காமல் வெறும்ம்ம்ம்ம்மனுவை மட்டும் கொண்டு வந்து தந்தவரிடம் அரசு அலுவலர் கத்தி இருப்பாரே இப்படி...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

எப்போதுமே  வேகமாகவும் அவசரமாகவும் மாடிப்படியில் ஏறி இறங்குவதை பார்த்த எவரும் சொல்லி இருப்பார் அப்படி..! என்னைக்கு கேட்டிருக்கோம்..? ஒருநாள் தடுக்கி தட்டுத்தடுமாறி நிலை குலைந்து விழுந்த போது...சொல்லி இருப்பார்களே...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

இப்படித்தான் ஒருமுறை... அந்த பெரிய ஜவுளிக்கடையில் தள்ளுபடி போட்டிருக்காங்க என்ற விளம்பரத்தை நம்பி... ஏகப்பட்ட துணிகளை எடுத்துக்கொண்டு பில் போட்டால்... எல்லாமே அதே விலைதான்..! அப்படியே அதிர்ச்சியாகி... "என்னாச்சுங்க தள்ளுபடியை காணோமே..?" என்றால்... "அதோ... நீங்க ஏறி வந்தீங்களே... கவனிக்கலையா...?" என்று இடம் விட்டு இடம் நகற்ற வசதியான (விமானத்தில் பயணிகள் ஏற அமைத்து இருப்பார்களே... அது போன்ற) வகையில் தள்ளிக்கொண்டு போகும் ஒரு மாடிப்படியை கைகாட்டி... "அதுதான் எங்கள் ஜவுளிக்கடை தள்ளுபடி" என்று அசால்ட்டாக கூறுகிறார்கள். அடப்பாவிகளா... தள்ளுறபடியை... தள்ளுபடின்னு விளம்பரத்தில் போட்டு ஏமாத்திட்டிங்களே........ன்னு சண்டை போடுகையில், என் நண்பர்... சொல்றார்... "நான்தான் அப்பவே சொன்னேனே... விளம்பரத்தில் எத்தனை % தள்ளுபடி ன்னு போடலைன்றதை சொல்லிக்காட்டி... நீயும் அந்த விளம்பரத்த... இன்னொரு தடவை நல்லா படின்னு...."

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

அமோக மகசூல் விளைந்ததால் ஏழைகளுக்கு  படியளக்கும் ஒரு பணக்கார பண்ணை எஜமான், அது சமயம் தன்பணியாள்... அரிசி அளக்கும் படிக்குவளையை மறந்து... அரிசி மூட்டையை மட்டும் கொண்டு வரும்போது... எப்படி சொல்லி இருப்பார்..?

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

ஒழுங்கா பாடங்களை படிக்காமல் பரிட்சையில் முட்டை மதிப்பெண் வாங்கிய மாணவரிடம்... ஆசிரியர் தவறாமல் சொல்லும் 'சொன்னபடி கேளு' வாக்கியம் இதுதானே...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

பல வருடங்கள் அகழ்வாராய்ச்சி  நடத்தி ஒரு பழங்கால உயிரினத்தின் படிமனை கண்டு பிடித்துவிட்டு, அதை அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாக கொண்டு சென்று அருங்க்காட்சியகத்தில் வைக்க பொறுப்பு தரப்பட்ட.... தம் ஜூனியர்... கவனக்குறைவாக அதை கொண்டு செல்லும் வழியில் மூன்று துண்டாக உடைத்து விட்டால்... இப்படித்தானே கடுப்பாவார்...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...
 .
எழுதப்படிக்க  தெரியாத ஒரு பெரியவரிடம் போஸ்ட் மேன், அவருக்கு வெளிநாடு ஒன்றில் லேபராக பணிபுரியும் அவரின் படிப்பறிவு அற்ற மகனிடம் இருந்து வந்த ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைந்த கடிதத்தை கஷ்டப்பட்டு எழுத்தை யோசித்து வாக்கியத்தை அமைத்து ஒவ்வொன்றாக படித்து விஷயத்தை சொல்கிறார்... அப்போது அதில் 'தன்னுடைய உழைப்பு காரணமாக தினமும் உடல் முழுக்க வலி ஏற்படுவதாக' மகன் குறிப்பிட்டு இருக்க... அப்போது அந்த பாமர பெரியவர் எப்படி சொல்லி இருப்பார்... ஐந்தாவது கூட பாஸ் ஆகாத தன் மகனை எண்ணி...

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

இந்த  பக்கத்தில் வரும் 'படி' என்ற வார்த்தை எல்லாம் சிகப்பு போல்ட் ஃபாண்டில் வர வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லி ஒரு தட்டச்சரிடம் மெசேஜ் டைப் அடிக்க சொல்லயிருந்த நபர்... டைப் அடித்தவர் அதை சரியாக உள்வாங்காமல்.... 'படி'க்கு பதில்  'கடி' என்ற வார்த்தையை போல்ட் ஃபாண்டில் அடித்து வைத்திருக்க... இந்த கிண்டலைக்கண்டு டைப் அடிக்க தந்த நபர்... கடுப்பில் அப்படி என்னதான் சொல்லி இருப்பார்...?

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

எல்லாம் நம்ம தமிழ்... சகோ... தமிழ்..!  அதன்... படி என்ற வார்த்தையின் இடத்துக்கு ஏற்ப மாறும் பல்பொருள் செப்படி வித்தைகள்..!




அட..! என்ன சகோ... இவ்ளோ சீக்கிரம் ஸ்க்ரால் பண்ணி... அதுக்குள்ளே இங்கே வந்துட்டீங்களா...??? எப்படி..?  என்ன்ன்ன்ன்னது..? 'பதிவை படிக்கவில்லை'ன்னு பின்னூட்டம் வேற போட போறீங்களா...? உங்கள் கமென்ட் மட்டும் என் பதிவுக்கு இப்படி சம்பந்தமே இல்லாமல் மட்டும் இருந்துச்ச்ச்ச்சு......... அப்புறம்.... நானும் அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கும் சகோ...!

அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு...

25 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...