அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, January 29, 2011

சவூதியில் மழை..! வெட்டுக்கிளி வியாபாரம்..! (Photo Gallery)

முதலில் "சவூதியில் மழை" பற்றி பார்த்து விடுவோம். வெட்டுக்கிளி வியாபாரம் பற்றி கடைசியில்.

சவூதி அரேபியாவில், குறிப்பாக ஜித்தாவில், கடந்த ஒரு மாதமாய் இதுவரை கண்டிராத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த புதன் கிழமை பெய்த மழையளவு ஜித்தாவில் மட்டுமே 111mm...! மில்லிமீட்டர் கணக்கெல்லாம் சொன்னால்... ப்பூ.. இவ்வளவு தானா என்போம்..! 

அதற்கு முதலில் புள்ளிவிபரம் அறிவோம். ஒட்டுமொத்த சவூதி அரேபியாவிற்கே ஆண்டின் மொத்த சராசரி மழை அளவு: 106mm தானாம்..! கடந்த புதன்கிழமை ஒருநாளில் மட்டுமே 111mm ஜித்தாவில் மழை பெய்தது என்றால்...???  சவூதியில் அதற்குப்பெயர் வெள்ளம்..!!! ஆனால், நம்மால் முடிந்த ஒரு சாதாரண விஷயம் அவர்களால் ஏன் சமாளிக்க முடிய வில்லை..?


ஜித்தாவின் இம்மாத வெள்ளக்காட்சிகள். நீங்களே பாருங்களேன்...!
முதலில் இப்படித்தான் கார்மேகம் திரண்டு இருள ஆரம்பித்தது...
அப்புறம் பிச்சிக்கிட்டு கொட்ட ஆரம்பித்தது. மேலும், இங்கே மழை பெய்தால் அது உடனுக்குடன் வடிந்தோட வசதி இல்லை. சாலை அடி  பாதாள மழை நீரோடை திட்டமோ, சாலையோர வாய்க்காலோ, ஊரோர கால்வாயோ, ஊருக்கு நடுவே வடிகாலுக்கு காவிரி, வைகை, கூவம்...போன்ற ஆறோ கிடையாதே..!

மக்கா நகர் தவிர (ஹாஜிகளை கவனத்தில் கொண்டு இங்கே மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் உண்டு)  சவுதியின் மற்ற எந்த நகரத்திலும் பெய்யும் மழை சாலைகளிலே ஓடி, 'சப்வே'க்களில் நிறைந்து ஏதோ திடீர் நீர்த்தேக்கம் போல ஆகிவிடும்
அப்புறம் பற்பல பம்புகள், டேங்கர்கள் சகிதம் அவை துரிதகதியில் பாலைவன பள்ளத்தாகிலோ அல்லது கடலிலோ கொட்டி அப்புறப்படுத்தப்படும். வருடத்தில் ஏதோ ஒருநாள் அல்லது இருநாள் விழும் தூறல் அல்லது சிறு மழைக்கு இவை போதுமானதாக இருந்தன.
அதனால்தான், எவ்வளவோ செலவு செய்யும் சவூதி அரசு மழைநீர் வடிகாலுக்கு மட்டும் செலவு செய்ய மெத்தனம் காட்டிவிட்டது. அதற்கு அவ்வளவு முக்கியத்துவமோ தேவையோ அவசியமோ இல்லாதிருந்தது.

இப்போது என்ன பிரச்சினை என்றால்...

தொடர்ந்து மழை பொழிவதும், "நீர்த்தேக்கங்கள்"(அதாங்க...'சப்வே'க்கள்)நிறைந்து வழிந்து ஊரெங்கும் வெள்ளக்காடாகி டேங்கர் லாரிகளும் வரமுடியாமல்...
ஆங்காங்கே சாலைகளும்உடைப்பு எடுத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால்... மிகுந்த நிலச்சரிவு ஏற்பட்டு மின்சார கம்பிகள், தூண்கள், டிரான்ஸ்ஃபார்மர் சாதனங்களும் பழுது பட்டதால்... புதன் கிழமையிலிருந்து நகரத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் தொடர்பு பாதிக்கப்பட்டிருந்தது. மின்சாரம் தடைபட்டதால் பம்புசெட்டுகளும் இயக்க முடியாமல் போனது.
வெள்ளத்தை அப்புறப்படுத்த முடியாத அளவைத்தாண்டி மழை கொட்டோ கொட்டென்று தொடர்ந்து கொட்டுவதும் ஊரெல்லாம் காட்டாறாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட இதில் பல கார்கள் 'அடித்துச்செல்லப்பட்டன'. எப்படி அவ்வளவு கனமான கார்கள் மழையில் அடித்துச்செல்லப்படும்?
(அதை பின்னால் பார்க்கலாம்)
டேங்கர் லாரிகளும் பழுதுபட்டு வெள்ளத்தில் மாட்டிக்கொண்டன.
எங்கும் நக முடியாத அளவுக்கு நகரெங்கும் வெள்ளக்காடுதான்.
ஏதோ ஆறுகள் என்று நினைக்காதீர்கள்..! இதெல்லாம் சாலைகள்தாங்க..!
வீடுகள் வெள்ளத்திற்கு நடுவில்...
Subway-க்கள் நிறைந்து நிற்கும் காட்சிகள்.

இவை  ஆறுகள்  இல்லை....! வடிகால் வசதி அற்ற 'சப்வே'..!
இவ்வளவு நீர் மட்டம் இருந்தால் வீட்டைவிட்டு எப்படி வெளியே வருவது...?
ஹெலிகாப்டர்தான்  வேண்டும்... அல்லது....
படகு சவாரிதான் சாத்தியம்..!

மாணவர்கள் இரவில் பள்ளிக்கூடங்களிலும், அதிகாரிகள் ஏற்பாடுச்செய்த தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலையில்தான் பல மாணவர்களும் வீடு திரும்பினர்.
கடந்த 17 ஆண்டுகளுக்கிடையே கடுமையான மழை கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெய்தது. இதனால் ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் மரணித்தனர்.
இவை நேற்று எனக்கு மெயிலில் வந்த சென்ற வாரங்களின்  புகைப்படங்கள்.

கடந்த புதன்கிழமைக்குப்பின்... (அதாவது அதிகபட்ச மழையளவு பதிவான நாள்) புதிய படங்கள் ஏதும் கிடைக்க வில்லை.
ஏ/சி-க்காக காற்று உட்புகாதவாறும் வெளியேற முடியாதவாறும்  வடிவமைக்கப்பட்ட காரின் மூடப்பட்ட கதவால், உட்பக்க காற்று வெளியேறாமல்... அதனால் உள்ளே தண்ணீர் புக முடியாமல்... கண்ணாடி ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்...
பலூன் போல வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்து விட... எளிதாக சில கிலோமீட்டர்கள் வரை கூட அடித்துச்செல்லப்பட்டு இப்படித்தான் ஒன்றன்மீதொன்றாக குப்பை போல கிடக்கும். மழை விட்டு தண்ணீர் வடிந்தவுடன் தேடி கண்டு பிடித்து தூக்கி வர வேண்டும்.
மூன்று நாட்களுக்கு முன்னர் நான்வசிக்கும் ஊரில் (ஜுபைல்) ஆலங்கட்டி மழை பெய்தது. பளிங்கி சைசுக்கு பனிக்கட்டி பொழிந்தத்தில், சாலையில் நடந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு... நிறைய கார் கண்ணாடிகள் உடைந்து, ஜன்னல்-பால்கனி கண்ணாடி கதவுகள் விரிசல் விட்டு, டிஷ் ஆண்டெனா LNB உடைந்து...  ஹூம்ம்ம்... "ஆலங்கட்டி மழை 'தாலாட்ட' வந்துட்டுதா..." என்று பாடல் எப்படித்தான் இயற்றுகிறார்களோ?  

இப்போது  "வெட்டுக்கிளி வியாபாரம்"  பற்றி பார்ப்போம். 

அதாவது தொடர்ந்து ஒரு மாதம்  மழை பெய்துவிட்டதால் பாலைவனமாகவே இருந்தாலும், எங்கு பார்த்தாலும் கண்ணைக்கவரும் இளம் பச்சை நிறத்தில் புற்கள், இன்னபிற தாவரங்களின் இளந்தளிர்கள் முளைவிட... இவற்றை மட்டுமே சாப்பிடும் வெட்டுக்கிளிகள் (Grass Hoppers) படை படையாய் திரண்டு பறந்தோடி வருகின்றனவாம்..! எங்கிருந்து..? எகிப்து, சூடான் போன்ற நாடுகளிலிருந்து செங்கடல்தாண்டி சவூதி அரேபியாவிற்கு வருகின்றனவாம்..!!!

"புரோட்டீன், வைட்டமின் மற்றும் பல தாதுக்கள் நிறைந்த மேற்படி  வெட்டுக்கிளிகளை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது" என்று அறிந்து கொண்டு வேட்டையாடத்துவங்கி விட்டனர் சவுதிகள்.
ஆனால், வேட்டையாட திராணி இல்லாதவர்களுக்கும் சாப்பிட மட்டுமே தெரிந்தவர்களுக்கும் அதற்கு மட்டுமே நேரம் இருப்பவர்களுக்கும் வசதியாக வேட்டையாடி செய்யப்படும் 'வெட்டுக்கிளிகள்  விற்பனை' அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 
மேலே உள்ள சிறிய பாக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 170 ரியால்களாம்..!
வலதுபக்கம் உள்ள பெரிய பாக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 500 ரியால்கலாம்..! ( ஒரு சவூதி ரியால் இன்று 12.22 ரூபாய்.)

புரைதா -வில்  இந்த வெட்டுக்கிளி வியாபாரம் செம சூடு பிடித்து விட்டதாம். கசீமிலும்தொடர்ந்து அமோக விற்பனையாம்.

ஹூம்ம்ம்... ஒருபக்கம் பலத்த மழையால் பதினோரு பேர் மரணம்... பில்லியன் ரியால்கள் அளவுக்கு நஷ்டம். இன்னொரு புறம் அதே மழை காரணமாக வித்தியாசமான "வெட்டுக்கிளி வியாபாரம்" கொடிகட்டி பறக்கிறது.  இதுதான் உலக வாழ்க்கை..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...