அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, April 27, 2011

21 நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..?

முன் கதைச்சுருக்கம் : நான் அப்போது தூத்துக்குடியில்உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அங்கே, அடுத்த மாத சம்பளத்தை இம்மாதமே சேர்த்து எடுத்துக்கொள்ளும், pay advance என்ற ஒரு வசதி இருந்தது. ஒரே நாளில் கையில் இரண்டு மாத சம்பளம்..! பின்னர், அடுத்த மாத சம்பளத்தில் இருந்து மாதாமாதம் ஒரு சிறுதொகை நம் வசதிப்படி பிடித்துக்கொள்வார்கள். அது முடிந்து விட்டால் மீண்டும் pay advance எடுப்போம். இதற்கு வட்டி கிடையாது.

மற்ற வாகனக்கடன், வீட்டுக்கடன் இவற்றுக்கெல்லாம் குறைந்த அளவில் வட்டி உண்டு. வட்டி என்பதால் நான் இவற்றை வாங்கியதில்லை. வட்டி இல்லாத கடன் என்பதால் pay advance-ஐ நான் இரண்டு முறை எடுத்திருக்கிறேன்.

1 - என்னுடன் சேர்ந்த என் பேட்ச் ஊழியர்கள் ஏறக்குறைய எல்லாருமே ஒரு கையில் appointment order மறுகையில் vehicle loan என்று வாங்கி புது பைக்கில் ஊரை கலக்கிக்கொண்டு இருக்க... நான் மட்டும் அப்போது இன்னும் என் ஓட்டை சைக்கிளில்... ம்ம்ம்... மாதாமாதம் சிறிது சிறிதாக சேமித்த தொகையில் அதீத ஆவல் கொண்டு விரைவாக பைக் வாங்க வேண்டும் என்று, எட்டாவது மாதம் முதல் முறையாக pay advance எடுத்தேன்..! அப்போதைய அறிமுகமான, 1999-YAMAHA-YBX பைக் வாங்கினேன்.

2 - பின்னர், சில வருடங்கள் கழித்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அரசு ஊழியர்களுக்கு பல மாதங்கள் வெட்டி வீம்புக்கு அக்கிரமமாக ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டபோது... (இந்த காயம் இன்னும் பலருக்கு ஆறவில்லை... பின்னே, அரசு ஊழியர்கள் ஜெ.க்கு ஏன் ஓட்டளிப்பதில்லை என்பதற்குறிய பல காரணங்களில் இதுவும் ஒன்று...) வீட்டு செலவுக்காக தேவைப்பட்டபோது மற்றொரு முறை pay advance எடுத்தேன்..!

3 - அதன் பிறகு, அப்போது மூன்றாவது முறை... pay advance எடுக்க வேண்டி இருந்தது. காரணம் ஒரு Sony DVD பிளேயர் வாங்க வேண்டும்..!

'முன் கதைச்சுருக்கம்' முடிந்தது..! 

இனி பதிவிற்கான சம்பவம் : அன்று........... ஒருநாள் நைட் ஷிஃப்ட்......! 

உரத்தொழிற்சாலையின் Time office-ல் card punching பண்ணிவிட்டு, pay advance படிவத்தை மறக்காமல் வாங்கிக்கொண்டு, அதை கூடவே எடுத்துச்சென்ற ஒரு நூலக புத்தகத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டு பணிக்கு விரைந்தேன். என் area operator-ஐ relieve செய்து விட்டு area charge எடுத்துக்கொண்ட பின்னர்  முதல் வேலையாக... (log report படிப்பதெல்லாம் அப்புறம்தாங்க...) கொண்டுவந்த pay advance படிவத்தை பொறுமையாக பிழையின்றி அழகாக நிரப்பி கையொப்பமிட்டேன். மறுநாள் மறக்காமல், finance department-ல் சேர்ப்பிக்க வேண்டி, பத்திரமாக வைத்துவிட்டு... பின்னர் area round-up, equipment checking, reading எல்லாம் போட்டுவிட்டு... ம்ம்ம்... இனி, கொண்டு போன புத்தகத்தை திறந்து படிக்க வேண்டியதுதான்..! 

பொதுவாக இரவுப்பணியில் புத்தகம்தான் நம் உற்ற நண்பன்..! அன்று எடுத்துப்போன நூலக புத்தகம்... இஸ்லாமிய கலீஃபாக்கள் வரலாறு..!

அதில், கலீஃபா உமர்(ரலி) அவர்களைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன்..! அவர் அப்போது, முழு பாரசீக பேரரசுப்பகுதி, எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, வட ஆபிரிக்க பகுதி, ஆர்மீனியா மற்றும் ரோமப்பேரரசின் ஒரு சிறு பகுதி என்று அப்போது மிகப்பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்தார். 

 இருந்தும்..., மிகவும் எளிமையாக தன்னுடைய, (சேனம் கட்டினால் சொகுசாகிவிடுமே என்று வெறும்) கழுதை மீது சவாரி செய்வதும், இரவில் ஒவ்வோர் தெருவாக சென்று மக்கள் குறைகளை காணுவதும், அதில் ஒரு பால்காரம்மா வீட்டில், மிக வறுமையாக இருந்தும் பாலில் தண்ணீர் கலக்குமாறு தாய் சொல்ல, அந்த மகள்... 'கலீஃபா  பார்க்காவிட்டால் என்ன அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறானே' என்று நேர்மையாக அந்த பாவத்தை மறுக்க, இந்த இளம்பெண் பின்னர் தன் இறைஅச்சத்திற்கு பரிசாக கலீஃபா உமர்(ரலி)-ன் மருமகள் ஆனார் என்பதும்... "பாரசீக யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு நாய் உணவில்லாமல் செத்துக்கிடந்தாலும், உமர் சரியாக ஆட்சி புரியவில்லை என்று அர்த்தம்"--என்று சூளுரையிட்டு அவ்வளவு நேர்மையாக யாருக்காகவும் வளையாத வாளுடன் நல்லாட்சி புரிந்தார் எனவும், இன்னும் பலவும் படித்தேன். ஆனால்... அதற்குப்பிறகுதான்... ஒரு சம்பவம்....! இந்த பதிவிற்கான சம்பவம்..! என்னை உலுக்கியது..!

கலீஃபா உமர்(ரலி)-யின் மகன் ஒரு பாடசாலையில் படிக்க அவரின் கிழிந்த நைந்த பலமுறை ஒட்டுப்போட்ட சட்டை மேலும் கிழிந்து தொங்க, அவரின் சக மாணவர்கள்... "  ஹே... இங்கே பாரப்பா... கலீஃபாவின் மகனின் சட்டையை...! இது  சட்டையா...? இல்லை சல்லடையா...?"   --என்பது போல கிண்டல் கேலி பண்ண... அவமானம் தாங்காத மகன், தன் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் வந்து... " இனி புது சட்டை வாங்கித்தந்தால்தால் பள்ளிக்கு செல்வேன் "   --என அடம்பிடிக்க... அந்த சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியிடமோ மகனுக்கு ஒரு புது சட்டை வாங்கக்கூட பைசா இல்லை..! மகனிடம் தன்னுடைய பல சமாளிப்புகளும் பலன் தராமல் போகவே... இறுதியாக... அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

பிறரிடம் கடன் கேட்பதிலிருந்தும் தன்னை தேவையற்றவனாக்கி பாதுகாக்குமாறு தினம் ஐவேளை தொழுகையில் இறைவனிடம் துவா கேட்டவர்களாய் கடன் கேட்பதை தவிர்த்திருந்தனர் நபித்தோழர்கள். அதனால், 'கடன் கேட்பதற்கு பதிலாக, தன் உரிமையை கேட்கலாமே' என்று எண்ணியவராய், கலிஃபா உமர்(ரலி), நேரே கருவூல அதிகாரியிடம் (அவரின் finance minister..!) செல்கிறார். தனக்குரிய--கலிஃபா என்ற ஊழியத்திற்கு உரிய-- அடுத்த மாத சம்பளத்தை மாத இறுதிக்கு பதில் அன்றே தருமாறு கேட்கிறார்..!

கருவூல அதிகாரி யார்..? அமீருல் மூமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களின் நேர்முகத்தேர்வு அல்லவா...? விடுவாரா அவர்..?  "  ஓ..! கலிஃபா அவர்களே, அடுத்த மாதம் முடிய நீங்கள் தான் கலிஃபாவாக இருப்பீர்கள் என்பதற்கும், உங்கள் உயிருக்கும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்து விட்டானா..? ஆகையால் உங்களுக்கான சம்பளத்தை இப்போது என்னால் கொடுக்க முடியாது..! "   --என்று ஒரே போடாக போடுகிறார்...!

உடனே, அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து போன, கலிஃபா உமர்(ரலி) அவர்கள் தன் கருவூல அதிகாரியை கட்டித்தழுவி, " சகோதரரே..! அடுத்த நொடி என் உயிர் என் உடலில் இருப்பதும், இல்லாது போவதும் அல்லாஹ் வசம்..! அவ்வாறிருக்க, எவ்வளவு பெரிய தவறை செய்யத்துணிந்து விட்டேன் நான்..! நாளை இந்த உமர் இறுதித்தீர்ப்பு நாளில், உலக மக்கள் எல்லாம் பார்க்கையில், அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலில்லாமல் ஒரு கேவலப்பட்ட கடனாளியாக கூனிக்குறுகி அசிங்கப்பட்டு அவன் முன்னே நிற்பதை விட்டும் அந்த கருணையாளன் உங்கள் மூலம் என்னை பாதுகாத்து விட்டான்..! அல்ஹம்துலில்லாஹ்..! தக்க சமயத்தில் என்னை ஒரு பாவத்திலிருந்து உங்களின் உயர்ந்த இறையச்சம் மூலம் காப்பாற்றினீர்கள்..! மிக்க நன்றி..! இறைவன் தங்களுக்கு அருள்புரிவானாக..!" --என்று அழுது கொண்டே நன்றி தெரிவித்துவிட்டு திரும்புகிறார்கள்..!

இதை படித்ததும், நானும்தான் நிலை குலைந்தேன்..! துக்கம் என் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து மாலை மாலையாய் கண்ணீர் வழிந்தோடியது. என்னை அறியாமல் அழுதே விட்டேன்..! இப்படியும் ஒரு எளிய பேரரசர் ஒரு மனிதராக வாழ்ந்திருக்கிறாரே..? அவருக்கு கீழே பணிபுரியும் ஒருத்தர் ஜால்ராவாக இல்லாமல் கலீஃபாவையே எதிர்கேள்வி கேட்பதும், அவரின் தவறை சுட்டி உணர்த்துவதும்... என்னவொரு அழகிய அரசாட்சி...!?

'ஹே  ராம்... ஹே ராம்...' என்று அனுதினமும் முனகும் மகாத்மா காந்தியடிகள் கூட, ராம ராஜ்ஜியம் வேண்டுவோரிடம், நம் நாட்டிற்கு உமர் போல ஒரு ஆட்சியாளர் வாய்க்க வேண்டும் என்றல்லாவா கூறினார்..!

சரி... இதை விடுங்க... சகோ...! கலீஃபா உமர்(ரலி) தன் கருவூல அதிகாரியிடம் கேட்டது என்ன..? சிம்பிள்... அதாவது... after-all... just அடுத்த மாத pay advance தானே..!!!

இப்போது.... "உனக்கு DVD முக்கியமாடா..? இல்லை, மறுமை முக்கியமாடா..? முதலில், நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..? என்னடா கியாரண்டி..? அதற்குள்ளே, அடுத்த மாச சம்பளத்தை இப்போதே கேட்கிறானாம்..!"---என்று என் மனசாட்சி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே... என் கைகள் தானாகவே... அந்த pay advance application form-ஐ கிழித்து குப்பைத்தொட்டியில் வீசிக்கொண்டு இருந்தன..!


சில முக்கியகுறிப்புகள் :-

பெயர்தான் pay advance என்றாலும், அது இஸ்லாமிய முறையிலான (self signed application form என்ற...) கடன் பத்திரம் எழுதி ஒரு வட்டியில்லா தவணை முறையில் திருப்பி செலுத்தும் பொருட்டு கடன் பெறுவது போலத்தான். உமர்(ரலி) கேட்டது போல actual pay advance இல்லைதான். வாங்கலாம்தான். 

எனினும், அத்தியாவசிய தேவை அல்லாத... போயும் போயும்... ஒரு அற்ப DVD-க்காகவா கடன் வாங்கி கடனாளியாக இறப்பது..? 

அப்புறம், "இறைவா..! கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்..!" என்று தினம் ஐவேளை தொழுகை-கடைசி இருப்பில் பிரார்த்தனை பண்ணுவதற்கு என்ன அர்த்தம்..?  

பெற்றோர் இறந்தால் மகனுக்கு அல்லது அவரின் நெருங்கிய உறவினருக்கு இறந்தவரின் கடனை அடைப்பதுதானே இஸ்லாத்தில் தலையாய பொறுப்பு..? 

அப்படி கடனை அடைக்க யாரும் முன்வரவில்லை எனில், அவருக்கான இறுதி ஜனாஸா தொழுகை கூட நபி(ஸல்) அவர்கள் நடத்த மறுத்து விடுவார்களே..!

இணைவைக்காத நிலையில், இஸ்லாத்தில் உச்ச அந்தஸ்தை பெறுபவரான ஒரு ஷஹீதுக்கு அவரின் கடனைத்தவிர அல்லவா மற்ற அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன..?

அழகிய முறையில் தேவையுடையோருக்கு வட்டியின்றி கடன்கொடுக்க சொல்லும் இஸ்லாம், கடன் வாங்குவதை வெறுக்கவும் சொல்கிறது..! 

"தர்மம் செய்..! யாசிக்காதே..!" என்று எனது முந்தைய 'தர்மம்' பற்றிய பதிவுகளில் இஸ்லாம் எடுத்த அதே நடுநிலை தான், இங்கே கடனிலும்..! 

இஸ்லாம்...! இடது சார்பாகவும் போகாது...! வலது சார்பாகவும் போகாது...! இரண்டுக்கும் நடுவில் சம நீதியுடன் ராஜநடை போடும்...!

கடன்
எப்படி யாசித்தலை வெறுக்கச்சொல்லி தர்மம் செய்வதை ஆதரித்து கட்டாயமாக்கி இருக்கிறதோ அதேபோல... அவசியத்தேவையுடையோருக்கு வட்டியின்றி அழகிய முறையில் கடன் கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், கடன் வாங்குவதை வெறுக்கவும் சொல்கிறது..!
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... "எவன் மக்களின் பணத்தை திருப்பிச்செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச்செலுத்துவான். எவன் திருப்பிச்செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்".... என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2387)
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, "இறைவா..! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்..!" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், "இறைத்தூதர் அவர்களே..! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன..?"என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.... என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2397)
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... "வசதிபெற்றவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும்", என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2400)

ஒரு மனிதனுக்கு நாம் செய்யும் கடமைகளில்; கடைசி கடமை அவருக்கு ஜனாஸா தொழுவதாகும்.  இதற்கான சிறப்பையும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் சிலாகித்து கூறி இருக்கிறார்கள்.  ஆனால், இஸ்லாமிய ஆட்சியின் முற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்கு தொழுகை நடத்த மறுத்ததிலிருந்து கடன் வாங்குவது நாம் நினைப்பது போல் எளிதானதல்ல என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
.
கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், "இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும்விட்டுச் சென்றுள்ளாரா..?" என்று கேட்பது வழக்கம். 'அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதைவிட்டுச் சென்றுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், (தான் நடத்தாமல்) முஸ்லிம்களிடம் "உங்கள் தோழருக்காகத்தொழுங்கள்'' என்று கூறிவிடுவார்கள்.
.
பின்னாளில் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், "நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறை நம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்து விடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தை (விட்டுவிட்டு இறந்து விட்டால்) விட்டுச்செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புஹாரி-5371)
.
பாருங்கள்  சகோ..! இஸ்லாமிய அரசாட்சியில் அதிபர் ஏற்றுக்கொள்வாராம் மக்களின் கடனை..! ஆனால், அவர்களின் சொத்துக்கள் மட்டும் வேண்டாமாம். இப்போதோ, சிஸ்டம் ரிவர்ஸில் உள்ளது. நாட்டிற்கு கடன் என்றால் அதன் சுமையை சுமப்பது வரிகள் மூலமாக மக்கள் அல்லவா..?
வட்டி 
.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்-2:275) 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! (அல் குர்ஆன்-2:278)  
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப்பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக்கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக்கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (அல் குர்ஆன்-2:279) 

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல் குர்ஆன்-3-130)

ஆகவே, அத்தியாவசிய தேவையற்ற ஆடம்பர வாழ்விற்கான கடன், பின்னர் அதன்மூலமாக வந்து சேரும் வட்டி, இதனால் ஏற்படும் பொருளாதார நிலைகுலைவு இவற்றில் இருந்தெல்லாம் நாம் நம்மை முற்றாக தவிர்த்துக் கொள்வோமாக..! அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வாழ்கையை மகிழ்ச்சியாக நாம் அமைத்துக் கொள்வோமாக..!



டிஸ்கி : - அந்த புத்தகத்தின் ஆசிரியர் பெயர் நியாபகம் இல்லை. மறக்கவே முடியாத படித்த அந்த  சம்பவம் சரியாக இதுதான். அதில் இருந்த ஆசிரியரின் எழுத்துக்கள் வேண்டுமானால், கொஞ்சம் மாற்றங்களுடன் ஏறக்குறைய இப்படித்தான் இருந்திருக்கும். சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டனவே..! இந்த பதிவை எழுத தூண்டியது 'நேற்றைய-சுவனப்பிரியன்-பிளாக்ஸ்பாட்-பதிவு'. என் ஞாபக அலைகளை மீட்டிய சகோ.சுவனப்பிரியன் அவர்களுக்கு நன்றி.

21 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...