அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, July 15, 2011

94 பெண்களே..! வரதட்சணை(சீரு)க்கு எதிரான போரில் இணைவீர்..!

http://genderbytes.wordpress.com/war-on-dowry/
'வரதட்சணை' என்றால் என்ன என்ற முழுமையான புரிதல் நம்மில் எல்லோரிடமும் இல்லை சகோ..! பொதுவாக வரதட்சணையை ஆங்கிலத்தில் DOWRY என்கிறார்கள். இதற்கு, பொருள் என்று நீங்கள் ஆங்கில அகராதியில் தேடிச்சென்றால், 'ஒரு மணப்பெண்ணிடம் இருந்து மணமகன் வீட்டாருக்காக திருமணத்தின் பொழுது கேட்கப்படும் பணம் & பொருள் அனைத்தும்' என்றுதான் எல்லா ஆங்கில அகராதிகளும் அறிவிக்கின்றன. ஆனால், நாம்தான் அதனை தமிழில் பலவகையாக பிரித்து வைத்துள்ளோம்..! மேலும், "அதில் பணம் சம்பந்தப்பட்ட ஒன்றாக" வரதட்சணையையும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம்.


பொதுவாக நம் இந்திய கலாச்சாரத்தில்... 
அந்த "அனைத்தும்"-இல் என்னவெல்லாம் வருகின்றன..?

பணமாக கேட்பது, பெண்ணுக்கு நகை, ஆணுக்கு நகை, இருவருக்கும் உடைகள் கேட்பது, சீர்வரிசை எனும் சீதனமாக கேட்பது, பெண்ணுக்கு 'பெட்டி சீர்' என்று தனியாக, (இதில்... உடை, செருப்பு, ஜமக்காளம், தலகாணி உரை, அழகுசாதன பொருட்கள் உட்பட சோப்பு சீப்பு கண்ணாடி என வாழ்வியல் அவசிய பொருட்கள் அனைத்தும் பெட்டிகளில்), சீதனம் எனும் பெயரில் குடும்ப வாழ்வுக்கு அவசியமான அண்டாகுண்டா தட்டுமுட்டு சாமான்கள், அவசிய ஃபர்னிச்சர் முதல் ஏசி, கார் என்று ஆகி... ஒரு வீட்டையே கட்டியும் சீதனமாக கொடுக்கிறார்கள். 

மேலும், கல்யாண விருந்து போட சொல்லுதல், அதையொட்டி பல்வேறு விருந்துகள் போட சொல்லுதல், கல்யாண பத்திரிக்கை அடிக்க- போஸ்டர் அடிக்க சொல்லுதல், திருமண மண்டப செலவு, விருந்தினர் போக்குவரத்து ஏற்பாட்டு செலவு, விருந்தினர் தங்கவைக்க லாட்ஜ் செலவு, சில சமயம் மாப்பிள்ளைக்கு இன்னும் சிறப்பான அதிக வருவாயில் வேலை வாய்ப்பு -மாமனார் சிபாரிசில் அல்லது லஞ்சத்தில் வாங்கிக்கொள்ளுதல் என பல செலவினங்களை பெண்வீட்டார் தலையில் கட்டுதல்...(முடிந்தவரை சொல்லி இருக்கிறேன். வேறு ஏதும் நியாபகம் வந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)...  

....என மேற்படி எல்லாமே மொத்தமாக சேர்த்துத்தான் "வரதட்சணை"..!

நம்மில் சிலர், "ஏதோ பணமாக கொடுப்பது மட்டுமே வரதட்சணை" என்று நினைக்கின்றனர். அது தவறு. ஒருவேளை, கடந்த இரண்டு பாராக்களில்... அந்த "பணமாக கேட்பது" என்பது மட்டும் இல்லாமல் ஏனையவை ஒரு திருமணத்தில் இருந்தால்... அது வரதட்சணை இல்லாத புரட்சித்திருமணம் என்று சொல்ல வருகிறார்களா..? இது யாரை ஏமாற்ற..? என்ன அர்த்தம் இதற்கு..?

இப்படி, "பல விதங்களில் அளிக்கப்படும் வரதட்சணையை" பல காரணிகள் பாதிக்கின்றன. சில காரணிகள் அவற்றை உயர்த்துகின்றன; சில காரணிகள் வரதட்சணையை குறைக்கின்றன. இவற்றையும் இனி பார்ப்போம். 

மணப்பெண்ணின் அழகு, கல்வி, பட்டப்படிப்பு, வேலைவாய்ப்பு, மாதச்சம்பளம், சமூகத்தில் தனிப்புகழ், தனிப்பட்ட சாதனை, தந்தை(யின் சொத்து)க்கு ஒரே வாரிசாக இருத்தல்... போன்றவை எல்லாம் "இருதரப்பு நிச்சயதார்த்த பேச்சுவார்த்தை"யின் போது வரதட்சணையில் பெரும் சரிவை ஏற்படுத்தும் காரணிகள். மேலும் மணமகனுக்கு இது இரண்டாம் திருமணம் ஆக இருத்தல், மணமகன் 'ஹேண்ட்சம் லுக்' இல்லாமல் அவலட்சணமாக இருத்தல், கல்வியறிவற்று இருத்தல், சம்பாரிக்காது இருத்தல், ரொம்ப வயதாகி இருத்தல், அங்கங்கள் ஊனமுற்று இருத்தல், மணப்பெண்ணைவிட படு ஏழையாக இருத்தல்... போன்றவையும் வரதட்சணையை படு கீழே குறைத்துவிடும். ஆனால், இல்லாமலேயே ஆக்கி விடும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், இங்கே வரதட்சணை என்பது மணப்பெண்ணின் 'தியாகமாக' அல்லது 'சகிப்புத்தன்மையாக' மாற்றப்பட்டு அல்லவா மணமகன் வீட்டாருக்கு தரப்படுகிறது. அப்படியல்லாது, இதுவே மணப்பெண்ணிடம் அதேபோன்ற குறைகள் அமைந்துவிட்டாலோ... வரதட்சணை தாறுமாறாக எகிறும்..!

இவை அல்லாது பத்து பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் சேர்கிறது, "செவ்வாய் தோஷமா, ராசி, நட்சத்ரம், சாதி, அந்தஸ்து என்ன.." என்றும் நிறைய காரணிகள் நம் இந்திய-தமிழ் கலாச்சாரத்தில் வரதட்சிணையை பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

கவனிக்கவும் சகோ..! இதுவரை நாம் பார்த்ததும் இனி பார்க்க இருக்கும் அனைத்தும் "பொதுவாக நம் இந்திய கலாச்சாரத்தில்..." என்றுதான். இதில் விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால், அவை மிக மிக அரிது..!

வரதட்சணை என்ற இத்தனை கொடுமையான விஷயங்களும் பெண்ணுக்கு மணவாழ்வு அமைய வருடக்கணக்கில் தாமதம் ஆகின்றன. ஒருவேளை அப்படி மணவாழ்வு அமைந்த பின்னும் "அதில் குறை; இதில் குறை" என்று அப்பெண்ணின் மவாழ்வில்  பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்ணை பெற்றவர்களுக்கும் இந்த சமூக கொடுமையான வரதட்சணையால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகின்றது.

இப்போது நான் கேட்பது என்னவெனில்... பொதுவாக பெண்களுக்கும், பெண்களின் பெற்றோருக்கும் இவ்வளவு பாதிப்பு இருந்தும், பொதுவாக இந்த சமூக கொடுமைக்கு எதிராக சமூகத்தில் மிக மிக அதிகமாக ஆண்கள் மட்டுமே தீவிரமாக குரல்கொடுக்க காண்கிறோம். "வரதட்சணை எதிர்ப்பில், வரதட்சணை மறுப்பில் பெண்களின் பங்கு எந்த அளவில் இருக்கிறது" என்று சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். 

பெரும்பாலும் பெண்கள் 'மவுனமாகவே' இருப்பதைத்தான் காண்கிறோம். இந்த வரதட்சணை என்பது "தன் பெற்றோருக்குத்தானே பொருளாதார இழப்பு..? நமக்கு எதிர்கால பொருளாதார வரவுதானே..!" என்று பேசாமல் சுயநலத்துடன் இருந்துவிடுகிறார்களா..? புரியவில்லை..! ஏனிந்த மவுனம் சகோதரிகளே..? 

"வரதட்சணை கேட்கும் மணமகனை திருமணம் செய்யமாட்டோம்" என்று எத்தனை மணமகள்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறீர்கள்..? 

அப்படி உறுதியோடு இருந்து திருமணம் செய்த பெண்களில் எனக்கு ஒரே ஒருவர் தெரியும்.


அதேநேரம், வரதட்சணை வாங்க மறுக்கும்  ஆண்களில் எனக்கு அப்படி ஏகப்பட்டோரை தெரியும். (முஸ்லிம்களில் இன்னும் பல மடங்கும்... இன்னும் குறிப்பாக 'தவ்ஹீத் ஜமாஅத்'தில் அதிகமாகவும் காட்ட முடியும்)

அதில், 'மேற்கூறிய எந்த வகையிலும் பெண் வீட்டாரிடமிருந்து ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்கக்கூடாது' என்று தன் கருத்துக்கு எதிர்கருத்து கொண்ட பெற்றோருடன் போராடி இறுதியில்... கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வீட்டிலிருந்து வெளியேற்றம், ஊர் நீக்கம், என்றெல்லாம் ஆகி தன் கொள்கையில் ஒரே நிலையாய் நின்று சாதித்தவர்களையும் எனக்குத்தெரியும். 

அப்படி அல்லாமல், தன் நேரிய கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து வீட்டினருக்கு நயமாக, அன்பாக, பொறுமையாக, விளக்கமாக, கோபப்படாமல் எடுத்துச்சொல்லி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்து, தன் கொள்கையில் மகிழ்வாக வெற்றி பெற்றவர்களையும் எனக்குத்தெரியும்.

அதேநேரம்,

இந்த இரண்டும் அல்லாமல்... "எதுக்குடா பிரச்சினை" என, பெற்றோர், குடும்பப்பாசம் ஆகியவற்றின் முன்னாள் கொள்கையை விட்டுக்கொடுத்து 'அமைதி'யாக இருந்துவிட்டு, பின்னர் திருமணம் முடிந்து 'பெற்றோரால் வாங்கப்பட்ட' வரதட்சணையை திருப்பித்தந்தோரையும் "தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சினை ஒழிப்பு மேடை"களில்--வீடியோவில் பார்த்திருக்கிறேன். அப்படி அல்லாது, தனிமையில் திருப்பித்தந்தோரையும் எனக்குத்தெரியும்.


"வரதட்சணை எனும் தன் பெற்றோரின் வரவு"க்கு எதிராக அவர்களின் போராட்ட வகைகள் வேறுபட்டிருந்தாலும், பெண்ணுரிமைக்காக போராடிய அவர்கள் அனைவரும் ஆண்களே..!

இதையே வரதட்சணைக்கு எதிராக ஒரு பெண் போராடினால்... அது "வரதட்சனை எனும் தன் பெற்றோரின் செலவு"க்கு எதிராகத்தானே..? இதற்காக வீட்டை விட்டு துரத்துவார்களா பெண்ணின் பெற்றோர்கள்..? ஊர்நீக்கம் செய்வார்களா பஞ்சாயத்தார்..? ஆண்களிடம் இருக்கும் இந்த போராட்ட குணம் பெண்களிடம் ஏன் இல்லை..?

எவனோ ஒருவன்... எங்கோ ஒரு வீட்டில், உங்கள் வீட்டு பொருளாதாரத்துக்கு சாதகமாய் போராடிக்கொண்டிருக்க... பெண்களாகிய நீங்களோ... "இப்படி எல்லாம் நாம் போராடினால்,  காலமெல்லாம் கல்யாணம் ஆகாமல் கன்னியாக வாழ வேண்டியதுதானோ"---என்று பயப்படுகிறீர்களோ..? எனில், இது பக்கா சுயநலன்தானே..? பெற்றவர்களின் பொருளாதார கஷ்டத்தைவிட, "நான் -- என் வாழ்வு" இதுதானா முக்கியமாக போய்விட்டது..?
.
மணமகள்களே..! நல்லபடியாக திருமணம் முடிந்து, பின்னர், சகோதரனுக்கு கல்யாணம் ஆகும் சமயம், நாத்தனார் ஆவீர்கள்தானே..? அப்போது, தன் பெற்றோர் படும் கஷ்டத்தை இன்னோர் பெண்ணின் பெற்றோர் படக்கூடாது என்று தன் சகோதரனின் கல்யாணப்பேச்சில் வரதட்சணைக்கு எதிரான போராட்டத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டீர்கள்..? இப்போதுதான் உங்கள் லைஃப்... செட்டில் ஆகி விட்டதே..? வரதட்சணையை எதிர்க்கும் போராட்டத்தில் குதிக்கலாமே..? 

சரி, விடுங்கள். பிற்காலத்தில் (மணமகன் தாயார்) மாமியாராக ஆகும் போதும் இப்படித்தானே வரதட்சணை (சீதனம்/நகை எல்லாம்தான்) பற்றி பேச முன்னணியில் நிற்கிறீர்கள்..? "வரதட்சணையை எதிர்த்தார்" என்று எத்தனை மணமகனின் தாய் இதுவரை போராடி கேள்விப்பட்டு இருக்கிறோம்..?

ஆக, வாய்ப்பிருந்தும்... ஒரு நாத்தனாராக... ஒரு மாமியாராக... வரதட்சணை எனும் இந்த பெண்ணுக்கு எதிரான - பெண்ணை பெற்றோருக்கு எதிரான - சமூக கொடுமையை எதிர்த்து ஆண்கள் அளவுக்கு இல்லையெனினும் அவர்களில் பாதியாவது அல்லது அவர்களில் 33%-ஆவது வீட்டினுள்ளே கூட போராடவில்லைத்தானே இந்த மகள், நாத்தனார் & மாமியார் என்ற பெண்கள்..?

தான் மருமகளாக இருந்த காலத்தில் வரதட்சணை கொடுமையை அனுபவித்தவர்கள், அதனையே தன்னுடைய மருமகளுக்கும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்..? மனிதநேயம் வேண்டாமா..?

ஜூனியராக இருந்து ராக்கிங் கொடுமையை உணர்ந்தவன் சீனியராக ஆகும்போது அதை எப்படி அடுத்தவனுக்கு செய்ய மனம் வரும்..?

வரதட்சணைக்காக "மாமியார்-மருமகள் சண்டை"யை கேள்விப்பட்ட அளவுக்கு "மாமனார்-மருமகள் சண்டை"யை கேள்விப்பட்டது உண்டா நாம்..?

வரதட்சணைக்காக "நாத்தனார் கொடுமை"யை கேள்விப்பட்ட அளவுக்கு "கொழுந்தனார் கொடுமை" என கேள்விப்பட்டது உண்டா நாம்..?
அனைத்து சமய சகோதரிகளே..! 

பெண்ணே பெண்ணினத்துக்கு எதிராக எப்படி இருக்கமுடியும்..? எத்தனையோ பெண்கள் வாழ்விழக்க காரணமான சமூக தீமையான வரதட்சணையை ஒழிக்க உங்கள் போராட்டமும் மிக மிக அவசியம்... சகோதரிகளே..! உங்கள் தந்தை "ஓர் ஆணினம்" என்பதால் "எப்பாடு பட்டேனும் வீட்டையே வித்தாவது வரதட்சணை தந்தால்கூட தரட்டும்" என்று மவுனமாக இருந்து விடாதீர்கள். நீங்கள் சுயநலத்துக்காக இன்றி பிறர் நலத்துக்காகவும் போராடுங்கள்.  வரதட்சணை ஒழிப்பில் தன்னலம் கருதாது "வரதட்சணைக்கு எதிரான போரில்" ஈடுபடும் ஆண்களுக்கு நீங்களும் இனி ஒரு கைகொடுங்கள்..! ப்ளீஸ்..!

முஸ்லிம்  சகோதரிகளே..!

பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாக கொடுத்து விடுங்கள்..! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத்தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன்- 4:4 )  

...என்று இறைவன் 'வாங்கிக்கொள்ள' மட்டும் சொல்லி "ONEWAY" சட்டம் போட்டு வைத்திருக்க... "நான் கொடுக்கவும் செய்வேன்" என்று எதிர்த்திசையில் செல்வதும் அப்படி செல்பவர்களை எதிர்க்காமல் இருப்பதும் இறைக்கட்டளைக்கு எதிரான செயல் அல்லவா சகோதரிகளே..? 

...ஒரு பொற்குவியலையே மஹராகக்கொடுத்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள் (திருக்குர்ஆன்-4:20)---என்று கொடுக்கப்பட்ட மஹரில் உரிமை ஏதும் இல்லை என ஆண்களுக்கு சொல்லப்பட்ட இவ்வசனத்தின் மூலம், 'ஒரு பொற்குவியலையே கூட மஹராக கேட்கலாம்'  என்ற அளவுக்கு தனக்கு மட்டுமே உரிமை இருகிறதே உங்களுக்கு..!
.
முஸ்லிம் சகோதரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த மஹர் எனும் உரிமையை கோருவதில் எந்த அளவுக்கு தீவிர முனைப்பு காட்டியுள்ளீர்கள்..? சரி... சரி... சகோதரிகளே..! நீங்கள் முதலில் வரதட்சணை(சீரு)க்கு எதிரான போரில் இணைந்து நடக்க ஆரம்பியுங்கள்..! அப்புறம் மஹர் எனும் உங்கள் உரிமையை நோக்கி ஓட ஆரம்பியுங்கள்..!
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை : 
இப்பதிவு... வரதட்சணைக்கு எதிராக பெண்களின் பங்கையும் அதிகரிக்க சொல்வதை நோக்கமாக கொண்ட பதிவு. எனினும், வரதட்சணையை எந்த வித்தத்திலும் ஆதரிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!

94 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...