அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, July 3, 2013

2 '#பயங்கரவாதம்' - ஏன்? எதற்கு? எப்படி? எதனால்?

'#பயங்கரவாதம்'
# - மத/இன/சாதி/மொழி/கொள்கை

நான் அறிந்தவரை எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்ய சொல்லி பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. ஆனால்... இன்று உலகில் 'பயங்கரவாதிகள்' இருக்கிறார்கள் என்றால்... அதற்கு எந்த மதமும்  காரணம் அல்ல..! எனில், 'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' எல்லாம் எப்படி முளைக்கிறது...?

அநீதமான ஆட்சியாளர்களால்தான்..!

ஆமாம்...!  பயங்கரவாதத்துக்கு முழு காரணமும் தான் சார்ந்த சமூகத்துக்கு ஆதரவாக தவறான முறையில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களே..! அவர்கள்தான் ''மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்" உருவாவதற்கு முதல் முக்கிய காரணம்..! அவர்கள்  செய்யும் தவறு என்ன..?

ஒரு குறிப்பிட்ட மத/இன/சாதி/மொழி/கொள்கை கொண்ட மக்களுக்கு அநீதி இழைப்பது... அம்மக்களின் செல்வத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து சூறையாடுவது... அம்மக்களுக்கு சமநீதியோ, சம உரிமையோ தராதிருப்பது... அம்மக்களின் உடமைக்கும் உறவுக்கும் உயிருக்கும் அரசு அதிகாரத்தால் சேதம் ஏற்படுத்துவது... அவர்களை தம் அதிகாரவர்க்கம் மூலம் அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி ஆள்வது... கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம், அரசு அதிகாரம் என இதிலெல்லாம் பிரதிநிதிதத்துவம் தராமல் ஓரங்கட்டுவது... ஆக, இப்படியான  ஒரு துர்நிலை நீடிக்கும் போது... அந்த சமூகத்தில் என்றாவது ஒருநாள் அரசை எதிர்த்து கேட்கும் ஒருவர் தோன்றினால்... அவரின் பின்னால் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அணி திரள்வார்கள். கையை காற்றில் ஓங்கி குத்தி... வாயை திறந்து கத்தி... தங்கள் உரிமையை நீதியை ஜனநாயக முறையில் அரசிடம் கேட்பார்கள்.

இதற்கு நேர்மையான அரசு கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். அல்லது நேர்மை தவறிய அரசு எனில் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டாவது இருக்க வேண்டும். சில காட்டுமிராண்டி அரசுகள் இங்கேதான் மிகப்பெரிய தவறு செய்கின்றனர். அம்மக்கள் மீது தடியடி... கண்ணீர்ப்புகை... துப்பாக்கிச்சூடு... என்கவுண்டர்... உயிர் மிஞ்சியவர்கள் சிறையிலடைப்பு... புதிய ஸ்பெஷல் அடக்குமுறை ஏவல் சட்டங்கள் போட்டு... கைது செய்து சிறையில் வதை... சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து ஆயுள் முழுக்க சிறையில் வைப்பது... என்று ஏகப்பட்ட சித்திரவதை..!

அரசு இப்படி இருந்தால்... அரசை சார்ந்த பெரும்பாண்மை மக்கள் எப்படி இருப்பார்கள். சட்டத்தை கையில் எடுத்து அம்மக்களுக்கு வாடகை வீடு மறுப்பதில் ஆரம்பித்து... வாழ்வின் ஒவ்வொரு படிக்கல்லிலும் தொல்லை தருவது... சொத்துக்களை சூறையாடுவது... அம்மக்களில் பெண்கள் மீது பாலியல் அக்கிரம் புரிவது... வணிக மையங்களை எரிப்பது... கொல்வது வரை... எல்லாம் செய்வார்கள். இதற்கெல்லாம் எப்படி இவர்கள் துணிச்சல் பெறுகிறார்கள்..? எங்கே போயின இவர்களின் மனிதநேய உணர்வுகளும் மனிதாபிமான கல்விகளும் கற்ற கற்பிக்கப்பட்ட வாழ்வியல் ஒழுக்கங்களும்..?

இதற்கெல்லாம் ஒரே வரிதான் பதில்..! அரசன் எவ்வழியியோ மக்களும் அவ்வழியே..!

இதன் பின்னே அந்த ஒடுக்கப்பட்ட மக்கள்... தங்கள் போராட்டத்தை கைவிட்டு வெறுத்து நொந்து முடங்கி போவார்கள்..! அதற்காகத்தானே மேலே சொல்லப்பட்டவை எல்லாமே நடந்தன..? அல்லது... ஜனநாயக வழியில் போராடுவதை விட்டுவிட்டு... அரசுக்கு எதிராக அதே வழியில் ஆயுதத்தை தூக்குவார்கள்..! அவை வெடிக்கும் போது... "மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்" பிறந்ததாக ஊடகங்களில் சொல்லப்படுகிறது..! அரசால் சொல்ல வைக்கப்படுகிறது..! இப்படி மாற்றிச்சொல்லப்படுவதை நான் மிக கடுமையாக மறுக்கிறேன்..! கண்டிக்கிறேன்..! வெறுக்கிறேன்..!

வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் பகிரங்க ஜனநாயக உரிமைக்குரலை கண்ணீர்ப்புகை/தடியடி கொண்டு அரசாங்கம் ஒடுக்க ஆரம்பிக்கும்  போதே ஆட்சியாளர் எந்த மத/இன/சாதி/மொழி/கொள்கை கொண்டவரோ... அந்த  'மத/இன/சாதி/மொழி/கொள்கை பயங்கரவாதம்' ஆங்கே பிறந்து விட்டது..!

இதுபோல... ஒடுக்கும் ஆட்சியாளரும் ஒடுக்கப்படும் சமூகமும் ஒரே மதமாக இருந்தால்... அது நிறத்தின் அடிப்படையில் "இன பயங்கரவாதமாகவோ" அல்லது "சாதி பயங்கரவாதமாகவோ" அல்லது "மொழி பயங்கரவாதமாகவோ" அல்லது "கொள்கை பயங்கரவாதமாகவோ" (உதாரணம்: சிரியாவில் நடந்துவரும் ஷியா-சுன்னா கொலைகள்)  கூட அமையும்..! பல்வேறு வேறுபாடுகள் கொண்டதாகவும் பயங்கரவாதம் இருக்கலாம். உதாரணமாக, மதம் & இனம் & மொழி வேறுபாடுகள் கொண்டதை "அரச பயங்கரவாதம்" என்று  இலங்கை-ஈழ விஷயத்தில் மட்டும் தமிழர்களும்... அமெரிக்க-வளைகுடா விஷயத்தில் அரபு முஸ்லிம்களும் சொல்கிறார்கள்..! 


ஆக... மொத்தத்தில்... பயங்கரவாதிகளை உருவாக்குவது மதமோ இனமோ மொழியோ சாதியோ கொள்கையோ அல்ல..! ஆளும் அதிகார வர்க்கத்தின் பல்சமூக மக்களிடையே கடைப்பிடிக்கும் சமநீதியற்றத்தன்மை, ஒரு சார்பு அடக்குமுறை சட்டங்கள்,  தாமதித்த பின்னும் நீதி மறுக்கப்படுதல், தண்டனையில் சமூகத்தினிடையே பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம், மனிதஉரிமை மீறல், வாழ்வுரிமை மறுப்பு... என பெரும்பாலும் இவையே..!

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:135)

2 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...