அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, July 16, 2012

17 கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............



16 வருடங்களுக்கு முன்னர் நான் எனது முந்தைய தொழிற்சாலையின் Training Period இல் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த Industrial Hygiene & First Aid வகுப்பில் இரண்டு மருத்துவர்களின் இரண்டு மணி நேர lectures செவிமடுத்து விட்டு அது முடிந்ததும் கேள்வி நேரத்தில் அமர்ந்து இருக்கிறேன். அந்த வகுப்பில் இரு டாக்டர்களுமே இரவில் விரைந்து தூங்கி அதிகாலை விரைந்து எழுந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு... என் இயல்பான வாழ்க்கை(systematic life) பற்றி  அதை வலியுறுத்தி கூறினர். இதனைக்கேட்ட... அறைத்தோழன் நந்தகுமார் எழுந்தார்; கேள்வி நேரத்தில் இந்த கேள்வி கேட்டார்:-


 "இங்கே... எம்மில் பாதிபேர் operation department. ஷிப்ட் டூட்டியில் பணி புரிபவர்கள். இவர்கள் ஒரு நாள் நைட் கண்விழித்து வேலை பார்க்கின்றனர். காலை முதல் மதியம் வரை தூங்குகின்றனர். இன்னொரு நாள் மதியம் முதல் இரவு வரை டூட்டி.  பின்னிரவு தூங்கி முற்பகல் எழுகின்றனர். இன்னொரு நாள் அதிகாலை முதல் மதியம் வரை டூட்டி. முன்னிரவு தூங்கி அதிகாலை எழுகின்றனர். இப்படி மாறி மாறி எந்த சிஸ்டமும் இல்லாமல் கண்ட நேரத்தில் தூங்கி எழுவதும்... கண்ட நேரத்தில் சாப்பிடுவதும்... இவர்களின் உடல் நிலையை பாதிக்குமா..?" என்றதும்... அதுவரை கம்பீரமாக நின்ற மருத்துவர்கள்... இக்கேள்விக்கு பதில் சொல்லாமல்... அங்கே மேடையில் தமக்கு பின்னே வீற்றிருந்த நிர்வாக உயர் அதிகாரிகளை.. திரும்பி . எங்களுக்கோ செமை சிரிப்பு. அரங்கில் ஆங்காங்கே ஒரே சலலப்பு. 

அப்போது... அவர் சொன்னது... "அது.... வந்து... ம்ம்ம்ம்.....ஆரம்பத்தில் இது.... இந்த ஷிப்ட் டூட்டி.... உடல் நிலைக்கு புதுசு என்றாலும், சில மாதங்களில் போகப்போக உடல் இந்த விதமான டூட்டிக்கு செட் ஆகி.... நாளடைவில் இதுவே பழகிப்போயிடும். அதாவது, நைட் டூட்டி பார்ப்பவர்கள் வீட்டில் காலை தூங்க ஆரம்பிக்கும்போது இருட்டான அறையில் நைட் எஃபக்ட் ஏற்படுத்திக்கொண்டு தூங்க ஆரம்பிக்க வேண்டும். நைட் டூட்டியில், அதிக வெளிச்சம் ஏற்படுத்திக்கொண்டால்... தூக்கம் அந்த அளவுக்கு வராமல் கட்டுப்படுத்தலாம்.  இப்படி செய்தால் இந்த சூழல் மாறல் உங்கள் உடல் நிலையை பாதிக்காது. உங்கள் கம்பெனியிலேயே ஏகப்பட்ட முதியவர்கள் ஷிப்டில் உடல் ஆரோக்கியத்துடன் பல வருஷமாக இன்றும் பணியாற்றுகின்றனரா இல்லையா...?" என்றார்..! கூறிவிட்டு சும்மா இருந்திருக்கலாம். உடலை திருப்பி பின்னே அமர்ந்து இருக்கும் மீண்டும் நிர்வாக தலைமை அதிகாரிகளை நோக்கினார். மீண்டும் சிரிப்பு அலை..! ஆனால், ஷிப்டில் பணியாற்றும் எனக்கு இதில் தெளிவு தேட வேண்டிய நிலை..!

பள்ளி காலத்தில்... திருக்குறள் ஒன்று படித்திருப்பீர்கள்..!
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
---அதாவது, 'ஒருவன் தூங்குவது போன்றது இறப்பு' என்றும் 'உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு' என்றும் சொல்கிறார்..! திருவள்ளுவரின் இந்த ஒப்பீடு சரியா என்று உங்களுக்கு தோன்றலாம்..!

துயில்/தூக்கம்/உறக்கம்/கண்ணயர்தல்/சயனம்/நித்திரை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த SLEEP பற்றி அறியியல் கருத்துக்கள் என்ன என்று பார்ப்போம்.

அது ஓர் இயற்கையான சுயநினைவற்ற நிலை. அப்போது, இதயம், சிறுநீரகம், நுரையீரல், உணவு மண்டலம்... என்று நாம் விருப்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத உறுப்புக்கள் 'தாமாக' இயங்கிக்கொண்டு இருக்கும்.  (Involuntary activities are in action) ஆனால், புலன் உணர்வு (Sensory) மற்றும் உடலில் உள்ள இயக்கத்தசைகள் (Voluntary muscles) செயல்பாடுகள் அனைத்தும் நின்று போய் விடுகின்றன. இதன் காரணமாக மனிதன் முழுமையான அல்லது பாதி சுய நினைவற்ற (Total / Partial Unconsciousness) நிலையில் இருப்பதால் சுற்றுப்புற நிகழ்வுகள் ஏதும் அறிய முடிவதில்லை. இவ்வாறு நின்று போன உணர்வுகள் & இயக்கம் எல்லாம் தூங்கி விழித்தெழும்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன.

கிட்டத்தட்ட இது இறப்பதும் பிறப்பதும் போன்று தானே இருக்கிறது..? ஆம்..! பின்னாளில்... குர்ஆன் படிக்கும்போது... தூக்கம் தொடர்பான இறைவசனங்கள் என்னை சுண்டி இழுத்தன..! 

குர்ஆன் - 39:42 ... உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு   மரணத்தை விதித்து விட்டானோ அதைத்தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

இதனை சிந்திக்கும்போது... தூக்கமும் ஒரு சிறு மரணம் என அறிகிறோம். உறக்கத்தில் நான் நம்மை படைத்த இறைவன் பிடியில் இருக்கிறோம். உறங்கி விழிப்பது என்பது மீண்டும் உயிர் பெறுவது போன்றதுதான்..!

தூக்கத்தில் இவ்வாறு உறக்கமும் உறங்கி விழிப்பதுமான துயில்-விழிப்பு சுழற்சி (Sleep-Wake Cycle) நம் உடலில் 24 மணி நேரத்தில் நிகழும் ஒரு Circadian Rhythm எனும் நிகழ்வாகும். இதை கட்டுப்படுத்துவது எது..? எப்படி நடக்கிறது இந்த சுழற்சி..?

நம் உடலில் உள்ள மெலட்டோனின் (Melatonin) என்ற ஒரு ஹார்மோன் நம் மூளையில் உள்ள (Pineal body) பைனியல் சுரப்பியினால் சுரக்கப்படுகிறது. இந்த பைனியல் சுரப்பி இருட்டால் தூண்டப்பட்டு மெலட்டோனின் ஹார்மோனை சுரக்கிறது..! அதேநேரம், பகலில் சூரிய வெளிச்சம் மெலட்டோனின் சுரப்பதை தடுக்கிறது..! Darkness எனும் இருட்டின் தூண்டலில் சுரக்கப்படும் இந்த மெலட்டோனின் ஹார்மோன் இரத்தத்தில் கலக்கும் போது...  அது இரவு சுமார் 9-10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட அளவை அடையும்போது... அப்போது ஒரு சுறுசுறுப்பில்ல்லாத மந்த நிலை உடல் மற்றும் சிந்தையில் ஏற்பட்டு, நமக்கு கண்கள் சொக்கி கிறக்கம் மேலிட உறக்கம் வருகிறது..!

குர்ஆன் - 25:47... அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும்,  பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

இந்த ஹார்மோன் அளவு, ஒரு சராசரி மனிதனுக்கு சுமார் 10-12 மணி நேரம் இரத்தத்தில் குறிப்பிட்ட அளவில் கலந்து இருக்கும் வரை அவன் இரவு முழுதும் தூங்கிக்கொண்டு இருப்பான். இந்த ஹார்மோன் அளவு காலையில் குறையும்போது துயில் எழுவான்..! காலை 9 மணிக்கு இது சுத்தமாக குறைந்து விடுகிறது. இவ்வாறு, இந்த ஹார்மோனின் அளவுதான் நமது சயன சுழற்சியை கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்த சம்பந்தமான மாத்திரைகள் ஸ்டிராய்டுகள் போன்றவையும் மெலட்டோனின் சுரப்பை குறைத்து தூக்கம் வராமல் செய்யும்.

இந்த ஹார்மோன் சுரத்தல் வயதுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதனால் தூக்க நேரமும் மாறும். உதாரணமாக, பிறந்த குழந்தைக்கு இந்த ஹார்மோன் மிக அதிகமாக இருக்கும். அது, 18 மணி நேரம் தூங்கும். ஒரு வருடம் வரை... 18-14 மணி நேரம் தூக்கம் என்று குறையும். 3 வயது வரை 12-15 மணி நேரம் என்று குறையும். 5 வயது வரை 11-13 மணி நேரம் தூக்கம் அவசியப்படும். 5-12 வயது வரை 9-11 மணி நேர உறக்கம் தேவைப்படும். அதன் பிறகு 21-25 வயது வரை 9-10 மணி நேரமும்... அதன் பின்னர், இரத்தத்தில் மெலட்டோனின் சுரத்தல் செரிவைப் பொருத்து  6-10 மணி நேரம் என்றும் துயில் கொள்வார்கள்..! 

இப்படியாக, இயற்கையான முறையில் மனிதனின் வெவ்வேறு வயதில் வெவ்வேறு நிலையிலான ஹார்மோன் சுரப்பு மூலம் வெவ்வேறு அளவிலான நித்திரை என்பது எல்லாமே எண்ணிப்பார்க்கையில் அதிசயம்தான்..! இறைவனின் கிருபை..!

குர்ஆன் - 8:11 ... நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரையை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்....................

லண்டனை சேர்ந்த லேப்ரோ பல்கலைக்கழகத்தின் உறக்க ஆராய்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் ஜிம்ஹார்ன் சொல்கிறார் : நாள் முழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் மூளைக்கு ஒய்வு அவசியம் என்பதோடு மட்டுமல்லாது.... எவ்வளவுக்கெவ்வளவு மூளை வேலை செய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தூக்கம் அவசியம் என்கிறார்.

அல்லோபதியில் தூக்கத்தை உண்டாக்க தூக்கமருந்து மயக்கமருந்து எல்லாம் அனஸ்தீசியன் கொடுக்க கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், அக்குபங்சர் மருத்துவத்தில் அதற்கே உரிய நூதனமான குத்தூசி மருத்துவம் உள்ளது. அதாவது தூக்கத்தை உண்டாக்கும் அக்குபங்சர் புள்ளியானது மனிதனின் காதில் -காது மடலில்- காதின் பின்புறம் உள்ளது.  அப்புள்ளிகளில் அக்குபங்சர் ஊசியை சொருகினால் பரிவு நரம்பு தூண்டப்பட்டு அதன்மூலம் செய்தி மூளையிலுள்ள தூக்கத்தை தூண்டும் பகுதிக்கு எடுத்துசசெல்லப்படுகிறது. நீண்ட நேரம் ஒருவரை தூங்கச்செய்ய அம்மருத்துவத்தில் இம்முறை கையாளப்படுகிறது.

குர்ஆனில், "அஸ்ஹாபுள் கஹ்ஃபு" என்ற குகைவாசிகளை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தது பற்றி தன் குர்ஆனில் சொல்லிக்காட்டும்போது...

குர்ஆன் - 18 : 11  நாம் அவர்களை (குகைவாசிகளை) எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது தடை ஏற்படுத்தினோம்.
குர்ஆன் - 18 : 18  மேலும் அவர்கள் தூங்கிக்கொண்டு இருந்தபோதிலும் (நபியே) நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப் பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும், இடப்புறமும் புரட்டுகிறோம்; ... ...

ஆக, " அவர்களுடைய காதுகளின் மீது தடை ஏற்படுத்தினோம்" என்ற அறிவியல்பூர்வமான இறைவசனவரியின் மூலம் அந்த குகைவாசிகளை பல ஆண்டுகள் "வலப்புறமும், இடப்புறமும் புரட்டி" இறைவன் தூங்க வைத்ததை அறிகிறோம்..!

அதுமட்டுமல்ல எந்நேரமும் குகை இருட்டாக இருந்ததால் தொடர்ச்சியான தூக்கத்திற்கு மெலட்டோனின் ஹார்மோன் அதிகமாக சுரந்து கொண்டே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் அவர்களை வலப்புறமும் இடப்புறமும் புரட்டி காதுப்பகுதியை கீழே அழுத்துமாறு செய்து தொடர்ச்சியான தூக்கத்திற்கு தூண்டுதலாக அமைந்தது எனலாம். அதேநேரம் இப்படி புரட்டுவது... ஒரே பக்கமாக நீண்டகாலம் படுத்து இருந்தால் உடலின் மீது ஏற்படும் புண் - Bed sore என்ற நோய் வராமலும் அவர்களை காத்துவிடும். எவ்வளவு தூரம் சிந்திக்க வேண்டிய வசனங்கள்..!

இப்படி நீண்டகாலம் தூங்கினால் சாப்பாடு..? பசிக்குமே..? ஆம்..! மெலட்டோனின் அளவை பொருத்து ஆழ்நிலை தூக்கம் வரும்..! அந்த ஆழ்நிலை நித்திரையில் நமக்கு பசி, ஒலி, ஒளி, தொடுதல் போன்ற உணர்வுகள் எல்லாம் பாதிக்காது. இது, நமக்கு இரவில் ஒரு சில மணி நேரம் மட்டுமே நமக்கு இருக்கும். இதை ... Non-REM Sleep : Stages 3 and 4 ... என்பார்கள்.

ஆனால், வவ்வால் என்ற பாலூட்டி Hibernation என்ற குளிர்கால உறக்கம் மேற்கொள்ளும்..! இது நான்கு ஐந்து மாதங்கள் நீடிக்கும்..! அப்போது அவை ஆக lowest metabolic energy state இல் இருப்பதால்... ஆக குறைந்த இதய துடிப்பு, ஆக நீண்ட சுவாசம்... என, இத்தனைக்கும் தலைகீழாக தொங்கிக்கொண்டு... அவை உண்ணாமலும் பருகாமலும் அத்தனை மாதங்கள் உயிர்வாழ்கின்றன...! படைப்புகளில் இறைவனின் மற்றுமோர் தனித்துவ அதிசயம்..!

இதுபோன்ற ஒரு தூக்கம் அந்த குகைவாசிகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்..! இறைவன் நாடினால் எதுவும் சாத்தியமே..!

இறைத்தூதர் நபி ஸல்... அவர்கள் நமக்கு தூங்கும் முறையை கற்றுத் தருகிறார்கள். அதுவும் நம்மை சிந்திக்க வைக்கிறது..! நபி ஸல்... அவர்கள் இரவில் படுக்கைக்கு ஒழு செய்துவிட்டு, படுக்கையை தட்டிவிட்டு, உறங்கச்சென்ற பின்னால் ஒருக்களித்து படுத்து தமது வலக்கையை தமது கன்னத்துக்கு கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு "அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா" (இறைவா உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழ்கிறேன்) இதனை பல்வேறு புஃஹாரி ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்..!

ஆகவே, நாமும் இனி அறிவியல்பூர்வமான நபிவழியில் தூங்கி எழுவோமாக..!

Source : இறைநாடினால் விரைவில் வெளிவரவிருக்கும் என் தந்தை Professor.T.A.M.Habib Mohamed M.Sc., M.Phil., அவர்களின் புத்தகமான "வெற்றியாளர்களின் வழிகாட்டி அல்குர்ஆன்" புத்தகத்தின் சில பக்கங்களின் தாக்கம் இந்த ஆக்கம்..!

17 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...