அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, November 10, 2013

10 தமிழா..! 'பகுதி நேர பிணம்' ஆகாதே..!



வருஷா வருஷம் வசூல் சாதனை (!?) உடைக்கப்பட்டுக்கொண்டு இருப்பதும்... ஒருநாள் சராசரி வசூலான 59 கோடி ரூபாய்க்கு பதிலாக, "இந்த தீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் மூலம் 330 கோடி ரூபாயை (அஞ்சரை மடங்கு) மக்களிடம் இருந்து அரசு வசூல் செய்து சாதனை(!?)" போன்ற செய்தியும், நமது தமிழ்நாட்டு உண்மை நிலையை மிகவும் கேவலமாக எடுத்தியம்புகிறது. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சகோஸ். தினமும் விபத்துகள் பெருகுகின்றன. கல்வி, வேலை, உற்பத்தி, சிந்தனை, உடல்நலம், பொருளாதாரம், குடும்ப வாழ்வியல் நிலை, சாலை பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம்... என்று அனைத்தும் பாதிக்கப்பட்டு மொத்த சமூகமுமே பின்தங்கி போய்க்கொண்டு இருக்கிறோம்... மது விற்பனை செய்வோரையும், மருந்து விற்பனை செய்வோரையும் தவிர..!

நான் சிறுவனாக இருக்கும் காலத்தில் - 70-களின் இறுதியில் எல்லாம்... படிக்காதவன், ரவுடி, போக்கிரி, பொருக்கி, கிரிமினல், கொள்ளையன், கொலைகாரன்,  கொஞ்சம் கூட நற்பண்புகள் இல்லாதவன், சினிமா வில்லன்கள், வில்லனின் அடியாட்கள்... தான் குடிப்பார்கள் என்ற நிலையும் புரிதலும் சமூகத்தில் நிலவி இருந்தது.

அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி... இன்று சினிமா ஹீரோவும், ஹீரோவின் நண்பர்களும், அரசியல்வாதிகளும், நன்கு படித்தவர்களும், உயர்ந்த வேலையில் அதிக சம்பளத்தில் இருப்பவர்களும்,  அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், கல்லூரி - பள்ளி மாணவர்களும், பெண்களும் கூட குடிகாரர்களாக இன்று ஆகிவிட்டதை நான் மிகுந்த கவலையோடு உற்று நோக்குகிறேன்..!

பொதுவாக, பேருந்தில் சிகரெட் பிடித்தால் கூட விட மாட்டார்கள். பஸ்ஸை நிறுத்தி இறக்கி விட்டு விடுவார்கள். குடிகாரன் என்றால்... போதையில் உள்ளவனை பேருந்தில் ஏற்றவே மாட்டார்கள். குடித்து விட்டு பஸ்சில் ஏற அப்போதெல்லாம் சான்ஸே இல்லை. குடிப்பதும் குடியை விற்பனை செய்வதும் பாவமாக மட்டுமல்ல சட்டப்படி குற்றமாக கருதப்பட்டு வந்த ஒரு காலம்..! 

அது... கொஞ்சம் கொஞ்சமாக மாறி... இப்போது, குடிக்காதவரை பண்பில்லாதவராகவும் எதிரியாகவும் கெட்டவராகவும் பார்க்கும் கொடுமையான சூழல் நிலவுகிறது. 

அப்படி ஒரு சூழலை இங்கே பகிர்கிறேன். முன்பு ஒரு முறை தூத்துக்குடி டூ மதுரை PP ல் வந்தேன். பேருதான் பீப்பீ... எப்போதும் வென்றான், எட்டயபுரம், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி  எல்லாம் நின்னுதான் போவும்.

எட்டய புரத்தில் ஒரு குடிகாரன் ஏறினான். நேரே நான் உக்கார்ந்து இருந்த சீட்டுக்கு அருகே நின்று கொஞ்சம் கொஞ்சமா ஸ்டெடி பண்ண முடியாமல் ஏன் மேலே சாஞ்சிட்டே இருந்தான்.

என்ன சாக்கடையை குடிச்சி இருந்தானோ... தெரியலை... செமை நாத்தம். எனக்கு குடலை புரட்டுது.

"யோவ்... நேரே நில்லுயா, ஏன்யா... எம்மேலே சாயிறே..." ன்னேன்.

பக்கத்தில் இருந்த சிலர்... "ஸார், அவரு குடிச்சு இருக்கார்ங்க... விடுங்க" என்றனர்.

"அது எனக்கும் தெரியும்ங்க. அதனாலேத்தான் எனக்கு இவ்ளோ கடுப்பு. குடிச்சு இருந்தா என்ன வேணாலும் செய்யலாமா..? அடுத்தவருக்கு சிரமம் தரலாமா..? அதை நான் கண்டுக்க கூடாதா..?"ன்னு நான் கேட்க...

"குடிச்சவருக்கு எப்படிங்க தெரியும்... சாயிறதும், சிரமம் தருவதும்..? இது கூட புரிஞ்சிக்க முடியாதா.." என்றார் ஒருத்தர்..!

"அடுத்தவர்க்கு இப்டில்லாம் சிரமம் தருவோம் போதையில் என்று தெரியாதா இவனுக்கு..? எதுக்கு குடிச்சிட்டு பொது இடத்துக்கு வாரான்..? எதுக்கு பஸ்சில் ஏறுறான்..?" என்றேன்..!

"தம்பி உங்களை விட வயசில் கூடிய ஆளு மாதிரி தெரியுது. மரியாதையா பேசலாமே..?" என்றார்..!

"போதையில் இருப்பவனுக்கு  "ங்க" "ஸார்" "அவர்களே" என்றெல்லாம் நான் மரியாதை தருவதில்லைங்க ஸார். ஏனெனில், அவனுக்கு நாம் மரியாதை தருவதும் தராததெல்லாம் தெரியவோ புரியவோ போவதில்லையே..!" என்றேன்.

அப்போது, நின்னுட்டு இருந்த ஒருத்தர், "பாவம், நிறைய குடிச்சிருக்கார் போல...போதையில் நிக்க சிரம படுறார் ஸார், அவருக்கு உட்கார நீங்க சீட் தாங்களேன்" என்று என்னிடம் சொன்னவுடன்தான் எனக்கு செமை கடுப்பாயிருச்சு...

"ஹலோ... என்னங்க பேசறீங்க..? நீங்க இதே மாதிரி தூத்துக்குடியில் முந்திய பஸ்சில் கடைசி ரோ சீட் மட்டுமே இருந்ததால்... அதை விட்டுட்டு... அடுத்த பஸ்சில் மதுரைக்கு த்ரூ டிக்கட் வாங்கி சீட் புடிச்சு... என் இடத்திலே நீங்க இருந்தா... இங்கே நீங்க உட்கார்ந்து இருந்தா... அப்போ இப்படி இவன் உங்க மேலே சாஞ்சா... உடனே எந்திரிச்சு குடி காரனுக்கு இடம் தருவீங்களா..? கொஞ்சம் நியாயமா சிந்திங்க ஸார். அந்தாளை என்மேலே சாய வேணாம்னு சொல்லுங்க... கீழே தரையில் உட்கார சொல்லுங்க... அதை விட்டுட்டு... நீதின்னா என்னன்னு கூட தெரியாதவங்க எல்லாம் பேசாதிங்க..."ன்னு கத்தினேன்.

"ஹல்லோ... என்ன்ன இங்கே கலாட்டா... சண்டை போடுறவங்க எல்லாம் பஸ்ஸை விட்டு இறங்கிடுங்க(?!)..."ன்னு சொல்லிட்டே கண்டக்டர் 'நாட்டாமை' வந்தார்...

"ஆமா ஸார், இவன் கலாட்டா பண்றான்... இவன் குடிச்சுட்டு பஸ்சில் ஏறி இருக்கான், இவனாலே ஸ்டடியா நிக்க முடியலை. அப்டியே என் மேலே சரியறான். ஐ டோன்ட் லைக் இட். இவன நேர நிக்க சொல்லிட்டு இருக்கேன். இல்லேல்லேன்னா கிழே உட்காரலாம்னு சொன்னேன்"

"ஸார்... பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க... இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் போயி இப்டி கத்தி கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்களே... கால் மணி நேரம் பொறுங்க... பந்தல் குடியில் இறங்கிருவான்... அதுவரை அட்ஜஸ்ட் பண்ணுங்க" என்று எனக்கு அறிவுரை கூறியது பிரச்சினை இல்ல... கலாட்டாவ நான் பன்றேனாம்...! அடப்பாவமே..!

"என்ன ஸார், நீங்களுமா இப்படி..? குடிகாரனை எல்லாம் பஸ்சில் ஏத்தி அடுத்தவருக்கு இடைஞ்சல் தாறீங்களே... எனது பிரச்சினைக்கு நீங்களும் தான் காரணம்..."ன்னேன்.

கண்டக்டர், "இதோ பாருங்க ஸார்... ஒவ்வொருத்தர் வாயையும் ஊத சொல்லிலாம் டிக்கர் போட்டு வண்டியிலே ஏத்த சொல்லி எந்த சட்டமும் இல்லே. நீங்க இப்டில்லாம் சின்ன விஷயத்துக்கு கத்தி கலாட்டா பண்ணினால் உங்களைத்தான் நான் வண்டிய விட்டு இறக்கி  விட வேண்டி இருக்கும்"...ன்னார்.

'தனது உரிமையை கேட்பது எல்லாம் கலாட்டாவா..? என்னய்யா இது அநீதி..? இப்போ சும்மா ஒரு பேச்சுக்கு... சப்போஸ், நானும் குடிச்சிட்டு இவனை எதிர்த்து தொடர்ந்து எனது உரிமைக்காக இதையே பேசினால், அப்போது இவர்கள் எல்லாம் யார் பக்கம் நியாயம் பேசுவார்கள்..? யார் அதிகமாக குடித்தாரோ அவன் பக்கமா..? என்ன மாதிரியான புரிதலில் உள்ளார்கள் இவர்கள்..?' ... என்றெல்லாம் சிந்தித்தவனாக...

"குடி காரர்களை முதல்ல... நீங்க பஸ்ல ஏத்தலாம்ன்னு ரூல்ஸ் இருக்கா ஸார்..?"ன்னேன்.

"வண்டிய... நேரா பந்தல் குடி சாப்பாட்டு கடைக்குள் விடவா... இல்லே, அதுக்கு எதிர்த்தாப்ல இருக்குற போலிஸ் ஸ்டேஷன்க்குள்ளே விடவா..? நீங்களும்தான் கம்பளைன்ட் கொடுங்களேன்... பார்த்துருவோம்..."ன்னார் என்னிடம் கண்டக்டர்.

'ஆஹா... ரூட்டு மாறுதே...  அடங்கி போயிடலாமா'ன்னு நான் யோசிச்சிட்டு இருக்கும்போது...

"தம்பி, இதுக்கு போயி நீங்க இவ்ளோ கோபப்படலாமா..? படிச்ச புள்ளை மாதிரி பண்போட நடந்துக்கங்க தம்பி.... பத்து நிமிஷம் அட்ஜஸ்ட் பண்றதாலே உங்களுக்கு அப்படி என்ன இழப்பு வந்துட போவுது...?"ன்னார் எனக்கு முந்திய சீட்டில் ஜன்னலோரம் உக்கார்ந்து இருந்த ஒரு பெரியவர்.

உடனே... நான்,  "ஐயா, பெரியவரே... நான் பண்பாளர் இல்லைன்னும் நீங்கதான் பண்பாளர்ன்னும்  ஒப்புக்கொள்வேன். எப்போன்னா... உங்க ஜன்னல் சீட்டை எனக்கு நீங்க தந்துட்டு, நடை ஓரமா உள்ள என் சீட்டில் நீங்க உட்காந்தால்..! அங்கே பாருங்க... குறள் எழுதி போட்டு இருக்காங்க... "சொல்லுதல் யார்க்கும் எளியவாம்"ன்னு... சொல்லிய வண்ணம் இங்கே உட்கார்ந்து செஞ்சு காட்டுங்களேன் பார்ப்போம்.. அப்போதானே... நான் மத்தவங்க மட்டுமில்லாம நீங்களும் உங்க பண்பை 'எப்படி?'ன்னு தெரிஞ்சிக்க முடியும்..."  ன்னேன்.

முதன் முறையா ஒருத்தர் சப்போர்ட்டுக்கு வந்தார்...  "ஆமா.... அவரு சொல்றதுலேயும்  நியாயம் இருக்கு. அவங்கவங்களுக்கு வந்தாதான் தலைவலியும்... பல்வலியும்... புரியும்"ன்னார்.

"இதுபோல அப்பப்போ நீதிக்கு ஆதரவா குரல் கொடுப்போரை, நான் நன்றி கூறி வரவேற்கிறேன். இவரு மாதிரி எல்லாரும் இருந்தால்... அநீதி நிலவாது"ன்னேன்.

அப்போ... மறுபடியும் இன்னும் நல்லா சரிஞ்சான் குடிகாரன் என்மேலே...

"டேய்... நேரா நில்ரா... தள்ளி போடா... இனி நீ எம்மேலே சாஞ்சா கைதான்டா பேசும்.." ன்னேன்.

அந்த "பண்பா நடக்க சொன்ன பெரியவர்" வெள்ளை வேஷ்டி.. வெள்ளை சட்டை சகிதம் எந்திரிச்சு வந்து... என்னை அவரு சீட்டுக்கு போக சொல்லிட்டுஎன் சீட்டில் உக்கார்ந்து... 

"இந்த கால புள்ளைங்களுக்கு நாமதான் முன்னுதாரணமா நடந்து காட்ட வேண்டி இருக்கு"ன்னு சொன்னார்.

எல்லாரும் அவரை "பெரியவங்க பெரியவங்க தான்" என்று பாராட்டி... "தம்பி... இவரு மாதிரி நடக்க பாருங்க"ன்னு ஒருத்தர் எனக்கு அறிவுரை சொல்ல...

"அப்பாடா பிரச்சினை முடிஞ்சதுப்பா..."ன்னு ஒருவரும்...

"சின்ன மேட்டரை எல்லாம் எவ்ளோ பெரிசா ஆகுறாங்க பாருங்க... என்னத்த படிச்சு என்னாத்த..."ன்னு ஒருவரும்...

இப்படி ஆளாளுக்கு ஒன்றை இப்படி முனக...

அவரின் ஜன்னலோரம் சீட்டில் உக்கார்ந்துவிட்டு அவரை திரும்பி பார்த்து "நீங்கதான் பண்பாளர் ஐயா, நன்றி, கோவமா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க.."ன்னு சொன்னேன்.

அப்போ... அந்த குடிகாரன் ஏனோ சாயாமல் நேரே நின்றான். அதிசயமா இருந்தது.

'பார்த்தியா... எனது பண்புக்கு குடிகாரன் தரும் ரெஸ்பெக்ட்ஐ' என்பது போல் ஒரு கெத்தான பார்வை பார்த்தார் பெரியவர் என்னை.

வண்டி பந்தல் குடியை நெருங்கியது. இன்னும் அஞ்சாறு கிலோ மீட்டர் இருக்கலாம். அவன் அங்கேதான் இறங்க வேண்டும்.

அப்போது தான்....

அந்த படு பயங்கர கோர விபத்து நடந்தது..!

அந்த
நின்னுட்டு இருந்த
குடிகாரன்....
உட்காந்து இருந்த
அந்த பெரியவரின்
படிய சீவி எண்ணெய் மினுமினுக்கும் 
தலை மீது....
மட மடன்னு
வாந்தி எடுத்தான்.

பாவம் பெரியவர் வெள்ளை உடை எல்லாம்...
அசிங்கமான கலரில்... கரை கரையாக....
ஐய்ய்யே... இப்போ பஸ்சு பூரா சாக்கடை மாதிரி   செமை நாத்தம்..!

"குடிகாரங்களை எல்லாம் பஸ்சில் ஏத்தறது தப்புப்பா..." என்று சில மக்கள் முணுமுணுக்க...

கண்டக்டர்... விசில் ஊதி பஸ்ஸை நிறுத்தி "ஏண்டா குடிச்சிட்டு வந்து எங்க பிரானனையை வாங்குறீங்க" என்று திட்டி அந்த குடிகாரனை நெட்டித்தள்ளி பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட...

ட்ரைவர்...
அந்த பக்கமா இறங்கி வந்து இந்த பக்கமா பஸ்சில் ஏறி,  ரெண்டு லிட்டர் பெப்சி பாட்டிலில் உள்ள குடி தண்ணீரை தந்து அந்த பெரியவரை கீழே இறங்கி... பஸ்சின் முன்பக்கம் ஹெட் லைட் வெளிச்சத்துக்கு போக சொல்லி சட்டை வேஷ்டி எல்லாம் கழட்டி வாந்தியை கழுவ சொல்ல...

கண்டக்டர்...
இருட்டில் டார்ச் அடிச்சு ரோட்டோரம் கிடந்த மண்ணை தேடி... யாரோ வச்சி இருந்த நியூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டி ஏழெட்டு தடவை ஏறி இறங்கி அள்ளி வந்து பஸ் சீட் மற்றும் கீழே வாந்தி மீது கொட்டி அதை... குமிச்சு... நியூஸ் பேப்பரில் அள்ளிட்டு போயி... வியர்க்க விருவிருக்க வெளியே கொட்டிட்டு இருக்கும் போது... என்னிடம் குடிகாரனுக்கு சப்போர்ட்டாக அறிவுரை கூறிய... இருவரை மண்ணள்ளி போட கொஞ்சம் அவருக்கு ஒத்தாசைக்கு கூப்பிட்டார். அவர்கள்... அதை காதில் வாங்காதது போல வேறுபுறம் திரும்பி கொண்டனர்..!

அஞ்சு நிமிஷத்தில் அடுத்த PP இல்லாத சாதா பஸ் எங்கள் பஸ்ஐ ஓவர் டேக் பண்ணி சென்று விட....

ஈரமும் நாத்தமும் அழுக்குமாக வந்த அந்த வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை "பண்பாளர்" பெரியவர் என்னை பார்த்து... தாம் செய்தது தப்பு என்பது போல... தலை குனிந்து கொண்டார்.

பலருக்கு பல விஷயம் புரிந்தது அப்போது. குடிகாரன் மூலம் இப்படியும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்கள் என்பதை அவர்களின் செய்கைகளில் அறிந்தேன். நான் அதை எதிர்க்காமல் இருந்திருந்தால்... இப்போது நான் தான் கஷ்டப்பட்டிருக்க வேண்டி இருக்கும் என்பதையும்... குடிகாரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கண்டக்டர் பெரியவர் இருவருக்கும் சிரமமும் அவமானமும் ஏற்பட்டத்தை உணர்ந்தனர்.

அதன்பிறகு மதுரை வரை எவரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. நானும் அதுக்கப்புறம் ஒரு வார்த்தையும் பேச அவசியமும் ஏற்படவில்லை.

ஆக, இப்பதிவில்... நான் வைக்கும் கோரிக்கை எல்லாம் இவைதான் சகோஸ்...!

மாற்றுத்திறனாளிகள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் பரிவோடு அட்ஜஸ்ட் பண்ணி அன்போடு உதவி செய்து நடந்து கொள்வது போல... தயவு செய்து குடிகாரர்கள் விஷயத்தில் பரிவோ அன்போ காட்டவே காட்டாதீர்கள்..!  

ஒரு விபத்து ஏற்படுகிறது. அங்கே ஓட்டுனர் குடித்து இருந்தால், அவரை ஒன்றுமே சொல்வதில்லை நாம். ஆனால், அதுவே... குடிக்காதவர் கவனக்குறைவு காரணம் என்றால்... மொத்த கூட்டமும் சேர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுக்கிறோம்.

அதேபோல... ஒருவர் குடித்து விட்டு ரோட்டில் நடந்துவந்தால்... ஒதுக்கி ஓட்டுகிறோம். ஆனால்... அதுவே, குடிக்காத ஒருவர் ஏதோ சிந்தனையில் தவறான கவனத்தில் குறுக்கே வந்து விட்டால்... "சாவுகிராக்கி, என் வண்டியாடா கிடைச்சுது..." என்பதில் ஆரம்பித்து... கீழே இறங்கி அடி பின்னி டின் கட்டி விடுகிறோம்.

குடிக்காமல் இருந்தால்தான் தவறா..? குடித்திருந்தால் மன்னிப்பா..?
 
அடுத்து, எக்காரணமும் கொண்டும், தயவு செய்து குடிகாரர்களுக்கு சார்பாக குடிக்காதவர்களுக்கு எதிராக மட்டும் என்றைக்குமே பரிந்துரை செய்து கொண்டு எந்த இடத்திலும் எப்போதுமே வராதீர்கள் எவரும்..! அப்படி வந்தால்... தண்டனை உங்களுக்கே அவர்கள் மூலமாக கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் உணருங்கள்..!  
 
மேலும், குடிகாரர்களை சமூகத்தில் இருந்து புறக்கணித்து தனிமைப்படுத்தி அப்புறப்படுத்த முயலுங்கள். அது முடியாவிட்டால்... முடிந்த வரை நீங்களாவது தூரமாக விலகி சென்று விடுங்கள்..! அது உங்களுக்கு நல்லது என்பதையும் இந்த பதிவின் மூலம் உணருங்கள்..!  
 
தமிழர்களே..! குடியை புறக்கணியுங்கள்..!   இல்லாவிட்டால், நாளை குடிக்கவோ அதை ஜீரணிக்கும் உடல்நிலை உள்ள மனிதர்களோ இருக்க மாட்டார்கள். அப்படியே சொற்பமாக இருந்தாலும் அவர்களிடம் சரக்கு வாங்க பணம் இருக்காது. ஏனெனில், நாட்டில் வளமான பொருளாதாரம் இருக்காது. ஏனெனில், நாட்டில் ஏகப்பட்டோருக்கு வேலை இருக்காது. ஏனெனில், நாட்டில் தொழில் வளமே இருக்காது. ஏனெனில், எவரிடமும் கல்வியோ உடல் பலமோ இருக்காது. ஏனெனில், பள்ளியில் குடித்து விட்டு போதையில் கல்வி கற்பிக்கவோ கற்கவோ இயலாது..! இப்படியாக... குடி... நம்மை மனிதவளம் இல்லாத நாடாக மாற்றிவிடும்..!     
 
இன்னும், போதையுடன் குடித்து விட்டு பொதுவெளியில் உலா வருவது பிறரின் மனித உரிமைக்கு எதிரானது..! பூட்டிய தனி அறையில் நீங்கள் குடிப்பது உங்கள் தனி மனித உரிமை என்றாலும்... ஓர் அவசர ஆபத்து சூழலில், போதையில் இருக்கும் உங்களின் உதவி உங்கள்  குடும்பத்துக்கும் உறவினர்க்கும் நண்பர்களுக்கும் நாட்டுக்கும் பயன்படாமல், நீங்கள் அதுசமயம் உபயோகப்படுவோராக இல்லாமல், உயிரோடு இருந்தும் பகுதி நேர பிணம் என்றாகிப்போகிறீர்கள் என்பதை உணருங்கள்..!    
 
    
ஆகவே தமிழர்களே...! எதிர்காலத்தில், இலவசமாக வீட்டுக்கே கொண்டு வந்து உங்கள் வாயில் ஊற்றினாலும் குடியை புறக்கணியுங்கள்..! அதனால்... உங்களுக்கும் நாட்டுக்கும் மட்டுமின்றி... குடிக்காத மற்ற அனைவருக்குமே கேடு..! 

10 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...