அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, June 25, 2011

35 புகைப்பிடித்தல் : ஹராமா...ஹலாலா..?

இந்தவாரம் திங்கள் அன்று,  'எதிர்க்குரல்' சகோ. ஆஷிக்  அஹ்மத் மிகச்சிறப்பாக எழுதி வெளியிட்ட 'என் மகள்களின் மூன்று கேள்விகள்' என்ற பதிவில், சகோ.லாரா பூத் சொன்ன //புகைபிடிப்பது ஹராம் இல்லை எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.// என்ற இரண்டாவது கேள்விக்கான பதிலை ஆட்சேபித்து, //சகோ.லாரன் பூத்தின் இப்புரிதல் தவறானது// என்றும், // 'படிப்போர் யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது' என்பதற்காக நீங்களாவது உங்கள் விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கலாம் சகோ. ஆஷிக் அஹமத்.// என்றேனா..?! அவ்ளோதான். நம்ம சகோதரர் உடனடியாக செயல்பட்டு... தன்னுடைய 'விளக்கமாக'  // //புகைபிடிப்பது ஹராம் இல்லை (??) எனினும்// என்று இந்த // (??) // 'குறியீட்டினை' பின்னர் சேர்த்து விட்டார். ஏனோ அது... "சிகரெட் பற்றி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், தெளிவற்ற முடிவே இஸ்லாத்தில் இருப்பது போல உணர்த்துவதாய் எனக்குப்பட்டதால்... அந்த "(??)" குறியீட்டுக்கான மேலதிக விளக்கமாகத்தான் இப்பதிவு, சகோ..!

“சிகரெட், சிகார், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப்புகைத்தலும் ஹராம்!” என்பது இறையச்சம் கொண்ட இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும். அதேநேரம், சில இறையச்சம் அற்ற, புகையிலை கம்பெனிகளின் ஏஜெண்டுகள் போல செயல்பட்டு ஒரு சில போலி உலமாக்கள் வேண்டுமானால் " புகைப்பது ஹராம் அல்ல " என்று ஃபத்வா கொடுத்து இருக்கலாம். இது நிச்சயம், பல இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முற்றிலும் விரோதமானது..! இஸ்லாமிய அடிப்படையில் மனிதனுக்கு எந்த ஒரு தீய பழக்கமும் படைத்த இறைவனாலும் அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஒன்று. ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லிம்களே இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். காரணம், ஒரு பக்கம் 'இது ஹராமா... இல்லையா...? ' என்று ஆலிம்களிடையே தர்க்கம் இருப்பதால்தான்..!

தீயது எல்லாமே ஹராம் :

மனிதர்களுக்கு எது நல்லதோ, அதை நபி(ஸல்) அவர்கள் ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். ஆனால், "புகைத்தல் என்பது ஒரு கெட்டது" என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். 'புகைப்பிடித்தல் நிச்சயமாக உடல் நலத்திற்கு தீங்கானது' என்பதில் 100% அனைவருமே உடன்படுகின்றனர். அதைத்தயாரிப்பவர்கள், விற்பவர்கள், இவ்இரண்டுக்கும் அனுமதிக்கிறவர்கள், அவற்றை வாங்கி புகைப்பவர்கள் உட்பட...!!! 

முஹம்மத் நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது... "அவர், அவர்களுக்கு நன்மையை ஏவித்தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்."(குர்ஆன்- 7:157)  

இந்த வகையிலேயே இது இஸ்லாமிய சட்டத்தில் “ஹராம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது. இருந்தாலும்... இன்னும் பல வகையினை பார்ப்போம்..!
.
தற்கொலை செய்தல் ஹராம் :
.
சரி. உதாரணமாக.... என்னிடம் டெமக்ரான் அல்லது டிக்20 அல்லது ஏதோ ஒரு பூச்சிக்கொல்லி நச்சுமருந்து உள்ளது. அதை, ஒரு மடக்கில் குறைந்தது கால் லிட்டர் குடித்தால்தான் குடித்தவர் இறந்து போவார் என்று ஒரு பேச்சுக்கு  வைத்துக்கொள்வோம். அதில், ஒரு நாளைக்கு ஒரு சொட்டு, அரை சொட்டு என்று காலம் காலமாக குடிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா..? அது ஹலால் ஆகுமா..? ஆகாதல்லாவா..? ஏன்..? "உயிருக்கு கேடுதரும் நச்சுப்பொருள்கள் உண்பது ஹராம்" என்றும், "அப்படி விளங்கி அதை உண்ணுதல் என்பது தற்கொலை" என்றும், "தற்கொலை செய்தால் நரகம்" என்றும் தெளிவாக விளங்கி வைத்திருக்கும் நாம், 'நிச்சயமாக ஒருநாள் உயிருக்கு கேடு தந்தே தீறும்' என்ற சுருட்டு/பீடி/சிகார்/சிகரெட்டை புகைப்பது, நம்மை நாமே சிறிது சிறிதாக கொல்வதற்கு --அதாவது-- தற்கொலைக்கு சமானம்தானே..? இது எப்படி 'ஹராம் இல்லை' என்று முடிவு செய்ய முடியும்..?

"உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்" (குர்ஆன்-4: 25) 

"மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக்கொள்ளாதீர்கள்" (குர்ஆன்-2:195)

ஒரு விஷயத்தில் நன்மையைவிட தீமை அதிகமிருந்தால் அது ஹராம் :

“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்கு பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! ..... ..... நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான்.” (குர்ஆன்-2:219)  

மேற்படி வசனம், சூதாட்டம் மற்றும் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட தீமைகள் அதிகமிருந்தால் அது "ஹராம்" என்று ஆகியிருக்குமானால் தீமைகள் மட்டுமே நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகார்,சுருட்டு,பீடி,சிகரெட்டின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்..!  

( * Known carcinogenic substances = கேன்சர் எனும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் )

பிறருக்குத்தொல்லை தருவதும் ஹராம் :

“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) 

சுவாசிப்பதற்கேற்ற புகைப்பழக்கம் இல்லாத பிறருக்கு உரிமையான தூய காற்றை, தன்னுடைய சிகரெட்/பீடி/சுருட்டு/சிகார் புகையால் ஒரு முஸ்லிம் மாசுபடுத்துவது எங்ஙனம் நீதியாகும்..? இது 'இஸ்லாமிய மனித உரிமை' அடிப்படை சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது அல்லவா..? 

இதன் அடிப்படையில், வீட்டில் இருந்து புகைப்போரால் அவர் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள். வீட்டுக்கு வெளியே பொது இடங்களில் ஒருவர் புகைப்பதால் அவர் மட்டுமின்றி அவர் ஊதித்தள்ளும் புகையால் அருகே இருந்து சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையையும் சேர்ந்தே அது பாதிக்கின்றது. 

துர்நாற்றம்  மூலம் பிறருக்கு சிரமம் ஏற்படுத்துவது கூட ஹராம் :

எத்தனையோ பேருக்கு துர்நாற்றம் பிடிக்காது. இந்த புகை பலருக்கு துர்நாற்றம். புகைக்கும் கணவன் வாயிலிருந்து அவை வந்தாலும் அது மனைவிக்கு துர்நாற்றமே. இதே துர்நாற்றத்துடன் மனைவியை முத்தமிட்டு கொஞ்சுவதோ, குழந்தைக்கு வாஞ்சையுடன் முத்தம் இடுவதோ... எப்படி சரியாகும்..? இதுகூட, அடுத்தவரை அவருக்கு விருப்பமின்றி தன் பலத்தால் கட்டாயப்படுத்துவது அல்லவா..? இதற்கும் இஸ்லாத்தில் அனுமதியுண்டா..?

உதாரணமாக, வெங்காயம் மற்றும் பூண்டு இவையிரண்டும் சிறந்த மருத்துவ குணங்கொண்ட நல்ல உணவுவகையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் தடுக்க வில்லை. ஆனால், வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றை பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் மஸ்ஜிதுக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)  எதற்கு..? இவற்றை பச்சையாக சாப்பிட்டவர் வாயில் வாடை இருக்கும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு இடையூறாக இருக்கலாம். அனுமதிக்கப்பட்ட நல்ல உணவான வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டுக்கே இஸ்லாத்தில் இந்த கதி என்றால்... புகைப்பவர் வாயில் பல்துலக்கினாலும் குடியிருக்கும் துர்வாடை கொண்ட சிகரெட்டின் நிலை என்னவென்று இருக்கும் என நிதானமாக சிந்தியுங்கள் சகோ..! 

போதையை ஏற்படுத்துவதெல்லாமே ஹராம் :

சிகரெட் புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. அதில் மெத்தைல் ஆல்கஹால் மற்றும் நிகோடின் எல்லாம் புகைகிறது. கோகைன் ஹிராயின் அபின் போன்ற ஏனைய போதைவஸ்துக்களை பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்கு போதை ஏற்படாத போதும், புகையிலையில் உள்ள நிகோடின் அளவு மூலம் மிகக்குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். ‘குறைந்தளவு போதையை ஏற்படுத்தக்கூடியதும் ஹராமானது’ என்பது நபிமொழி என்பதால்... புகையிலை(யால் செய்யப்பட்ட சிகரெட், பீடி, சுருட்டு) புகைத்தல்  எல்லாமே எளிதாக ஹராம் என்றாகி விடுகிறது.

சிகரெட் / புகையிலை அதிகமாக உட்கொண்டால்தான் போதை தரும் எனில்... அதில் போதை தராத அளவுக்கு குறைவாக உட்கொண்டாலும் அது ஹராம்தான் என்கிறது மார்க்கம். 

(ஒரு வஸ்து பற்றிய கேள்விக்கு) நபி (ஸல்) அவர்கள் "போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் ஆகும்'' என்று பதிலலித்தார்கள். 
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585) 

அதிகமா போதை தரக்கூடியதில் குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)

வீண்விரயம்  செய்வது ஹராம் :

உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றான, புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. வீண்விரயம் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இறைவனும் நேசிப்பதில்லை.
"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (குர்ஆன்-7:31) 

"நிச்சயமாக விரயஞ்செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்". (குர்ஆன்-17:27).
இறைவனின் நேசம் இன்றி... ஷைத்தானின் சகோதரர் ஆகிவிட்டால்... அப்புறம் எங்கே சுவனம்...?

புகை அடிமையாகி இறைக்கடமைகளை புறக்கணித்தல் ஹராம்:

ரமளான் மாதம் வந்துவிட்டால், சிலருக்கு நோன்பு வைக்க முடிவதில்லை. உடல்நலன் ரீதியான & மருத்துவ காரணங்கள் என்றால் விலக்கும் பரிகாரமும் உண்டு. ஆனால், சிலரோ... "தண்ணீர், உணவு அதெல்லாம் இல்லாமல் இருந்து விடலாம்... அதெப்படி...சிகரட் புகைக்காமல் 14 மணிநேரம் இருப்பது..? நான் ஒரு 'செயின் ஸ்மோக்கர்'ங்க... அதனால, நோன்பு வைப்பது கஷ்டம்..!" என்பார்கள். இறைவன் இட்ட கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது ஷைத்தான் அல்லவா..? ஷைத்தானுடனான சகவாசம் இறையச்சம் கொண்டவருக்கு ஹராம் அல்லவா..?

"மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலானதும் சுத்தமானதுமான பண்டங்களையே புசியுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான்". (குர்ஆன் - 2:168)

ஆக, புகைப்பிடித்தல் எனும் இந்த ஷைத்தானை விட்டும் நாம் நமக்கு பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டாமா..?
.

பாதிக்கப்பட்டோரின்  துவா சுவனத்தையே ஹராம் ஆக்கிவிடுமே..?

மேலதிகாரி ஒருவர் செயின் ஸ்மோக்கர். அவர் அறையிலேயே காலமெல்லாம் பணியாற்றும், புகைப்பழக்கமே இல்லாத அவரின் செக்ரட்டரிக்கு ஒருநாள் நுரையீரல் புற்றுநோய்..! அவரை பரிசோதித்த மருத்துவர், "நீங்கள் புகைப்பிடித்ததால் இந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறீர்கள்..!?" என்று சொல்ல... "அடப்பாவி மேனேஜர்..! நீ செத்ததும் இன்றி, புகைப்பிடிக்காத என்னையும் இந்த கதிக்கு ஆளாக்கிட்டேயே..! உன்னை நான் மன்னிக்கப்போவதில்லை..!" என்று இவர் மனம் வெதும்பி, "இறைவா..! நீ அவரை பார்த்துக்கொள்..!" என்கிறார்..!  அந்த மேலாளர், தன் மனதால் கூட பிறருக்கு தீங்கு இழைக்காமல் வாழ்ந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பை பெற முடியாமல் இறந்துவிட்டவரான இவர், அல்லாஹ்வின் மன்னிப்பை பெற முடியுமா..? ஆக, இப்படிப்பட்ட பாதிக்கப்பட்டோரின் துவா அவரை சுவனம் செல்லாமல் தடுத்து விடக்கூடுமே..?

"அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).


அநீதி இழைக்கப்பட்டவரின் பக்கம் அல்லாஹ் இருப்பதோடு, அநீதி இழைத்தவர்களுக்கு எதிராகவும் இருப்பான் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். தனக்கு பாவம் செய்தவனை பாதிக்கப்பட்ட அந்த மனிதர் மன்னிக்காதவரை, அவனை அல்லாஹ் மன்னிப்பதில்லையே..?
 
எனவே, (புகைக்கும்) சகோதரர்களே..! 

"புகைத்தலை பகைத்தல்" என்பது மார்க்கக்கடமை என்பதை உணர்ந்து "புகைப்பது ஹராம்தான்" என்று இனியாவது உறுதியான முடிவை எடுங்கள்..! 

புகைப்பிடித்தல் ஹராம்தான் என்று என்று முடிவுக்கு வந்து விட்டால்... 

சிகார்,சிகரெட்,பீடி,சுருட்டு... ஆகிய இவற்றை,
தயாரிக்கவோ... 
விநியோகிக்கவோ... 
விற்கவோ... 
புகைக்கவோ... 
இவற்றையெல்லாம் அனுமதிக்கவோ... 
இவர்களுக்கு எல்லாம்  விளம்பரம் செய்து ஊக்குவிக்கவோ... 
முக்கியமாக, இவர்களுக்கு  ஆதவாக ஃபத்வா கொடுக்கவோ...

..."மெய்யான இறையச்சம்" உடைய எவவரும் முன்வரமாட்டாரே..! ஏனென்றால்... இவை அனைத்துமே ஹராம் என்றாகிவிடுமே..!

***********************************************************************************
"நீங்கள் என்ன ஆலிம் பட்டம் பெற்றவரா... 'புகைப்பது ஹராம் என்று ஃபத்வா வழங்க..?" என்பவர்களுக்காக... ("Smoking is Haram in Islam"--Many FATWAs RELEASED)
***********************************************************************************

.
"மெய்யான இறையச்சம்" வந்தால் ஒருவர் என்ன செய்வார்... என 5 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். கேளுங்கள். (அதாவது... படியுங்கள்.)

.
சவூதிகளில் புகைப்பழக்கம் கொண்டவர்கள் கணிசமாக இருக்கின்றனர். காரணம், 'அது ஹராம் அல்ல என்ற தவறான அந்நாட்டின் ஃபத்வா'..! அதனால் இறக்குமதியும், விற்பனையும், புகைத்தலுக்கு அனுமதியும் சவுதியில் பிச்சிக்கிட்டு போவுது. :(

என்னுடன் பணியாற்றிய சவூதி ஒருவர் இஸ்லாமிய அடிப்படைகளை தம் வாழ்வில் மிகவும் பேணி நடப்பவர். எந்த செயலையும் சத்தமாக "பிஸ்மில்லாஹ்" சொல்லாமல் ஆரம்பிக்கவே மாட்டார்..!

அப்படியானவர், சிகரெட் மூலம் நோய் வந்த பின்னும், பாக்கெட்டில் போட்ட எச்சரிக்கை உண்மையான பின்னரும்... மருத்துவர் விடச்சொல்லி அறிவுருத்தியும் கூட...  தொடர்ந்து சிகரெட் பிடித்துவந்தார்..! எந்நேரமும் அவரிடம் ஒரு சிகரெட் பாக்கெட்டும் லைட்டரும் இருக்கும்.

நாங்கள் இருவரும் ஒரு முறை மஸ்ஜிதுக்குள் தொழ நுழையும் போது தன் சிகரெட் பாக்கட்டை எடுத்து தன் கழட்டிய ஷூவுக்குள் வைத்துவிட்டு பள்ளிக்குள் நுழைந்ததை கவனித்தேன். அது அவ்ளோ கெட்டதாம்.

மற்றொரு சமயம், அவர் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து லைட்டரால் கொளுத்தும் முன்பு கேட்டேன்.

"நீங்கள் எப்போதும் சத்தமாய் சொல்லும் பிஸ்மில்லாஹ் இப்போது எங்கே..?" பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையே... அது ஏன்..!? மறந்து விட்டீர்களா..?"


"மறக்கவில்லை. ஆனால், இதுக்கு போய்..? எப்படி..?"

"ஏன் சொல்ல வில்லைன்னா, அது தவறென்று உங்கள் உள்மனம் சொல்வதாலா..?"

"..... "  (மவுனமாக என்னையே பார்த்தார்)

"எதையுமே பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்கும் நீங்கள், உங்களுக்கு பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க பிடிக்காத ஒரு தவறான செயலை செய்கிறீர்கள். அல்லது பிடித்த சரியான செயல் எனில்... 'பிஸ்மில்லாஹ் சொல்லாமல் ஆரம்பிப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிரானது' என்று நன்கு அறிந்திருந்தும், நீங்கள் ஏன் இதவறை தொடர்ந்து செய்கிறீர்கள்..? ஒண்ணு பிஸ்மில்லாஹ் சொல்லனும்... அல்லது... சிகரெட் பிடிக்க கூடாது... இரண்டில் எதனை ஏற்கப்போகிறீர்கள்..."


அவ்ளோதான்...

உடனே, கையிலிருந்த அந்த சிகரெட்டை அருகே இருந்த குப்பைத்தொட்டியில் எறிந்தார்..! தொடர்ந்து தன் ஆடையினுள்ளே இருந்த சிகரட் பாக்கட்டையும் எடுத்து எறிந்தார்..! லைட்டரை சிறிது யோசித்து விட்டு... கீழே போட்டு ஷூவால் நசுக்கி உடைத்து அதன் எரிபொருளை வெளியாக்கிவிட்டு, உடைந்த துகள்களையும் பொருக்கி குப்பைத்தொட்டியில் மொத்தமாக எறிந்தார்..!

அதன்பின்னர், அவர் சிகரெட் பிடிப்பதை நாங்கள் எவருமே கண்டது இல்லை..! அல்ஹம்துலில்லாஹ்.

***********************************************************************************

35 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...