அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, December 8, 2010

56 இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..!

'அப்த்' என்ற அரபிப்பெயருக்கு அடிமை என்று பொருள். அப்த்+உல் = 'அப்துல்' என்றால் '---ன் அடிமை' என்றாகிறது.  'அப்த்-உல்-அல்லாஹ்' அதாவது 'அப்துல்லாஹ்' என்றால் 'இறைவனின் அடிமை'.  அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் ( ரஹ்மான், ரஹீம், லத்தீஃப், ஜலீல், மலிக், ஹமீத்,  ஹலீம்... என) பற்பல பெயர்கள் உள்ளன. அப்துல்லாஹ் போலவே... அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் லத்தீஃப், அப்துல் ஜலீல், அப்துல் மலிக், அப்துல் ஹமீத், அப்துல் ஹலீம்.... என்று நிறைய 'இறைவனின் ஆணடிமைகளை' உங்களுக்கு தெரியும். ஆனால், அதேநேரம் 'இறைவனின் பெண் அடிமைகள்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களோ... ரஹ்மானியா, ரஹீமா, லத்தீஃபா, ஜலீலா, மலிக்கா, ஹமீதா, ஹலீமா... என்று 'அடிமை-அப்த்' பெயரை தங்கள் பெயருடன் இணைக்காமால் 'ஜம்பமாக' திரிவதைத்தான் பார்த்திருப்பீர்கள். உடனேயே இப்போது உங்களுக்கு தோன்றவில்லையா...? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!" என்று?

தொழுகை..! தினமும் ஐவேளை நேரம்தவறாமல் இறைவனுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இக்கடமையானதை, சாதாரண நிலையில் ஆண்கள் பள்ளிவாசலுக்கு சென்றுதான் நிறைவேற்ற வேண்டும். ஆனால், பெண்கள்? அது அவர்கள் இஷ்டம்..! நினைத்தால் மசூதிக்கு போகலாம். நினைத்தால் வீட்டிலேயே தொழலாம்..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

ஆண்கள் குடும்ப நலனுக்காக... வியாபார வேலை விஷயமாய் கடினமான பாலைவனப்பயணம் அல்லது கடற்பயணம்  செய்யும்போது மட்டுமின்றி, இஸ்லாத்திற்காக (ஜிஹாத்)போர்செய்து கொண்டிருக்கும் போது கூட... அது நபியாகவே இருந்தாலும் எச்சலுகையும் இன்றி இஸ்லாத்தில் எக்காலத்திலும் இன்றியமையாதது தொழுகை. ஆனால், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கோ...!   கேட்கவே வேண்டாம்...! மூன்று நாளோ... ஏழு நாளோ... அதிலும், குழந்தைபெற்ற தாய்மார்கள் நாற்பது நாள் கூட அல்லது அது முடியும்வரை கூட தொழவோ நோன்பு நோற்கவோ எந்த தேவைவும் இல்லை. அதுவும் மென்சஸ் காலம் முடிந்த பின் தொழாத தொழுகையை மீட்டெடுத்தும் தொழத்தேவை இல்லை.  "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போது இஹ்ராமில் ஆண்கள் மட்டும் தனியாக வெண்மையான தையல் அற்ற இரு துண்டு ஆடைகள் மட்டுமே உடுத்த வேண்டும். மற்ற நாட்களில் வழமையாக ஆண்கள் உடுத்தும் தைத்த ஆடைகளுக்கு அப்போது அனுமதி இல்லை. ஆனால், பெண்கள்? அவர்கள் வழக்கமாய் உடுத்தும் அதே ஆடைகளை உடுத்திக்கொள்ளளாம். பெண்களுக்கு மட்டும் 'தவாப்' மற்றும் 'சயீ' செய்யும்போது 'தொங்கோட்டம்'(ரமள்) இல்லை.  ஆனால், ஆண்கள் ஓடவேண்டும். ஹஜ்/உம்ரா முடித்து இஹ்ராமிலிருந்து விடுபடும் சமயம் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டியது ஆண்களுக்கு மட்டுமே கடமை..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

இஸ்லாத்தில்  ஆண்களுக்குத்தான் தங்கள் குடும்பத்திற்காக வெளிச்சென்று, வேலைதேடி, கடல்கடந்தேனும் கஷ்டப்பட்டு வெயில்-மழை-குளிர் என்று பாராமல் உழைத்து பொருளீட்டி தங்கள் மனைவி குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை. ஆனால் பெண்களுக்கு அது கடமை இல்லை? விரும்பினால் ஒரு சேஞ்சுக்கு ஜாலியாய் சம்பாதிக்கலாம். அதை அவர்களுக்கு மட்டுமே செலவும் செய்து கொள்ளலாம். யாருக்கும் தரவேண்டிய கட்டாயமும் இல்லை. அது போரடித்தால், பேசாமல் கணவனின் சம்பளத்தில் ஜாலியாக வீட்டில் உக்கார்ந்து என்ஜாய் பண்ணலாம். "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
சமைத்தல்... துவைத்தல்... பாத்திரம் கழுவுதல்... வீடு துப்புரவு செய்தல்... ---இதெல்லாம் இஸ்லாத்தில் மனைவிக்கான அல்லது குடும்பத்தில் பெண்களுக்கான மறுக்கவியலா கடமைகளோ வேலைகளோ அல்ல. மனைவிக்கு உரிய கடமைகளில் இவை சொல்லப்படவும் இல்லை. ஆண் பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு செய்ய வேண்டியவை. சப்போஸ்... ஒருநாள்... மனைவிக்கு சமைக்க மூடு இல்லை என வைப்போம். "சமை" என கட்டாயப்படுத்தலாம் கணவனுக்கு உரிமை இல்லை. ப்ளீஸ் ப்ளீஸ்... ன்னு கணவன் கெஞ்சிப்பார்த்தும் மனைவி மறுத்தால்... பேசாமல் ஹோட்டல்க்கு சாப்பிட போக வேண்டியதுதான். மறக்காமல், சமைக்க மறுத்த மனைவிக்கும் சேர்ந்து பார்ஸல் வாங்கி வந்து தர வேண்டும். ஏன்..? அன்று ஊரில் பந்த் என்றால்... வேறு வழியில்லை வீட்டில் உள்ளதை வைத்து மனைவிக்கும் சேர்த்து கணவன்தான் சமைக்கவும் வேண்டும்... ஏன்..? ஏன்னா... தான் உண்ணும் போதும் மனைவிக்கு உணவளிக்க வேண்டியதும், உடுத்தும் போது உடை அளிக்க வேண்டியதும்... கணவனின் கடமை என இஸ்லாம் சொல்கிறது..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ண முதல் மனிதர் ஆதம் நபி(அலை) காலம்தொட்டு முஹம்மது நபி(ஸல்...) காலம் வரை ஆண்களே நபியாக அனுப்பட்டிருக்கிறார்கள். நபி என்றால் ஏதோ ஒரு சொகுசான பதவியா? நிராகரிப்பாளர்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அவர்களினால் சொல்லமுடியாத இன்னல்கள், தாக்குதல்கள், அவதூறுகள்,  அடி, உதை, ஊர்நீக்கம், ரத்தம் சிந்த போர், கொலை முயற்சி, அதன்பயனாய் 'ஹிஜ்ரத் செய்தல்'(நாடுதுறந்து நாடோடியாய் வேறு நாடு செல்லல்)  என்று அதனால் ஏற்படும் அனைத்து கொடுமைகளையும் நபியாக இருந்த ஆண்களுக்குத்தான். பெண்களுக்கு அது போன்ற ஒரு பெருஞ்சுமை சுமத்தப்பட்டதா? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

பெண்ணுக்கு மஹர் (மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆணுக்கு மட்டுமே கட்டாயக்கடமை. எதை, எப்படி, எவ்வளவு மஹர் கொடுப்பது? அதை எல்லாம் தீர்மாணிப்பது மணப்பெண்ணின் உரிமை..! பதிலுக்கு ஆண் ஏதாவது நகை/தொகை/பொருள் என மணப்பெண்ணிடமிருந்து கேட்கலாமா? நோ..! மூச்..! இந்த கலாட்டாவில், மணப்பெண்ணின் ஒப்புதல் இன்றி திருமணம் செல்லாது."இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

ஆணும் விவாகரத்து செய்யலாம். பெண்ணும் விவாகரத்து செய்யலாம். பின்னர் தாங்கள் விரும்பியோரை மணக்காலம். ஆனால், பெண்ணை ஆண் 'தலாக்'(விவாகரத்து) செய்யும்போது, திருமணத்தின் போது மலையளவு  மஹரை அள்ளி தந்திருந்தாலும் சல்லிக்காசு அதிலிருந்து திருப்பிக்கேட்க முடியாது. மேலும்,  அந்த பெண், ஊர் ஜமாஅத் மூலம் பேசி அந்த ஆணின் பொருளாதார நிலைக்கேற்ப விவாகரத்து செய்யும் ஆணிடமிருந்து ஒரு 'லம்பா அமௌன்டை',  'சம்ரட்சனை' (ஜீவனாம்சம்?) என்ற பெயரில் ஒரே தடவையில் கறந்து விடலாம். தலாக்  செய்யப்பட்ட அப்பெண்ணுக்கு 'இத்தா'காலத்தில் பொருளுதவி, அப்போது கருவுற்று இருந்தால், பிரசவம் வரை பொருளுதவி, பிரசவத்திற்கும் பொருளுதவி, அந்த குழந்தைக்கு ஒரு தாயாக இருந்து பாலூட்டுவதற்கு தலாக் செய்யப்பட அப்பெண்ணுக்கு கூலி, அந்த இரண்டு வருட பாலூட்டும் காலத்திற்கும் உணவு/உடை என்று பொருளுதவி ... அடா..! அடா..! ஆனால், ஓர் ஆணை ஒரு பெண் 'குலா'(விவாகரத்து) செய்யும்போது, 'சம்ரட்சனையாவது'... 'கிம்ரட்சனையாவது'? மூச்..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

ஒரு கற்புள்ள ஒரு பெண் மீது அவதூறு கூறினால், நிரூபிக்க நான்கு சாட்சிகள் கொண்டு வர வேண்டும். ஒன்று குறைந்தாலும் 80 கசையடி இஸ்லாத்தில். அப்போ... கற்புள்ள ஆண் மீது யாரும் பழிசுமத்தினால்...?  "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

எந்த ஆணாவது தன் மனைவியை (அப்போதைய அஞ்ஞான வழக்கப்படி) தாயுடன் ஒப்பிட்டுவிட்டால்... போச்சு...! அவன், ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும் அல்லது இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் அல்லது அறுபது ஏழைக்கு உணவிட வேண்டும். அதற்குப்பின்தான் மனைவியை தொட அனுமதி. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

வரலாற்றுப்புகழ்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கையின் முக்கிய ஷரத்து என்னவென்றால், மக்கா குறைஷியரிடமிருந்து யாராவது இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்கள் வசம் மதினா வந்துவிட்டால் அவர்களை மீண்டும் மக்கா குறைஷிக்காபிஃர்களிடமே திருப்பி அனுப்பிவிடவேண்டும். ஆனால், அதேசமயம் மதீனாவிலிருந்துயாராவது முஸ்லிம்கள் சென்று மக்காவில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். இவ்வொப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு சற்று முன்பு மக்காவில் குரைஷி காஃபிர் கொடுமைகள் தாங்காமல் 'பிழைத்தால் போதும்' என்று மதினா வந்த அபுஜந்தல்(ரலி) அவர்கள்,  ஒப்பந்தத்துக்கு பிறகு அதேபோல் முஸ்லிமாகி வந்த அபுபஷிர்(ரலி) அவர்கள் என ஆண்கள் அனைவரும் மக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆனால், உம்மு குல்தும் (ரலி) என்ற பெண் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து தப்பித்து மதினா வந்தால்... அவர் இஸ்லாத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்படமாட்டார். "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

கோடி கோடியாய் சம்பாரித்தாலும், உலகிலேயே பிரம்மாண்ட ஜுவல்லரி-நகைக்கடை வைத்திருந்தாலும்... ஒரு குண்டுமணி அளவுக்குக்கூட ஆண்களுக்கு  தங்க நகை அணிய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. தன் எடையை விட அதிகமாக தங்க நகை போட்டுக்கொண்டாலும் பெண்களை கேட்பார் யாருமில்லை. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

மொத்த திருபுவனத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கி விட்டாலும் அதிலிருந்து ஒரு பட்டு வேஷ்டி? ஒரு பட்டு சட்டை? ம்ஹூம்..! அதெல்லாம் அணிய இஸ்லாமிய ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், பெண்களோ கடையையே வாங்கிக்கொள்ளளாம். தினம் பத்து பட்டுப்புடவைகள் கட்டினாலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

இஸ்லாமியபாதையில்   தம் உயிரை பணயம் வைத்து, தம் உறுப்புகள் இழப்பையும் பொருட்படுத்தாது ஆயுதம் ஏந்தி எதிரிகளுடன் கொதிக்கும் வெயிலில் அனல் பறக்கும் பாலைவனத்தில் புழுதிக்காற்றை சுவாசித்தவண்ணம் பசியுடன் வயிற்றில் கற்களை கட்டிக்கொண்டு போர் (ஜிஹாத்) செய்ய ஓர் இஸ்லாமிய அரசின் ஆட்சியாளர் அழைத்து விட்டால்... அது அந்நாட்டில் உள்ள எல்லா ஆண்களுக்கும் மட்டும் கடமை.  பெண்களுக்கு இந்த போர் செய்யும் கஷ்டம் எல்லாம் கடமையே இல்லைவிரும்பினால் போர்க்களத்துக்கு வரலாம். தடையே இல்லை. தடையும் இல்லை கடமையும் இல்லை என்பது மட்டுமல்ல... ஹஜ் செய்வதே பெண்களுக்கு ஜிஹாத் செய்தா மாதிரி..!  ஆஹா..! பெண்களுக்கு டபுள் நன்மையா ஹஜ் செய்வதில்..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

'நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகுந்த அருகதையானவர் யார்?' ---நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நபித்தோழர் கேட்கிறார். அதற்கு அண்ணல் அவர்களின் பதில்:- உங்கள் தாய்..! பிறகு யார்? உங்கள் தாய்..! பிறகு யார்? உங்கள் தாய்..! பிறகு யார்? உங்கள் தந்தை..!!!  மேலும் யாருடைய காலிலாவது விழ இஸ்லாத்தில் அனுமதி கொடுக்கப்படுமேயானால், அது அவரவருடைய தாயின் காலடியில் தான் என்றும் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  "... மனிதனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கற்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்கு பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள். ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக..! என்னிடமே உன் மீளுதல் உள்ளது"   ---என்று அல்லாஹ் தன் திருமறையில்(31:14) தெரிவிக்கிறான். ஆக, தந்தையைவிட தாய்க்கே இஸ்லாத்தில் முதல் மரியாதை. அதாவது பெற்றோரில் ஆணைவிட பெண்ணுக்கே முன்னுரிமை. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

முந்திய பாராவில் தாய்க்கு எவ்வளவு பெரிய அந்தஸ்து என்று பார்த்தோம் அல்லவா...? ஆனால், "தாயைப் போல இருக்கிறாய்" என்று மனைவியிடம் சொல்லி - அக்கால அரேபிய வழக்கப்படி, இதைக்கொண்டு ஒரு திருமணத்தை முடிவுக்கு கொண்டுவந்த தன் கணவனின் அநீதியை எதிர்த்து... ”கவ்லா” என்ற ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வழக்காக முறையிட்டபோது, அப்போதைய சமூக வழக்கப்படி அப்படி கணவன் சொல்லிவிட்டதால், திருமணம் முடிந்ததாகவே தீர்ப்பு சொன்னார்கள். அதைக் கேட்டு அப்பெண் அழுது புலம்பி, நபி(ஸல்) அவர்களோடு தர்க்கம் செய்தார். நபி முன்பு குரலை உயர்த்துவதையே அல்லாஹ் தடை செய்திருக்க, மேலும், நபி சொன்னால் மாற்றுக் கருத்தில்லை என்ற சட்டமும் இருக்க, அப்பெண் நபியின் தீர்ப்பையே எதிர்த்து தர்க்கம் செய்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆனாலும், நீதியாளனான இறைவன் அப்பெண்ணின் தர்க்கத்தில் உள்ள நியாயத்தை ஏற்று, தவறான அரேபிய வழக்கத்தை உடைத்து, நபியின் தீர்ப்பை மாற்றிச்சொல்லி, குர்ஆனில் 58-வது சூராவான அல் முஜாதிலா என்ற சூராவை இறக்கினான்..! அதில்...

1. அல்லாஹ், ஒரு பெண்ணிற்காக‬ நபியின் தீர்ப்பையே மாற்றுகிறான். மேலும், நபி(ஸல்) அவர்களோடு தர்க்கம் செய்ததைக் கண்டிக்கவுமில்லை. மாறாக, அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன் என்று அப்பெண்ணை ஆறுதல்படுத்தி, மற்றவர்களை எச்சரிக்கிறான். 58:3. "மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள்."

2. ‪மேலும், அல்லாஹ் அதில், கணவர்களுக்கான எச்சரிக்கை‬ ஒன்றையும் விடுக்கிறான். கவ்லாவின் கணவர் தன் மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்திய பின், அதனைப் பற்றி வருத்தம் தெரிவிக்காமல் எதுவுமே நடவாதது போல நெருக்கமாக இருக்க முனைகிறார். மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்துவதை கணவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இங்கு அப்பெண்ணை வார்த்தைகளால் வதைத்ததற்குத் தண்டனையாக, ஒரு அடிமையை விடுதலை செய்யுமாறு அல்லது 2 மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்குமாறு கட்டளை இடுகிறான்.அதைச் செய்யாதவர்களுக்கு, மறுமையில் கடுமையான வேதனையுண்டு என்றும் அடுத்தடுத்த ஆயத்துகளில் இறைவன் எச்சரிக்கிறான்..! (58: 3-6)

ஆக, இந்த நிகழ்வில், கணவனின் தலாக்கை விட, அதை ஆதரிக்கும் நபியின் தீர்ப்பை விட, அத்தீர்ப்புக்கு எதிரான மனைவியின் தர்க்கத்துக்கே இஸ்லாத்தில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பாருங்கள்... "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"

ஆண்குழந்தை  பிறந்தால் இரண்டு ஆடு அறுக்க வேண்டும். ஆனால், பெண்குழந்தை பிறந்தால் ஒரு ஆடு மட்டும் அறுத்து 'அகீகா' கொடுத்தால் போதும். மேலும், எவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்து அவர்களை அன்புகாட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே தோழர்கள் 'இரண்டு பெண்மக்கள் இருந்தாலுமா? 'ஆம்..! இரண்டு இருந்தாலும்' என்றார்கள். உடனே ஒரு தோழர் 'ஒரு பெண் பிள்ளை இருந்தால்?' என்றவுடன், 'ஆம்..! ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்..!' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஆக, இதுவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை மட்டுமே கண்டோம். இப்போதோ, பெண்குழந்தை பெற்றவர்களுக்கும் சலுகைகள்..!!! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆண்குழந்தையடிமைத்தனம்  மற்றும் பெண்குழந்தையாதிக்கம்...!".

உலகின் எந்த ஒரு ஆணும் பெண்ணின் மீது பாலுணர்வு வேட்கை கொண்டதும், அவளை முழு உடையோடு இருக்க விடுவதில்லை. மனைவியின் ஆடைகளை கணவன் வலுக்கட்டாயமாக களைகிறான். இதுதான் நடப்புலகின் யதார்த்த உண்மை. அதேபோலவே... தன் குடும்பத்து பெண்கள் அல்லாத பிற பெண்களை காமத்துடன் காண(மட்டுமாவது)வும் விரும்புகிறான். எந்த ஒரு சினிமாவிலும் எந்த ஒரு ஹீரோயினும் குத்துபாட்டு/டூயட்டில் கூட 'நான் உடலை காட்டவே மாட்டேன், பர்தாவுடன்தான் நடிப்பேன்' என்றெல்லாம் அடம்பிடிக்க முடியாது. ஆணின் காமக்கண்களுக்கு விருந்தளித்து அவனின் ஆண்மை உணர்வுகளைத்தூண்டி கிளர்ச்சியூட்டி இன்புறவைத்துக் களிக்கவே அதெல்லாம் காட்சிப்படுத்தப் படுகிறது என்பது தெளிவு. ஐட்டம் சாங்க்ஸ் எனப்படுவதும் திரைக்கதைப்படி இதற்காகவேதான். மேற்படி, விஷயங்களைத்தான் பணம் செலவழித்து தியேட்டரில் பார்க்கிறான் ஆபாசவிரும்பியான ஆண். ஆபாஸ படங்களுக்கு எங்காவது பெண்கள் கியூவில் நின்றதை கண்டதுண்டா..? பொதுவாக, பணம் செலவழித்துக்காணும் காட்சி, இலவசமாகக்கிடைக்குமானால்... எவனும் அதைக்காணவே விரும்புவான். இதுவும்தான் நடப்புலகின் யதார்த்த உண்மை. அந்த இலவசக்காட்சி இன்பத்தையுங்கூட முஸ்லிம் பெண்கள் மூலமாக முஸ்லிம் ஆண் உட்பட எந்த ஆணையும் பெறவிடாமல்  தடுத்து விடுகிறது இஸ்லாம். எப்படியெனில், பெண்ணுக்கு உடல் தெரியாமல் இறுக்கிப்பிடிக்காத - ஒளி ஊடுறுவாத - உடல் முழுக்க நன்கு மறைக்கும் விதமான தளர்வான கண்ணியமான ஆடையை மணிக்கட்டு, முகம், பாதம் தவிர மறைக்கும் விதமாக (இதுதான் ஹிஜாப்) அணிவிப்பதன் மூலம்..! இதனால் தன் சிற்றின்பம் சின்னபின்னமானதால் கடுப்பாகிறான் ஆபாச விரும்பியான ஆணாதிக்கவாதி. "பர்தா பெண்ணடிமைத்தனம்" என்று கூப்பாடு போடுகிறான். ஓநாயின் கூக்குரலென அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து ஹிஜாப் அணிகிறார்கள்; அதன்மூலம் அக்கிரம ஆண்களின் மனோ இச்சையை அடித்து விரட்டி அவர்களை தாங்களே ஆதிக்கம் செய்கிறார்கள். முஸ்லிம் ஆண்களுக்கோ... பெண்களை இச்சையுடன் பார்ப்பதும் ஹராம் ஆகிறது. முதல் பார்வையின்றி இரண்டாம் இச்சைப்பார்வை தடுக்கப்படுகிறது. (பெண்ணுக்கு இதேபோன்ற தடை இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை) முஸ்லிம் ஆண் இறைவனின் கட்டளைகளுக்கு அடிமையாகி, தானும் கண்ணிய ஆடை அணிந்து தம் பார்வைகளையும் தாழ்த்திக்கொள்கிறான். அப்பப்பா... இஸ்லாத்தில்தான்... எத்த்த்த்த்தனை ஆணடிமைத்தனம் & எவ்வ்வ்வ்வ்வளவு பெண்ணாதிக்கம்..!

முக்கியமான பின்குறிப்பு  :

போதுங்க...! மாசத்துக்கு பத்து பகுத்தறிவு(?)பதிவர்கள் 'இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் (?) பொங்கி வழிகிறது' என்றும் 'ஆணாதிக்கம் (?) ஆட்டிப்படைக்கிறது' என்றும் பல பல முறை எழுதி எழுதி அலுத்து விட்டார்கள். அவர்களுக்கு  பல பல பல முறை சரியான தெளிவான நியாயமான நெத்தியடி பதில்களை முஸ்லிம் பெண் பதிவர்கள் உட்பட எண்ணற்றோர்  எழுதி எழுதி எழுதி அலுத்தும் விட்டோம். இப்போது ஒரு சேஞ்சுக்கு மேற்படி பகுத்தறிவு(?)பதிவர்களுக்காக...  இந்த பதிவு..! இன்னும் ஏகப்பட்டவை இருந்தாலும் பதிவு நீ......ண்டுவிட்டதால்.... சாம்பிளுக்கு சிலவற்றை மட்டும் சொல்லியுள்ளேன்..!!! ஆனாலும், கொஞ்சம் ஓவராய் போய்ட்டேன். ஸாரி...!

( மேலும் அதி முக்கிய டிஸ்கி : இப்பதிவு வஞ்சப்புகழ்ச்சிஅணியில் எழுதப்பட்டுள்ளது. வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வது மட்டுமின்றி இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்)


56 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...