அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, January 9, 2011

33 அடிப்படைவாதம் : மாற்று மாதவராஜ்

பதிவுலக சகோதரர்களே...!

எனது பரோஃபைலில் நீங்கள் பார்த்திருக்கலாம். என்னை நான் ஒரு //CITIZEN OF WORLD என்றும், (I'm) following the fundamentals of islam to live as a 'better human' (muslim) in the society. (on that basis... I'm an 'islamic fundamentalist என்றும், Nobody should be harmed by me at any cost, any where, any time... as, I can't escape from Allah, the only God என்றும், எழுதி வைத்திருக்கிறேனே? எதற்காக?

பொதுவாக உலகில் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருவர் கருத்து கூறும்போது உண்மையும் சொல்லலாம். பொய்யும் சொல்லலாம். அது உண்மையா அல்லது பொய்யா என்பதை கேட்பவர் தன் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து சரிபார்த்து பின்னர் அதை உட்கிரகிக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று சிந்திக்கிறார்கள்?

இன்றைய உலகில் முஸ்லிம் அல்லாத மற்றவரால் இஸ்லாம் போன்று வேறு எதுவுமே பொது மக்களுக்கு தவறாக சொல்லப்படுவதாக நான் அறியேன். இஸ்லாமிய எதிர்ப்பை மிக மிக எளிதாக ஊடகங்கள் வாயிலாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விடுகிறார்கள், அதன் எதிரிகள். 

எதுபோல என்றால்... நான் வாழ்ந்த அழகிய அதிராம்பட்டினத்தை என்  ஊர்க்காரர்கள் சொல்வார்கள் ... "அது ஆட்டை கழுதையாக்கிய ஊர்" --என்று..! அப்படித்தான் வேண்டுமென்றே அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை புரிந்தே... தெரிந்தே... வாய்ப்புக்கள் கிடைக்கும்  போதெல்லாம் வேண்டுமென்றே... "பயங்கரவாத மார்க்கமாக" சித்தரிக்கிறார்கள். 

இதனால் அவர்களுக்கு என்ன பலன்? ரொம்ப சிம்பிள். அந்த அதிராம்பட்டின கதையில் சிலர், ஆட்டை மீண்டும் மீண்டும் கழுதை என்றதும் சொந்தக்காரன் அதை உண்மையிலேயே கழுதை என நம்பி வீசிவிட்டு ஓடியதும் அதனை உடனே தமதாக்கிக்கொண்டு திருடர்கள் கபளீகரம் செய்து கொள்வார்களே... அதுபோலத்தான்...  ஆனால், இங்கே சிறு மாற்றம். ஆட்டின் சொந்தக்காரன், ''இல்லை இது ஆடுதான்'' என்று சொல்லிக்கொண்டே அவன்  சென்று கொண்டிருக்கிறான்... அவனிடமிருந்து ஆட்டை பிடுங்குவது கூட இங்கே இவர்களுக்கு முக்கிய நோக்கமில்லை. ஆனால், பார்வையாளர்களின் மனநிலையை மாற்றுவதே பிரதான நோக்கம். அதாவது, சுத்தி இருப்பவர்கள் மனநிலையோ ''சரிதான்... இவர்கள் சொல்வது போல நம் கண்ணுக்குத்தான் இது ஆடுபோல தெரிகிறது போலும்... ஒருவேளை உண்மையிலேயே கழுதைதான் போல''-- என்று அந்த பொய்ப்பிரச்சாரத்தின்... பிரம்மாண்ட பெரும்பான்மை பலத்தினால் மதியிழந்து பகுத்தறிவுக்கு விடுமுறையளித்துவிட்டு அப்படியே அவர்கள் சொல்வதை பலர் நம்பி விடுகிறார்கள். "சகோதரர்களே... அப்படி நம்பிவிடாதீர்கள்" என்பதற்குத்தான் என் புரோஃபைலும் இப்பதிவும்.

அடிப்படைவாதம் : மாற்று,  மாதவராஜ்

சமீபத்தில் அப்படி தவறாக நம்பியவர்களில் இரு பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் மாற்று. மற்றொருவர் மாதவராஜ். இவர்கள் அப்படி என்ன இஸ்லாம் பற்றி தவறாக புரிந்து கொண்டார்கள்?

சென்றவாரம் பாகிஸ்தானில் மெய்க்காப்பாளன் ஒருவனே கவர்னரை சுட்டுக்கொன்று விட்டான். இப்படி மட்டுமே இருந்திருந்தால் அது உலகிற்கு செய்தியே அல்ல. 'ஏன் கொன்றான்' என்று துருவும்போதுதான் பிரச்சினை இஸ்லாத்தில் போய் நிற்கிறது. 

எண்பதுகளில்... 'ராணுவ அத்துமீறல்' மூலம் (புரட்சி அல்ல) ராணுவத்தின் உச்ச பொறுப்பில் இருந்த ஜியா உல் ஹக் என்பவர் அப்போது பாகிஸ்தானை ஆண்டுகொண்டிருந்த சுல்பிகார் அலி புட்டோவை கைதுசெய்து(?) தூக்கிலிட்டுவிட்டு ஆட்சியை பிடித்துக்கொண்டார். இவரை கடுமையாக மக்கள் எதிர்த்தால், ''எதிர்ப்பவரை சட்டப்படி எப்படி கொலை செய்வது?'' என்று 'ரூம்போட்டு' யோசித்ததன் விளைவுதான்... 1986-ல் தன் எதிரிகளை 'தூக்குவதற்கு' அந்த ராணுவ சர்வதிகாரி ஜியா உல் ஹக் அறிமுகப்படுத்திய சட்டம்தான் 'பாகிஸ்தான் மத துவேஷ சட்டம்:295-C'. நமது 'சிறப்பு ராணுவ சட்டம்', 'தடா', 'பொடா' இவையெல்லாவற்றையும் விட மனிதவுரிமையை குழிதோண்டி புதைக்கும் ஒரு கொடூர சட்டம். 

என்ன சொல்கிறதாம் இச்சட்டம்? முஹம்மத் நபி(ஸல்) அவர்களை எவரேனும் பழித்தால் அவர்களை கொல்லுமாம் இச்சட்டம். இது இஸ்லாமிய அடிப்படையிலான சட்டமா என்றால்... நிச்சயமாக இந்த சட்டம்  இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானது...! எப்படி? 

முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றியும் அவரின் மனைவி பற்றியும் அவதூறு கூரியவனும், பலநாட்களாக  இஸ்லாமிய பிரச்சாரத்திற்கும் நபிக்கும் எதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டும்  நபிக்கு பல இன்னல்களை செய்துகொண்டு இருந்தவனுமான அப்துல்லாஹ் பின் உபைஹ் என்ற நயவஞ்சகன் ஒருநாள் இயற்கைமரணம் அடைந்தபோது சிலர் தடுத்தும் ஒருவர் சட்டையை பிடித்து இழுத்தும் கேட்காமல் அவனுக்காக பிரார்த்தித்து இறுதித்தொழுகை நடத்த முன்சென்றார்கள் , நபி(ஸல்) அவர்கள். ஆக, இங்கே இவனை தண்டிக்கவில்லை. கடுஞ்சொல் கூறவில்லை. மாறாக அவனுக்காக தன் இரைஞ்சல் மூலம் பரிந்துரை செய்ய நாடினார்கள் நபி(ஸல்) அவர்கள். இதுதான் அழகிய நபிவழி.

தன்னை இரத்தம் வழிந்தோட கல்லால் அடித்த தாயிஃப் மக்களின் மனமாற்றத்திற்கு இறைவனிடம்  பிரார்த்திதார்களே அன்றி கிஞ்சித்தும் கடுஞ்சொல் கூறவில்லை, அவர்களை தண்டிக்கவுமில்லை, நபி(ஸல்) அவர்கள்.

இதுதான் இஸ்லாமிய மத அடிப்படைவாதம். இதைத்தான் ஒரு முஸ்லிம் என்ற முறையில் ஜியா உல் ஹக் பின்பற்றி இருந்திருக்க வேண்டும். 
ஆனால், தன் மார்க்கத்தை விட தன் சுயநலத்திற்கே முன்னுரிமை கொடுத்து இஸ்லாமிய விரோத சட்டமொன்றை அன்று இயற்றினார். அந்த ராணுவ சர்வாதிகார ஆட்சியில் எவரேனும் எதிர்த்து மூச்சுவிட்டால் கூட, ''இவன் இந்த சட்டத்தை எதிர்த்ததால்.. நபியை நிந்திப்பதை ஆதரிக்கிறான்'' என்று கூறி தூக்கிலிட்டுவிடலாம். பல மார்க்க அறிஞர்கள் கூட இதை வெளிப்படையாக எதிர்க்காமல்... 'எலும்புதுண்டுக்கு' வரவேற்றதால் அப்பாவி மக்களும் "சரிதான்... இதுவும் இஸ்லாமிய சட்டம் போல.." என்று நினைத்து விட்டனர். எதிர்த்தால் இஸ்லாமியவிரோதி பட்டமும் தூக்குத்தண்டனையும் நிச்சயம் என்ற நிலையில் அன்று ஒரு முட்டாள் கூட எதிர்த்திருக்க வில்லை.

அதன் பின்னால் எத்தனையோ முறை ஜனநாயகம் வந்தாலும், எதிர்க்க-தூக்க வாய்ப்பிருந்தும் இந்த சட்டத்தை எதிர்க்கவோ, தூக்கவோ யாருக்கும் எந்த ஆளுங்கட்சிக்கும் தைரியம் வரவில்லை. காரணம், பாஜகவுக்கு ராமர் கோவில் போல பாகிஸ்தானில் எதிர்கட்சிகளுக்கு ஓட்டு சேர்க்கும் ஆயுதமாக இச்சட்டம் மாறிப்போயிருந்தது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே இதைவைத்து அரசியல் பண்ணின.

நாளடைவில் மக்களும் அரசியல் பண்ண ஆரம்பித்தனர்...! ஒருமுறை ஒரு மேலாளர், ஒருவரின் விசிட்டிங் கார்டை ஏதோ கோபத்தில் அதிகார தலைக்கணத்தில் தூக்கி வீச... அந்த விசிட்டிங் கார்ட் சொந்தக்காரர் மேலாளர் மீது இச்சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்தாராம்..! எப்படி என்கிறீர்களா? தூக்கி வீசப்பட்ட அந்த விசிட்டிங் கார்டில் இருந்த இவரின் பெயர் முஹம்மத்..!

இப்படித்தான் தற்போது இதே வழக்கில் ஒரு கிருஸ்துவபெண் நபியை பற்றி அவதூறு கூறிவிட்டார் என்று வழக்கு. அந்த முட்டாள் பாகிஸ்தான் நீதிமன்றம் மரணதண்டனையும் அறிவித்து விட்டது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது இஸ்லாமிய விரோதச்செயல். தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தான் சொல்லிக்கொள்கொள்ளும் உரிமையை இப்பொது எத்தனையாவது தடவை இழந்திருக்கிறது என்று யாராவது கணக்கு வைத்திருந்தால் சொல்லுங்கள். எப்போதோ செஞ்சுரி கடந்த்திருக்கும்.

இப்போது மிக்க அழகிய வரவேற்கத்தக்க விஷயம் ஒன்று நடந்தது. அது... பஞ்சாப் மாகான ஆளுநர் சல்மான் தசீர் இதனைக் கண்டித்தார். சிறையில் இருக்கும் ஆசியா பீபீயைச் நேரில் சந்தித்து, ஆதரவாகப் பேசியதோடு, பத்திரிகையாளர்களுக்கு, மத நிந்தனைச் சட்டத்தை எதிர்த்து பேட்டியளித்தார். இச்சட்டத்தை  எதிர்த்த உண்மையான 'இஸ்லாமிய அடிப்படைவாத' மனிதர்களின் ஒற்றைக்குரலாக சல்மான் தசீர் இருந்தார். மேலும் அப்பெண்ணுக்காக அதிபருக்கு கருணைமனு போட்டார். 

(இச்செயலை இங்கே இப்போது நம் ஹிந்துத்துவா தலைவர்களோடு ஒப்பீடு செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அங்கே... ஒரு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட  ஒரு சிறுபான்மை சமூக பெண்ணை கவர்னரே சென்று சிறையில் சந்தித்து அவருக்காக போராடுவது ஒரு பெரும்பாண்மை சமூகத்து ஆளுநர்..! இந்திய அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு படிப்பினை இவர்..!)

இவரை... இந்த சல்மான் தசீரை.... இந்த நல்லவரை... இந்த இஸ்லாமிய அடிப்படைவாதியை.... ஒருவன் - அவரின் ''தாடி வைத்து தொப்பி போட்ட ஒரு மெய்க்காப்பாளன்'' கொலை செய்து விட்டான். இவரைக்கொன்ற கொலைகாரன் இஸ்லாமிய அடிப்படையை பின்பாற்றாத கொடூர மனித விலங்கு. இவன் சொர்க்கம் செல்ல ஆசைப்படும் நல்லவனா? இல்லை. 

''அரசாங்கம் மட்டுமே குற்றவாளியை தண்டிக்க அதிகாரம் பெற்றது'' என்பதும், ''ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்றால் நேரடி நரகம்'' என்பதும், இஸ்லாமிய அடிப்படைவாதம். இந்த அடிப்படைகளை மீருபவன் மத விரோதி. அடிப்படைவாதி அல்ல. He is an ANTI-ISLAMIC FUNDAMENTALIST. 'தாடி வைத்து தொப்பி போட்ட ஒருவனை' கண்டால் உடனே மத அடிப்படைவாதி என்பதா?

இந்த  சரியான புரிதல் இன்றி... 

மாற்று, 

மாதவராஜ்,

" இது தவறான புரிதல் " என்று அவர்களுக்கு என்னால் என்னென்ன உதாரணங்கள் எல்லாம் சொல்லி புரிய வைத்திருக்க முயன்றிருக்கிறேன் என்பதனை மேற்படி பதிவுகளின் எனது பின்னூட்டங்களில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

என் கேள்விகளுக்கு, ''நீ என்ன பெரிய இவனா? உன் கருத்தை எல்லாம் நான் அங்கீகரிக்க'' என்ற தோரணையில் மொக்கை பதிலையும், பூசி மழுப்பல்களையும் கண்டு நொந்தவனாகத்தான் என் உள்ளக்குமுறலை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன். 

இரண்டு நாட்களாய் தொடர்ந்து கேட்டபின்னர், கேட்டகேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியின் உட்பொருளையும் புறந்தள்ளிவிட்டு, 'பெரியமனதுடன் போனால் போகட்டும்' என்று இரண்டு நாள் கழித்து  சகோ.மாதவராஜ் எனக்களித்த ஒரே ஒரு மறுமொழிக்கு இங்கேயே பதில் அளிக்கிறேன்.

////தனக்கு இருக்கும் நம்பிக்கை போன்று, அடுத்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் மதிக்கவோ, போற்றவோத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இழிவுபடுத்தாமலாவது இருக்கத் தெரிய வேண்டும். இதுவே, பல்வேறு நம்பிக்கைகள், வழிகள் கொண்டு இருக்கிற மனித சமூகத்தில் இணக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு ஊறு விளைவித்து, தன்னுடையது மட்டுமே உயர்ந்தது என நிலைநாட்ட முயற்சிக்கும்போது, சமூகத்தில் பதற்றங்கள் ஏற்படுகின்றன.////---சகோ.மாதவராஜ் அவர்களே..! உங்களிடம் உங்களை நோக்கி நானும் இதையேத்தான் சொல்கிறேன்..! மேலும், இதே வாக்குவாதங்கள் தானே 'கம்யுநிஸ்டுகளுக்கும்'  'போலி கம்யுநிஸ்டு'களுக்கும் இடையே பல்லாண்டுகளாய் இங்கே நடக்கின்றன?

இதையே ஜியா உல் ஹக்-ஐ  நோக்கியும் நாம் கூறலாம். அந்த கொலைகாரனும் கிட்டத்தட்ட இதே வார்த்தைகளைத்தான் சல்மான் தசீரை கொன்ற தன் செயலுக்கும் சப்பக்கட்டாய் கூறுகிறான்.

உங்களின் இந்த மறுமொழி இறைமறுப்பு மற்றும் கம்யுனிஸ சித்தாந்தவாதிகளுக்கும், ஹிந்துத்துவா-வாதிகளுக்கும்  அறிவுரையாக இஸ்லாமியர்கள் கூறுவது போன்றே உள்ளதே..!

ஆக...

இங்கே ஒரு நல்ல  மத அடிப்படைவாதி, ஒரு மத விரோதியால் கொல்லப்பட்டார் என்பதே சாலச்சரி. 

வேண்டுமானால், இந்த கொலைகார அரக்கனை 'ஜியா உல் ஹக்கிய சட்ட அடிப்படைவாதி' என்று சொல்லிக்கொள்ளுங்கள். I don't care.

திருடனை... 'திருடன்' என்றும் போலிசை 'போலிஸ்' என்றும் அழையுங்கள். மாற்றி அழைத்து மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்கிறீர்கள். போலிசான என்னை திருடன் என்று மக்களை நினைக்க வைக்க முயல்கிறீர்களா? 

''இஸ்லாம் மீது அவப்பெயர் ஏற்படட்டும்'' என்று நினைத்து இப்படி தலைப்பிட்டு வேண்டுமென்றே எழுதுகிறீர்களா? அதனை விளக்கியும் மறுக்கிறீர்களே? எனில், நன்கு தெரிந்தும் ஆட்டை கழுதையாக்க முயல்கிறீர்களா?

ஒருக்காலும் முடியாது சகோதரர்களே...!

---இப்படிக்கு,
ஒரு இஸ்லாமிய மார்க்க அடிப்படைவாதி.
(என்னை மனிதத்தமையுள்ளவனாக வாழ வைத்திருப்பதே இஸ்லாமிய மத அடிப்படைவாதம்தான்)

33 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...