அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, August 23, 2012

72 மனித உரிமைக்கு எதிரான குடியை ஆதரிக்காதீர்

கழக ஆட்சிகளின் கடந்த நாற்பதாண்டு சாதனை... எதிர்கால தமிழகத்துக்கு சோதனை..!

கடந்த சில நாட்களாக பதிவுலகில் குடிக்கு எதிரான திவுகள் ஒருபுறமிருக்க... குடிக்கு ஆதரவான குடிகாரபதிவர்கள் தங்கள் பங்குக்கு குடியை ஆதரித்து பதிவுகள் போட்டு வருவதை காண்கிறோம். கூடவே, குடியை எதிர்ப்போருக்கு 'மதவெறியர்கள்' என்ற பட்டமும் தரப்படுகிறது. குடியை வெறுத்து குடிக்காமல் நல்லவர்களாக இருப்போர் அனைத்து சமயங்களிலும் உள்ளனர் எனபது உண்மைதான்..! எனில், நாத்திகர்கள் எல்லாருமே குடிகாரர்கள் என்கிறார்களா...?! புரியவில்லை..! :-))

நம்மை சுற்றி உள்ள எவ்வளவோ சமூக தீமைகளில் ஒன்றுதான் 'குடி'. எத்தனையோ சமூக தீமைகளை எதிர்த்து பதிவு போட்டு இருக்கிறோம். அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு குடியை எதிர்த்து பதிவு போட்டதும் வருகிறதென்றால்... குடி போதை வெறி மக்களிடம் ரொம்ப விபரீதமாக ஊடுருவி உள்ளது..! எனவே, இனி குடியை எதிர்த்து அவ்வப்போது விழிப்புணர்வூட்டி பதிவு போட வேண்டியது, சமூக நலன் நாடும் பதிவர்களின் அவசியமாகி விட்டது..!  

மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும் அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள். (திருக்குறள் தெளிவுரை)
அந்த வகையில் இந்த பதிவு, எனது அனுபவத்தில்.... குடியையும் குடியை சார்ந்த சந்திப்புகளையும் அலசும்..!

நான்கு வயதில் மதரஸாக்கு போயி குடிப்பது இறைவனால் ஹராம் ஆக்கபப்ட்டுள்ளது என்று அறியும் முன்னரே... ஆறு வயதில் பள்ளிக்கு சென்று திருக்குறள் "கள்ளுண்ணாமை" அதிகாரம் படிக்கும் முன்னரே... குடி பற்றிய எனது நேரடி அனுபவப்பாடம் ஆரம்பித்து விட்டது. 

எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ஓர் அம்மா தினம் வந்து தனது குடிகாரமகன்... இதை தூக்கி சென்று விட்டான்; அதை திருடி எடுத்து சென்று விற்று குடித்துவிட்டான்" என்று எனது தாயிடம் அழுது புலம்புவார். பின்னர் ஒருநாள் வீட்டில் திருட வேறு ஒன்றுமே இல்லை எனும்போது வீட்டின் கதவை கழட்டி எடுத்துப்போய் விற்று குடித்து இருக்கிறான். பாவமாக இருக்கும் அந்த அழும் அம்மாவை பார்க்க. இப்படியா ஒருவன் அக்கிரமக்காரனாக இருப்பான்..? 'அவனை எல்லாம் அடிக்க மாட்டீர்களா' என்று கேட்டால்... 'அவன் குடிகாரனப்பா... என்னை அடிக்காமல் இருந்தாலே போதுமே' என்பார்..! பின்னர், பெற்றவரே போலீஸில் புகார் தந்தார்..!
மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்க மாட்டாள் என்னும்போது, ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்..? (திருக்குறள் தெளிவுரை)
அப்போது குடியை பற்றி அறிய சில கேள்விகள் கேட்க வேண்டி இருந்தது, எனது பெற்றோரிடம். குடிப்பதால் விளையும் தீமை, குடிப்பது எவ்வளவு பெரிய பாவம், அதனால் மற்றவர்களுக்கு எவ்வளவு தொந்திரவு... எல்லாம் விளக்கமாக சொன்னார்கள் பெற்றோர்கள். முக்கியமாக குடித்தவர்கள் 'நல்லது எது, கெட்டது எது' என்று பகுத்துணர்ந்து சிந்திக்கும் சக்தியிழந்து, தான் செய்வது இன்னது என்றே தெரியாமல்... போய் விடுவார்கள் என்றும் சொல்லி இருந்தார்கள். அதை எல்லாம் பிறகாலத்தில் நேரடி அனுபவமாக குடிகாரார்களை பார்த்து கண்டுணர்ந்த போது, என்னை சிறப்பாக வளர்த்த எனது பெற்றோருக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இத்தகைய சிறந்த பெற்றோரை எனக்கு தந்த இறைவனுக்கே புகழனைத்தும்..!

பிற்காலத்தில் பள்ளி செல்லும் வழியில்... குடித்தவர்கள், தங்கள் வேஷ்டி எங்கே விழுந்தது என்று தெரியாமல்... சட்டை எப்படி கிழிந்தது என்று கூட புரியாமல்... பன்றிகள் மேயும் சாக்கடையில் ஜட்டியுடன் சுயநினைவிழந்து கிடப்பதைத்தான் நான் முதலில் என் சிறுவயதில் பார்த்து இருக்கிறேன்..! இதனால்... சாக்கடை ஓட்டம் தடைபட்டு தேங்கி நிரம்பி தெருவுக்குள் வழிந்தோடும்..! நாங்கள் அதை தாண்டிக்கடந்து செல்ல மிகுந்த சிரமப்படுவோம். 

அப்போது, சில நல்ல தொண்டுள்ளம் கொண்ட சமூக சிந்தனையாளர்கள், தங்கள் மூக்கில்/வாயில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு... கையில் பிளாஸ்டிக் கவர் எதையாவது மாட்டிக்கொண்டு... அந்த உயிருள்ள உடம்பை சாக்கடையில் இருந்து எடுத்து கயிறு-மண்வெட்டி மூலமாக வெளியே தூக்கி போட்டுவிட்டு செல்வதை  கண்டிருக்கிறேன். இதனால்... சாக்கடை ஓட்டம் சீர்பட்டு... கழிவு நீர் தெருவில் தேங்காமல் சீராக ஓடி... தேவையற்ற துர்நாற்றம் & நோய்பரவல் வாய்ப்பு எல்லாம் தவிர்க்கப்பட்டுவிடும். அவர்களுக்கு நன்றி சொல்லும் வேளையில்... இந்த குடிகாரர்கள் இப்படித்தான் அடுத்தவரின் மனித உரிமையில் விளையாடுவார்கள் குடிகாரர்கள்..! 
மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன்
நாணம் எனப்படும் பண்பு நிற்காமல் ஓடிவிடும்.
(திருக்குறள் தெளிவுரை)
அதுமட்டுமா..? ஒருமுறை ஒருவன் குடித்துவிட்டு வந்து பேருந்தில் ஏறி... ஸ்டெடியாக நிற்க இயலாமல் பள்ளி செல்லும் என்மீது சாய... நான் நகர்ந்து தூரமாக முன்னால் சென்று விட்டேன். (துஷ்டனை கண்டால் தூர விலகு) சிறிது நேரம் கழித்து... 'குபுக்' என்று பக்கத்தில் நிற்பவர் மீது மடமட வென நொடியில் வாந்தி எடுத்து வைத்து... அது பேருந்தில் வழிந்தோடி.. அந்த துர்நாற்றத்தால்... எவருமே இனி அந்த பேருந்தில்... பிரயாணிக்க இயலாதவாறு ஆகி விட்டது..! 

சரி மற்றவர்களை விடுங்கள்... இறங்கி டிக்கட் நஷ்டத்துடன்... வேறு பேருந்தில் ஏறி சென்று விட்டார்கள். பாவம்..! அந்த வாந்தி அபிஷேகம் செய்யப்பட்டவர்..! அருமையாக உடை அணிந்து இருந்த அவர்... இண்டர்வியூவுக்கோ... ஒரு திருமண விழாவுக்கோ... அலுவலகத்துக்கோ... கல்லூரி இறுதி தேர்வுக்கோ...  செல்லக்கூடிய நபராயின்... அந்தோ பரிதாபம்..! 'தண்ணீர் இருக்கா' என்று கேட்டுகொண்டே பேருந்தில் இருந்து இறங்கி எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார்..! 

அடுத்து அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்... கீழே போயி மண்ணள்ளி கொண்டு வந்து போட்டு... வாந்தியை அள்ளி... தான் குடிக்க வைத்து இருந்த தண்ணீர் ஊற்றி கிளீன் பண்ணி... "ச்சே... ஏண்டா... இந்த வேலைக்கு வந்தோம்" என்று இருந்திருக்கும் அவர்களுக்கு..! எவ்வளவு பேரின் நேரத்தை... தனிமனித உரிமையை... அலுவலை... வாழ்க்கையை பறித்து இருக்கிறான் பாருங்கள் இந்த குடிகாரப்பாவிப்பயல்..!  
ஒருவன் மது அருந்தாதபோது.. மது அருந்தியவனின் நிலையை பார்த்தப் பின்னாவது..திருந்தமாட்டானா..? (திருக்குறள் தெளிவுரை)
பொதுவாக நான் பேருந்தில் முதலில் ஏறினால்... ஓட்டுனருக்கு இடப்புறம் உள்ள முன் சீட்டில்தான் அமருவேன்..! அப்படி ஒருமுறை அந்த பேருந்து அதிக வேகத்தில் சென்று கொண்டு இருக்கையில்... தூர ஒரு நபர் நட்ட நடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். டிரைவர் ஹாரன் அடிக்க... சைடுவாக்கில் இரண்டே எட்டு வைத்து ரோட்டின் இடது பக்கம் மண்ணில் இறங்கினார்..! அவருக்கு மிக அருகே சுமார் பத்தடி இருக்கும்... அப்போதுதான் அந்த நபரின் கையில் சாராய பாட்டில் இருப்பதை கண்டேன். தடுமாறி நடந்து கொண்டு இருந்தான். இவன் ஹாரன் சத்தம் கேட்டெல்லாம் ரோட்டில் இருந்து இறங்கவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே... திடீரென்று அதேபோல இரண்டே எட்டில் வலதுபுறமாக சைடுவாக்கில் நடந்து பேருந்துக்கு முன்னே வந்து நிற்கவும்... பேருந்து அந்த குடிகாரன் மீது மோதி தூக்கி எறியவும்... சரியாக இருந்தது..!    

சற்று நேரம் கழித்து இன்னும் உயிரோடு இருந்த அந்த நபரை எதிரே வந்த ஒரு லாரியில் ஏற்றி பக்கத்துக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர் மக்கள்.  திரும்பி வந்து பயணிகளிடம் டிரைவர் சொன்னார்: "குடிச்சிட்டு வந்து விழுந்து இருக்கான். இடுப்பில் ரெண்டு சாராய பாட்டில்..! ரத்தம் கூட சாராய நாத்தம் அடிக்குதுய்யா..." என்றார்..! பஸ்சுக்குள் வந்து ஏறிய டிரைவர் முகத்தில் முன்பு இறந்த பதட்டம் / பயம் ஏதும் இல்லாமல்... ஒரு நிம்மதி இருந்தது..! குடிகாரர்களை இடித்தால், வாகன ஓட்டுனருக்கு சட்டப்பிரச்சினை வராது என்று பின்னர் அறிந்து கொண்டேன்..! 

போலிஸ் வந்து கிளம்ப நீண்ட நேரம் ஆகிவிடும் என்பதால்... அடுத்து வந்த வேறொரு பேருந்தில் நெருக்கி அடித்து நின்று கொண்டே சென்றேன். பிறரின் மனித உரிமைக்கு மதிப்பளிக்காத அந்த குடிகாரனால்... எத்தனை பேரின் பொன்னான பொழுதுகள் சவுகரியங்கள் டிக்கட் செலவு எல்லாம் வேஸ்ட் பார்த்தீர்களா சகோ..?

இன்னொரு சமயம்... எதிரே பச்சை பாம்பு போல வளைந்து வளைந்து வந்த ஒரு சிகப்பு மாருதி காரை பார்த்து எங்கள் பேருந்தின் ஓட்டுனர் சாலையில் இருந்து வண்டியை இறக்கி ஓரமாக நிறுத்தியே விட்டார்..! அப்படி இருந்தும் இடப்புறம் நின்று கொண்டு இருந்த பேருந்தின் பின்பக்க சைடில் வந்து 'டொம்' என்று மோதினது கார்..! மக்கள் எல்லாரும் அலறி அடித்து பேருந்தை விட்டு இறங்க... ஓடோடி சென்று பார்த்தால்... ட்ரைவர் சீட்டில் இருந்தவருக்கு மண்டை உடைந்து ரத்தம்..! கூடவே, காரின் உள்ளே ரெண்டு பாட்டில் உடைந்து மதுவின் துர்நாற்றம்..! படுபாவி குடித்துவிட்டு ஓட்டி இருக்கிறான்..! 

இருபுறமும் ஏகப்பட்ட ட்ராபிக் ஜாம். அவன் மோதிய இடம், பேருந்தின் டீசல் டேன்க் என்பதால்... அது உடைந்து ரோட்டில் ஓடியது..! பயணிகள்... ஆம்புலன்ஸ்... போலிஸ்... தீயணைப்பு துறை... என்று பலரின் பொன்னான பொழுதுகள் தேவையற்ற இந்த குடிகார ஓட்டுனரின் செயலால் வீணாயின..! குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, நிச்சயமாக அடுத்தவரின் மனித உரிமைக்கு எதிரானது ..! இவனுக்கெல்லாம் சட்டத்தில்... கடும் தண்டனை தரப்பட்டிருக்க வேண்டும்..!

இன்னும், நீங்கள் ஒரு வியாபாரி என்றால்... உங்களிடம் வந்த குடிகாரனிடம் ஒரு பேரமும் வைக்க முடியாது. ஒரு கியூவில் நின்றால் குடித்து விட்டு குறுக்கே பூருபவன் கிட்டே எந்த நீதி விவாதமும் ஜெயிக்காது. குடிகாரனிடத்தில் எந்த தர்மமும் எந்த நியாயமும் செல்லாது..! 
சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர். (திருக்குறள் தெளிவுரை)
பின்பு ஒருமுறை இதை ஒரு ஓட்டலில் நேரடியாக கண்டேன்..! "இங்கே மது அருந்தக்கூடாது" என்று எழுதிப்போட்டு இருந்தார்கள். இங்கே நாம் சாப்பிட்டதும்தான் பொதுவாக பில் வரும்..! ஆனால், குடிகாரர்கள் எனில்... பணத்தை வாங்கிக்கொண்டுதான் சாப்பாடு சப்ளை செய்வார்கள். அவ்வளவு 'நம்பிக்கை'..! ''நான் ஒண்ணுமே சாப்பிடலை' என்று வயிறு வீங்க திண்ணுட்டு பணம் தராமல் கலாட்டா செய்வார்களோ' என்று..! ச்சே..! அடுத்தவரிடம் அபகரித்து சாப்பிடும் எண்ணம் குடித்தால்தான் வரும் போலிருக்கு..!

பொதுவாக குடிகாரர்களிடம் நேர்மையை - நியாயத்தை எதிர்பார்க்க முடியவே முடியாது..! அடுத்தவரின் மனித உரிமையை கிஞ்சித்தும் மதிக்காதவர்கள் இவர்கள்..! அவர்கள் பிறரிடம் நல்லவனாக இருக்க மாட்டார்கள். வல்லவானாக இருந்து அராஜகமாக வெற்றி பெறவே விரும்புவார்கள்..! 

அதாவது, எதையும் யாரிடமிருந்தும் கேட்டு பெறாமல், தம் புஜவலிமை காட்டி அடாவடி செய்து பறித்துக்கொள்வதன் மூலமும், பிறரின் குடும்பத்தை திட்டி... வசை சொற்கள் பேசி அசிங்கப்படுத்துவதன் முலமும்தான் தம் காரியம் சாதிப்பார்கள்..! இவர்களிடம் நாம் மல்லுக்கு நிற்காமல் ஷைத்தானை கண்டது போல தெறித்து ஓடுவதையே நல்லவர்கள் விரும்புவார்கள். ஆனாலும், இவர்களை எப்படி அடக்குவது...? நான்கு நல்லவர்கள் ஒன்று கூடினால் மட்டுமே, தன்னை 'வல்லவன்' என்று வெட்டி வீராப்பு காட்டும் இந்த கெட்டவனை திருத்த முடியும்..! ஆனால், 'குடிகாரர்களிடம் நமக்கு எதுக்கு பாஸு தேவை இல்லாமல் சச்சரவு? நம்ம வேலையை பார்ப்போம் வாங்க' என்றே நல்லவர்கள் ஒதுங்கி போகும் காலம் இது..!

"அரசே குடிக்க சொல்லி ஊத்திக்கொடுத்து ஆதரிக்கிறது..! இடையிலே நீ ஏண்டா குடிக்க வேணாங்கிறே..?" என்கிறார்கள்..! அரசு செய்யும் எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து சிந்தித்து பதிவு போட்டு விமர்சிக்காமல் அப்படியே ஏற்பவரா இவர்கள்..? குடிக்கு மட்டும் அரசு ஆதரவா..? என்னப்பா இது..? அப்பட்டமான இரட்டைவேடம்..? நீங்களா உண்மையை உணர்ந்து குடிக்கிறத நிறுத்துனாத்தான்... அவங்க டாஸ்மாக் மது விற்பனையை  இனி நிறுத்துவாங்க..! <== இதை மட்டுமாவது நல்லா புரிஞ்சிக்கிங்க..!
குடிபோதைக்கு ஆளாளவனை திருத்த முயல்வது என்பது.. நீரில் மூழ்கிய ஒருவனை தீப்பந்தம் எடுத்துச் சென்று தேடுவது போல ஆகும். (திருக்குறள் தெளிவுரை)
இதுபோன்ற குடிகார கெட்டவர்களை  'திருத்துகிறேன்' என்று யாரேனும் போனால்... 'உன் காசிலாடா குடிக்கிறேன்..? போடா..!' என்பார்கள்..! ஆனால், அப்படி குடித்த இவனால்தானே குடிக்காத அப்பாவி பொது மக்களுக்கு பாதிப்பு வருகிறது..? இப்படி கேட்டால்... 'நான் என் வீட்டில், என்னையே நான் ஹவுஸ் அரஸ்ட் பண்ணிக்கொண்டு தனிமையில் அல்லவா குடிக்கிறேன்..! அடுத்தவனுக்கு என்னால் என்ன பிரச்சினை..?' என்கிறார்கள்..! இதுவும் அடுத்தவர் மனித உரிமை பாதிக்கும்தான்..! அது எப்படி... என்று பார்ப்போம்..!

கண்டிப்பாக இந்த குடிகாரனுக்கு குடிக்காத அப்பாவோ அம்மாவோ உடன்பிறந்தரோ மனைவியோ குழந்தைகளோ  இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் ஹார்ட் அட்டாக், விபத்து, ஆபத்து எனில்... பூட்டிய ரூமுக்குள் 'போதையில் மட்டையாகி கிடக்கும் இந்த மரக்கட்டை'யால் அந்நேரத்தில் இவன் குடும்பத்துக்கு என்ன நன்மை..? என்ன செய்ய முடியும் இவனால்..? ஆகவே... நானோ நீங்களோ இவனின் பக்கத்து வீட்டுக்காரன் எனில் நாம் இருவரும்தான் அந்த அர்த்த ராத்திரியில் ஹாஸ்பிடல்... போலிஸ் ஸ்டேஷன்... வக்கீல்... தீயணைப்பு நிலையம் என்று இந்த குடிகாரனின் குடும்பத்துக்காக அலைய வேண்டிவரும்..! இவன் குடித்தது இவனின் வீட்டாரின் மற்றும் நமது நேரத்தை-தூக்கத்தை - மனித உரிமைகளை பறித்தது போலாகாதா சகோ..? தனியாக குடிக்கிறானாம்... வீட்டுக்குள்..! ஹா... ஹா...  ஹா...!  
மறைந்திருந்து மது அருந்தினாலும்..அவர்கள் கண்கள் மயக்கத்தைக் காட்டிக்கொடுப்பதால் ஊரார் அவர்களை எள்ளி நகையாடுவர். (திருக்குறள் தெளிவுரை)
இதொன்றும் கற்பனை அல்ல..! இப்படி ஒரு சம்பவம் நான் பணியாற்றிய ஊரில் நடந்தது. சமையல் அறையில் திடீர் தீ விபத்து. காப்பாற்றவேண்டிய கணவன் போதையில் இன்னொரு அறையில் மட்டை..! பக்கத்து வீட்டுக்காரன், அந்த பெண்ணின் கூக்குரல் கேட்டு... வெகுநேரம் போராடி... வீட்டின் கதவை உடைத்து உள்ளேச்சென்றால்... அந்த பெண் ஆடை முழுதும் எரிந்து தோல் கருகிய நிலையில்..! அவரை, தனது சகோதரியாக நினைத்து தொட்டுத்தூக்கி... ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றது... அந்த பக்கத்து வீட்டுக்காரர்தான்..! விடிந்ததும் போதை தெளிந்து ஆஸ்பத்திரிக்கு ஓடினான் குடிகாரன்..! அங்கே அவனை மார்ச்சுவரிக்கு போக சொன்னார்கள்..! 'குடிக்காதேன்னு அப்போவே சொன்னாளே... இனி நான் குடிக்கவே மாட்டேன்மா' ன்னு தலையில் அடித்துக் கொண்டு அழுதான்..! என்ன புண்ணியம் இப்போ..? 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' என்பார்கள்..! 
'மது அருந்தமாட்டேன்' என ஒருவன் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் மது மயக்கத்தில் உள்ள போது உண்மை வெளிப்பட்டு விடும். (திருக்குறள் தெளிவுரை)
ஆக, இதுபோல பல குடிகாரர்கள் நம்மை சுற்றி உள்ளனர். இந்த 'குடி'யானது... கூடவே இருந்தும் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித 'ஆதரவும்' 'உபயோகமும்' 'பாதுகாப்பும்' அற்ற குடிகாரனின் மணவாழ்க்கை குலைந்து... எதிர்கால விவாகரத்துக்கே அடிகோலும்..! தினசரிகளில் பெருகி வரும் விவாகரத்துக்கு முக்கிய காரணம் 'குடி' எனபதை காண்கிறோம். 'குடி குடியை கெடுக்கும்' என்பது சரியாத்தான் இருக்கு..!

ஒருவேளை விவாகரத்து கோராமால்... குடிகாரனின் மனைவி 'விதியே... என் சனியே...' என்று தன் வாழ்க்கையை நொந்து அவனை  அனுசரித்தாலும், குடிப்பதால்... அவனின் மூளை, கண்கள், வாய், தொண்டை, இரைப்பை , குடல், கல்லீரல், நுரையீரல், கணையம், எலும்பு எல்லாம் கெட்டுப்போவதுடன்... இரத்தமும் கெட்டு, அதனால் இதயமும், கிட்னியும்  கெட்டு எல்லா நோயும் விரைவில் வரும் என்று மருத்துவர்கள் கூறுவதை பாவம்... அவன் மனைவி அறிபவராக இல்லை..! 

இதைவிட முக்கியமாக... குடிப்பதால் அவன் முற்றிலும் ஆண்மை இழந்து... 'கணவனாக என்ன... விரைவில்... ஓர் ஆணாகவே அந்த குடிகாரன் இருக்கப்போவதில்லை' என்பதையாவது குடிக்காத அவனின் மனைவி அறிந்திருக்க வேண்டும்..! 

மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தராத இந்த குடிகாரனை விரைவில் விவாகரத்து செய்து விட்டு வேறொரு குடிக்காத நல்ல கணவனை மறுமணம் செய்வது மனைவிக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியான வாழ்வும் இறைவன்நாடினால்... நிச்சயம் கிடைக்கும்..! குடியால்... இப்படி ஒரு விவாகரத்தையும் மறுமணத்தையும் கூட நான் பணியாற்றிய நிறுவனத்தில் ஒருவரின் வாழ்வில் கண்டிருக்கிறேன்..!
இறப்பு என்பது நீண்ட உறக்கம் என்பது போல..கள்ளுண்பவர்களும் அறிவுமயங்குவதால் அவர்கள் மதுவுக்கு பதில் நஞ்சு உண்பவர்கள் என்று கூறலாம். (திருக்குறள் தெளிவுரை)
என்னிடம் இதுவரை "எனக்கு தண்ணி வாங்கித்தா" என்று எவனும் கேட்டதில்லை. ஒரு ஆளைத்தவிர..! அது... எனது தூத்துக்குடி நிறுவன மேலாளர்..! நாங்கள் பலர் பயிற்சி காலம் முடிந்து company employee ஆக... confirmation order வாங்கியதுக்கு பார்ட்டி வேண்டுமாம்..! 'தண்ணி பார்ட்டி' வேண்டுமாம்..! 
"குடிகாரன்" அடையாளப்படம்..! முன்னெல்லாம் "குடிகாரன்" என்றால்... "பட்டாபட்டி தெரிய மடித்து கட்டப்பட்ட கலர் லுங்கி-தாடி-மீசை-பொத்தல் போட்ட முண்டா பனியன்- பச்சை பட்டை பெல்ட்டு- தலையில் / கழுத்தில் சிவப்புக்கலர் ரவுடி கட்டு-ஒரு கையில் பாட்டில்"... இப்படித்தான் பார்த்து இருப்பீர்கள்..! ஆனால்... இப்போது இதுதான்..!

என்னிடமே நேரடியாக அவர் கேட்டதும் சூடாகினேன்..! நேரே அவரின் மூக்கருகே எனது மூக்கை வைத்து... "தறுதலை, ரவுடி, பொறுக்கி, போக்கிரி, முட்டாள், கெட்டவன், திருடன்... இவங்கதான் குடிப்பாங்கன்னு இதுவரை நினைச்சிட்டு இருக்கேன்..! நீங்க நிறைய படிச்சிட்டு உயர்ந்த பதவியில் ஒழுக்கமாக இருக்கும் மரியாதைக்குரியவர்..! அதை கெடுத்துக்காதிங்க..! பார்ட்டி உண்டு..! மேலப்பாளையம் பண்டாரியை கூப்பிட்டு பெரிய சட்டியில் மட்டன் பிரியாணி ஆக்கி, சிக்கன் சிக்ஸ்டிபைவ், தால்ச்சா, ஸ்வீட் உடன் சேர்த்து போடறோம்..! குடிக்க காளிமார்க் தருவோம்..! மினரல் வாட்டர் பாட்டில் உண்டு..! ஆனால்... 'தண்ணி' மட்டும் கிடையவே கிடையாது..! ஆஆஆம்ம்மாம்ம்ம்...!" என்றேன்..! என்னமோ ஒரு வேகத்தில் சொல்லிட்டேன்..! பெரிய பிரச்சினையாயிருமோ என்று பயந்தேன்..! ஏண்டா இப்படி பேசினோம் என்றே நினைத்தேன்..!

ஆனால்... என் மேனேஜர்... "ஓகே.. ஆஷிக் அப்படியே செய்ங்க..! அப்டின்னா... இதை பெண்களும் கலந்து கொள்ளுமாறு ஒரு... Department Family Get-together ஆக வச்சிருவோமே...?" என்றார்..!

"சார்... நல்ல ஐடியா சார்... ஓகே சார்... அப்படியே செஞ்சிருவோம் சார்..!" என்றேன்..! 

'பார்ட்டி' என்றால்... 'குடி' இருந்தே தீர வேண்டும் என்ற எழுதப்படாத விதி முதன்முறை எங்கள் Batch Party இல் உடைத்து நொறுக்கப்பட்டது..! அல்ஹம்துலில்லாஹ்..!
தன்னை மறந்து மயங்கி இருக்க... விலைகொடுத்து மதுவை வாங்குதல் என்பது மூடத்தனமாகும். (திருக்குறள் தெளிவுரை)


எவ்வளவோ  சொல்லிட்டோம்..! அதெல்லாம் மண்டையில் ஏறாது..! கடைசியா... இதையும் சொல்லிருவோம்..! இதுக்காவது மசியிதா பார்ப்போம்..!

ஏனுங்க... ஏற்கனவே எல்லா வரியும் கட்டிட்டு... அது பத்தாதுன்னு... குடிக்கிறவங்க மட்டும் தனியா அரசுக்கு தருகிற பதினஞ்சாயிரம் கோடி ரூபாயிலே போடப்படுற அரசு பொது பட்ஜெட்டிலே... குடிக்காதவங்களும் பயனடைஞ்சு நல்லா இருக்கறாங்களே..? இதை நீங்க சும்மா விடலாமா..?
அதானே...! அதெப்படி அவங்களை நல்லா இருக்க விடலாம்..! கூடவே கூடாது...!
ம்ம்ம்.... சரியா சொன்னீங்க...! அப்படின்னா.... அதுக்காச்சும் தயவு செஞ்சு இனி குடிக்காதீங்க..! குடிக்கிறதை ஆதரிக்காதீங்க..! ஆதரிச்சி பதிவு / கமென்ட் எழுதாதீங்க..!

குடி போதையற்ற பதிவர்கள் & வாசகர்கள்... ஏராளமாக வந்திருந்து, அரங்கம் நிறைந்து, சென்னை பதிவர் மாநாடு... சீரும் சிறப்பாக நல்ல நோக்கத்தில் மக்கள் நலன் நாடும் பல ஆரோக்கியமான விஷயங்களுடன், குடி/சரக்கு பற்றிய வீண் வெட்டி அரட்டை இல்லாமல் இனிதே நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்..!

72 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...