அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, May 26, 2012

36 கோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents)

முன்குறிப்பு :- இது முழுக்க முழுக்க ஆண்களுக்கான பதிவு..!
.
என் பள்ளி காலங்களிலும் சரி... கல்லூரி காலங்களிலும் சரி... எங்கள் வீடு ர்ர்ர்ரொம்பவே ஸ்ட்ரிக்ட்..! பகலில் சட்டையை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தால் போதும்..... "வேகாத வெயிலில் வெளியே போகாதே...?"(---மை மதர்)  "வெயிலை வீணாக்காமல் விளையாட்டு வேண்டி கிடக்கா...?" (---மை ஃபாதர்) ...என்ற கட்டளைகள் தூள்பறக்கும்..! விடுமுறை நாள் ஆனாலும் கூட... மாலை நான்கு மணிக்கு அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே போகலாம், விளையாட..! இப்படியாக வெயில் படாமல் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள்..!

பின்னாளில்... வேலைக்கு வந்தால்... வாரத்துக்கு ஆறுநாள் தொடர்ந்து  வெயிலில்தான் வேலை..! நிழலின் அருமை அப்போது புரிந்தது..! அது... கோடைகாலம்..! சூடு & ஈரம்... (hot & humid climate) உள்ள நேரம்..! காற்றில் ஈரப்பதம் (humidity)  அதிகம் இருப்பதால் அது வியர்வையை ஆவியாகவே விடாது..! அந்நேரம் வெயிலில் அலைந்தால்... தலையில் இருந்து அருவியாய் வழிய ஆரம்பித்த வியர்வை... உடல் முழுக்க ஓடி எல்லா வியர்வையுடனும்  கூட்டு சேர்ந்து இறுதியில் ஸாக்ஸ் வழியாக ஷூ என்ற கடலில் வந்து கலக்கும்..!

காலை... முதல் மாலை வரை இதுபோல ஈரமாகவே உடை மற்றும் உள்ளாடை இருப்பதால்... ஒரு புதிய பிரச்சினை வந்தது..! Fungal attack..! உடலின் எந்த இடத்தில் உடலுடன் ஒட்டியவாறுள்ள உடை அதிகமா ஈரமாக உள்ளதோ... அந்த இடத்தின் தோல் மெல்லிதானது என்றால்... ஏக சந்தோசம் இந்த நுண்ணுயிரிகளுக்கு..! இந்த அடிப்படையில் இவைகள் நம் உடலில் தேர்ந்தெடுக்கும் முதலிடம்...நமது கால்களுக்கு இடையே உள்ள இருபக்க groin region தான்..! இதுகளுக்கு ரொம்ப சவுகரியமான பிடித்த இடம்..! இவைகள் இங்கே வந்து குடியேறி வாழ ஆரம்பித்து விட்டால்... உடனே அரிப்பு ஆரம்பித்து விடும்..! ஏனெனில்... fungi are decomposers..!  இதுதான் Fungal Infection..!

இந்த காளான்களில் பல வகைகள் இருந்தாலும்... முக்கிய மூன்று மட்டும் அதிகம் பொதுவானவை..! Groin region -இல் தோலில் நீளவாக்கில் வெடிப்பு போல ஏற்படுத்தும் ஒருவகை..! இன்னொன்று... தோலை தீக்காயம் பட்டது போல அரித்து விடும்..! மூன்றாவது வகை.. வியர்க்குரு போல பெரிது பெரிதாக உடையாத வலிக்கும் கட்டி கிளம்பும்..!

இதனால்...கால்களை நேராக வைத்து நடக்கவே முடியாது. அகட்டி அகட்டி நடக்க வேண்டி வரும்..! வலி உயிர் போகும்..! சும்மா இருந்தாலும் அரிக்கும். வெயிலில் அஞ்சு நாள் டெஸ்ட் கிரிக்கெட் மாட்சில் long batting innings ஆடும் சச்சின் போன்றவர்கள் அடிக்கடி Abdomen Guard ஐ சரி செய்வதும்... 'பந்தை பளபளப்பாக்குகிறேன் பேர்வழி' என்று பவுலர்கள் பேண்டில் தேய்ப்பதும்... இதனால்தானோ... என்ற எனது ரூம் மேட்டின் டவுட்டிலும் பாயின்ட் இல்லாமல் இல்லை..!

முகத்துக்கு போடும் பாண்ட்ஸ் பவுடர் இல் ஆரம்பித்து... லைப்பாய்.. டெட்டால் சோப்...என்று போட்டு குளித்து... டிவி விளம்பரத்தில் வரும் itch guard இல் இறங்கி... "மாப்ள. எனக்கும் இந்த பிரச்சினை உண்டுடா.." என்ற நண்பர்கள் அவர்களின் டாக்டர்கள் சொன்ன பிரிஸ்கிரிப்ஷனில் உள்ள எல்லா வைத்தியமும் ஓசியில் செய்து முடித்துவிட்டு... நண்பன் ஐடியாவான... "விக்ஸ் வேபரப் பிளஸ் போட்டு பாரேன்" கூட போட்டுப்பார்த்து... அப்புறம், பக்கத்து வீட்டு தாத்தா சொன்ன பாட்டி வைத்தியம் உட்பட... ம்ஹூம்.. ஒண்ணும் வேலைக்காகவில்லை..!

பிறகு டாக்டர்  கிட்டே போனால்... அவர் நாம் ஏற்கனவே உபயோகித்த  "அதே நண்பன் ப்ரிஸ்க்ரிப்ஷன்"-ஐ கொடுக்க அலுப்பாகிவிடும்..! இப்படியே... யாராவது ஒரு டாக்டர் தீர்வு சொல்ல மாட்டார்களா... என்று அலைந்தால்... ம்ஹூம்..! இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது..! குளிர்காலத்தில் பிரச்சினை சற்று குறைந்தது. மீண்டும் அடுத்த வருடம் கோடை ஆரம்பிக்கும் முன்னரே பிரச்சினை சூடுபிடிக்க... பல மாதமாக எல்லா டாக்டரிடமும் அலைந்து கடைசியில் ஊரில் ஒரே ஒரு டாக்டர் மிச்சம் இருந்தார்..!

இவரிடம் யாரும் வைத்தியம் பார்த்துக்கொள்ள செல்வதில்லை. sick leave -க்கான மெடிக்கல் சர்டிஃபிகேட், ஃபிட்னஸ் சர்டிஃபிகேட், அட்டஸ்டேஷன்   இவற்றுக்கு மட்டுமே மிகவும் பிரபலமான டாக்டர் இவர்..! சரி.. இவரிடமும் சென்றுதான் வருவோமே.. என்று போனேன்..!

உள்ளே சென்றால்.. "ம்ம்ம் எங்கே.. சைன் போடணும்..?" என்று பேனாவை கழட்டி வைத்துக்கொண்டு தயாரானார்..!

(ஐயோ பாவம்.... இப்படியான ஆளிடமா வந்து மாட்டிக்கொண்டேன்...? - என்று நான் நொந்து போக... அட... நம்மிடமும் ஒரு 'சோதனைச்சாலை எலி' வந்து சிக்கி விட்டதே... என்ற மாதிரி அவர் பார்வை என்மீது இருக்க...)

யோசனையில் பேனாவை மூடி பாக்கெட்டில் வைத்துவிட்டு... "ம்ம் சொல்லுங்க... உடம்புக்கு என்ன பிரச்சினை..?" என்றார்..! (கடைசியா இப்படி எப்போ யாருகிட்டே எந்த வருஷம் கேட்டாரோ...)

மேலே பல பாராவில் சொன்னதை சுருக்கமாக ஒரு பாரா அளவுக்கு என் பிரச்சினையை சொன்னேன்..! எத்தனை பேரிடம்தான் இதையே சொல்வது..? ஆனால், அவர் அடுத்து கேட்டாரே ஒரு கேள்வி..!

"என்ன ஜட்டி யூஸ் பண்றீங்க..?" என்றார்..!
(இந்த கேள்வி என்னத்துக்கு..?) "வைக்கிங்" என்றேன்...!

"ஹி ..ஹி.. நான் கம்பெனி பிராண்டை கேட்கலை... மாடல் கேட்டேன்." 

எனக்கு புரியலை. ஏனெனில் இந்த கேள்வி எனக்கு புதிது. திரு திரு என முழிக்க...

"Ok... unbuckle & loose  your pant up to thighs... let me see..."

( ம்ம்ம்... இது வழக்கமான ஒன்றுதானே...! :-) எழுந்து நின்று.. பேண்டை சற்று இறக்கினால்... இவர் என் கிட்டேயே வரவில்லை... இடத்தை விட்டு அவர் எழக்கூட இல்லை..! அடுத்த நொடி... )

"ம்ம்ம்.. போட்டுக்கங்க..." என்று சொல்லிவிட்டார்..!

அப்புறமா சொன்னதுதான்... எனக்கு முற்றிலும் புதிது..!

"நீங்க V- டைப் கட் மாடல்... ஜட்டி யூஸ் பண்றீங்க. அதனால.. உடலில் வழியும் வியர்வையால் அண்டர்வேர் நனைந்து... அது groin region -ஐ ஒட்டி எலாஸ்டிக் வைத்து கவ்விப்பிடித்து இருப்பதால்... அங்கே எப்போதும்.. வியர்வையால் ஈரமாகவே இருக்கும்..! இதுதான் காளான்களுக்கு அவசியம். எனவே.. அந்த இடத்தில் ஈரம் சேர அனுமதிக்க கூடாது. இதுதான் நமது லட்சியம்..!"

(அப்படீன்னா அண்டேர்வேர் போடக்கூடாதுன்னு சொல்லப்போறீங்களா டாக்டர்..? இதுதான் சொல்லவந்த லட்சியமா...? --இப்படி கேட்க நினைத்தேன்... ஆனால்... அவர் எனக்கு பேச கேப் விடாமல் தொடர்ந்தார்...)

"இப்போ... ஏற்கனவே அந்த இடத்தில் உள்ள தோல் ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பதால்... இந்த வகை V- டைப் கட் மாடல் ஜட்டியானது... form ஆகும் புதிய மெல்லிய தோலையும் உருக்குலைத்து ரணப்படுத்தி....  புண்ணை காயவிடாமல்... செய்து கொண்டு இருக்கும்..! இதுவும்... fungus களுக்கு ஏக குஷியாகிடும். 

ஆகவே... இதற்கு ஒரே ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்கு...!"

டெட்டால் சோப்... லைப்பாய் சோப்... கண்டிட் கிரீம்... கண்டிட் பவுடர்.. இட்ச் ஆயில்... இட்ச் கார்ட்... படை மருந்து... ஆண்டி ஃபங்கல் மாத்திரை... anti fungal  spray...  இப்படி ஏதும் இல்லாம புதுசா வேற என்ன சொல்ல போறார்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும்போது... அவர் பிரிஸ்கிரிப்ஷன் எழுத ஆரம்பித்து விட்டார்..!

"ஆனா.. இந்த ப்ரிஸ்கிப்ஷன்.. மெடிக்கல் ஷாப்பில் கிடைக்காது...! அது.... ஜவுளிக்கடையில் தான் கிடைக்கும்.." என்றார்.

கிழிஞ்சது... ஒண்ணுமே புரியாமல்... அவநம்பிக்கையுடன் அவரை பார்த்தேன். ஆனால், இதை எல்லாம் லட்சியமே செய்யாமல்... என் பெயர், வயது, கேட்டு... அவர் சீரியசாக எழுதிக்கொண்டே சொல்லிக்கொண்டு இருந்தார்...

"ஒரு டஜன் ட்ரங்க் மாடல் ஜட்டி...! அவ்ளோதான் ப்ரிஸ்க்ரிப்ஷன்..! "

"?!?!?!?!?!?!?!"..... நான் கண்ணிமைக்காமல் அவரையே நோக்க... அவர் மேலும் சொன்னார்.

"இந்த வகை ட்ரங்க் மாடல் அண்டர்வேர் தொடையைத்தான் கவ்விப்பிடிக்கும். groin region ஐ அல்ல..! எனவே வழியும் வியர்வை... groin இல் நிற்காமல் தொடைக்கு வழிந்து விடும். தொடையின் தோல் அழுத்தமானது என்பதாலும்... அது சற்று காய்ந்துவிடக்கூடிய இடத்தில் உள்ளதாலும்... அங்கே ஈரமாக இருந்தாலும் கிருமிகள் தொற்றாது. முக்கியமாக groin region இல் உள்ள கிருமிகள் உயிர்வாழ ஏதுவான ஈரம்  இனி அவற்றுக்கு கிடைக்காது போக,  அதனால் காலப்போக்கில் அவை அழிந்துவிடும்..!

நீங்கள், வேலைக்கு செல்லும்போது ஒரு முறையும்... அது முடிந்து வந்ததும் ஒரு முறையும் வியர்வை போக கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஒருமுறை போட்ட அன்டர்வேரை திரும்ப போடக்கூடாது. துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்... இதுதான் ட்ரீட்மென்ட்..."  என்று முடித்தார்..!

இது போன்ற அறிவுரைகள் ஏற்கனவே பலர் சொன்னதுதான் என்றாலும்... ட்ரங்க் மாடல் அண்டர்வேர் முற்றிலும் புதிது..! யாருமே சொல்லாதது..! அவர் சொன்னவை லாஜிக்கலாக சரியாக இருந்தது. எனவே, செயல்படுத்தும் முனைப்பில் இறங்கினேன்.

அன்றே... அந்த 'M -டைப்' (?) ட்ரங்க் மாடல் அன்டர்வேர் அரை டஜன் வாங்கினேன். (ஒரு டஜன் வாங்கலை... நாங்க உஷாருல்ல...) அவர் சொன்னது போன்று செய்துவந்தேன். என்னவொரு ஆச்சரியம்..! அடுத்த வாரமே முன்னேற்றம் தெரிந்தது..! (ஹை... நான் நேரா நடக்க ஆரம்பித்து விட்டேன்..!) நம்பிக்கையுடன்,  ஓடிப்போய்... இன்னும் ஒரு அரை டஜன் வாங்கினேன்.

இரண்டு வருட பிரச்சினை... ஒரே மாதத்தில் முற்றாக தீர்ந்தது..! இவர் போன்ற ஒரு மருத்துவர் மூலம் அப்பிரச்சினையை பூரணமாக குணப்படுத்திய இறைவனுக்கே புகழனைத்தும்..! இப்படி ஒரு சிறப்பான தீர்வை சொன்ன அந்த டாக்டர்... எதற்கு ஈ ஓட்டுகிறார்..? என்றுதான் எனக்கு இன்னும் புரியவில்லை.

ஒருமாதம் கழித்து அவரிடம் சென்றேன்..! "பேனாவை எடுத்து திறந்து வைத்துக்கொண்டு எங்கே சைன் பண்ணனும்...?" என்றவரிடம்... 'இல்லை டாக்டர், என் பிரச்சினைக்கு சரியான மருந்தை எழுதித்தந்த உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்..' என்றேன்..!

சஹீ  புஹ்காரி - 5678. இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
"" அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. " ...என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஆனால், நாம் தான் சிலநேரம் நிவாரணியை சரியாக தேடி கண்டுபிடிப்பது இல்லை..!

நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல். 

---சரியாகத்தான் சொல்லி இருக்கார் திருவள்ளுவர்..!

டிஸ்கி  -  
இந்த கோடை வெயிலில்,  வியர்வை வழிந்தோட கஷ்டப்பட்டு உழைக்கும் சகோஸ் யாருக்கேனும் இதுபோல பிரச்சினை இருந்தால்... அவர்களுக்கு என்னுடைய இந்த அனுபவம் உதவட்டுமே என்றுதான் இதனை எழுதினேன்..!

36 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...