அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, August 21, 2011

28 ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...

இதன் மூலம் சகலமானவருக்கும் நான் முன்னரே அறிவித்துக்கொள்வது என்னவென்றால்...


நான் ஊழலை எதிர்க்கிறேன்.
ஊழல் செய்வோரை எதிர்க்கிறேன்.
ஊழலுக்கு துணைபோவோரையும் எதிர்க்கிறேன்.

நான் ஜனநாயகத்தை ஆதரிக்கிறேன்.
ஜனநாயகத்தை காக்க பாடுபடுவோரை ஆதரிக்கிறேன்.
இவர்களுக்கு துணைநிற்போரையும் ஆதரிக்கிறேன்.


அப்புறம்... அரசு கொண்டுவரும், ("ஊழல் செய்வோருக்கு ஆதரவான..?!?") லோக்பால் வரைவு மசோதாவை எதிர்க்கிறேன்.
.
காரணம்... "இந்த சட்டத்தின் விசாரணை வரம்பிற்குள் ஜனாதிபதி வரமாட்டார்...  பிரதமர் வரமாட்டார்... நீதிபதிகள் வரமாட்டார்கள்... எம்பிக்கள் கூட லோக்சபா சபாநாயகர் பெரியமனது வைத்து விசாரணைக்கு அனுமதித்தால் மட்டும்தான் உண்டு... அரசு அதிகாரிகளில் கூட அனைவரும் அல்லாமல் குறிப்பிட்ட பிரிவினர்தான் இந்த மசோதாவின் விசாரணை எல்லைக்குள் வரமுடியும்"... என்பதெல்லாம் அப்புறம்தான்..! இதெல்லாம் முக்கியமல்ல 'நமக்கு'..! அப்புறம் எதுதான் ரொம்ப முக்கியம் உனக்கு என்கிறீர்களா சகோ..?

இந்த மசோதாவின் படி நானோ நீங்களோ ஒரு ஊழல் செய்த அல்லது நம்மிடம் லஞ்சம் வாங்கிய ஒரு அரசு ஊழியர் அல்லது எம்பி இவர்கள் மீது புகார் தொடுத்தால்... முதலில் நம் மீதுதான் விசாரணை ஆரம்பிக்கிறது..! (அடப்பாவமே..!) இதற்கு ஆகும் செலவும் நம் தலை மேலேதான்..! யார் மீது புகார் அளித்தோமோ அவங்களுக்கு விசாரணைக்காலத்தில் அரசே செலவு செய்யும்..! 

அப்போது ஒருவேளை, 'அந்த அரசு ஊழியர் அல்லது அந்த எம்பி ஊழல் செய்தார் அல்லது லஞ்சம் வாங்கினார்' என்று நிரூபிக்க நம்மால் முடியாமல் போய் விட்டாலோ... நாம் அதோகதிதான்..! நமக்கு இங்கே குறைந்த பட்சமே இரண்டு வருடம் சிறை தண்டனை என்றுதான் சகோ ஆரம்பிக்கிறது..! அதோடு நஷ்ட ஈடு வேற நாம் தரவேண்டி இருக்கும்..!

ஆனால், அப்படி அல்லாமல் அவர்கள்..(நம்மால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்).. மீது இந்த புகார் நியாயமானது என்று விசாரணையில் தெரியவந்தால்... ஹி... ஹி... தீர்ப்பெல்லாம் இல்லையாம்... இனிதான் அந்த ஊழல்வாதிகள் மீது விசாரணையே ஆரம்பிக்குமாம்..! இதற்கும் அவர்கள் சார்பில் அரசு செலவு செய்யும்..! இப்போது தான் நம் சார்பில்..(யப்பா..! உனக்கு ரெண்டு வருஷம் ஜெயில் இல்லைப்பா..! பொழைச்சுட்டே..! என்று,)..லோக்பால் வருகிறது..!

இந்த விசாரணையில் ஒருவேளை அவர்கள் குற்றவாளிகள் என்றால்... 'இவர் ஊழல்வாதிதான்' இவர் என்று தீர்ப்பு வந்துவிட்டால்... ஊழல் செய்யப்பட்ட சொத்து, லஞ்சப்பணம் எல்லாம் அரசுக்கு திருப்பப்படாது..! எல்லாம் காந்தி கணக்குதான்..! "அதான் தண்டனை கொடுத்துட்டோம்ல" என்கிறது லோக்பால்..! (ஆனால் நாம்  நஷ்ட ஈடு கொடுக்கணும் என்று பார்த்தோம்)

போதாக்குறைக்கு... ஊழல்வாதிக்கு இங்கே குறைந்த பட்ச தண்டனை வெறும் ஆறு மாதங்களில் இருந்துதான் ஆரம்பிக்கிறது..! அடப்பாவமே..! ஊழல் செய்தவனுக்கு குறைந்த பட்சம் ஆறுமாதம்... புகார் அளித்தவனுக்கு குறைந்த பட்சம் இரண்டு வருஷமா..? என்னப்பா அநியாயம்..! இந்த ஒரே விஷயத்தில் தெரிந்து விடுகிறது... இது ஊழல் வாதிகளை காக்கப்போகும் கவசம் என்று..! "இனி எவன் கம்பளையிண்டு கொடுக்கிறான் பார்த்துருவோம்" என்பது மாதிரிதான் இந்த சட்டம் தெனாவட்டாய் இருக்கிறது..!


இந்த லோக்பால் மாதிரி ஒரு சட்டம் வரலாமா..? வரவிடலாமா..? இதற்குத்தான் நாம் போராட வேண்டும்..! இதனை எதிர்த்து போராடிய அண்ணா ஹசாரே உட்பட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்..! 

ஆனால், அதே நேரம், இந்த எதிர்ப்பு விஷயம் பல படிகள் மேலே போய்... இந்த சட்டத்தை எதிர்த்தோரில் சிலர் ஒன்று சேர்ந்து ஜன்லோக்பால் என்ற புதிய சட்ட வரையறையை அரசுக்கு போட்டியாக முன்வைக்க... அதனை படித்துப்பார்த்த அரசியல்வாதிகள் அனைவரும் நிலைகுலைந்து போயிருப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல நானும்தான்..! நீங்களும் அதனை படித்துப்பார்த்தால் நிலை குலைந்துதான் போவீர்கள். 

ஆனால்... இரண்டு நிலைகுலைவுக்கும்  காரணம் வேறு..! முன்னது- 'இனி ஊழல் செய்ய முடியாதே' என்பது மட்டும் அல்ல... ஒவ்வொரு அரசியல்வாதியும்  ஒவ்வொரு நீதிபதியும் கூட உயிரற்ற உடம்பு மாதிரிதான் ஆகிவிடுகின்றனர். நாம் ஏன் நிலைகுலைகிறோம் என்றால்... ஏதோ ஆங்கிலேயே ஏகாதிபத்திய கிழக்கிந்திய கம்பெனிகள் அந்தக்கால பாரத துணைக்கண்ட மன்னர்களுக்கு போட்ட கெடுபிடிகள் போல உள்ளன..! சுருக்கமாக சொல்வதானால்... நம் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆப்புதான் ஜன்லோக்பால் வரைவு மசோதா..! 

ஆக ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால் வரைவு மசோதாவைவும் நாம் எதிர்த்தாக வேண்டும்..!

 

ஊழலுக்கான காரணியை அழிப்பதை விட்டுவிட்டு...ஊழலை அழிப்பது குறித்து உண்ணாவிரதம் என்ற பெயரில் மத்திய அரசை, மெழுகுவர்த்தி என்ற 'அதி பயங்கர நவீன ஆயுதம்' கொண்டு இந்திய அரசுக்கு கெடு விதித்து பிளாக்மெயில் செய்து கேடு விளைவித்துக்கொண்டு இருக்கும் அண்ணா ஹசாரே குழுவினரையும் நாம் எதிர்க்க வேண்டும்..!
 .
நானும் நீங்களும் ஓட்டுப்போட்டு எம்பிக்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பினோம். ஏன்..? நல்ல சட்டங்கள் போட்டு நம்மை காக்க. அப்படி செய்யாமல் இருந்தால் அதற்கு எதிராக செயல்பட்டால் ஜனநாயக ரீதியில் போராட வேண்டியதுதான். ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நானும் நீங்களும் நமக்குப்பிடித்த மாதிரி சட்டம் எழுதி இதைத்தான் நூத்தி இருபது கோடி மக்களும் விரும்புகின்றனர் என்று கூறி உண்ணாவிரதம் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற ஆயுதங்களை நீட்டி அரசை மிரட்டினால் அது ஜனநாயகம் இல்லையே சகோ..! பிளாக் மெயில்..! சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்படவேண்டுமே அன்றி உண்ணாவிரதப்பந்தலில் அல்ல..!


ஓகே..! பாராளுமன்றத்தில் சட்டம் போடத்தெரியாத மக்குகள் இருப்பதாகவே நம்புகிறீர்கள் அல்லவா..! நீங்கள்  என்ன செய்யலாம்..? உங்கள் ஜன லோக்பால் மசோதா வரையறையை பிரதமரிடம் கொடுத்து சட்டமாக்க சொல்ல வேண்டும். (அவர்கள் என்ன இளிச்சவாயர்களா இதனை நிறைவேற்ற..? முந்திய லோக்பால் மசோதாவை படித்தாலே அவர்கள் தீய நோக்கம் நமக்கு நன்கு புரிகிறது..! அப்படி இருக்க, ஜன லோக்பாலை  எப்படி நிறைவேற்றுவார்கள்..? தானே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வார்களா அரசியல்வாதிகள்..?) இதனை சட்டமாக்க மாட்டார்கள் எனில்.. நம் எதிர்ப்பை அடுத்த வாக்குச்சீட்டில்தான் காட்ட வேண்டும்..! ஜனநாயகம்..!

சரி... 'அதென்ன ஜன்லோக்பால்..? ஏதோ உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டதுபோல அரசியல்வாதிகள் தெறித்து விழுகிறார்களே' என்று அதை படித்துப்பார்த்தால்...! அட..! இந்த அண்ணா ஹசாரே கூட்டத்தினரை சட்டப்பூர்வமாக அடக்காமல் பயந்து கிடக்கும் இந்த கையாளாகாத அரசை நினைத்து அதிசயித்து நொந்து கொள்கிறேன்.

லோக்பால் மசோதா ஊழல் ஒழிப்பில் ஒரு வால் அருந்த, கால் ஒடிந்த, குருட்டுப்பல்லி என்றால்... ஜன்லோக்பால் மசோதா வரையறை என்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஓர் ஆக்ரோஷமான டைனோசர்..! பொடா, தடா -வை விட எல்லாம் மிகவும் அபாயமானது இந்த ஜன்லோக்பால்..!

ஜன்லோக்பால் ஜனநாயகத்தை துவம்சம் செய்யப்போகும் அணுகுண்டு..!

அந்த சட்ட வரையறையை முழுக்க படித்துப்பார்த்தால்தான் உங்களுக்கு இதன் உண்மை புரியும். ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எம்பிக்கள்... என்ற அனைவரையும் கூண்டில் ஏற்றி விசாரிக்கும் அதிகாரம் சிலருக்கு உண்டு எனில், நாட்டை ஆளப்போவது யார்..?

தேர்தலில் போட்டியிடாத -- மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த ஜன்லோக்பாலில் உள்ள வெகுசிலர்தான், இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மற்ற எவரையும் விட அதிகாரத்தில் மேலானாவர்கள் என்றால்... இவர்களை எவருமே கேள்வி கேட்க முடியாது என்றால்... அப்புறம் எதற்கு மக்கள் ஜனநாயகம்... வெங்காயம்..? பவர்லெஸ் பாராளுமன்றம்..? ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர்..? உப்புக்கு சப்பாணி தேர்தல்..? அப்புறம் எதற்கு ஒரு அதிகாரமற்ற உச்சநீதி மன்றம்..? எதற்கு ஒரு செல்லாக்காசு சிபிஐ..? தண்டமாய் முந்திய சட்டங்கள்..? பிறகு எதற்கு நானும் நீங்களும் கால்கடுக்க வரிசையில் நின்று ஓட்டளிக்க வேண்டும்..? பேசாமல்... ஜன்லோக்பால் உறுப்பினர்களுக்கு தேர்தல் வைத்து விடலாமே..! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜன லோக்பால் குழு ஆளட்டுமே..! அப்படி அல்லாமல் இதென்ன ஆட்சியை கைப்பற்ற ஒரு குறுக்குவழி..?


ஆக, இனி சில சர்வாதிகாரிகளின் ஆட்சியா வரப்போகிறது..? ஒருவேளை இந்த சில ஜன்லோக்பாளிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகளாய் இருந்து தொலைத்துவிட்டால்... இவர்களிடம் இருந்து நம் நாடு சுதந்திரம் பெரும் வழிதான் என்ன..? அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது..! ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது..? இவர்கள் மொத்தமாக ஒரு வெளிநாட்டிடம் அடகு போய் விட்டால் அப்புறம் நம் நாட்டின் நிலை..?

இந்த வட இந்திய, ஆங்கில பன்னாட்டு ஏகாதிபத்திய ஸ்பான்ஸர்ட் ஊடகங்களை மட்டுமே நம்பினால் நம்  கதி அதோகதிதான்..!

"என்னை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்கிறாயே.... உன்னை ஏன் ஜன்லோக்பால் விசாரிக்காது..?" என்று அண்ணா ஹசாறேவிடம் பிரதமர் கேட்கலாம்..! 

ஜன்லோக்பாலின் விசாரணை வரம்பிற்குள் தம்மைப்போன்ற NGO-க்களை, அண்ணா ஹசாரே குழு மிக லாவகமாக தவிர்த்தது ஏன்..? நம் நாட்டின் ஊழலே உண்டியலில்தானே ஆரம்பிக்கிறது..!!! இந்தியாவின் அரைவாசி கருப்புப்பணம் சுவிஸில் என்றால்... மிச்சம் எல்லாம் அறக்கட்டளை, சேவா சங்கம், நற்பணி மன்றம், கோவில், தர்ஹா... இங்கேதானே..!?!

இந்த ஜன்லோக்பால் வரைவு மசோதாவை நேத்து வந்த ஒரு அரைவேக்காட்டு எதிர்க்கட்சி எம்பி கூட ஆதரிக்க மாட்டார்..! 

ஏனெனில் அது ஒவ்வொரு எம்பிக்கும் சுருக்கு கயிறு. அப்புறம் எப்படி இது பாராளுமன்றத்தில் சட்டமாகும்..? இப்போது பாஜக உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் ரொம்ப சந்தோசமாய் நின்று காங்கிரசின் வீழ்ச்சியைத்தான் வேடிக்கை பார்க்கின்றன..! அல்லாமல்... ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஒருக்காலும் ஆதரவளிக்காது..! பாஜகவை பொருத்தவரை அண்ணா ஹசாரே ஆயிரம் ராமபிரான்களுக்கும் மேலே...! அவ்ளோ ஓட்டுக்கள் கியாரண்டி..! அவ்ளோ வொர்த்..! அதனால் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து பருவத்தே பயிர் செய்து மானாவாரியாய் அமோக மகசூலை அள்ளப்போகிறது..!

ஆனால், அண்ணா ஹசாரேவால் ஒரே ஒரு புண்ணியம்தான் நாட்டுக்கு..! 

இனி லோக்பால் மசோதாவுக்கு அது பாராளுமண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால்... வெளிநடப்பு செய்யாமல்... பாஜக கம்யுனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் கூட எதிர்த்து ஓட்டளித்து அதை சட்டமாக்கவிடாமல் செய்தே  ஆக வேண்டிய இக்கட்டான கட்டாய நிலை..! இல்லையேல் சேகரித்த வாக்குகள் அனைத்தும் விரயமாகிவிடுமே..! ஆக, இதை மட்டும் வரவேற்போம்..!

"லோக்பாலும் வராது ; ஜன்லோக்பாலும் வராது" என்பதே இப்போதைய நிலை..! பின்னர் ஊழலை ஒழிப்பது எப்படி..? ஊழலை ஒழிக்க மக்கள் யாருக்கும் லஞ்சம் தரவேண்டாம். தந்தால்தான்வேலை நடக்கும் என்கிறார்களா..? இருக்கவே இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையும், ஊழல் தடுப்பு சட்டமும்..! நம்மிடம் சட்டம் இல்லாமல் எல்லாம் இல்லை..! கல்மாடி, ராசா, கனிமொழி எல்லாம் உள்ளே போகும்போது லோக்பால் ஏதும் இல்லை. இருக்கும் சட்டங்களை வைத்து நேர்மையான விசாரணையை துரிதப்படுத்தி நீதியை விரைந்து வழங்கினாலே போதும்..! ஊழல் விரைவில் குறையும்..!

லோக்பாலை எதிர்ப்போம்..!
ஏனெனில் அது ஊழலை இன்னும் வளர்த்து விடும்..!

ஜன்லோக்பாலை எதிர்ப்போம்..!

ஏனெனில் அது நம் ஜனநாயகத்தை கொன்று விடும்..!

 --------------------------------------------------------------------------------------------------------------
மேலும்  நிறைய நிறையவிபரங்கள் அறிய... தெளிய...
http://exitopinionpollsindia.blogspot.com (thanks for photos and cartoons also)
http://en.wikipedia.org/wiki/Jan_Lokpal_Bill
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=112811
http://www.indianexpress.com/news/protest-rally-against-jan-lokpal-bill-on-apr/774697/
http://oakblue.wordpress.com/2011/04/11/why-protest-against-the-jan-lokpal-bill/
http://acorn.nationalinterest.in/2011/08/14/faq-why-is-anna-hazare-wrong-and-lok-pal-a-bad-idea/
http://www.facebook.com/pages/Anna-Against-Democracy/257769227569560 
'உ'ண்ணா ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்,(சகோ.சேட்டைக்காரன்)
"காவிக்கும் கதருக்கும் கல்யாணமாம்..!"(சகோ.சேட்டைக்காரன்)  

28 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...