அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, June 6, 2013

9 @ Co-Education Girls : அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை..?


இப்போதெல்லாம்... ஊடகங்களில் அடிக்கடி தென்படும்  கெட்ட செய்திகள்... 'மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியன் கைது', 
'மாணவனோடு கள்ளகுடித்தனம் நடத்திய ஆசிரியை சஸ்பென்ட்', 
'மாணவி கர்ப்பம், ஆசிரியன் தலைமறைவு', 
'மாணவனோடு ஆசிரியை ஓட்டம்'... ... ...இப்படி..!  

கல்வி கற்கும் ஓர் உயர்ந்த இடத்தில், கற்பிக்கும் ஆசிரியப்பணி எனும் ஓர் உன்னத தொழிலில்... எப்படி இப்படி இவர்களால் கலவிக்கும் இடம் தர முடிகிறது..? 

அதற்கு பற்பல காரணிகள் உள்ளன. பொதுவாக வகுப்பை ஜனரஞ்சகமாக கொண்டு செல்லவும், மாணவர்களை தம்மை கவனிக்க வைக்கவும் சில சமயம் ஏ ஜோக்குகளை சொல்லும் ஒரிரு இளம் மற்றும் முதிய ஆசிரியன்களை 90 களின் ஆரம்பத்தில், எனது பள்ளிக்கூட நாட்களிலே  எனது மேல்நிலை வகுப்பிலேயே கூட நான் பார்த்தது உண்டு. கல்லூரியில் அந்த ஆசிரியன்களின் எண்ணிக்கை சற்று கூடியது என்னவோ கசப்பான உண்மைதான்..! 

உள்ளூர் கல்லூரி படிப்புக்கு பிறகு சென்னையில் ஒரு மத்திய கல்வி நிறுவனத்தில் உயர்கல்விக்காக நான் பயின்ற போது... அதில் ஓர் ஆசிரியை, போர்டில் எழுதுவது அழிப்பது எல்லாம் இடது கை பழக்கம் உள்ளவர், பாடத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் மிகவும் மோசமாக புடவை அணிந்திருப்பார். நல்லவேளை... இறையருளால் அப்போது எனக்கு வேலை கிடைத்து விட்டதால்... 2 மாதத்திலேயே அங்கிருந்து டிசி வாங்கி தப்பிவிட்டேன்..!

அப்போதே அப்படி என்றால்... இப்போது..?

அன்று குடும்பத்துடன் பார்க்க முடியாமல்  புறக்கணிக்கப்பட்ட பாலியல் வசனங்களும் காட்சிகளும் கொண்ட சினிமா, இன்று அதை விட மோசமான ரூபத்தில் எல்லாம் குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து டிவியில் பார்க்க வைக்கப்படுகிறது.

இன்று... குடும்ப பத்திரிகை என்ற தலைப்புடன் வெகுஜன வார மாத சஞ்சிகைகளில் வரும் புகைப்படங்கள், கதைகள், ஜோக்குகள் எல்லாம் கருப்பு சந்தையில் விற்கப்படும் மஞ்சள் பத்திரிகைகளோடு போட்டி போடுகின்றன.


இதன்  தாக்கம்... அக்காலத்தில் பல தமிழ் நடிகைகளே அணிய வெட்கப்பட்டு மறுத்த குட்டைப்பாவாடைகளை இன்று பல உயர்/மேல் நிலை கான்வென்ட் பள்ளிகளில் மாணவிகளுக்கு அதிகாரபூர்வ சீறுடையாகவே வைத்து இருப்பதையும் நாம் அவதானிக்க முடிகிறது.


ஒரு காலத்தில் கை & கால் முட்டி தாண்டி வளர்ந்திருந்த நல்லதொரு கண்ணியமான உடையான  சுடிதார் / சல்வார் கமீஸ் ஆகியன, நாளடைவில் தொடை அளவில் குட்டையாகி, பின்னர் முக்கால் கையும் அரைக்கையாகி இன்று சால்வையும் கையும் கூட மெல்ல மெல்ல காணாமல் போனது போலவே... மாணவிகளுக்கு முழுக்கை வைத்த உள் சட்டையின் கழுத்துபட்டனும் டையும் கூட இப்போதெல்லாம் ஓவர்க்கோட்டுடன் சேர்ந்து மெல்ல மெல்ல காணாமல் போய்க்கொண்டுள்ளன..!

ஆனால்... அதேநேரம், மாணவன்களுக்கு மட்டும் அப்போது முதல் ஏதும் மாறாமல்... உள் சட்டை கழுத்துபட்டன்-டை முதல் கணுக்கால் வரை ஃபுல் கவர் போட்டும் பத்தாது என்று மேலே தடித்த முழுக்கை வைத்த ஓவர் கோட் வேறு போட  சொல்கிறார்கள்..! 

இப்படியாக... இன்றைய சட்டக்கட்டுப்பாடற்ற கைபேசி - இணைய காலத்தில்... மேற்படி ஆபாசங்களின் எண்ணிக்கை எவ்வித வரையறைகளும் இன்றி இன்று www dot, e-mail, f, g+, SMS, MMS, MP3, MP4, USB, SD card என்று பல்வேறு பரிணாமம் பெற்று இன்னும் வீரியமாக விருட்சமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன என்பதை எவரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். 

நான் படிக்கும் காலத்தில், ஆசிரிய-மாணவ சமுதாயத்தை தலைகுனிய வைக்கும்படியான பதிவின் ஆரம்பத்தில் வந்தது போன்ற செய்தி ஈராண்டுக்கு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை கேள்விப்பட்டதுண்டு. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் அடிக்கடி கேள்விப்படுகிறோம்..!

தனி மனித ஒழுக்கமின்மை அரசின் கையை மீறி சென்று கொண்டிருக்கும் இந்நிலையில்தான்... சிலநாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை ஒன்று, மகிழ்வுடன் அதிக வரவேற்போ... சினத்துடன் எவ்வித எதிர்ப்போ  இல்லாமல்... வேறு வழியே இன்றி (?!) அமைதியாக ஏற்கப்பட்டது.

அது இதுதான்..!

"மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதை தடுக்கும் வகையில், இனிமேல்... பெண்கள் பள்ளிகளில் 'பெண் ஆசிரியர்கள் (ஆசிரியைகள்) மட்டுமே' பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும், இதேபோல... ஆண்கள் பள்ளியில் 'ஆண் ஆசிரியர்களை மட்டுமே' நியமிக்க வேண்டும்" என்றும்  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதில் இருந்து என்ன புரிந்து கொள்கிறோம்..?

மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளியில் ஆசிரியன் மூலம் மாணவிக்கும் (அல்லது சில சமயம் மாணவி மூலம் ஆசிரியனுக்கும்)
மாணவன்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் மாணவன் மூலம் ஆசிரியைக்கும் (அல்லது சில சமயம் ஆசிரியை மூலம் மாணவனுக்கும்)
கற்பித்தலில் அல்லது கற்பதில் கட்டுப்பாடற்ற உடையினால் பாலியல் கவன ஈர்ப்புகள், பாலியல் பேச்சுகள், பாலியல் செய்கைகள் என்று இதுபோன்ற நேரடி மற்றும் மறைமுக பாலியல் தொல்லைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் ஏற்பட காரணமாக இருந்த - இருக்கும் இரண்டு வழிகளை இந்த அரசாணை மூடி சீல் வைத்து இருக்கிறது. 

இது நல்ல விஷயம்தானே..? மக்கள் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசாணையை வெளியிட்ட அரசை பாராட்டியாக வேண்டும்தானே..? ஆம்..!

'தம் பிள்ளைகளுக்கு பள்ளியில் பாலியல் தொல்லைகள் ஏற்படும் சூழல் இருக்கவேக்கூடாது' என்றெண்ணும் ஒவ்வோர் பெற்றோரும் மாணவர்களும் சொல்வார்கள்... "சபாஷ்..! சரியான யோசனை..! அரசின் நல்லதொரு இம்முடிவுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறுகிறேன்" என்று..! பெற்றோர் அணியில், எனது நிலைப்பாடும் இதுவே.

எனவேதான்... இதுபோன்ற தனிமனித ஒழுக்க பேணுதல்களை முன்னுரைக்கும் இஸ்லாமை பின்பற்றி, பொதுவாக சமூக இணையதளங்களில் பாலியல் விஷயங்களில் தனி மனித ஒழுக்கத்தை மிக அதிகம் பேணும் முஸ்லிம்கள் மத்தியில் இந்த அரசாணை வெகுவாக வரவேற்பு பெற்றதை  பரவலாக எவரும் கண்டிருக்கலாம்..!

ஆனால்... அதே அரசாணையில், நெருடலான மற்றும் விடை இல்லாத முரண்பாடான அம்சங்களும் உள்ளன..!

அதாவது... அதே நேரத்தில்... இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!

இதில் இருந்து என்ன புரிந்து கொள்கிறோம்..?

ஆசிரியைகளுக்கான பணிநியமன முன்னுரிமை தொடரும் பட்சத்தில்... போகப்போக இருபாலர் படிக்கும் பள்ளிகளிலும் ஆசிரியைகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்..! 

அப்படியானால்... 'இருபாலர் படிக்கும் பள்ளிகளில் மாணவன் மூலம் ஆசிரியைக்கோ... ஆசிரியை மூலம் மாணவனுக்கோ... பாலியல் தொந்தரவு இல்லை' என்று அரசு எண்ணுகிறதா..? 'ஆம்' எனில், அரசின் இந்த புரிதல் முன்னதற்கு முரண்பாடல்லவா..?

இதெல்லாம் விட இன்னொரு மிக முக்கிய முரண்பாடு ஒன்றுள்ளது.

ஏற்கனவே... பாலியல் ரீதியாக செமத்தியாக குட்டுப்பட்டு அடிவாங்கிய பின்னர், எல்லாம் தெளிந்து அனுபவ புத்தி பயின்று 'பாலியல் சேற்றிலிருந்து கரையேறி' இதற்கென்று அரசாணை பிறப்பிக்கும் நிலையில் கூட... மேல்நிலை-உயர்நிலை பள்ளிகளில் மீண்டும்... எதற்கு 'கோ-எஜுகேஷன் எனும் இன்னொரு பாலியல் சேற்றில் ஒரு காலை இன்னமும் வைத்திருக்கிறது' இந்த அரசு..??? 

அதாவது... இருபாலர் படிக்கும் பள்ளியில்... மாணவன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை வரவே வராதா..? இதற்கு என்ன செய்து இருக்கிறது அரசு..? "இருபாலர் படிக்கும் பள்ளியில் ஆசிரியைகளை முன்னுரிமை தந்து பணிநியமனம் செய்தால்... மாணவிகள் பாலியல் தொல்லையில் இருந்து தப்புவார்கள்" என்று எண்ணும் அரசு... அதே இருபாலர் பள்ளியில் சக மாணவனின் பாலியல் தொல்லையில் இருந்து சக மாணவியை தப்புவிக்க என்ன நடவடிக்கயை எடுத்தது அரசு..? 'ஒரு பாலர் மட்டும்' படிக்கும் பள்ளியில் அவ்வளவு அக்கறையோடு கரிசனையாக அரசாணை பிறப்பித்து மாணவ மாணவியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முயலும் ஒரு நல்ல அரசு... 'இருபாலர்' படிக்கும் பள்ளியிலும் அதேபோல பாதுகாப்பு நடவடிக்கை பற்றி முழுமையாக ஏன் யோசிக்கவே இல்லை..? 

"பெண்கள் உயர்/ மேல்நிலைப்பள்ளி'க்கு பெற்றோர்கள் தங்கள் மகளை எதற்கு அனுப்புகிறார்கள்..? 

மகளின் பாதுகாப்புக்காக வேண்டித்தான்..! 

ஆனால்..... அந்த நோக்கத்தை 'ஆசிரியன்'கள் உடைக்கிறார்கள்" என்று அரசு புரிந்து கொண்டது. சரியான புரிதல்..! அதனால்... மகள்களை காப்பாற்ற அங்கே ஆசிரியன்களை நீக்கி சரியான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

"ஆண்கள் உயர்/ மேல்நிலைப்பள்ளி'க்கு பெற்றோர்கள் தங்கள் மகனை எதற்கு அனுப்புகிறார்கள்..?

மகனின் கற்பொழுக்கம் வேண்டித்தான்..! 

ஆனால்..... அந்த நோக்கத்தை 'ஆசிரியை'கள் உடைக்கிறார்கள்" என்று அரசு புரிந்து கொண்டது. சரியான புரிதல்..! அதனால்... மகன்களையும் ஆசிரியையும் காப்பாற்ற அங்கே ஆசிரியைகளை நீக்கி சரியான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

இதே புரிதலில்..... 

'ஆசிரியர்-மாணவர்' விவகாரமே கற்பொழுக்கம் தவறும் கைமீறிய நிலையில் உள்ளபோது... கோ-எஜுகேஷனில் 'மாணவன்-மாணவி' விவகாரம் மட்டும் எப்படி கற்பொழுக்க நன்னெறியில் நடக்கும் என்று அரசு நம்புகிறது..?  

இன்னும்... "கோ-எஜுகேஷனில் 'மாணவன் -ஆசிரியை' விவகாரத்தில் எவ்வித பாலியல் தொல்லையும் ஏற்படாது" என்று ஆண்கள் பள்ளி விவகாரத்துக்கு முரணாக அரசு எப்படி நம்புகிறது..?

எனில்... இது மேலே உள்ள அரசின் அரசாணையின் சரியான புரிதலுக்கு முற்றிலும் முரண்பாடான தவறான புரிதல் அல்லவா..?

அல்லது ஒருவேளை.... ''இருபாலரும் சேர்ந்து படிக்கும் உயர்/மேல் நிலை பள்ளிகளில் தனது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள்... தங்களின் பிள்ளைகளின் கற்பொழுக்கத்தை பற்றி கொஞ்சமும் கவலை படாதவர்கள்'' என்று அரசு புரிந்து கொண்டதா..?!?!?!  அல்லது Co-Education பள்ளியில் படிக்கும் மாணவிகள் மீது மட்டும் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறதா..?

என்னைக்கேட்டால்... 'இல்லை... அப்படியெல்லாம் இருக்காது- இருக்க கூடாது' என்றே நான் விரும்புகிறேன்..!

அரசு, இந்த விவகாரத்தில் 'பாதி கிணறு தாண்டி உள்ளது' என்றுதான் நான் எண்ணுகிறேன்..! 

'மீதி கிணறு' என்பது... 'மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதை தடுக்கும் வகையில் இனி இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளிகளுக்கு தடை' ...என்ற எதிர்கால அரசாணையாக அமையலாம்..!

அதை.... நவீன மேற்கத்திய கலாச்சார குழப்பங்களும், அதனால் ஏற்பட்ட சீர்கேடுகளும், அதிலிருந்து மீளும் வழிக்கான நல்லோரின் நல்லொழுக்க தேடலும்... இறைநாடினால் அதிவிரைவில் நிகழ்த்திக்காட்டும் என்றே எதிர்பார்க்கிறேன்..!

அச்சமயம்  நிச்சயமாக அதற்கு 'போலி பெண்ணியவாதிகளிடம்' இருந்து கடும் எதிர்ப்பு வரும்..! போராடி பெற்ற 'லேடிஸ் கியூ', 'மகளிர் காவல் நிலையம்', 'ஃபிமேல் கைனகாலஜிஸ்ட்', 'மகளிர் பேருந்து', ரயிலில் 'லேடீஸ் கம்பார்ட்மென்ட்' போலவே... 'பெண்கள் பள்ளி'யும் 'மகளிர் கல்லூரி'யும் போராடி பெற வேண்டிய பெண்ணுரிமையே..! பள்ளியில் மாணவிகளுக்கு அணிய மறுக்கப்படும் முழு உடையும் கூட போராடி பெற வேண்டிய பெண்ணுரிமையே..!

ஆனால், வக்கிர சிந்தை கொண்ட தீய ஆண்கள், இதை எல்லாம் 'பெண்ணடிமைத்தனம்' என்ற பெயரில் பெண்களிடம் இருந்து வஞ்சகமாக பறித்து, அவர்களை அதற்கு மனதால் இசைய வைத்து, கண்ணால் இலவச இன்பம் அனுபவிக்கிறார்கள்..! இதுதான் 'பக்கா ஆணாதிக்கம்' என்ற உண்மையையாவது  அப்பாவி பெண்கள் இனி அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்..!

9 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...