அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, July 8, 2011

39 " ஏழை மணப்பெண்களின் சந்தை ஹைதராபாத்" ---இந்த அவலத்திற்கு யார் காரணம்..?

"மேட்டருக்குள்" நுழையுமுன் ஒரு சிறு முன்னுரை 

ஓர் இஸ்லாமிய திருமணத்தை "இப்படித்தான் செய்ய வேண்டும்" என்ற வரையறையையும் ஒழுங்குகளையும் இஸ்லாம் நமக்கு  கற்றுத்தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த சட்டங்களை எல்லாம் பேணி ஒரு திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காட்டியபடி நடத்தும் போது தானே அது இஸ்லாமியத்திருமணமாக அமையும்..?

( இறைவன் says... @ அல்குர்ஆன் 4:21) “...உங்களிடமிருந்து (உங்கள் மனைவியாகிய) அவர் உறுதியான உடன்படிக்கை பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்கள்...”

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் – மனைவியாக மனப்பூர்வமாக யாருடைய அச்சுறுத்தலின் அல்லது கட்டாயத்தின் பேரிலும் இன்றி, இருவரும் ஒத்திசைந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வாழ்வதாக செய்து கொள்கின்ற உறுதியான உடன்படிக்கை; இதில் ஒருத்தரை ஒருத்தர் மோசடி செய்து கொள்வது முடியாது; இதன் மூலம் வரும் உறவுப்பாலத்துக்குப்பெயரே திருமணம்..! எனவேதான், மேற்கூறப்பட்ட வசனத்திலே எல்லாம் வல்ல இறைவன் இவ்விணைப்பை உறுதியான உடன்படிக்கை என்று கூறுகின்றான். இவ்வுடன்படிக்கையில் இணையும் கணவனும் மனைவியும் எவ்வகையிலும் இவ்வுடன்படிக்கைக்கு மாற்றமாக இருவரில் எவரேனும் நடந்துகொள்ளவோ, ஒருவரையொருவர் ஏமாற்றவோ, ஒருவருக்கொருவர் துரோகமிழைத்துக்கொள்ளவோ இயலாது.
.
பெண்கள், அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னெறிக்காகவும் மணந்து கொள்ளப்படுகின்றனர். ஆனால், "நீ நன்னெறி உடையவளைத்தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்" என்று ஓர் ஆண் நபித்தோழரிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5090)
.
ஒரு பொதுவான  விஷயம் என்றால்... ஆணுக்கு கூறப்படுவதே இஸ்லாத்தில் பெண்ணுக்கும் பொருந்தும். எனவே, மணமகனைத்தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னெறியையே பிரதானமாகக்கொள்ள வேண்டும்.
.
அடுத்து... இந்த இஸ்லாமிய திருமணத்தில் மிக முக்கியமான ஒன்று பெண்ணின் சம்மதம்..! மனப்பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க யாருக்குமே இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

கன்னிப்பெண்ணாயினும், விதவையாயினும் அவரின் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, 'கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அப்படியெனில்) அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிகிறார். (புகாரி 6971, 6964, 5137)
.
இன்னும்  நெத்தியடியாக இதுபற்றி அறிய வேண்டுமானால்...

"என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்" என்று கன்ஸா பின்த் கிதாம் (ரலி) எனும் நபித்தொழி அறிவிகிறார். (புகாரி 5139, 6945, 6969)
.
ஆக... பெண்ணின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி... எப்பேர்பட்ட கொம்பன்  ஆனாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் ஒருத்தன் திருமணத்தை "நடத்தி(?)வைத்தால்"... ஹி...ஹி... அந்த திருமணம் இஸ்லாத்தில் செல்லாதுங்கோ...! செல்லாதுங்கோ...! ரத்தாகுமுங்கோ..! 

"மணப்பெண்ணின் சம்மதம் அவசியம்" என்றாலும் ஒரு பெண் தன் திருமணத்தை தானே தன்னிச்சையாக நடத்திக்கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். ஆனால், மணமகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை. (காரணம், திருமணத்தினால் குழந்தைகள் ஈன்ற பொழுதும், அதன் பிறகும் உடல்ரீதியாக இழப்பும் மாற்றமும் அடைவதும், கஷ்டப்பட்டுவதும் ஆண்-பெண் இருவரில் யார் என்பது நமக்கே நன்கு தெரியும் எனும்போது நம்மை இவ்வாறு படைத்த இறைவனுக்கு தெரியாதா..?) எனவே, பெண்களுக்கு சேரவேண்டிய மஹர் தொகை போன்றவற்றை பேசி பெற்றுத்தருவதற்கும் பெண்கள் சார்பில்தான் பொறுப்பாளர் ஒருவர் அவசியம்; ஆணுக்கு அவசியமில்லை. இதற்கு காரணம்... பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போதுதான் பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் தீய ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தக்க பாதுகாப்பு கிடைக்கிறது..!
.
சரி..,  இனி... அந்த ஹைதராபாத் "மேட்டருக்குள்" செல்வோம்..!

ஆந்திராவின் ஹைதராபாத்துக்கு மாணவர் விசாவில் படிக்க வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், அங்குள்ள அப்பாவி பாமர ஏழை எளிய முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொண்டு, சிலவருட படிப்புகாலம் முடிந்து தாயகம் திரும்பும் போது, 'அம்போவென' விட்டு விட்டு 'அதிகாரபூர்வமாக' திரும்பிச்செல்கின்றனர் எனும் அதிர்ச்சிகரமான செய்தி அம்பலமாகியுள்ளது..! (இன்னாலில்லாஹி...)
.
அச்செய்தியில் இதைவிட ஒரு பேரதிர்ச்சி என்னவெனில், இப்படி திருமணம் செய்த ஒருவர், தங்கள் நாட்டு நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது என்பதுதான்..! 
.

.
இப்படித்தான், சென்ற வாரம், ஒரு 16 வயது முஸ்லிம் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட 25 வயது சூடான்நாட்டு மாணவர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால், அப்பெண், அவர்களிடமிருந்து நல்லவேளையாக தப்பி வந்து ஐதராபாத் போலீசில் தஞ்சம் அடைந்தார்..! 
.
இவர் இந்திய சட்டப்படி திருமணத்துக்கு தகுதியற்ற வயதுடையவர் (மைனர்) என்பதால், ஒரு 'மைனர் பெண்ணை' திருமணம் செய்த & செய்து வைத்த குற்றம், மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிற குற்றங்களில், ஆந்திர போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அந்த இரு சூடான் மாணவர்கள், புரோக்கர்கள், திருமணம் நடத்திவைத்த காஜி என ஆறு பேரை கைது செய்தனர். காஜியிடம் நடந்த விசாரணையில், இது போன்று சமீபத்தில் ஏழு "சம்பவங்கள்(!)" நடந்துள்ளன என்று தெரிய வந்துள்ளது..! 
 
முதலில், திருமணத்துக்கு முன்பாக, 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த ஏழை இளம் பெண் குடும்பத்தினரிடம் தந்துவிட்டு, ஒரு வெற்றுத்தாளில்  பெண்ணிடமும் பெண்வீட்டாரிடமும் ரேகை வாங்கிக்கொள்கின்றனர் என்றும், (இதுவேதான், பின்னர் படிக்கும் காலம் முடிந்தபின் சொந்தநாடு திரும்பும்போது, பெண்ணுக்கான எவ்வுரிமையும் அற்று பெண்ணே  விவாகரத்து செய்தது போன்ற 'குலா' பத்திரம் ஆகிவிடும்..! ---இது ஆண் செய்யும் 'தலாக்' அல்ல..!)  இந்த "திருமணத்தை(?)" செய்து வைக்க புரோக்கர்களும், 'தாடிவைத்த காஜி'களும் இங்கு உள்ளனர் என்பதும் அதிர்ச்சி..!

இப்படி இவர்கள், அந்த வெளிநாட்டவர்களிடம்,  கமிஷன் பெற்றுக்கொண்டு, இளம் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கி படிக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது "இந்த பெண் என்னை விவாகரத்து செய்து விட்டார்" என்று 'குலா' பத்திரத்தை கட்டிவிட்டு கம்பி நீட்டி விடுகின்றனர் எனபதும் அதிர்ச்சிகரமான செய்தி..!
.
கைது  செய்யப்பட்ட சூடான் நாட்டவரே, 'தாங்கள் இங்கே இருக்கும் வரைதான் அந்த திருமணம் என்றும், சூடானுக்கு-தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் எண்ணம் எல்லாம் ஏதும் இல்லை' என்றும் தெரிவித்ததாக செய்தி கூருகிறது..!

ஒரு ஏழை எளிய முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக... உடனடியாக செயல்பட்டு தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுத்த ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் திரு.வினித் பிரிஜ்லால் மற்றும் உடன்பணியாற்றிய காவல்துறையினருக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..!

இனி... இக்கொடுமைக்கு என்னுடைய போஸ்ட் மார்ட்டம்..!
இந்த அவலத்திற்கு யார் யார் எல்லாம் முக்கிய காரணம்..? 

"திருமணத்தில் பெண்ணுக்கு ஏமாறாமல் இருக்க முறையான பாதுகாப்பு வேண்டும்" என்பதற்காகவே பாதுகாவலர் ஒருவர் இன்றி திருமணம் செய்ய அனுமதி இல்லை இஸ்லாத்தில்..! ஆனால், இங்கே குடும்பத்தாரே காசுக்கு ஆசைப்பட்டு "அனுமதி"(?) தந்துள்ளனர்..! மஹர் என்பது மாமியாருக்கா..? இவர்கள் முதல் குற்றவாளிகள்..!

இஸ்லாமிய திருமண சட்டங்கள் அறிந்த ஒரு காஜி  முன்னிலையில் (இஸ்லாமிய திருமணத்தில் இப்படி ஒருவர் முன்னிலை வகிக்கவேண்டிய அவசியம் இல்லை) இருந்தும் கூட, தான் கற்ற இஸ்லாமிய கல்வியையெல்லாம் துச்சமாக எண்ணி காலில் போட்டு மிதித்துவிட்டு, இஸ்லாமிய வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தீய காம இச்சை ஒன்றே பிரதான நோக்கமாக கொண்ட எவனோ மொழி தெரியாதவனுக்கு வேற்று நாட்டவனுக்கு திருமணம் நடத்தி... அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறார்..! ஒருவர் மனதை புரிந்து ஒருவர் அன்பு செலுத்தி குடும்பம் நடத்த மொழி அவசியம் அல்லவா..? இவர்கள் அடுத்த குற்றவாளிகள்..!

திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே, மஹராக கொடுப்பதையும் பிடுங்கிக்கொண்டு ஓட வகையாக, பெண்ணே முன்வந்து செய்யும் 'குலா' எனும் விவாகரத்து பத்திரத்தில் வலுக்கட்டாயமாக விரலை பிடித்து இழுத்து ரேகை வைத்து, அந்த அப்பாவி இளம் மணப்பெண்ணின் விருப்பமே இன்றி, இஸ்லாத்திற்கு விரோதமான மறுமையில் தண்டனைக்குறிய இப்படி ஒரு மகா "பாவத்தை", இவ்வுலகில் தண்டனைக்குறிய ஒரு "குற்றத்தை", "திருமணம்"(?) என்ற பெயரில் முற்றிலும் தீய நோக்கத்தில் சமூக விரோதிகள் எல்லாரும் ஒன்று கூடி நடத்தியுள்ளனர்..!

இதற்காக கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட அந்த சமூக விரோதிகள் மட்டுமா குற்றவாளிகள்..? வேறு யாரும் பொறுப்பு இல்லையா..?

வேற்று நாட்டவர்களை  நம் நாட்டிற்குள் கல்வி கற்க அனுமதி அளித்த அரசு, இவர்கள் குற்றங்கள் புரியும்போது குற்றவாளிகளை அனுமதித்து அழைத்து வந்தவர் என்ற முறையில்... அவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமா..? இல்லையா..?

ஒரு பெண் இந்தியாவில் பிறந்தால்... அவள் முஸ்லிம் என்றாலும் வரதட்சிணை கொடுத்தாக வேண்டும் என்ற, நம் இந்திய நாட்டு கலாச்சாரம் எனும் ஒரு சமூக நோயான வரதட்சணையும், முக்கிய குற்றவாளிதானே..?

நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, ராஜேந்திர சச்சார் கமிஷன்கள் எல்லாம் போட்டு, அவைகள், "இந்திய முஸ்லிம்கள் நிலை தலித்துகளை விட கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம், மற்றும் பொருளாதாரத்தில் படுகீழ்நிலையில் இருக்கிறது" என அறிக்கை சமர்ப்பித்து அதை நெத்தியடியாக அரசுக்கு நன்கு உணர்ந்தியிருந்தும், இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் மைய மற்றும் மாநில அரசுகளும் குற்றவாளிகள்தானே..?

இந்த கமிஷன்களின் அறிக்கையை நடைமுறை படுத்தக்கோறி எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டில் மட்டுமே தீவிரமாக போராட்டங்கள் நடக்க, இதை சுத்தமாக கண்டுகொள்ளாது காலம் தள்ளும் ஏனைய வேற்றுமொழி இந்திய முஸ்லிம்களும் குற்றவாளிகள்தானே..?

இப்படி இறையச்சம், மனசாட்சி எலாவற்றையும் மீறி பாவம் செய்வதற்கு காரணமான இந்த வறுமையை ஒழிக்கும் இஸ்லாமிய நடவடிக்கையான ஜகாத் என்பதை சரியாக வழங்கி, அதை சரியாக சேகரித்து, அதை சரியாக தேவையுடையோரை தேடி விநியோகிக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று உயிராக செயல்பட்டு வருகிறதா அங்கே..? இல்லையெனில், இப்படி ஒன்றை ஏற்படுத்தத்தவறிய அந்த சுற்றுவட்டார ஜமாத்தார்கள் அனைவருமே குற்றவாளிகள்தானே..?
.
பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அந்த சூடான் நாட்டுத்திருட்டுப்பயல்களிடம் இருந்து தப்பித்து ஓடி வருகிறார்..! எங்கே..? பள்ளிவாசல் ஜமாஅத் நோக்கியா..? காவல் நிலையம் நோக்கி..! ஆங்காங்கே அவ்வப்போது வரும்... "இந்திய காவல் நிலையங்கள் vs இளம் பெண்கள் மானபங்கம்" செய்திகள் கேள்விப்படாத வராகவா இருப்பார் அந்த பதினாறு வயசுப்பெண்..? இருந்தும்...  முஸ்லிம் ஜமாத்திடம் போகாமல், அவ்வளவு ரிஸ்க் எடுத்து, காவல்நிலையம் போய் அதுவும் நீதிக்காக அடைக்கலம் கேட்கிறார் என்றால்...? இது...?! ஹைதராபாத் முஸ்லிம்களே..! உங்களுக்கு இது கேவலமாக இல்லையா..? அங்கே உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தங்கள் அருகே இருக்கும் பாமர முஸ்லிம் மக்களிடம் இஸ்லாத்தை எடுத்து சொல்லாமல் என்ன கிழிக்கிறார்கள்..? இப்படி புரோக்கர்களும் இப்படி ஒரு காஜிகளும் தம்மில் புல்லுருவிகளாய் இருப்பது தெரியாமல் எப்படி இருக்கலாம்..? மொத்த ஹைதராபாத் முஸ்லிம் ஜமாத்தும் வெட்கித்தலை குனிய வேண்டாமா..? நீங்களும் குற்றவாளிகள்தானே..? 

மனிதர்க்கான இவ்வுலக வாழ்வியல் நன்னெறியான இஸ்லாத்தை எப்போதெல்லாம் முஸ்லிம்கள் பின்பற்றவில்லையோ, எப்போதெல்லாம் அப்படி பின்பற்றாத முஸ்லிம்களை கண்டித்து மற்ற முஸ்லிம்கள் தட்டிக்கேட்க வில்லையோ, கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை, "இவர்கள் நம்மைச்சார்ந்தவர்கள் இல்லை" என்று புறக்கணிக்கவில்லையோ... அப்போதெல்லாம்  இப்படித்தான் அநீதிகள், அவலங்கள், இழப்புகள்,  நடந்தேரும்..! அப்போதெல்லாம் இப்படித்தான் நமக்கு அவமானத்தால் தலைகுனிவு ஏற்படும்..! இதல்லாம் நமக்கு படிப்பினை..! ஆனால், இன்னும் எத்தனை முறைதான் பாடம் படிப்போமோ..!

( இறைவன் says... @ அல்குர்ஆன் 3:104 ) “நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல்வழியை நோக்கி (மக்களை) அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

...நாம்  குற்றவாளிகளில் ஒருவராக இல்லாமல் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டாமா சகோ..?

Sources :- 
http://www.ndtv.com/video/player/news/hyderabads-new-bride-bazaar/203753?hp
http://www.sunniforum.com/forum/showthread.php?74030-Hyderabad-s-new-bride-bazaar

39 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...