அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, September 21, 2012

15 ஓட்டரசியலில் காவிரி ஓர் அநாதை

1980கள்- அது ஒரு பொற்காலம் சகோ..! என்னதான் கடுங்கோடை ஆனாலும், வீதிக்கு வீதி - வீட்டுக்கு வீடு... கையால் அடிக்கும் ஒரு இரும்பு பம்பு (எங்க ஊரு பக்கம்  -தஞ்சை மாவட்டம் பாபநாசம்/பண்டாரவாடை/ராஜகிரி- 'வேம்பா' என்று சொல்வோம்) ஒன்று ஆங்காங்கே இருக்கும். அப்போது அதன் உயரம் கூட நான் இருக்கமாட்டேன். ஒரு கையால் கைப்பிடியை பிடித்து நான் இழுத்தாலே அதன் வாய் நிறைய தண்ணீர் கொட்டும். அத்தனை தெளிவான சுவையான குடி நீர் வரும்..! இப்போது... அதெல்லாம் அது ஒரு கனாக்காலம் சகோ..! ஏன் இந்த நிலை..? பதில் :- காவிரி..! இப்போதெல்லாம் போர் போட்டாலே சில இடங்களில் தண்ணீர் வருவது இல்லை என்பது ஒரு புறமிருக்க... வறண்ட காவிரி ஆற்றில் மணலைக்கூட காண முடியவில்லையே சகோ..! :-(( என்ன காரணம்..? யார் காரணம்..?

மலைகளில் பொழியும் சிறுதுளிகள்... பெருவெள்ளமென பெருக்கெடுத்து, ஆர்ப்பரிக்கும் அருவியாக ஆரவாரமாக விழுந்து, பள்ளத்தாக்கில் குறுகிய காட்டாறாக துள்ளிக்குதித்து, மேலும் பல காட்டாறுகள் தம்மோடு சேர்ந்து, பின்னர்  சமவெளிகளில் அகண்ட நதியாக அமைதியாக ஓடி, பல்வேறு கிளை ஆறுகளாக பிரிந்து, அவை மேலும் கால்வாய் மற்றும் வாய்க்காலாக கிளைத்து, தனது இருபுறமும் உள்ள நிலங்களை பசுமையாக்கி செழிப்படைய வைத்து வளமான டெல்டாவை உருவாக்கிவிட்டு... இறுதியாக கழிமுகத்துவாரத்தில் வற்றிய சிற்றோடையாக கணுக்கால் உயரத்துக்கு சலசலத்து கடலில் கலக்கும். இது இயற்கை..! 

பொதுவாக... ஓர் ஓடையின் மேல்மிச்சமான தண்ணீர் குடிநீராகவோ... விளைச்சளுக்கோ பயனின்றி கடலில் கலப்பது... மனித குலத்துக்கு நஷ்டம் தான்..! அதை எப்படி தடுப்பது..? அதாவது... அந்த வளமான டெல்டாவின் கடைசியில் உள்ள மனிதன்... "அடடே... நம்மிடம் வரும்போது தண்ணீர் வற்றி விட்டதே..! ஆற்றில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் இருந்திருந்தால் நமக்கும் வந்திக்குமே..! அப்படி வரவைக்க என்ன செய்யலாம்..?" என்று சிந்திக்கும் போது... அவனால் மழையை அதிகப்படுத்த இயலவில்லை...! அது இறைவன் வசம்..! எனவே, அவனுக்கு உதித்த யோசனைதான் அணைக்கட்டு..! இது செயற்கை..! 

அணையை கட்ட வேண்டியதுதான்...! அதை எங்கே கட்ட வேண்டும்..? 

கடலில் கலக்கும் நேரை சேமிக்க வேண்டி, கழிமுகத்துவாரத்தின் சற்று முன்னர் முதல் அணை கட்டப்படவேண்டும்..! அது நிரம்பி வழிந்து கடலுக்கு தண்ணீர் போகிறது என்றால்... அதற்கு சற்று முன்னர்... இரண்டாம் அணை கட்டப்பட வேண்டும்..! அப்போதும் முதல் அணை  நிரம்பி ஓடுகிறது என்றால்... அதற்கு சற்று முன்னர்... மூன்றாம் அணை கட்டப்படவேண்டும்..! அப்போதும் முதல் அணை  நிரம்பி ஓடுகிறது என்றால்... நான்காவது அணை கட்டலாம். இல்லையேல், இத்தோடு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும். இப்படியாக... நதி மூலத்தை நோக்கி... இந்த முறைப்படி அணை கட்டுவதுதானே... அறிவுப்பூர்வம்..? இதுதானே நேர்மை..? இதுதானே... நதியின் அனைவரின் உரிமையையும் நிலைநாட்டும்..?

ஆனால், நம்ம காவேரி ஆற்றில் மட்டும் அது அப்படியே உல்ட்டா..! நதி உருவாகும் இடத்திற்கு அருகிலேயே மொத்தம் நான்கு அணையை கட்டினார்கள் கர்நாடக நயவஞ்சகர்கள்..! அதை அப்படியே அனுமதித்தார்கள் அப்போதைய தமிழக முட்டாள்கள்..! காரணம்... கர்நாடகாவில் காவிரியின் வடபுறம் நீண்ட தூரத்துக்கு நதிகளே இல்லை. தென்புறமோ... கர்நாடகாவே இல்லை..! 


ஆக, இவர்களின் திட்டம்... காவிரி நதியை தேக்கி... அதனை முழுதாக செயற்கை கால்வாய்கள் மூலம் கர்நாடகாவின் வடபுறத்தை வளப்படுத்துவதன் மூலம் மொத்த கர்நாடகவையே பச்சை பசேல் என்றாக்குவதுதான் திட்டம். நல்ல திட்டம்தான். ஆனால்... இதனால்.... தனக்கு downstream இல் கீழே உள்ளவனுக்கும் அதே  இயற்கையான காவிரி ஆறின் தண்ணீருக்கு இயற்கையாகவே உரிமை உண்டு என்று என்ன வேண்டாமா..? அவன் தண்ணீர் இன்றி வறண்டு பாலைவனமாகிறானே..? வருங்காலத்தில் 'காவிரி டெல்டா'வானது... 'காவிரி பாலைவனம்' என்றாகிவிடுமோ..? இன்னொருத்தனின் வயிற்றில் அடித்துவிட்டு... செயற்கையான முறையில் மொத்த தண்ணீரையும் அணைகளில் தேக்கி, அதிலிருந்து செயற்கை கால்வாய் வெட்டி தனக்கே பாசனத்துக்கு எடுத்துக்கொள்வது வடிகட்டிய மோசடி அல்லவா..? வஞ்சகம் அல்லவா..! 

தலைப்பகுதியில் அணையை கட்டியது தவறு..! 

சரி... கட்டித்தொலைத்து விட்டார்கள்..! இனி என்ன செய்யலாம்..? காவிரியின் கீழ்ப்பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைத்தாக வேண்டும். எனில், ஒவ்வொரு அணைகளையும் திறக்க வேண்டும். எவ்வளவு திறக்க வேண்டும்..? இதற்கு சின்னதாக ஒரு கணக்கு போட வேண்டும். 

அந்த அணைக்கு முன்புறம் எத்தனை தூரம், பின்புறம் எத்தனை தூரம் உள்ளது அந்த நதி என்று பார்க்க வேண்டும். கிருஷ்ணராஜ சாகர் அணைவரை கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ. கர்நாடகாவில் தமிழக எல்லை வரை காவிரியின் நீளம் = 64 கிமீ. கர்நாடக எல்லையில் இருந்து தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ. ஆக மொத்தம் 800 கிமீ. அப்படின்னா... 320 : 480 அதாவது 4 : 6 என்ற விகிதத்தில் பிரிக்க வேண்டும் என்றால் அது தவறு. காரணம்......

எனவே... 'எங்களிடம் இவ்ளோ பாசன ஏக்கர் இருக்கு.. உங்களிடம் அவ்ளோ பாசன ஏக்கர் இருக்கு..', 'எங்களிடம் இவ்ளோ மண்வளம் இருக்கு... உங்களிடம் மலைதான் இருக்கு..', 'எங்களிடம் தண்ணீர் இருந்தால்... உங்களைவிட நிறைய மகசூல் காட்டுவோம்..' அது மட்டுமில்லாமல்... நதி மூலத்திலிருந்து... அணை வரை உள்ள பகுதியில்... ஏற்கனவே ஏகப்பட்ட தண்ணீரை கால்வாய் போட்டு எடுத்துக்கொண்டு விட்டீர்கள்... அதனால் முழு அணையையும் திறந்து விட வேண்டும்...' என்று இதுபோல இன்னும் ஏகப்பட்ட நியாயமான கோரிக்கைகள் உள்ளன..! 

1910 -ல் அன்றைய மைசூர் மாகாண அரசு 41.5 டி.எம்.சி. கொள்ளளவுடன் அணை ஒன்றைக்கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து, மைசூர் அரசு நடுவண் அரசிடம் பிரச்சினையை கொண்டு சென்றது. 'அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது' என்ற நிபந்தனையோடு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையை தெனாவட்டாக கட்ட ஆரம்பித்தது. குப்பைக்கு போனது அரசு ஆணை..!

அணைகட்டுவதை வேடிக்கை பார்த்துவிட்டு... அப்புறமாக சென்னை சண்டைக்கு போக... அன்றைய பிரிட்டிஷ் அரசு கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது. அவர், "மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் அது பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று தீர்ப்பளிக்க... 
குப்பைக்கு போனது நடுவர் தீர்ப்பு

மீண்டும் பேச்சுவார்த்தை. மீண்டும் 1924 இல் அடுத்த 50 வருடங்களுக்கான புதிய ஒப்பந்தம். அதன்படியும் கர்நாடகா அவ்வப்போது சரியாக நடக்கவில்லை. குப்பைக்கு போனது ஒப்பந்தம்.

எனவே 50 வருடம் முடியும்போது...  1972இல் மத்திய அரசு "காவிரி உண்மை அறியும் குழு" ஒன்றை அமைத்தது. 1976 இல் இதன்படி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுவும் குப்பைக்கு போனது

பிரச்சினை  அப்படியே இருக்க... பல ஆண்டுகள் சென்ற பிறகு மத்திய அரசு காவிரி நீர்ப்பங்கீட்டிற்காக 1990-ல் 'காவிரி நடுவர் மன்றம்' என்ற ஒன்றை அமைத்தது. அது, பல கணக்கீடுகள் கணிப்பீடுகள் போட்டுவிட்டு... 1991இல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. வழக்கம் போல அதுவும் போனது குப்பைக்கு..!

இடைக்கால  தீர்ப்புதானே குப்பையில்..? இதோ... 17 வருஷம் கழித்து, பிப்ரவரி 5, 2007-ஆம்நாள் காவிரி நடுவர் மன்றம் தனது ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இறுதித்தீர்ப்பில்... தமிழகத்திற்கு 419 பில்லியன் கன அடி நீரும், கர்நாடகத்திற்கு 270 பில்லியன் கன அடி நீரும் ஒதுக்கீடு செய்தது.  நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பான்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தாலும், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு, வெறும் 192 பில்லியன் கன அடி அளவு தண்ணீரை வழங்கினால் போதும். மீதமுள்ள 227 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியது. 

மேலும், கேரள மாநிலத்திற்கு 30 பில்லியன் கன அடி மற்றும் பான்டிச்சேரிக்கு 7 பில்லியன் அடி அளவு வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி.எம்.சியைப் புதுவைக்குத் தர வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனி செல்லாது.

தீர்ப்பில் கர்நாடகாவுக்கு பிடித்த ஒரே வரி இதுதான்..! 'பாதிக்கப்பட்டதாக கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்' எனவே, உடனே மேல்முறையீடு செய்தது..! ஆக, வழக்கம்போலவே... இந்த தீர்ப்பும் குப்பைக்கே போனது..!

இதற்கிடையில்... முன்னர் கர்நாடகாவின் மோசடி குறித்த தமிழகம் தொடுத்த வழக்கில், உச்ச நீதி மன்ற ஆணையின் படி நேற்று காவிரி நதி நீர் ஆணையம் பிரதமர் தலைமையில் ஒன்பது வருடம் கழித்து கூடியது..! மத்திய மாநில அரசுகள் ஒரே கூட்டணியில் இல்லாத நிலைதான் காரணமோ..?  :-((

அதில், தமிழகம் 2 டிஎம்சி  யாவது தரவேண்டும் என்று கெஞ்சியது. கர்நாடகா ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்று தரமறுக்க... 'இந்த இரண்டு மாதம் மட்டுமாவது 1 டிஎம்சி தர வேண்டும் என்று கெஞ்ச, அதற்கும் கர்நாடகா ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்று தரமறுத்து விட்டது..! முதல்வரின் கெஞ்சல் குப்பையில்..!

அடுத்து... பிரதமரே இறங்கி வந்து... நாளொன்றுக்கு 9,000 கன அடி வீதம் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையாவது  கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கேட்க... அதற்கும் கர்நாடகா ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்று தரமறுத்து விட்டது. பிரதமரின் கெஞ்சல் குப்பையில்..!

ஆக, 'ஒரு நாட்டில்.... சக முதல்வர், பிரதமர், நடுவர் மன்றம், நடுவர் நீதிமன்ற தீர்ப்பு, காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம்... இப்படி எதற்குமே கட்டுப்படாத ஒரு மாநில அரசை கலைத்தால் என்ன' என்று டாக்டர் ராமதாஸ் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. 

ஆனால்.. காங்கிரஸ் கலைக்காது. காரணம்... அடுத்த வருஷம் கர்நாடகா தேர்தல். இப்போது, பிஜேபியை அது ஹீரோவாக்கி தன்னை வில்லனாக்க ஒருபோதும் விரும்பாது. கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட்டு அங்கே ஓட்டை இழப்பதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது..! அங்கே, ஜனதா தளம் மூன்றாவது இடத்துக்கு சென்றதும் நமக்கு ஒரு பாதகம்..!

எனில், தமிழகத்தில் அது வில்லன் ஆகலாமா...? நோ ப்ராப்ளம்..! இரண்டு கட்சிக்குமே தமிழகத்தில் மவுசோ ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ஓட்டோ இல்லை. எனவே தமழ்நாடு எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன..!

இப்படி... ஓட்டரசியலில் காவிரி நீர்
சிக்கியுள்ள காலம் வரை இனி ஒருபோதும் அணையை விட்டு வெளியே வராது என்றே தோன்றுகிறது..! அநாதை ஆகிய காவிரியை காப்பாற்ற இனி நாம்தான் சில முடிவுக்கு வர வேண்டி உள்ளது..! 

  • தேசிய கட்சிகள் இல்லாத நிலையில்... திமுக/அதிமுக கட்சிகள் தான் ஆட்சிக்கு என்ற நிலை இங்கே உள்ளவரை,  காவிரி ஒரு கனவுதான்..! ஏனெனில், திமுக காங்கிரசை விட்டு விலகிச்செல்லும் இந்நேரத்தில் அதற்கு அதிமுகதான் எதிர்கால கூட்டணி..! இவர்களிடம் ஆணையத்தில் உண்மையை எதிர்பார்க்க இயலுமா..? !
  • ஒருவேளை... கர்நாடகாவையும் தமிழ்நாட்டையும் ஒரே மாநிலமாக பெங்களூரை தலைமையாக கொண்டு இணைத்தால் 'ஒரே அரசு ஒரே மக்கள்' என்பதால் தண்ணீர் கிடைக்க ஒரு சின்ன வாய்ப்பு உள்ளது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க இதற்கு தமிழக கட்சிகள் ஒத்துக்கொள்ளுமா..?
  • நதிகளை தேசியமயமாக்குவது என்ற கானல் நீர் ஒருபுறம் இருக்க... அணைகளை ஜனாதிபதி/இராணுவத்திடம் ஒப்படைப்பது... எல்லாம்  இன்னொரு கானல் நீராக இருக்கிறது.

இனி, எதோ என்னால் முடிந்த ஒரே செயல்... "இறைவா... எவரிடமும் தண்ணீர் பிச்சை எடுக்க தேவை இன்றி... ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் மாதம் மும்மாரி மழை பொழிய வைப்பாயாக..!"

  அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்)மேகத்தை ஓட்டி, பிறகு அதைத்தான் நாடியபடி வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத்தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன்: 30:48)

15 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...