அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, April 22, 2011

9 வறுமையை ஒழித்திடுமா ஜகாத்..?

ஆம்..! ஒழித்திடும்..! ஆனால், இஸ்லாம் சொன்ன முறையில் வழங்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டால்..! முந்தையதொரு பதிவில், //ஜகாத்(கட்டாயதர்மம்), சதகா(தர்மம்)// என்று குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்ட    9:60 இறைவசனத்தில் 'தர்மம்' என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் நீங்கள் குர்ஆன் அரபி மூலத்தை எடுத்து பார்த்தால் ஜகாத் என்று இருக்காது..! ஸதகா என்றுதான்  வரும்..! (... إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ ) ஆனாலும் எல்லா அறிஞர்களாலும் 'இது ஜகாத்திற்கும் உரிய விளக்கம்' என்று சொல்லப்படுவதற்கு காரணம், அதில் உள்ள அந்த மூன்றாவது பிரிவினரான தர்மங்களை 'வசூலிப்போருக்கும்' என்பதை வைத்துத்தான். 

ஏன் எனில், ஓர் இஸ்லாமிய அரசு தர்மத்தை வசூலிப்பதற்கென்றே நியமிக்கப்பட்ட தன் அதிகாரிகள் மூலம் மேற்படி வசனத்தில் குறிப்பிடப்பட்டவர் அல்லாத பிற முஸ்லிம் மக்களிடம் இருந்து ஜகாத் பொருளை வசூலித்து அதனை மேற்படி வசனத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு அளிப்பது  என்பது ஜகாத்தில் மட்டும் உண்டு என்பதால். 

மேலும், ஓர் இஸ்லாமிய அரசின் ஆட்சியாளரான இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு... "(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக... "(அல் குஆன்-9:103) என்று இறைவன் கட்டளை பிறப்பிப்பதால் தர்மத்தினை வசூலிப்பது ஒரு இஸ்லாமிய ஆட்சியாளரின் பொறுப்பாகிறது. இதிலும் கூட (...خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً) ஸதகா என்றுதான் இடம் பெற்றுள்ளது. ஆக, கடமையான ஜக்காத்தும் கூட குர்ஆனில் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்பதனை அறியலாம்.

ஸகாத் உள்ளத்தை  (...உள்ளும்...) மட்டும் பரிசுத்தப்படுத்துவதில்லை. அது நம்முடைய செல்வத்தையும் (...புறமும்...) சேர்த்தே பரிசுத்தப்படுத்துகிறது. நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றி விடும்போது அந்த செல்வம் பரிசுத்தமாகி விடுகிறது. பரிசுத்தமான செல்வத்தை வைத்திருக்கும் நாமும் பரிசுத்தமாகிவிடுகிறோம். அதன் பிறகுதான் அதனை நாம் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) ...என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாக தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை (இறைத்தூதரிடம் விளக்கம் கேட்பதன் மூலம்) நான் நீக்குகின்றேன்' என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாக தெரிகின்றது'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், "உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை'' என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 1417

எனவே நாம், இந்த இடத்தில் ஜகாத்- ஸதகா இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும். எல்லா நற்செயல்களுமே கூட ஸதகா ஆகிவிடுகிறது. ஆனால், பொருளாக/பணமாக கொடுப்பதே ஜகாத். ஸதகாவிற்கு குறைந்த பட்ச செல்வ இருப்பு என்ற 'நிஸாப்' அளவு கிடையாது. (ஒரு பேரிச்சம் பழத்தில் இருந்து ஒரு துண்டு கூட ஸதகா என்றாகிறது.) ஜகாத்திற்கு நிஸாப் உண்டு. இன்ன அளவிற்கு மேல் செல்வம் இருந்தால் அந்த எட்டு பிரிவினருக்கு இன்னன்ன அளவில் ஜகாத் தந்தே ஆக வேண்டும். 

எவ்வளவு இருந்தால், எந்த வகையில் இருந்தால், அதில் எவ்வளவு தர வேண்டும், எந்த வகையில் தரவேண்டும் என்றெல்லாம் தெள்ளத்தெளிவாக இஸ்லாம் வரையறுத்து விட்டது. இதை மட்டும் தந்தால் ஜகாத். கடமை ஓவர். மறுமை தண்டனையிலிருந்து தப்பியாயிற்று..! இதற்கு மேல் தந்தால்..? அதுதான் ஸதகா..! எக்ஸ்ட்ரா நன்மை. அந்த நிஸாப் அளவை விட குறைந்த செல்வம் உடையவர்-அதாவது ஜகாத் கடமையில்லாதவர் - மனமுவந்து விரும்பி தாமாகவே தர்மம் தந்தால் (ஒரு துண்டு பேரிச்சை) அது ஸதகா..!

'(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (குர்ஆன் - 2:219)  என்ற குர்ஆன் வசனமும், 'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (புஹாரி 1426)

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் 'தேவை' என்பதற்கு இமாம் புஹாரி(ரஹ்) அவர்களின் விளக்கம்: "ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ (உணவு/உடை) தேவை இருக்கும்போதோ அல்லது கடன் இருக்கும்போதோ தர்மம் செய்யக்கூடாது" என்கிறார்கள். கடனுக்கு முக்கியத்துவம் உள்ளது. காரணம், ஒரு ஷஹீதுடைய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும். திருப்பியளிக்காத கடனைத்தவிர என்பதால்தான் , நபி(ஸல்) அவர்கள்கூட கடன்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுது துவா செய்யமாட்டார்கள். ஒருவரிடம் இருக்கும் சொத்தைவிட அவர் பட்டுள்ள கடன் அதிகமாக இருக்கிறது என்றால் கடனை அடைக்கத்தான் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர கடனை கண்டு கொள்ளாமல் சொத்துக்கு ஜகாத் வழங்குமாறு இஸ்லாம் சொல்லவில்லை. 

இந்த 'தேவை' என்பது... 

அப்போதைய இஸ்லாமிய சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி நபி(ஸல்) அவர்களின் தேவையாகிய... பனையோலை கூரை மண்குடிசை, ஒருவர் தொழுதால் ஒருவர் கால்நீட்டி படுக்க முடியாத 'அறை', கயிற்றுக்கட்டில், ஈச்சை ஓலை அடக்கிய தலகாணி, தோலினால் ஆன வாட்டர் பேக், இரண்டு செட் ஆடை, போர்வாள், கவசம், ஓர் ஒட்டகம், ஒரு குதிரை, போரில் கிடைத்த ஷேர்-ஒரு சிறு பொட்டல் நிலம், மாவு அரைக்கும் திருகு (இது மகளுக்கு சீதனமாக போய் விட்டது) அவ்ளோதான்..! ஒரே நாளில் இரண்டு வேலை வயிறார நல்ல உணவு உண்டது கிடையாது.(சஹிஹ் முஸ்லிம்)... இப்படியா...?

அல்லது....  

இப்போதைய வளைகுடா மன்னர்களின் சில சதுர கிலோமீட்டர் அரண்மனைகள், கணக்கிலா கார்கள், கப்பல்கள், விமானங்கள், நகைகள்...இப்படியா...? 

ஆக, நாம் நம் தேவைக்கு அளவுகோலாக, நம் கண்மணி நபிகள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்களின் தேவையை வைத்துக்கொள்ளலாமே..?

அடுத்து... நன்மை என்பதற்காக சொத்து எல்லாவற்றையும் தர்மம் செய்து விடலாமா..? கூடாதாம்..! ஒருவர் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு ( 33% - தர்ம உச்சவரம்பு ) அல்லது அதற்கு குறைவாக மட்டுமே தர்மம் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்குமேல் தர்மம் செய்ய வேண்டாம் என்றும் தடுத்திருக்கிறார்கள். (புஹாரி-6733) 

இதற்கு முந்தைய பதிவிற்கு முன் இட்ட பதிவில் "யாசிக்காத மற்றவர்களை 'இவர்கள் தர்மத்துக்கு உரியவர்கள்தான்' என்று எப்படி அறிவது..?" என்றும், ஏழைகளை வரையறுக்க  //உலகளாவிய சர்வதேச வறுமைக்கோடு என்று ஒன்று பொதுவாக இல்லை. அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.// என்றும் அப்பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தேன்.

இதற்கு சரியான தெளிவான பதிலை உலோகம், கால்நடை மற்றும் விளையும் உணவு வகைகளை கொண்டு ஏழை-பணக்காரர் இடையே ஓர் எல்லைக்கோட்டை இஸ்லாம் சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன்பே... 'யார் கொடுப்பது;யார் வாங்குவது' என வரையறுத்து கூறிவிட்டதை காணலாம்.

“ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஜகாத் இல்லை. ஐந்து ஊக்கியாக்களை விடக்குறைவாக உள்ள வெள்ளியில் ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களை விடக் குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1459)  40 ஆடுகளுக்கு குறைவாக இருந்தால் ஜகாத் இல்லை.  (புகாரி:1454) பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா) ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும். (நன்றி-அல்பாக்கவி டாட் காம்)

‘வஸக்’ = 60 'ஸாவ்'. (1 'ஸாவ்' என்பது 2.156 கிலோகிராம்). இதன்படி 5 வஸக் என்பது 5 x 60 x 2.156 = 646.8 கிலோகிராம். அதாவது விளை பொருளில் ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) சுமார் 650 கிலோ ஆகும்.

‘ஊக்கிய’ = 40 திர்ஹங்கள். 1திர்ஹம் = சுமார் 2.975 கிராம். 5 ஊக்கிய =  5 x 40 x 2.975 = 595 கிராம். இதன்படி, வெள்ளியில் ஜகாத் கடமையாவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) 595 கிராம் ஆகும்.

(யூசுப் அலி கர்ழாவி அவர்கள் எழுதிய ‘ஃபிக்ஹு ஜகாத்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட நவீன கால அளவுகளாகும் இவை. அளவுகள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே இவ்வளவின் விபரத்தை பதிவு செய்துள்ளார். நன்றி-ரீட் இஸ்லாம் டாட் காம்)

ஒருவர் அவரின் அறிவு-திறமைக்கு ஏற்ப ஆகுமான வழிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் பொருளீட்ட இஸ்லாமிய அரசில் எத்தடையும் இல்லை. அதேநேரம், ஜகாத் என்பது ஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டுக்கிடக்கும் ஏழை எளிய தேவையுடைய மக்களுக்கு வசதி படைத்தோரை தாராள உள்ளத்துடன் உதவி செய்ய கட்டாயப்படுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.

நலிந்தவர்களையும் வறுமைக்கு ஆட்பட்டவர்களையும் ஜகாத் கைதூக்கி விடுகிறது. ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு(நிஸாப்)க்கு மேல் செல்வம் இருந்தால் அவரிடமிருந்து கட்டாய கடமையாக ஜகாத் என்னும் ஏழைவரி வசூலிக்கப்பட்டு, குர்ஆன் (9:60) சுட்டிக்காட்டும் அந்த எட்டுவகை பிரிவினருக்குள் வழங்கப்பட வேண்டும்.

இங்கே செல்வம் என்பது மூலதனம், முதலீடு, உற்பத்தி, இலாபம் என்பதான நான்குவகை பிரிவுகளையும் சேர்த்து குறிப்பதாகும். இது வீடு, நிலம், தொழிற்சாலை, சேமிப்புகள், தங்கம் ,வெள்ளி உள்ளிட்ட விலை உயர் பொருள்கள், வாகனங்கள், உற்பத்திகருவிகள் நிதிமூலதனம் உள்ளிட்ட வியாபார முதலீடுகள், ஆடு, மாடு, ஒட்டகம் கால்நடை சொத்துக்கள் விவசாய விளைபொருட்கள், தொழில் உற்பத்தி பொருட்கள் என் நிகழும் அனைத்து பொருளாதார அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறியை இஸ்லாம் போதிக்கிறது. இதுவே பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம் செய்கிறது. இதைத்தான்... அல்-குர்ஆன் பின் வருமாறு கூறுகிறது. உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டு இருக்கக்கூடாது. (குர்ஆன்-59:7) 

தங்கம் வெள்ளி தவிர பிறசொத்துகளுக்கும் இம்மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2.5% ஜகாத் வழங்கப்பட வேண்டும். இந்த ஜகாத் கால்நடை சொத்துக்களுக்கும் நிர்ண்யிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் இருந்தால் அதற்கு ஒரு ஆடு ஜகாத் ஆகும். நாற்பது ஆடுகளுக்கு மேல் இருந்தாலும் ஒரு ஆடு ஸகாத் வழங்கப்பட வேண்டும். 

உழைப்பை செலவழித்து ஒரு விவசாயி நீரிறைத்து பயிரை விளைவித்து இருந்தால் 5% ஜகாத்தும், நீர் இறைக்காமல் இயற்கை மழையினாலேயே விளைந்திருந்தால் 10% ஜகாத்தும் வழங்க வேண்டும். இதில் ஒரு வருடத்தில் அந்த நிலத்தில் மூன்று போகம் விளைந்தால் மூன்று தடவையும் ஜகாத் கொடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் அனைத்துவகை உணவுப்பயிர், பணப்பயிர், தோட்டப்பயிர்களுக்கும் ஜகாத் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்த நீட்சியாகும்.

“மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும்; ஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483) சுபஹானல்லாஹ்..!

கனிமப்பொருள், சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோகங்கள், கனிமப்பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் (கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20% ஜகாத் வழங்ப்படவேண்டும்.

சகோ.ஹுசைனம்மா கூட //தகுதியானவர்களைக் கண்டடைவதுதான் சிரமமாக உள்ளது// என்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்ததும் சிந்திக்க வேண்டியதொரு விஷயம். இஸ்லாமிய ஆட்சியில் அது அரசின் தலைவலி. தற்சமயம் நம் ஊரில் அப்படியான சூழல் இல்லாத பட்சத்தில் நாம்தான் அந்த பொறுப்பை சுமக்க வேண்டியுள்ளது.

இஸ்லாம் முதலில் ஜகாத்தை நம் சொந்தக்காரர்களிடமிருந்து ஆரம்பிக்க சொல்கிறது. இது எளிது. எங்காவது நமக்கு தூரத்து சொந்தக்கார் எவராவது ஏழ்மையில் இருப்பார்... வெளிப்பார்வைக்கு தேவை அற்றவராக காட்டிக்கொண்டு..! அந்த குடும்பத்து வருவாய் மூலத்தை நாம் அறிந்துவைத்து இருந்தால் மிக எளிதாக ஜகாத் நிதியை திரட்டி அதன் மூலம் நாம் உதவ இயலும்.

தர்மம் (ஜகாத்/சதகா) செய்பவர்கள், 'தாங்கள் எத்தனைபேருக்கு ஈந்தோம்..' என்றுதான் பார்க்கிறார்களே அன்றி, 'எவ்வளவு ஈந்தோம்...' என்று எண்ணிப்பார்ப்பதில்லை. அதனால் இன்னும் பிச்சைக்காரர்கள் நிறைய உருவாகிறார்கள். இறைவன் வகுத்த ஜகாத் கணக்கு 2.5% / 5% / 10% / 20% என்று செல்வத்தின் அளவில்தான் போகிறதே அன்றி 2, 10, 100, 5000... என்று ஜகாத் பயனாளர்களை எண்ணவில்லையே..?

ஆதலால், அவர்களுக்கு சில்லரையாக வினியோகிப்பது ஜகாத் முறையாகாது. கடமையின் நோக்கமும் நிறை வேறாது. அல்லாஹ்வும் ஜகாத்தை வசூலிக்க கட்டளையிட, நபி(ஸல்) அவர்களும் வசூலித்துதான் தகுதியானவருக்கு விநியோகித்து உள்ளார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.

 ஓ..! எனதருமை ஜகாத் & ஸதகா தருமங்களே..!
 நீங்கள் 'தனித்தனி செங்கற்களாய்' சிதறி வீணாகாமல்...
.
'பைத்துல் மால்' எனும் பொது நிதி ஒன்றை ஊர்தோறும் நாம் உருவாக்கி ஜகாத் பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில், அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு ஜகாத் கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
.
'பைத்துல்மால்' என்ற  'இனைப்புக்கலவை' மூலம்...
.
தற்போது  சில அமைப்புகள் தமிழ்நாட்டில் ஜகாத் வசூலித்து விநியோகம் செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களின் முயற்சிக்கும்  அருள்புரிவானாக. எல்லா பணமும் சென்னை போன்ற ஒரு ஊருக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து பல ஊர்களுக்கு விநியோகிக்க செல்வதற்கு பதிலாக, அந்தந்த ஊரிலேயே உள்ள அந்த அமைப்பை சேர்ந்த அவ்வூர்மக்களால் திரட்டப்பட்டு அவர்கள் கண்ணெதிரிலேயே அவர்கள் சுட்டுகின்ற மற்றும் அனைவராலும் இன்னார் தேவையுடையோர் என்று கண்டறியப்பட்ட சரியான நபருக்கு ஜகாத் நிதி சென்று சேருமானால், இத்தகைய வசூல்-விநியோக முறை எதிர்காலத்தில் நன்றாக வளர்ந்து அதன் பயனை காட்டும், இன்ஷாஅல்லாஹ்.

'ஒன்றிணைந்து' ஒரு 'சுவராக' எழுந்து வளர்ந்து...

இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச்செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம் விழையும் ஜகாத் முறையாகும். ஜகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை உரிய முறையில் வசூலித்து பின் உரியவர்களுக்கு வினியோகிப்பதற்கு இறைவன் நல்லருள் புரிவானாக. அதனை பெற்றவர்கள் அதன்மூலம் பயன்பெற்று அடுத்த வருடம் அவர்களும் ஜகாத் கொடுக்கும் நன்மக்களாக ஆக இறைவன் கிருபை செய்வானாக.ஆமீன்.

'வீடாக' உருமாறி தேவையுடையவருக்கு 'முழுமையாக' பயன்படுங்களேன்..!

சரி, இதுபோன்ற இஸ்லாமிய ஜகாத் முறை வறுமையை நிச்சயம் ஒழித்திடுமா..? 

இஸ்லாமிய முறையில் கொடுக்கப்படும் தர்மங்கள் மேற்சொன்ன முறையில் வசூலிக்கப்பட்டு, கூட்டாக அவை ஒன்று திறட்டப்பட்டு, தகுதியானோருக்கு முறையாக இஸ்லாமிய முறைப்படி விநியோகிக்கப்பட்டால், இன்ஷாஅல்லாஹ் வறுமை நிச்சயமாக ஒழிந்திடும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.
.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "தர்மம் செய்யுங்கள்..! ஏனெனில் உங்களிடையே (மக்களிடையே) ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப்பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப்பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்கு தேவையில்லையே..! என்றும் கூறுவான். உங்களிடம் செல்வம் பெருத்து  கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது." (புஹாரி-1411, 1412,& 1414 ஆகிய ஹதீஸ்களின் சுருக்கம்)

நபி(ஸல்) அவர்களின் ஏனைய பல முன்னறிவிப்புகள் நடந்தேறி இருக்கின்றன. இன்னும் பல நடந்தேறிக்கொண்டு வருகின்றன. இதுவும் இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் நடக்கப்போகிறது..!

9 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...