அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, October 7, 2012

33 சகோ, இது உங்க கம்பெனி கதைதானே..?

ஒரு ஊருலே... ஒரு தொழிற்சாலையாம். அதிலே, ஒவ்வொரு நாளும் விடிகாத்தாலேயே சுறுசுறுப்பா எழுந்து வேலைக்கு வந்து முழுமூச்சா உழைச்சிட்டு இருந்துச்சாம் நிறைய எறும்புகள்.


ஒவ்வொரு நாளின் இறுதியிலும் உற்பத்தி அமோகமா இருந்துச்சாம். இதனாலே... அதுங்க எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருந்ததுகளாம்.


ஒருநாள் இந்த தொழிற்சாலையின் இன்றைய முதலாளி சிங்கம் அங்கே வர, ( இவரு பழைய முதலாளி பெரிய சிங்கத்தின் மகன் சிங்கம். லண்டன், அமெரிக்கால்லாம் போயி பெரிய பெரிய மேல்படிப்பு எல்லாம் படிச்சிட்டு வந்தவரை, கையோடு தன் கம்பெனிக்கு முதலாளி ஆக்கிட்டாரு அவங்க அப்பா சிங்கமான 'படிக்காத மேதை', 'கொடுத்து சிவந்த வள்ளல்', 'உழைப்பாளிகளின் நண்பன்'  பெரிய முதலாளி ) அது என்ன நினைச்சுதுன்னா... கண்காணிப்பே இல்லாம இவ்ளோ அர்பணிப்பா எறும்புக வேலை பாக்குதுகளேன்னு அந்தாளுக்கு அவ்வளோ ஆச்சரியம்


உடனே, அது மண்டையிலே ஒரு அமெரிக்க பல்பு நம்மூரு பவர்கட்டிலும் ஆட்டோவா எரிஞ்சிச்சு. அதாகப்பட்டது... 'கண்காணிப்பு இல்லாமலேயே இவ்ளோ உற்பத்தி வருதுன்னா... ஒரு கண்காணிப்பாளர் மட்டும் இருந்தா, உற்பத்தி இன்னும் பெருகுமே?' ன்னு...!


உடனே, ஹிந்து பேப்பரில் விளம்பரம் கொடுத்து, நேர்முகத்தேர்வு நடத்தி, கண்காணித்து அறிக்கை தருவதில் பழுத்த அனுபவமிக்க ஒரு கரப்பான் பூச்சியை கண்காணிப்பாளராக தேர்ந்தெடுத்துச்சு முதலாளி சிங்கம்.சீனியர் எறும்பை விட டபுள் சம்பளம் போட்டு கொடுத்துச்சு.


வந்த கரப்பான் செஞ்ச முதல் வேலை... ஒரு கடிகாரம் வாங்கி பொருத்திச்சு. அப்புறம், 'எல்லா எறும்பும் இன்ன நேரத்துக்கு வேலைக்கு வந்து, இன்னன்ன நேரம் எல்லாம் வேலை பார்த்து, இன்னன்ன நேரம் முதல் இன்னன்ன நேரம் வரை சிறு ஒய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் வேலைக்கு திரும்பி, இன்ன நேரம் வரை வேலைபார்த்துட்டு, இன்ன நேரத்துத்துக்குத்தான் வீட்டுக்கு போகணும்'னு புதுப்புது சட்டம் எல்லாம் போட்டுச்சு.


தனக்கு  அதிக வேலைப்பளு இருப்பதால்(?!), அறிக்கை எழுத-தட்டச்ச  அந்த கரப்பான் பூச்சிக்கு ஒரு காரியதரிசியும் தேவைப்பட்டார்.


எனவே, அவரே... டெக்கான் கிரானிகிளில் விளம்பரம் தந்து ஒரு நேர்முகத்தேர்வு நடத்தி, அழகான ஒரு காரியமாக தொலைபேசி எடுக்க பேச என்று ஒரு சிலந்தியை சீனியர் எறும்பு ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கி காரியதரிசியாக நியமிச்சிச்சு...  நம்ம கரப்பான்.


நம்ம முதலாளி சின்ன சிங்கத்துக்கு, கரப்பானின் அறிக்கையினை படிச்சு செமை சந்தோசம். அதையெல்லாம் ஒரு கிராப் வரைபடமா போட்டு கொடுக்க சொல்லுச்சு. அதை வச்சித்தான்... தான் எப்படி நல்லா நிருவகிக்கிறேன்னு, தன் அப்பா சிங்கம் போல பல கிழட்டு சிங்கங்கள் வரப்போகும் போர்ட் மீடிங்கில் காட்டி, நல்ல பேரு வாங்க திட்டம்..!


இவ்ளோ வேலை தந்தா எப்படி பார்க்கும் நம்ம கரப்பான்..? அது ஒரு கம்யுட்டர், லேசர் பிரிண்டர் எல்லாம் வாங்கிச்சு. உங்க ஊட்டு காசா, சிங்க ஊட்டு காசா... எறும்புகளின் தீபாவளி போனஸ் காசுதானே..? பூந்து விளையாடியது கரப்பான்..! என்ன இப்போ... தொழிலாளர் தலைவரை கைக்குள் போட்டுக்கிட்டு ரெண்டு சதவீதம் தொழிலாளர் போனஸ் கட் பண்ணிட்டா போச்சு..! :-))


எவ்ளோ காசு கள்ளத்தனமா எடுத்தோம், எவ்ளோ காசு இன்னும் எடுக்கலாம், ஊழியர்களுக்கு சம்பளம் தர குறைந்தது எவ்ளோ இருந்தாகணும்... சிங்கத்துக்கு உற்பத்தி கள்ள கணக்கு எப்படி காட்றது..? இதுக்கெல்லாம்... புது சாஃப்ட்வேர் போடணும். தனக்கு கம்யுட்டரில் அவ்ளோ அறிவும் இல்லை. இப்போதான், இந்த கணக்கு வழக்கு எல்லாம் பார்க்க கரப்பானுக்கு ஒரு ஐட்டி நிறுவனம் தேவை பட்டுச்சு. எனவே, அது... சிலிக்கான் வேலியில் இருந்து வந்து டைடல் பார்க்கின் வேளியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஈ யின் உதவியை டாலர்களில் ஒப்பந்தம் போட்டு நாடிச்சு.


அதேநேரம்... ஒருகாலத்தில் நேரத்துக்கு வந்து தொடர்ந்து எந்த தொந்திரவும், டென்ஷனும் இன்றி வேலை பார்த்த எறும்புகளுக்கு.. இப்போது வந்துள்ள... புதிய விதிகள், கட்டுப்பாடுகள், கணக்கு வழக்கு மாற்றங்கள், வேலை நேர மாற்றங்கள், சம்பள விகித மாற்றங்கள், லாக் புக், ரெஜிஸ்டர், டூ மச் பேப்பர் ஒர்க், மெமோ, ம்-ன்னா... வார்னிங் லெட்டர், ஆ-ன்னா...சார்ஜ் ஷீட், 100% க்கு மேற்பட்ட உற்பத்தி பத்தியே எண்ணம்,  அதுபற்றியே அப்பப்போ ஆலோசனைகள்ன்னு... உற்பத்தி நேரத்தில் உற்பத்தியை ஓரங்கட்டிவிட்டு... ஒரே மீட்டிங்... மீட்டிங்ன்னு... இவை எல்லாம் ஒண்ணுமே புரியாம, தங்கள் வேலை தடைபட்டு ரொம்ப குழப்பமா இருந்துச்சு எறும்புகளுக்கு.


இந்த காலகட்டத்திலே... கண்காணிப்பாளர் கரப்பானுக்கு மேலே வேறு ஒரு அதிகாரியை நியமித்து அதனிடத்திலும் சற்று உஷாரா இருக்கணும்னு சிங்கத்துக்கு திடீர் யோசனை ஏற்படவே, அது உடனே ஒரு மேலாளரை நியமிக்க முடிவு செஞ்சது.

ஐயா சில்வண்டு அவர்களை, கரப்பானின் ஊதியத்தைக்காட்டிலும் டபுள் மடங்கு தந்து மேலாளராக நியமித்தது சிங்கம். அவர் பதவி ஏற்ற உடன் செய்த முதல் காரியம், ஒரு அழகிய தரைக்கம்பளம், பல பெட்டிகள் கொண்ட பெரிய மேசை மற்றும் குஷன் சுழல் நாற்காலி எல்லாம் வாங்கி தனது அலுவல் அறையை தன் வீட்டை விட அழகாக ஜோடிச்சுகிச்சு சில்வண்டு.


அப்புறம், அடுத்த காரியமாக நம்ம மேலாளர் சில் வண்டு செஞ்ச காரியம், ஃபுள் செட்டோட ஒரு கணினி ஒண்ணு வாங்கிச்சு. இதுக்கெல்லாம் துட்டு..? உங்க வூட்டு காசா.. சிங்க வூட்டு காசா... திறமையான ஊழியர்களுக்கான இவ்வருஷத்துக்கான சேலரி இங்க்ரிமென்ட்டுக்குன்னு... முன்னாடி பெரிய சிங்கம் வங்கியில் போட்டு வச்ச எறும்புகளின் காசுதானே..! இன்னொரு காரியமும் சில்வண்டு செஞ்சது. தான் ஏற்கனவே வேறு ஒரு கம்பெனியில் வேலை பார்த்த போது தம்முடைய புரிதலுக்கு ஒத்து வந்த அதே அழகான ஸ்டெனோவை இந்த கம்பனிக்குள்ளும் தனது...  வேலை மற்றும் வரவு செலவு திட்ட கட்டுப்பாட்டு மூலோபாய அலுவல்களுக்காக இழுத்து போட்டுக்கொண்டது. அதுக்கு கரப்பானின் ஊதியத்துக்கு இணையான ஊதியமும் தந்து கவுரவிச்சிச்சு. இதெயெல்லாம் சிங்கமும் சும்ம்மா வேடிக்கை பார்த்துச்சு.


இந்த மேலாளர் வந்த பிறகு, எறும்புகள் வேலை பார்க்கும் இடத்தில் அதுவரை நிலவி வந்த புன்னகை, அமைதி, ஆசுவாசம் எல்லாமே காணாமல் போயின. எல்லா எறும்புகளுமே விரக்தியில்தான் இருந்தனர். இது கிட்டே நல்லபேரு வாங்கனும்னு அதுவரை ஓரளவு தோழமையோடு பழகி வந்த கரப்பான் இப்போல்லாம் சும்மாவே எறும்புகள் மீது எரிஞ்சு விழ ஆரம்பிச்சிட்டுது. இதனால் எறும்புகள் முன்ன மாதிரி சந்தோஷமா வேலை பார்க்க முடியலை. மேனேஜ்மென்ட் மீதான கோபம் விரக்தி அவர்களின் சுறுசுறுப்பை பாதித்தது.


இந்நேரம், மேனேஜர் சில்வண்டு, தன்னுடைய முதலாளி சிங்கத்திடம் சொன்னது... தற்போதைய தொழிற்சாலை களநிலையின் காலநிலை ஆய்வின் அவசியம் பற்றி...!


அதேநேரம், கரப்பானின் கிராப் அறிக்கையை பார்த்த சிங்கம், சென்ற மாதத்தை விட இம்மாதம் உற்பத்தி குறைந்து போயிருப்பதையும் இலாபம் வீழ்ச்சி அடைந்து இருப்பதையும் பார்த்து கடுப்பாயிருச்சு. இவ்ளோ முயற்சிக்கு பிறகு இது எப்படி சாத்தியம்னுதான் சிங்கத்துக்கு புரியலை.


எனவே, அது புகழ்மிக்க- வணிக உலகில் பெரு மதிப்புடைய ஓர் ஐரோப்பிய ஆடிட்டர் ஆந்தையை சிங்கம் தன் கம்பெனிக்கு ஈரோவில் போட்ட ஒப்பந்த அடிப்படையில் நியமிச்சது.  இதன் வேலை என்னன்னா... கம்பனியில் ஆடிட்டிங் செய்து, அதில் உள்ளவைகளின்  குறைகளை களைய சொல்வதுதான்.


மூன்று மாதங்கள் மிகக்கடுமையாக உழைத்து ஒவ்வொரு துறைக்கும் சென்று ஆங்காங்கே உள்ள ஊழியர்கள் பற்றியும் கேட்டுவிட்டு, அவங்க புரியும் பணிகளையும் ஆராய்ஞ்சிட்டு, கட்ட கடைசியா... ஆந்தை தன் வால்யூம் வால்யூம் கணக்கான எக்கச்சக்க பக்கங்கள் கொண்ட அறிக்கையில், உற்பத்தியை பெருக்க- பழைய இலாபம் மீண்டும் கிடைக்க சொன்ன முடிவு இதுதான் :
ஆலையில் ஊழியர் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாகஉள்ளது
.

இப்போ சொல்லுங்க சகோஸ்... சிங்கம் யாரை வேலைய விட்டு தூக்கும்..?


ம்ம்ம்... நீங்க நினச்சது சரிதான் சகோ...! எறும்புகளில் ஊதியம் அதிகம் பெரும் அனுபவமிக்க சீனியர் எறும்புகளை எல்லாம், இவர்களிடம் ஊக்கம் இல்லாத காரணத்தினால் வாலண்டரி ரிடையர் மென்ட் கொடுக்க சொல்லி வீட்டுக்கு பத்தி விட்டுருச்சு..! அப்புறம், வரவேண்டிய தீபாவளி போனஸ், அர்ரியர்ஸ், சேலரி இன்க்ரிமென்ட் என்று பேசிக்கொண்டு இருந்த துடிப்பான இளம் எறும்புகளை எல்லாம் எதிர்மறை அணுகுமுறையாளர்கள் என்று கூறி அவங்களையும் ஃபோர்ஸ்டு டு ரிசைன் பண்ண வச்சி வீட்டுக்கு பத்தி விட்டுருச்சு..!



அவ்வருட போர்டு மீட்டிங்கில் தலை குனிஞ்ச சிங்கம்...  "இப்போ உள்ள எறும்புகள் உங்க காலத்திலே வேலை செஞ்சது போல செய்யலைப்பா... அதுங்களை வீட்டுக்கு தொரத்தியாச்சு... அடுத்த வருஷம் பாருங்க... நம்ம 'டர்ன் ஓவர்'ர...!"  என்றது..!

பாவம்... உற்பத்திக்கு உரிய எறும்புகளை தொரத்திட்டு... இனி எப்படித்தான் உற்பத்தியை பெருக்க போகுதுங்களோ... இந்த சிங்கமும், ஆந்தையும், சில்வண்டும், கரப்பானும், ஈயும்..!

டிஸ்கி 
இந்த பதிவில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையே..! யாரையும் குறிப்பிட்டு சொல்வது போல தோன்றினால் அது தற்செயலே..!

கதை சொல்லும் நீதி
எந்த ஓர் தொழிற்சாலையிலும், உற்பத்திக்கு உரிய உழைப்பாளிகளுக்கும், ஆலையின் முதலாளிக்கும் இடையே உற்பத்தியில் இடம்பெறாத தேவையற்ற அதிகாரிகளின் அடுக்குமுறை மற்றும் எண்ணிக்கையால் எந்த அளவுக்கு தூரம் அதிகமாகுகிறதோ அந்த அளவுக்கு உற்பத்தியும் குறையும்..!

33 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...