அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, July 4, 2011

15 தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?

(The second article of my 'Honey Bee Series') 

தேன்கூடு (A Miracle in Engineering & Technology) என்ற சென்ற பதிவில் தேன்கூடு பற்றிய அற்புதங்களை கண்டோம். இனி, தேனீக்கள் பற்றிய அற்புதங்களை காண்போம். சகோ..! நீங்கள், பள்ளியில் கணிதப்பாடத்தில், 'நிகழ்தகவு' (probability theory) பற்றி படித்திருப்பீர்கள். அதில், 1/2 நிகழ்தகவுக்கு இரு உதாரணங்கள் சொல்வார்கள். ஒன்று... காசு சுண்டும்போது விழும் "பூவா தலையா" ; மற்றொன்று... குழந்தை பிறக்கும்போது "ஆணா பெண்ணா" நிகழ்தகவு. இதன் மூலம் நாம் என்ன அறிகிறோம் என்றால்... ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்புக்கு 50:50 Ratio வாய்ப்பே இருப்பதாக சொல்கிறது இக்கணிதம். பொதுவாக, இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் (இன அழிப்பு போன்ற மனித ஊடுருவல் இல்லாமல்) இயற்கையாக இப்படித்தான் பொதுவாக ஆண் பெண் பாலினத்தொகை இருக்கிறது.    

ஆனால், தேனீக்களுக்கு மட்டும் இயற்கையாக இந்த 50:50 விகிதாச்சாரம் அமலில் இல்லை..! அதுவும் எப்படி இருக்கிறது தெரியுமா...? தேனீக்களில் ஆண் : பெண் என்பது சுமாராக 1 : 99 என்ற விகிதாச்சாரத்தில்  இருக்கின்றன..! இங்கே மட்டும் அந்த பொதுவான நிகழ்தகவுக்கு மாற்றமாக இது எப்படி சாத்தியம்..? இவை ஏன் இப்படி இருக்கின்றன..? இதனால் தேனீக்கு என்ன பயன்..? அதனால் யாருக்கு நன்மை..? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு அறிவியலாளர்கள் சிந்தித்தார்கள்..! ஆனால், பரிணாமவாதிகள் இவற்றை ச்சாய்ஸில் விட்டார்கள். அறிவியலாளர்கள் ஆராய்ந்தார்கள்..! விடைகள் பல "விடையற்ற ஆச்சரியங்களை" கொடுத்தன..! கொடுக்கின்றன..! 

உலகில் உள்ள எந்த தேன்கூட்டிலும், அங்கே சுமாராக 50,000 தேனீக்கள் இருப்பதாக கொண்டால்... சுமார் 500 அல்லது அதைவிட குறைவாகவே ஆண் பாலின தேனீக்கள் (Drone Bee) இருக்கின்றன. இவை நடுத்தரமான அளவு கொண்டவை. மீதி உள்ளவை பெண் பாலின தேனீக்கள். 

 தேனீக்கள் : பாலினம் இரண்டுவகைகள் மூன்று

இங்கே இன்னொரு அதிசயம் உண்டு. இந்த பெண் பாலினத்தில் மட்டும் இரு வகைகள்..! ஒன்று... இனப்பெருக்க பணியை மட்டுமே செய்யும் பெண் தேனீ..! இதை 'ராணித்தேனீ' (Queen Bee) என்கின்றனர். மற்றொன்று இனப்பெருக்கத்தில் மட்டும் ஈடுபடாமல் மற்ற அனைத்து வேலைகளையும் செய்யும் (Worker Bee) பெண் தேனீக்கள்..! உழைப்பாளி தேனீக்கள்..! இவை ஆண் தேனீக்களை விட அளவில் சிறியதாக இருக்கும். ஆனால், ராணித்தேனி என்பது இந்த இரண்டு ஆண் மற்றும் பெண் தேனீக்களைக்காட்டிலும் சுமார் ஒரு மடங்கு அளவில் பெரிதாக இருக்கும். காரணம், இவைகளின் வயிற்றுப்பகுதியில் மிகப்பெரிய அளவில் வளர்ந்த முட்டை உற்பத்தி செய்யக்கூடிய இரு ஓவரிகள் உள்ளன.  

ஓவரி  &  ஸ்பெர்மாதீகா

இங்கே மேலும் ஓர் அதிசயம் என்னவென்றால்... ஒரு தேன்கூட்டில் எத்தனை ஆயிரம் தேனிக்கள் இருந்தாலும் அந்த கூட்டில் ஒரே ஒரு இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயான ராணித்தேனீ மட்டுமே இருக்கும்..! மற்ற பெண் இனத்தவை எல்லாமுமே ஓவரிகள் இருந்தும் முட்டை இடாத 'உழைப்பாளி தேனீக்கள்'..! எப்படி இது இங்கே சாத்தியமாகின்றன..?  

'உழைப்பாளித்தேனீக்கள் தவிர மற்றவை உழைக்காதா..?' என்றால்... இவைகள் போன்று மற்றவை கடின உழைப்புக்காக படைக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற பதிவில் 'தேன்கூடு' என்ற அதிசயத்தை கட்டியது யார்..? இவைகள்தான்..! ஏனெனில், இவைகளிடம் சுரக்கும் கூட்டை கட்ட தேவையான beeswax மெழுகுப்பொருள் மற்றவைகளிடம் சுரக்காது.

சீனியர் உழைப்பாளிகள் என்றால், பல மைல்கள் அலைந்து திரிந்து மற்ற இரு பிரிவினருக்கும் உணவு சேகரித்து கொண்டுவந்து கொடுப்பது இந்த உழைப்பாளிதேனிக்கள்தான். காரணம், மகரந்தம் சேகரிக்கும் கூடை எனும் (pollen basket) உறுப்பு இவற்றிடம் மட்டுமே உண்டு. அதேபோல, பூக்களில் இருந்து உறிஞ்சிய நெக்டார்-ஐ தன் தேன்பை (honey stomach)-இல் சேமித்துக்கொண்டு வருதல் ஆகியன முக்கியம்.

ஜூனியர் உழைப்பாளிகள் என்றால்... கூட்டில் உள்ள larva-லார்வா எனும் புழுத்தேனிக்களுக்கு உணவு அளித்து பாதுகாத்தல், ப்யுப்பா-pupa எனும்  கூட்டுப்புழு நிலையை அடைந்துவிட்டால் கூட்டை மூடி சீல்வைத்தல், பின்னர் வளர்ந்து தேனீயாக வெளிவரும் குஞ்சுகளுக்கு உணவிடல்,  கூட்டிற்கு எதிரிகள் மூலம் ஆபத்து வருமானால் அதனை எதிர்த்து போராடுதல், அப்புறம் மிக முக்கியமாக தேன் உற்பத்தி செய்தல்... என, இவைகளின் உழைப்பு எக்கச்சக்கம். இன்னும் சிலவற்றை பற்றி இறைநாடினால் அடுத்த பதிவில்..!

அக்கூட்டில் உள்ள ஆண் தேனீக்கள் வேலை என்ன..? ராணித்தேனியுடன் பாலினச்சேர்க்கை புரிதல் மட்டுமே..! 'அதை எப்போதும் புரிகிறதா' என்றால் இல்லை. ஒரே ஒருமுறை மட்டுமே...! அதாவது, புதிதாக பிறந்த ஒரு ராணீத்தேனீ தன் கூட்டுப்புழு அறையை உடைத்து வெளியே வந்தவுடன், தன் போன்றே பிறக்கும் மற்ற ராணித்தேனி குஞ்சுகளை எல்லாம் முதலில் கொல்கிறது. பின்னர், தான் பிறந்த பத்தாவது நாளில், கூட்டை சுற்றி, நீண்டதூரம் பறக்கும் வட்டப்பயணம் ஒன்றை மேற்கொள்ளும். அப்போது, சில நூறு ஆண் தேனீக்கள் ராணித்தேனீ பின்னாடியே பறக்கும்..! இதற்கு "matting flight" அல்லது "nuptial flight" என்று பெயர்.  

 "பாலினச்சேர்க்கை பறத்தல்"

தன்னை பின் தொடர்ந்து வரும் சில நூறு ஆண் தேனீக்கூட்டத்தில் அதிக பட்சம் 10-15  ஆணீக்களுடன்  மட்டுமே... பறந்து கொண்டே... உடலுறவு மேற்கொள்ளும் ராணித்தேனீ..! 'ஏன் அத்துடன் மட்டும் உடலுறவை முடித்துக்கொள்கின்றன' என்றால், ராணித்தேனீ உடலினுள், spermathica எனும் ஒரு "விந்து சேமிப்பு அறை" ஒன்று உள்ளது. பாலினச்சேர்க்கையின் அது நிரம்பி விட்டால் போதும். அத்துடன் புகழ்மிக்க இந்த தன் "பாலினச்சேர்க்கை பறத்தலை" முடித்துக்கொண்டு கூட்டை நோக்கி திரும்பி விடுகிறது ராணித்தேனி..! 

தேனீக்கள் வாழ்வில் இந்த நாள் மிக மிக முக்கியமான ஒரு நந்நாள்..! ஏனெனில்  சுமார் 4 வருஷங்கள் வாழக்கூடிய இந்த ராணித்தேனீ, தன்வாழ்வில் இனியொரு முறை உடலுறவு மேற்கொள்ளாது..! அத்தனை வருஷமும் தான் சேமித்து வைத்த இந்த விந்தணுக்களை தான் முட்டைஇடும்போது பயன்படுத்திக்கொள்கிறது. அதுவரை ராணித்தேனியிடம் கெடாது உயிரோடு இருக்கும் இந்த விந்தணுக்கள்..! (But, Human Sperm can live around four days inside female) இன்னொரு அதிர்ச்சி... அவ்வாறு ராணியுடன் உடலுறவு முடித்த ஆண் தேனீக்கள் அனைத்தும் உடனே இறந்தும் விடுகின்றன..!  

உடலுறவு வாய்ப்பு கிடைக்காத மிச்ச ஆண் தேனீக்கள் கூட்டுக்குள் திரும்பி வந்தால் வரலாம். அப்படி வருபைவகளை மலர்கள் பூக்காத குளிர்காலத்தில் கூட்டில் உணவுப்பற்றாக்குறை வரும்போது பல்லாயிரக்கணக்கில் உள்ள உழைப்பாளி தேனீக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து... அந்த... "இனி ஏதும் பயனற்ற தண்டச்சோறு" ஆண் தேனீக்களை தங்கள் விஷம் உள்ள கொட்டுருப்பால் (stings) கொட்டி கொட்டி கொன்றே விடுகின்றன. பாவம், ஆண் தேனீக்களுக்கு அந்த கொட்டுருப்பு கிடையாது.  

 ஆண் தேனியை கூட்டாக சேர்ந்து கொல்லும் உழைப்பாளி தேனீக்கள்

இன்னொரு விஷயம், இந்த உழைப்பாளி தேனீக்கள்... வண்டினம் போன்ற தன் எதிரிகளை கொட்டும்போது ஒன்றும் ஆகாது. ஆனால், மனிதன் போன்ற பாலூட்டி(mammals)களை ஒரு முறை கொட்டினால் கூட கொட்டிய அத்தேனீ இறந்து விடும். காரணம், அந்த கொட்டுறுப்பு தேனியின் உடலிலிருந்து பிய்ந்து கொட்டப்பட்ட இடத்திலேயே மாட்டிக்கொள்வதால்..! அதே நேரம், ராணித்தேனீக்கள் மட்டும் எத்தனை முறை மனிதன் உட்பட பாலூட்டிகளை கொட்டியபின்னரும்  சாகாது. காரணம், இதன் கொட்டுறுப்பு அப்படி படைக்கப்பட்டுள்ளது..! 

சரி, இனி கூடு திரும்பிய  இந்த ராணித்தேனி என்ன செய்யும்..?  முதலில், அந்த கூட்டில் ஏற்கனவே இருக்கும் கிழட்டுராணியை சண்டை போட்டு சாகடிக்கும். இது நடந்துவிட்டால்... இனி அந்த கூட்டிற்கு இதுதான் ராணி..! சிலசமயம் சில ஆயிர உழைப்பாளிகளுடன் புது கூடுகட்ட தனிக்குடித்தனம் போவதும் உண்டு. இது, சண்டையிடும் இருவரின் பலத்தை பொறுத்து..!  

ராணிகளுக்குள் சண்டை

இந்த 'மகுடம் சூட்டல்' முடிவுற்ற பின்னர், ராணி தன் முழுநேர பணியை... அதாவது ஒவ்வொரு தேன்கூட்டு அறுகோண அறையிலும் போய் ஒரு முட்டை போட ஆரம்பித்து விடும். ஒரு நாளைக்கு சராசரியாக 1900 முட்டை போடும்..! அதாவது சுமார் ஒரு நிமிடத்திற்கு ஒன்னேகால் முட்டை..! என்ன வேகம்..? சளைக்காமல் முட்டை போடும் இச்செயலை மிகப்பொறுமையாக தன் முழு பின்னுடலையும் கூட்டிற்குள் மெதுவாக திணித்து, அதன் அடியில் செலுத்தி மிருதுவாக முட்டை ஒன்றை உடைந்து விடாமல் இட்டு விட்டு, மெல்ல வெளியேறி அடுத்த அறைக்கு செல்லும். எல்லாமே ஒரு நிமிடத்தில்..!  இதே பொறுமைதான் முதல் முட்டையிடலிலும் இருக்கும். அன்றைய 1900-வது முட்டையிடலிலும் இருக்கும். தன் வாழ்நாளில் போடும் மில்லியன் முட்டையிடலிலும் இருக்கும்..!  

நடுவில்  ராணித்தேனீ

இது எப்படி "ஆணா / பெண்ணா" என்ற பாலினத்தை கட்டுப்படுத்துகிறது..?  நாம் முன்னர் பார்த்தோமில்லையா..? ராணித்தேனீயின் விந்து காப்பக அறை..! அது ராணித்தேனியின் ஓவரியிலிருந்து முட்டை வெளியேறும்  வழியில், திறந்து மூடும் ஒரு வால்வு(valve)டன்  சேருகிறது..! இந்த வால்வு திறந்து மூடுதல் ராணித்தேனியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது..! அப்புறம் என்ன..? வெளியேறும் முட்டையுடன் விந்துகாப்பக அறை வாசலின் வால்வை திறந்து விட்டு விந்தை கலந்தால்... (fertilized egg) "உழைப்பாளித்தேனி" பிறக்கும்..! விந்துகாப்பக அறை வாசலை திறக்காமல் (un-fertilized egg)  வெறும் முட்டையை மட்டும் போட்டால்... "ஆண் தேனீ" பிறந்து வரும்..!  

 இடது - உழைப்பாளி தேனீ / வலது - ஆண் தேனீ

ஆக, இந்த பாலின விகிதத்தை கட்டுப்படுத்துவது ராணித்தேனியா..?  ம்ஹூம்...! இல்லை..! அப்புறம் வேறு எது..? சொல்கிறேன்..! இந்த ராணித்தேனீ... அது முட்டை போட செல்லும்போது, கூட்டின் அறுகோண அறையின் அளவை உன்னிப்பாக கவனிக்கும்..! (சென்ற பதிவில் நாம் பார்த்திருக்கிறோம். இரு வேறு சைஸ்களில் அறுகோண அறை இருக்கும் என்று..!)  அது பெரிய சைஸ் என்றால் 'ஆண் தேனிக்கான (unfertilized egg) முட்டையை' போடும்..! சின்ன சைஸ் என்றால்... உழைப்பாளித்தேனிக்கான (fertilized egg with sperms) முட்டையை போட்டுவிடும்..! அவ்ளோதான்..! ஒரு ப்ரோக்ராம் போடப்பட்ட இயந்திரம் மாதிரி.  

இப்போது, உங்களுக்கு புரிந்திருக்கும்..! காரணம், உழைப்பாளித்தேனிதான் என்று..! ஆனால், உடனே அடுத்த கேள்வி உதிக்க வேண்டும். அதெப்படி உழைப்பாளித்தேனி கூடு கட்டும்போது துல்லியமான இந்த 1:99 விகிதாச்சாரத்தில் கட்டுகிறது..? யார் இந்த வழிகாட்டலை இவைகளுக்கு சொன்னது..? எப்படி இந்த உள்ளுணர்வு வந்தது..?  இதுமட்டுமா... இப்பதிவில் சொல்ல மறந்த இன்னொரு அம்சம், "ராணித்தேனி" எப்படி 'பிறக்கின்றன'..? அதை 'பிறக்க வைப்பது' யார்..? இது யார் அதிகாரத்தில் வருகிறது..? இதை முடிவு செய்வதும் கூட இந்த உழைப்பாளி தேனிக்கள்தானா..?  

சகோ..! இவை பெண்களாக இருந்தும் ஓவரிகள் இருந்தும் முட்டையிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடாது இருப்பதற்கு என்ன காரணம்..? ராணித்தேனியின் ஓவரி போல இவற்றின் ஓவரிகள் வளர்ச்சி அடையாமல் இருப்பதே காரணம் என்றால் அது ஏன்..? இவைகளின் ஓவரிகள் இப்படி ஆனதற்கும் கூட இவைகளின் செயலேதான் காரணம் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா சகோ..! 

இதுபற்றியெல்லாம்.... 

"தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்" என்பதற்கான சரியான விடையுடன், இறைநாடினால் அடுத்த பதிவில் இவற்றை தொடர்வோம் சகோ..! 

டிஸ்கி :   

சூரா - அல் நஹல்.  
திருக்குர்ஆனின் 16-வது அத்தியாயமான இதன் மொத்த வசனங்களும் தேனீயை பற்றிப்பேசவில்லை. 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டுமே தேனீயையும், தேனையும் பற்றிப்பேசுகின்றன. இதன் தனித்துவ சிறப்பை கருத்தில் கொண்டே இறைவன் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயரை சூட்டி இருக்கலாம்; அல்லது, "அப்போதாவது இந்த மனிதர்கள் கொஞ்சம் இதைப்பற்றி சித்திக்கட்டுமே" என்று கூட கருதி இருக்கலாம், என்பவை என் யூகமே. ஆனால், இறைவனுக்கே சரியான காரணம் தெரியும். அதேநேரம், இவ்வசனங்கள் பற்றி மேலும் சிந்திக்கும் முன், நாம் தேனீக்கள் பற்றிய சில அறிவியல் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்வது இந்த திருமறை வசனங்களை மேலும் மிக நன்றாக விளங்க ஏதுவாக இருக்கும் என்பதற்காகவே இந்த பதிவு.

15 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...